கிரகச் சேர்க்கையும் கர்மாவும்

கிரகச் சேர்க்கையும் கர்மாவும்

ஒரு கிரகச் சேர்க்கை பலரின் ஜாதகத்தில் அமையப்பெற்றாலும் அவை அமைவைப்பொறுத்து சாதக பலனையோ பாதக பலனையோ செய்யும். அக்கிரக்கச் சேர்க்கை அமையப்பெற்ற அனைவருக்கும் ஒரே விதமான பலனை கொடுக்காது. ஒரே குடும்பத்தில் இவ்வாறு கிரகச் சேர்க்கை அமையப்பெற்றாலும் இது பொருந்தும். ஆனால் கிரகச் சேர்க்கையில் இணையும் கிரகங்களின் காரகம் கண்டிப்பாக வெளிப்படும். இதனை ஒரு குடும்ப ஜாதகம் மூலம் இப்பதிவில் அலசுவோம்.

மேற்கண்ட ஜாதகம் 78 வயது நிரம்பிய ஒரு பெண்மணியின் ஜாதகம்.  சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னத்திலேயே ராகு-சந்திரன் சேர்க்கை அமைந்துள்ளது. உடன் மாந்தியும் உள்ளது. சூரிய சந்திரர்களோடு ராகு-கேதுக்கள் இணைவது கிரகண தோஷமாகும். உடலை குறிக்கும் சந்திரனுடன் பூர்வ ஜென்ம கர்மாவின் காரக கிரகமான ராகு இணைந்திருப்பது ஜாதகியை மனோ ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கும் அமைப்பாகும். ஜாதகியின் மரணத்திற்கும் அது இட்டுச் செல்லும் என்பதை உடன் இணைந்துள்ள மாந்தி குறிக்கிறது. சந்திரனும் செவ்வாயும் இரத்த மரபணுக்கள் மூலமாக பாரம்பரிய பதிவுகளை கடத்தும் காரக கிரகங்களாகும். அஷ்டமாதிபதியும் புத்திர காரகருமான குரு, செவ்வாயின் மிருகசீரிஷம் – 1ல் பூர்வ புண்ணியம் மற்றும் ரோக ஸ்தானங்களுக்கு அதிபதியான சனியுடன் இணைந்துள்ளது. குரு, சனி, புதன், செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்கள் ஜாதகத்தில் வக்கிரம் அடைந்துள்ளது. இது கர்ம வினையின் தீவிரத்தை குறிக்கிறது. வக்கிர கிரகங்கள் அனைத்தும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுவுடன் இணைந்தே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.சுக்கிரனை தவிர இதர கிரகங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளன. சுக்கிரனின் இரு வீடுகளும் பாதிக்கப்பட்ட நிலையில் சுக்கிரன் ரோக ஸ்தானாதிபதி சனியின் அனுஷம் – 4 ல் அமைந்து சனி பார்வை பெறுகிறார்.  சந்திரன் இரத்தத்தையும் சுக்கிரன் சுரப்பிகளையும் குறிக்கும் காரக கிரகங்களாகும். சந்திரன் கர்ப்பப்பையை குறிக்கும். சுக்கிரன் அமைந்த கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிக ராசியும் செவ்வாய்  நிற்கும் லக்னத்திற்கு 8 ஆமிடமும் கர்பப்பையை குறிக்கும்.  ராகு சந்திரனோடு தொடர்பு பெறுவது கர்ப்பப்பை பாதிப்பை தரும்.  ஜாதகிக்கு தற்போது ரோகாதிபதி சனியுடன் இணைந்து நிற்கும் 5 & 8க்குரிய குருவின் திசை நடைபெறுகிறது. ஜாதகி தற்போது கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குரு நவாம்சத்திலும் ராகு பாவச் சக்கரத்திலும் காலபுருஷனின் ரோக ஸ்தானமான கன்னியின் நிற்பது ஜாதகி குரு  திசையில் அடையும் ரோக பாதிப்புகளை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
இந்தப்பெண்மணியின் முதல் மகனின் ஜாதகம் கீழே.

