ஜாதகம் இல்லாதோர்க்கு ஜோதிடத்தில் வழி காட்ட இயலுமா என்றொரு கேள்வி எல்லோருக்கும் இருக்கும். பிரசன்ன ஜோதிடம் இதற்கு வழி காட்டுகிறது. பிரசன்னத்தில் பலதரப்பட்ட பிரசன்னங்கள் இருக்கின்றன. உதாரணமாக தீபப்பிரசன்னம், ஹோரைப்பிரசன்னம், சோழிப்பிரசன்னம், தாம்பூலப்பிரசன்னம், அஷ்டமங்களப்பிரசன்னம், பெண்டூலப்பிரசன்னம், ஹோராரரி பிரசன்னம், ஜாமக்கோள் பிரசன்னம் என்று இந்தப்பட்டியல் நீள்கிறது. பொதுவாக பிரசன்னங்களின் மூலமாக தான் எண்ணி வந்த காரியத்தின் முடிவு எப்படி அமையும் என்பதே பிரசன்னம் கேட்பவர் அனைவரின் எதிர்பார்ப்புமாகும். ஒரு நுட்பமான ஜோதிடர் பிரசன்னத்தின் மூலம் கேள்விக்குண்டான விஷயத்தின் போக்கு அதன் முடிவு ஆகியவற்றை துல்லியமாக கூறிவிட முடியும். இதனோடு, வந்த நபரின் பாவனைகள், அந்த நேரத்தின் ஜோதிடர் உணரும், பார்க்கும், கிடைக்கும் நிமித்தங்கள், சகுனங்கள் ஆகியவற்றையும் இணைந்துப்பார்த்து பதிலளிப்பார் உதாரணமாக அஷ்ட மங்களப்பிரசன்னம் இப்படிப்பட்டதுதான்.
பொதுவாக ஜோதிடர்கள் இப்படி நடக்கும் எனும்போது அப்படி நடக்காமல் போனால் எப்படி அதை எதிர்கொள்வது என்றொரு கேள்வி எப்போதும் பிரசன்னம் கேட்டு வருபவர் அனைவரிடமும் இருக்கும். மேலும் கேள்வி எழுந்த சூழலை பிரசன்ன ஜாதகம் சுட்டிக்காட்ட வேண்டும் அப்போதுதான் அந்தப்பிரசன்னத்தின் மூலம் தெளிவான பதில் கிடைக்கும். இதை இதர வகை பிரசன்னங்களைவிட தெளிவாக அறுதியிடுவது ஜாமக்கோள் பிரசன்னமாகும். ஜாமக்கோள் பிரசன்னதிலும் கேள்வியின் நிலை சுட்டிக்காட்டப்படவில்லை எனில் பிரசன்னத்தை தொடர மாட்டார்கள். ஜாமக்கோள் பிரசன்னத்தில் கேள்வியின் சூழலை சுட்டிக்காட்டுவது மட்டுமின்றி, கேள்வியாளரின் நிலையையும் தெளிவாக அறிந்து உரைக்க முடியும். இந்தச் சிறப்பு மூலம் ஜாமக்கோள் பிரசன்னம் இதர முறை பிரசன்னங்களை விட மேம்பட்டு நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. இதை ஒரு உதாரண பிரசன்னத்தின் மூலம் காணலாம்.
மேஷ உதயம். உதயாதிபதி செவ்வாய் பெண் ராசியான கடகத்தில் நிற்கிறது. கேள்வியாளர் ஒரு பெண் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. கடக ராசி கடலைக்குறிக்கும் ராசியாகும். மேஷ உதயம் என்பது தலை நகரத்தை சுட்டிக்காட்டுகிறது. கேள்வியாளரான பெண்மணி தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து என்னைத்தொடர்புகொண்டார். ஆருடம் கன்னியின் நிற்கிறது. உதயத்திற்கு ஆருடம் 6 ஆவதால் கேள்வியாளர் பணிபுரிபவர். கடகத்திலிருக்கும் உதயாதிபதி செவ்வாயை உழைப்பின் காரகன் சனி பார்ப்பது இதை உறுதி செய்கிறது. 6 ஆமிடம் வேலை. உதயத்திலும் ஆரூடதிலும் சூரியன் நிற்கிறது. இதனால் கேள்வியாளர் அரசுப்பணிபுரிகிறார். ஆரூடம் புதனின் வீடான கன்னி. உதயத்திலும் இரு புதன்கள் நிற்கின்றன. இதனால் இவர் புதன் தொடர்புடைய கல்வி, கணக்கு, மருத்துவம் போன்றவற்றில் துறைகளில் ஒன்றில் பணி புரிபவராக இருக்கக்கூடும். கல்வி, போதனை என்பவை இரண்டாமிடத்தோடும் தொடர்பாக வேண்டும். ஆனால் இங்கு ஆரூடம் 6ல் நின்று 6 ஆமிடம் வியாதியையும் குறிப்பிடும் என்பதாலும் ஜாதகி மருத்துவத்தோடு தொடர்புடைய துறையில் இருக்க அதிகபட்ச வாய்ப்புண்டு. (பிற்பாடு கேள்வியாளர் இதை உறுதி செய்தார்.)
