இன்றைக்கு மக்களை வருத்தும் ஒரு பாதிப்பு உடற்பருமன். சீரான அளவைவிட உடலின் அங்கம் ஒன்று பெரிதாக அமைகிறதென்றால் அந்த அங்கத்தை குறிக்கின்ற பாவம் ஜாதகத்தில் வலுவாக அமைந்திருக்கிறது என்று பொருள். ஒரு உறுப்பின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறதென்றால் அந்த உறுப்பைக் குறிக்கின்ற பாவாதிபதி கிரகமும் உறுப்பின் காரக கிரகமும் சிறப்பாக இருக்கிறார்கள் எனப்பொருள். ஆனால் ஒட்டுமொத்த உடலின் தோற்றத்தை லக்னமும் உடலின் கட்டமைப்பை அதாவது உடலின் அளவை கால புருஷனுக்கு நான்காம் பாவமான கடக ராசியும் மற்றும் லக்னத்திற்கு நான்காம் பாவமும் குறிக்கின்றன. நான்காம் அதீத வலுப்பெற்றால் உடற்பருமன் ஏற்படும். மூன்றாம் பாவம் வலுப்பெற்றால் தோற்றம் சீராக இருக்கும். ராகு அதீத வளர்ச்சியை குறிக்கும் கிரகமாவதால் ராகு திசா நாதனோடும் 4 ஆம் பாவத்தோடும் தொடர்பாகும்போது அதீத உடலமைப்பை ஏற்படுத்தும். உதாரணமாக நடிகை நமீதா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு போன்றோர் ராகுவின் தாக்கம் நிரம்பப்பெற்றவர்கள்.
உதாரணமாக கடக ராசி நான்காம் பாவமாக வந்து அங்கு ராகு நின்று திசை நடத்தினால் உடற்பருமன் ஏற்படும். அது மரபணு குறைபாட்டோடு (Hormone imbalance) தொடர்புடையதாகவும் இருக்கும். ராகு வளர்ச்சியை குறிக்கும் கிரகமாகி இரத்த ரீதியான பாரம்பரிய கூறுகளை குறிக்கும் கடக ராசியில் ராகு தொடர்புகொள்வதால் இது ஏற்படும். ஆனால் மிதுன ராசி கடக ராசிக்கு விரைய ராசி ஆவதால் திசா புக்தி ரீதியாக மிதுன ராசி செயல்பட்டால் உடற்பருமன் குறையத்துவங்கிவிடும். அப்போது உடற்பருமனை குறைக்க எடுக்கும் பயிற்சிகள் பலனளிக்கும். கால புருஷனுக்கு 3 ஆம் பாவமான மிதுன ராசியில் தைராய்டு சுரப்பி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தைராய்டு சுரப்பியின் செயல்பாடானது ஒருவரின் உடற்பருமனை அதிகப்படுத்தவும் ஒல்லியாக்கிவிடவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக மூன்றாம் பாவமாக மிதுன ராசியில் அமைந்து அதிலுள்ள ராகுவின் நட்சத்திரமான திருவாதிரையில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் சூழலில் ராகு நான்காம் பாவமான கடகத்தில் அமைந்திருந்தால் மூன்றாம் பாவத்திலிருந்து திசை நடத்தும் கிரகத்தின் திசையில் உடற்பருன்மன் குறைவதற்குப்பதில் அதிகமாகும். காரணம் திசை நடத்தும் கிரகம் சார ரீதியாக நான்காம் பாவ ராகுவோடு தொடர்புகொள்வதே .
கீழே ஒரு இளைஞனின் ஜாதகம்.
