நமக்கு சம்பாத்தியம் வரும் வழிகளை ஒருவர் தெரிந்துகொண்டு அதில் ஈடுபட்டால் வருமானம் பற்றிய கவலைகள் மறைந்துவிடும். சம்பாத்தியம் சுகமானால் வாழ்வில் பாதிப்பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் சம்பாத்தியத்திற்குரிய சரியான துறையை தேர்ந்தெடுப்பதில்தான் மனித வாழ்வின் பாதி வெற்றியே அடங்கியுள்ளது. பொருளாதாரத்தால் முடங்கிய இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தங்களுக்கான துறையை நாடியே ஓடுகிறார்கள். அந்த ஓட்டத்தில் தங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் துறைகளை தெரிந்துகொண்டு அந்த திசையில் ஓடுபவர்கள் பொருளாதார ரீதியாக விரைவில் வெற்றிபெறுகிறார்கள். இன்றைய பதிவில் நாம் பால் வளத்துறையில் சம்பாதிக்கும் ஜாதக அமைப்பு பற்றி ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராயவிருக்கிறோம்.
கீழே 1996 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம். ஜாதகர் குஜராத் அரசின் பால் வளத்துறையில் பணிபுரிகிறார்.
கடக லக்னம் ஒரு நீர் ராசியாகும். அதில் வருமான ஸ்தானாதிபதி சூரியன் லக்னத்தில் நின்று தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்தை பார்க்கிறார். வேலைவாய்ப்பு பாவமான 6 ஆமதிபதி குரு நவாம்சத்தில் சூரியன் வீட்டில் நிற்கிறார். இதனால் ஜாதகரின் வேலை அரசு வேலையாகும். ஜீவன காரகன் சனி வேலை பாவமான 6 ஆமிடதிலுள்ள அதன் அதிபதி குருவை 1௦ ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் ஜாதகர் வேலை பார்க்கிறார். சனி தனது 1௦ ஆம் பார்வையாக 6 ஆமிடத்தையும் 6 ஆம் பாவதிபதியையும் பார்ப்பதால் ஜாதகர் சுயதொழிலைவிட வேலைக்கு செல்வதே சிறப்பு என இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் லாபாதிபதியுடன் இணைந்து விரையத்தில் நிற்கிறார். செவ்வாய் வியாபர கிரகமான புதனின் வீட்டில் நிற்பதால் ஜாதகர் பாலை விற்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். செவ்வாய் உணவு பாவமான கடக லக்னத்திற்கு விரையத்தில் நிற்பதால் ஜாதகர் சார்ந்துள்ளது உணவை நுகர்ந்து விரையம் செய்யும் துறையாகும். கடகத்தின் யோகாதிபதியும் 1௦ ஆமதிபதியுமான செவ்வாய் நவாம்சத்தில் லக்னத்தில் உச்சமாகி கடக ராசியை பார்ப்பதால் அந்த வேலை கடகம் குறிக்கும் திரவம் சார்ந்தது என்பது புரிகிறது. இரண்டாம் அதிபதி சூரியனும் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். புதன் வருமான ஸ்தானத்தில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் வேலை பார்க்கும் துறை புதன் குறிப்பிடும் வியாபரத்துறையேயாகும். விரையாதிபதியே வருமான ஸ்தானத்தில் அமைந்துள்ளதால் விரையம் செய்வதன் மூலமே பொருளீட்டும் துறையாகும். புதன் கேதுவின் மகம்-3 ல் நிற்பதால் ஜாதகர் பால் பதப்படுத்தும் துறையில் Lab Chemist ஆக பணிபுரிகிறார்.
லக்னாதிபதி ஒன்பதாம் இடத்தில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் பூர்வீக பூமியை விட்டு வெகுதொலைவில் சென்று வேலை பார்ப்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. சந்திரன் நீர் ராசியான மீனத்தில் ஜீவன காரகன் சனியோடு அமைந்துள்ளார். நீர் ராசியான மீனம் கால புருஷனுக்கு விரைய ராசியாகும். இதனால் ஜாதகர் குடித்துத்தீர்க்கும் பால் வளத்துறையில் பணிபுரிகிறார். (சனி-மக்கள். சந்திரன்-பால், மீனம்-நுகர்தல், அழித்தல், கேது- Chemist). ராகு கன்னியில் ஹஸ்தம்-3 ல் நிற்கிறார். இது பாலை பதப்படுத்தும் துறையில் ஜாதகர் ஈடுபடுவதை குறிக்கிறது. (ராகு/கேது-பதப்படுத்துதல்) லாபாதிபதியும் பாதகாதிபதியுமான சுக்கிரன் செவ்வாயின் மிருகசீரிஷம்-3 ல் நிற்கிறார். இதனால் பாதகாதிபதி சுக்கிரன் லக்ன யோகாதிபதி செவ்வாய்க்கு கட்டுப்பட்டவராகிறார். சந்திரன் உச்சமாகும் பாதகாதிபதி சுக்கிரன் விரையத்தில் நிற்பதால் பால் உணவால் ஜாதகருக்கு லாபம் வரும். 1௦ ஆமதிபதி செவ்வாயை ஒன்பதாம் அதிபதி குரு பார்க்கிறார். இதனால் தர்ம கர்மாதிபதி யோகமும் ஜாதகருக்கு உண்டு.
உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவத்தில் அமைந்த கேது 2 ஆம் பாவத்தில் நிற்கும் புதனோடு சாரப்பரிவர்த்தனை பெறுகிறார். இதனால் உயர்கல்வியில் ஜாதகர் B.Tech – (Dairy Tech) படித்தார். ஜாதகர் தற்போது புதன் திசை ராகு புக்தியில் உள்ளார். புதன் இரண்டாம் இடத்தில் நிற்பதால் ஜாதகருக்கு புதன் திசையில் 1௦ ஆம் அதிபதி செவ்வாயில் புக்தியில் வேலை கிடைத்தது. அப்போது கோட்சார சனி தனுசுவில் ஜனன கால 6 ஆமதிபதி குருவின்மேல் இருந்தது. கோட்சார குரு துலாத்தில் இருந்து 1௦ ஆம் பாவமான மேஷத்தையும் மிதுனத்தில் நின்ற 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாயையும் பார்த்த காலத்தில் வேலை கிடைத்தது. அடுத்தடுத்து திசை நடத்தும் கிரகங்களான புதன், கேது, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வருமானத்தை தரும். இம்மூன்று கிரகங்களும் ஜாதகர் தொலை தூர இடத்தில் இருப்பதையே குறிப்பிடுகின்றன. 2 க்கு விரையத்தில் லக்னத்தில் அமர்ந்த சூரிய திசையில் ஜாதகரின் வேலை, வருமானம் தடைபடும். அப்போது ஜாதகர் ஓய்வு பெறும் வயதை அடைந்திருப்பார். சூரியன் லக்னத்தில் நிற்பதால் ஜாதகர் தனது வேலையில் முதன்மையான இடத்தை அடைவார். லக்னாதிபதி சந்திரனும் ஜீவன காரகன் சனியும் உபய ராசியில் அமைந்திருப்பதால் ஜாதகர் வேலையில் பல மாறுதல்களை சந்திப்பார் எனலாம்.
இன்றைய தேவை ஒரு வேலை. கிடைக்கும் வேலையை செய்யும் கூலியாட்களைவிட வாழ்வில் பொருளாதார வகையில் உயர வேண்டுமானால் தகுந்த துறையை ஜோதிடத்தின் வாயிலாக அடையாளம் கண்டு முயல்வது மிகுந்த பயனைத்தரும்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துகளுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501.