கேள்வியாளர் என்னிடம் ஜாதகம் அனுப்பி கேள்வி கேட்குமுன்னரே, அவர் தொடர்புகொண்ட நேரத்திற்கு நான் பிரசன்னம் கணித்தேன் என்பதால் கேள்வி என்ன என்பதையும் அனுமானிக்க வேண்டியிருந்தது. கேள்வியை கேள்வியாளர் கேட்கவில்லை எனும் சூழலில் உதயத்திற்கு 1௦ ஆமிடத்தைக்கொண்டும் உச்ச – நீச்ச கிரகங்களை வைத்தும் அனுமானிக்கலாம் என்பதன் அடிப்படையில் உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் இரு சனிகளும் நீச நிலையில் ஆட்சி சனியோடு இணைந்த குருவும் 1௦ ல் நிற்கிறது. இரு சனிகளின் 3 ஆவது பார்வையும் விரைய ஸ்தானத்தில் நிற்கும் 7 ஆமதிபதி சுக்கிரனின் மீதும் 7 ஆவது பார்வை கடகத்தில் நிற்கும் நீச நிலை பெற்று நிற்கும் களத்திர காரகன் செவ்வாயின் மீதும் 1௦ ஆவது பார்வை களத்திர பாவமான 7 ஆமிடத்திலும் பதிகிறது. மேலும் உள்வட்டத்தில் செவ்வாய் உதயத்திற்கு பாதகத்தில் நிற்கிறார். உதயாதிபதி செவ்வாய் பிரிவினையை குறிக்கும் 8 ஆம் பாவ நீச சந்திரனுடன் பரிவர்த்தனையாகியுள்ளது. இது கேள்வியாளர் தனது மண வாழ்வில் பாதிப்பை அடைந்திருப்பதையும் தெளிவாக குறிப்பிடுவதோடு பணியிலும் கடுமையான உழைப்பை கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை தெரிவிக்கிறது. (பிற்பாடு கேள்வியாளர் இவ்விரண்டையும் உறுதி செய்தார்.) கூடுதலாக அவர் தெரிவித்தது, அவர் மருத்துவத்துறையில் சிறுநீரகத்துறையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர் சுத்திகரிக்கும் பணியோடு தொடர்புடையவர். இதை பிரசன்னம் சுட்டிக்காட்டுகிறதா என காண்போம்.
பொதுவாக கடக உதயத்தில் செவ்வாய் நீசமாகி மகர சனி பார்ப்பது என்பதை மரண ஜாமம் என ஜாமக்கோள் பிரசன்னம் வரையறை செய்கிறது. மரண அவஸ்தைகளையும் மரணத்தோடு போராடுபவர்களையும்ம் இது குறிப்பிடுகிறது. காரணம் கால புருஷனுக்கு லக்ன மற்றும் அஷ்டமாதிபதி செவ்வாய் கால புருஷனின் மாரகாதிபதி சனியால் சுடுகாட்டை குறிக்கும் மகர ராசியிலிருந்து பார்ப்பதுதான். இதில் சனி வயதான மற்றும் நோயாளிகளை குறிக்கிறது. செவ்வாய் நீர் ராசியான கடகத்திலிருந்து சனியை பார்ப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடகம் நீர் ராசி என்பதிலிருந்து சிறுநீர் என்பதையும், கழிவுகளை குறிக்கும் சனி கழிவின் நீர்வடிவமான சிறு நீர் வெளியேற்றம் பாதிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிடுகிறது. ஜாமச்சனி (வெளிவட்டச்சனி) செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டம்-3 ல் நின்று கடக செவ்வாயை பார்ப்பது இதை உறுதி செய்கிறது. சிறுநீரகத்தை குறிப்பிடும் ராசி துலாம் ராசியாகும். துலாம் ராசியை கடக செவ்வாய் நான்காம் பார்வையாக பாப்பதும் மகர சனி 1௦ ஆம் பார்வையாக பார்ப்பதாலும் கேள்வியாளர் சிறுநீரகம் பாதிகப்பட்டவர்களோடு உத்தியோக ரீதியாக தொடர்புகொள்வார் என்பதோடு, இதே அமைப்புதான் கேள்வியாளரது மண வாழ்விலும் பாதிப்பை கொடுத்துள்ளது என்பதும் தெளிவாகிறது.
இந்த பிரசன்னம் கேள்வியாளரின் நிலையை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இதர வகை பிரசன்னங்களில் இத்தனை தெளிவு கிடைக்காது.
மீண்டுமொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்,
அதுவரை, வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.கைபேசி: 8300124501