1997 ல் பிறந்த இளைஞன் இவர். குரு சனியோடு பரிவர்த்தனையாவதால் நீசபங்கமடைகிறது. இதனால் நான்காம் பாவம் வலுவடைகிறது. இளைஞனுக்கு தற்போது குரு திசை சனி புக்தியில் உள்ளார். குரு பாதகாதிபதியுடன் இணைந்து பாதகாதிபதி சூரியனின் சாரத்தில் இருந்து திசை நடத்திக்கொண்டிருக்கிறார். தனுசு ராசியில் கிரகங்கள் இருப்பதால் குரு தனது திசையில் மூன்றாவது பாவ பலனை தரமாட்டார். குரு தானிருக்கும் 4, 5 மற்றும் பரிவர்தனைக்குப்பின் இடம் மாறுவதால் 6 ஆமிடப்பலனையுமே தனது திசா புக்தி காலத்தில் வழங்குவார். குரு திசைக்கு அடுத்து வருவது சனி திசையே. சனியும் 6, 5 மற்றும் பரிவர்தனைக்குப்பின் இடம் மாறுவதால் 4 ஆம் பாவ பலனையுமே வழங்குவார். குரு, சனியோடு பாதகாதிபதி சூரியன் தொடர்பாகி 4 & 6 ஆம் பாவங்களும் தொடர்பாவதால் ஜாதகரின் உடற்பருமன் தீராத வியாதியில் கொண்டுவிடும் என்பதில் ஐயமில்லை.
இரண்டாவது இளைஞனின் ஜாதகம் கீழே.
திசா நாதன் ராகு லக்னத்திற்கு 7 ல் 4 ஆம் பாவாதிபதி சுக்கிரனின் பூரம் – 2 ல் நின்று 2008 முதல் திசை நடத்துகிறது. இதனால் ஜாதகர் வளர வளர உடல் பலூன் போன்று ஊதிவிட்டது. 2015 முதல் 10 ஆம் பாவத்திலிருந்து கேட்டை நட்சத்திரத்தில் சுய சாரம் பெற்று 4 ஆம் பாவத்தை பார்வை செய்யும் கால புருஷனின் 3 ஆம் பாவாதிபதி புதனின் புக்தி நடக்கிறது. இதனால் ஜாதகர் உடற்பருமனை குறைப்பதில் கவனம் செலுத்தி பெருமளவில் தனது உடல் எடையைக் குறைத்து தற்போது கட்டுக்கோப்பாக உடலை பேணுகிறார். தற்போது ஜாதகருக்கு லக்னத்தில் ராகுவின் சதயம் – 4 ல் நிற்கும் கேதுவின் புக்தி நடக்கிறது. கேது பொதுவாகவே குறுக்குவார் என்பதுடன் ராகுவின் செயல்களை கட்டுப்படுத்தும் சக்தியையும் பெற்றவராக செயல்படுவார் என்பதால் தற்போது உடலை கட்டுக்கோப்பாக ஜாதகர் பயிர்ச்சிகளின் மூலம் பேணுகிறார்.
பின்வரும் ஜாதகம் ஒரு பெண்ணினுடையது.
ஜாதகி 1995 ல் பிறந்தவர். திருமணமாகிவிட்டது. கணவனை குறிக்கும் 7 ஆமிடத்தில் கால புருஷனின் 4 ஆம் அதிபதி சந்திரன் அமைந்துள்ளார். 7 ஆமிடம் கணவர் எனக்கொண்டால் 7 க்கு 4 ஆமிடமான 10 ஆமிடம் கணவரின் உடற்கட்டை குறிக்கிறது. 10 ஆமிடத்தை அதை அதிபதி குரு புதனின் கேட்டை நட்சத்திலிருந்து பார்க்கிறார். 7 க்கு விரையத்தில் 6 ல் அமைந்த 7 ஆமதிபதி குரு, 7 க்கு பாதகாதிபதியான லக்னாதிபதி புதனின் சாரம் பெற்று திசை நடத்துகிறார். இதனால் ஜாதகியின் கணவரின் உயிருக்கு பாதிப்புள்ளது. குரு பார்வை பெறும் இடம் வளர்ச்சியடையும் என்பதற்கேற்ப குரு 7 க்கு 4 ஆமிடமான 1௦ ஆமிடத்தை பார்ப்பதால் கணவர் சற்று உடல் பருத்தவராக இருந்தார். திருமணமானவுடன் உடல் பருமனை குறைக்க முறையான மருத்துவர்களை தொடர்புகொள்ளாமல் தொலைக்காட்சி விளம்பரங்களை நம்பி மருந்து வில்லைகளை உட்கொண்டார். ஜாதகிக்கு களத்திர காரகன் செவ்வாயின் சாரம் சித்திரை- 1 பெற்ற சுக்கிர திசையில் களத்திர பாவமான 7 ல் நிற்கும் 2 ஆமதிபதி சந்திரனின் சாரம் பெற்ற புதனின் புக்தியில் திருமணம் நடந்தது. புதன் சுக ஸ்தானாதிபதி என்பதால் தனது புக்தியில் ஜாதகிக்கு திருமணத்தை செய்வித்தார். 