மேஷ லக்ன ஜாதகத்தில் தாயாரின் ஜாதகத்தில் அமைந்துள்ளது போலவே லக்னத்தில் மாந்தி அமைந்துள்ளது. தாயாரின் ஜாதகத்தை போலவே சந்திரன் – ராகு சேர்க்கை உள்ளது. இந்த அமைப்புகள் தாயார் வழி கர்மா மகனுக்கும் தொடர்கிறது என்பதை குறிக்கிறது. லக்னதிற்கும் லக்னாதிபதி செவ்வாய்க்கும் பாக்ய ஸ்தான குருவின் பார்வை கிடைக்கிறது. இதனால் தாயார் வழி கர்ம தோஷம் ஜாதகரை குறைவாகவே பாதிக்கும் எனலாம். 4 ஆம் பாவமும் 4 ஆம் பாவாதிபதியும் சர்ப்ப கிரகங்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதிலிருந்து தாயாரின் நிலையை புதல்வரின் ஜாதகம் தெளிவாக காட்டுகிறது. 6 ஆம் பாவத்தில் நெருப்புக் கிரகம் சூரியன் 6 ஆம் பாவாதிபதியான உச்ச நிலையில் இருக்கும் புதனுடன் இணைந்து நிற்கிறார். புதனும் செவ்வாயும் சூரியனால் அஸ்தங்கமடைந்துள்ளன. இப்படி ஆறாவது பாவத்திற்கு சூரியனின் வலு கூடுவதால் 6 ஆமிடம் குறிக்கும் வேலை வாய்ப்பை வழங்கி வியாதி வகைகளை சூரியன் கட்டுப்படுத்துவார் எனலாம்.  ஜீவன காரகன் சனி அஸ்தங்க செவ்வாயின் மிருக சீரிஷம் – 2 ல் நிற்கிறார். சனியின் சார நாதன் அஸ்தங்கமடைந்துவிட்டதால் பாதகாதிபதி சனியால் ஜாதகருக்கு தீமை செய்ய முடியாது.2 ஆம் பாவாதிபதி சுக்கிரன் ஜல ராசியில் கேதுவோடு இணைந்து உச்ச புதனின் ஆயில்யம் – 1 ல் நிற்கிறார். இதனால் ஜாதகர் தகவல் தொழில்நுட்பத்துறையில் மென்பொருளாளராக பணிபுரிந்து வருமானம் ஈட்டுகிறார். வெளிநாடு சார்ந்த பணி இது என்பது கவனிக்கத்தக்கது. 1௦ ஆமிடத்தில் ராகு சந்திரன் சேர்க்கை இதற்கு உதவி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. ராகு – கேதுக்கள் நவீன தகவல் தொழில் நுட்பம், மென்பொருள், கடல்கடந்த தொடர்புகளை குறிக்கும் காரக கிரகங்களாகும். ஜாதகர் ராகு-கேது தொடர்புடைய விதத்தில் தனது கர்மாவை கழிப்பதால் அவை ஜாதகருக்கு தங்களது பாதிப்பை குறைத்தே தரும் எனலாம். ஜாதகர் தற்போது ராகு திசையை கடந்து குரு திசையில் உள்ளார். இந்த ஜாதகத்தில் சந்திரன் – ராகு சேர்க்கை கர்மா வேலை வகையில் தனது விளைவை தருகிறது   எனலாம்.  
2 ஆவது மகனின் ஜாதகம் கீழே.

தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதியும் பரம சுபருமான குரு வக்கிர நிலையில் மறைவு ஸ்தானமான மூன்றாமிடத்தில் அமைந்துள்ளார். இந்த ஜாதகத்திலும் சந்திரன் நீச வர்கோத்தமம் பெற்ற நிலையில் சந்திரன்-ராகு சேர்க்கை உள்ளது. தாய் வழி கர்மா இந்த ஜாதகத்திலும் தொடர்வதையே இது குறிப்பிடுகிறது. மனோகாரகன் சந்திரன் பாதிக்கப்பட நிலையில் 5, 9 பாவாதிபதிகள் பாதகாதிபதி புதன் தொடர்பு பெற்று சிம்மத்தில் அமைந்துள்ளது. பாதக ஸ்தானத்தில் சனி அமைந்து சிம்மத்தில் அமைந்த கிரகங்களை 3 ஆம் பார்வையால் பார்க்கிறது. சனி வீட்டில் குரு அமைந்து சனி பாதக ஸ்தானத்தில்  திக்பலம் பெற்று நிற்பதாலும் இங்கு குருவிற்கு சனிக்கும் ஏற்பட்ட தொடர்பு பாதகத்தை செய்யவே வழி வகுக்கும். புத்தி காரகன் புதன் பாதகாதிபதியாகி வர்கோத்தமம் பெற்று சூரியனை விட்டு 8 பாகைகள் முன்னால் சென்று (சிம்மத்தில் சூரியன் 8 பாகை, புதன் 16 பாகை)  தனது உச்ச வீட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.  புதன் முழுமையாக அஸ்தங்கம் அடையவில்லை. இதனால் பாதக பலனே கூடுதலாக வெளிப்படும். 
மனோ காரகன் சந்திரன் பாதகத்தில் நிற்கும் சனியின் அனுஷம் – 4 லும் 5 ஆமதிபதி செவ்வாய் 8 ஆமிடத்தில் நிற்கும் 6 ஆமதிபதி சுக்கிரனின் பூரம் – 4 லும், பாக்யாதிபதி சூரியன் 6 ஆமிடத்தில் மனோகாரகன் சந்திரனின் ரோகிணி – 4ல் சந்திரனை பாதிக்கும்படி அமைந்துவிட்ட கேதுவின் மகம் – 3ல் நிற்கிறார். கடக ராசி பாவகர்தாரி யோகத்தில் அமைந்து கேதுவின் மூன்றாவது பார்வை பெற்று  சந்திரனும் பாதிக்கப்பட்டுவிட்டதால் ஜாதகர் பிறவியிலேயே மன நிலை பாதிக்கப்பட்டுள்ளார். குரு பாதகாதிபதியை பார்த்து சந்திர கேந்திரம் பெற்றதால் ஜாதகர் குழந்தை மனோ பாவம் பெற்றவராக காணப்படுகிறார். ஜாதகர் தற்போது சூரிய திசையில் உள்ளார். அடுத்து பாதக ஸ்தானத்தில் நிற்கும் சனியின் சாரம் பெற்ற சந்திர திசையில் மேலும் கடுமையாக பாதிக்கப்படப்போவதையே ஜாதகம் குறிப்பிடுகிறது.  இந்த ஜாதகத்தில் சந்திர-ராகு சேர்க்கை மன நிலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கிரகச் சேர்க்கை ஒரே குடும்பத்தில் ஏற்படுவது ஒரு யோகமோ தோஷமோ அவர்களை தொடர்ந்து வருவதை குறிக்கும். ஆனால் அதன் வெளிப்பாடு அனைவருக்கும் ஒரே விதமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு கிரகச் சேர்க்கை சாதகத்தையோ பாதகத்தையோ வழங்கும் நிலையில் இருந்தாலும் அவ்வமைப்பை பாதிக்கும் எதிர்க்காரணிகளை ஆராய்ந்தே அதை இறுதி செய்ய வேண்டும். 
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இல்லறம்

வாங்க பழகலாம்!

ஒரு விஷயத்தை அணுகும் முறை ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. திருமண விஷயங்களில் கடந்த தலைமுறை வரை ஜோதிடத்தை நம்பினர் என்றால், அதனுடன் கூடவே உறவுகள், நட்புகள் போன்ற பல வகைகளில் திருமண

மேலும் படிக்க »
கிரகங்கள்

பேத்தியின் திருமணம்.

ஜனனமும், மரணமும் பிரம்ம ரகசியம் என்பர். ஆயுள் பற்றிய கேள்விகள் வந்தால் கேள்வி கேட்பவர் நிலையறிந்து ஜோதிடர் பதிலளிப்பது உத்தமம். பல வேளைகளில் அவசியமற்றதாக அது இருக்கும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வயோதிக உபாதைகளால்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

தனித்துவமான துறைகள்!  

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் பொதுவான சில குண நலன்கள் உண்டு என்றாலும் மற்றவர்களிடம் இருந்து தங்களது தனித்துவமான நிலைகளால் வேறுபடுபவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். கவனிக்கப்படுபவர்கள் அனைவரும் புகழ் பெறுகிறார்களா? என்றால் அவர்கள் தனித்துவம் உலகை

மேலும் படிக்க »
கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English