7 க்கு பாதாக ஸ்தானமான லக்னத்திற்கும் உரியவரானதால் அதே தனது புக்தியில் கணவரின் உயிரையும் பறித்துவிட்டார். கணவர் உடல் எடையை குறைக்க உட்கொண்ட மருந்துகளின் விளைவால் திருமணமான மூன்று மாதத்தில் மரணமடைந்தார். புதன் மருந்துக்களுக்கு காரக கிரகம் என்பதை கவனிக்க. தொலைக்காட்சி விளம்பரங்களை நம்பி மருந்து உட்கொள்வோர் கவனம். சில வருடங்களுக்கு முன் பணி ஓய்வு பெற்ற எங்கள் மதிப்புமிகு பள்ளி ஆசிரியரின் ஜாதகம் கீழே.
ஜாதகத்தில் உடலின் கட்டமைப்பை குறிக்கும் நான்காம் பாவத்தில் வாழ்க்கையில் எதையும் அளவாக அனுபவிக்க வைக்கும் கேது உள்ளார். இதனால் இவரின் உடற்கட்டு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒரே சீராக ஒல்லியாகவே உள்ளது. திரைத்துறை இயக்குனர் மனோபால போல எப்போதும் எதிர்க்காற்றில் வந்தது போலவே காணப்படுவார். இவரின் உடற்கட்டை பார்த்து பொறாமைப்படாத சக ஆசிரியர்களே இல்லை எனலாம். 1௦ ஆம் பாவத்தில் நின்ற ராகுவின் திசையில் ஜாதகருக்கு ஆசிரியராக பணி கிடைத்தது. தனது சிறப்பான சேவையால் நல்லாசிரியர் விருது பெற்றவர். ராகு குருவின் விசாகம் – 2 ல் நிற்கிறது. ராகு நின்ற பத்தாம் பாவத்திற்கு 1௦ ல் திக்பலத்தில் சூரியனும் செவ்வாயும் அமைந்துள்ள அமைப்பு அரசு ஆசிரியர் பணி பெற காரணாமாக இருந்தது. 1957 ல் பிறந்த ஜாதகருக்கு 1986 ல் குரு திசை வந்தது. குரு 3 ஆம் பாவத்தை பார்க்கிறார். 4 ல் கேது இருந்து உடலை குறுக்குகிறது. கால புருஷனின் 4 ஆம் பாவமான கடக ராசியில் பாவ கிரகங்கள் அமைந்து அதன் அதிபதி சந்திரன் அந்த பாவத்திற்கு பாதகத்தில் ரிஷபத்தில் உச்சமானதால் உடல் கட்டமைப்பு பேணப்பட்டது. குரு திசையை அடுத்து 2002 ல் வந்த சனி திசையிலும் ஜாதகர் உடல் கட்டுக்கோப்பாகவே காணப்படுகிறது. சனி லக்னத்தையும் கால புருஷனுக்கு 4 ஆம் அதிபதி சந்திரனையும் பார்க்கிறது என்பதே காரணம்.
மனித வாழ்க்கையை மட்டுமல்ல மனித உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் கிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன என்பதே உண்மை. இறைவனால் படைக்கப்பட்ட கிரகங்களின் தயவின்றி உயிரினங்களுக்கு எதுவும் நடைபெறாது. இதையே அவனன்றி எதுவும் அசையாது என நமது இந்து தர்மம் கூறுகிறது.
மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501