நாம் அனைவரும் குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக படைக்கப்பட்டிருப்பதாக ஒரு கோட்பாடு உண்டு. பல கோடி நபர்கள் வசிக்கும் இப்பூமியில் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே. இந்த நமது தனித்துவத்திற்கு நமக்கு உருவம், சிந்தனை, செயல் கொடுத்த கிரகங்களே காரணம் என்றால் அது மிகையல்ல. இரட்டையர்களாக பிறந்த நபர்களுக்கிடையேயும், ஒரே மாதிரி தோற்றமளிக்கும் தொடர்பற்ற நபர்களுக்கிடையேயும் பொதுவான சில ஜாதக அம்சங்கள் இருக்கக்கூடும். ஆனால் குணங்களில் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்களே. ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கிடையேயும், உடல் ஒன்றாகவும் இரு தலைகொண்ட அபூர்வ பிறவிகளிடையேயும் குண வேறுபாடு உண்டு. அறிவியலும், ஜோதிடமும் இதற்கான காரணங்களை புரிந்துகொள்ள முயல்கிறான்.
மனிதர்களுக்கிடையேயான இத்தகைய குண வேறுபாட்டிற்கு அவர்களை வழிநடத்தும் கிரகமே காரணம் என்றொரு கருத்து ஜோதிடத்தில் முன் வைக்கப்படுகிறது. அக்கிரகம் “வழி நடத்தும் கிரகம்”, “அதிமுக்கிய கிரகம்”, “Signature Planet” என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. நாம் இக்கிரகத்தை தோழன் என அழைக்கலாம். ஏனெனில் நமது ஆத்ம நண்பராக ஒவ்வொருவரும் ஒரு சிலரை வரையறுத்து வைத்திருப்போம். அவர் நமது விருப்பத்திற்குரியவர், நலம் விரும்பி. அவருக்காக நாமும் நமக்காக அவரும் தன்னலமற்று உதவுவோம். எனவே நாமும் நமது ஜாதகத்தில் எந்த நிலையிலும் நமக்கு உதவும் கிரகத்தை தோழன் என இங்கு அழைக்கலாம்.
தோழனை அடையாளம் காண்பது எப்படி?
கேந்திரம்-திரிகோண அதிபதிகள்,
கேந்திர-திரிகோணத்தில் நின்றோர்,
ஜாதகத்தில் குறைந்த அல்லது அதிக பாகை பெற்ற கிரகம்.
லக்ன புள்ளி நாதன்.
இவர்களில் எந்த கிரகம் மற்ற கிரகங்களை விட அதிக வலுவுடன் உள்ளதோ அதுவே ஜாதகரை வழிநடத்தும் தோழனாகும். இதில் கேந்திர வலு, திரிகோண வலுவைவிட முதன்மையானது. ஆட்சி, உச்சம், நீச பங்கம், பரிவர்த்தனை, மூலத்திரிகோணம், திக்பலம் போன்ற வகைகளில் வலுப்பெற்ற கிரகமே ஜாதகரை இயக்கிக் கொண்டிருக்கும். முதன்மையாக லக்னம், இரண்டாவதாக லக்னாதிபதியுடன் தொடர்புடைய தோழன் கிரகம் மிகச் சிறந்த பலனைத் தருகிறது. அது ஜாதகருக்கு சிறந்த பலனை தருவதில் அர்ப்பணிப்பு உணர்வுடனும், ஜாதகனுக்கு உதவுவது தனது கடமை என்ற விதத்திலும் செயல்படுகிறது.
தோழன் செயல்பட முடியாத ஜாதக சூழல்.
லக்னத்தில் அல்லது லக்னாதிபதியுடன் தோழனின் பகைக்கிரகம் இணைந்திருப்பது. இந்தச் சூழலில், தோழன் கிரகம் தரும் நற்பலனை ஜாதகர் உணரமாட்டார்.
லக்னத்திற்கு அல்லது லக்னாதிபதிக்கு 8, 12 ல் மறைந்த தோழன்.
ஜனன ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட தோழன்.
தசா நாதனுக்கு 8,12 ல் மறையும் தோழன் அக்குறிப்பிட்ட தசை முடியும் வரை ஜாதகருக்கு சிறந்த பலனை வழங்க முடியாமல் இருக்கும்.
கோட்சாரத்தில் வலு குன்றும் தோழன், தற்காலிகமாக பாதிக்கப்பட்டு செயல்பட இயலா நிலையில் இருக்கும்.
ஜனன காலத்தில் அஸ்தங்கமடைந்த நிலையில் தோழன் கிரகம் இருந்தால், தந்தை காலத்திற்கு பிறகே, தோழன் கிரகம் செயல்படும்.
தோழன் கிரகம் நீசம், வக்கிரம், குறைந்த பாகை பெற்றிருந்தாலும், அது தரும் பலனில் குறைபாடு இருக்குமேயன்றி பலன் தராமல் போகாது.
தோழன் உள்ளுணர்வாக இயங்கும் கிரகமாகும். சந்திராஷ்டம நாட்களில் மனம் அதிகபட்ச சலனத்தில் இருப்பதால் தோழன் உணர்த்தும் சமிக்ஞைகளை அப்போது உணர இயலாமல் ஜாதகர் தவிப்பார்.
தோழன் கிரக பலனை அடைவதில் செய்யக்கூடாதவை.
தோழன் குறிக்கும் கிரக காரக விஷயங்கள் அனைத்தையுமே ஒருவர் பேணிப் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, தோழன் குறிக்கும் காரக உறவை ஒரு போதும் பகைத்துக்கொள்ளக்கூடாது. (உதாரணமாக சூரியன்-தந்தை மாமனார்) பகைத்தால் அது தோழன் தரும் பலனை எட்டி உதைப்பதற்கு சமமாகும்.
தோழனிடம் அதிக பலனை பெற.
தோழன் குறிக்கும் பெயரை பயன்படுத்துவது சிறப்பு. (உதாரணமாக: செவ்வாய்-முருகன்)
தோழன் குறிக்கும் கல்வியை கற்பது சிறப்பைத்தரும். கல்விச்சிறப்பே இல்லாத ஜாதகத்தில் கூட, தோழன் கிரகம் குறிக்கும் பாடத்தில் மட்டும் ஒருவர் தேர்ச்சி பெறுவதை காண முடிகிறது.
தோழன் கிரக காரக துறையில் & தொழிலில் ஒருவர் ஈடுபடும்போது ஒருவர் நிறைவாக உணர்கிறார்.
நட்பு, தொடர்புகள் வகையில் தோழன் கிரக ராசி, நட்சத்திரம் சார்ந்தவர்களே ஜாதகருடன் ஆத்மார்த்தமாக பயணிப்பார்கள். உதாரணமாக நட்பை குறிக்கும் புதன், லக்னம் மற்றும் 7 ஆமிட தொடர்பு பெற்றால் நண்பர்கள் ஒருபோதும் ஜாதகரை கைவிட மாட்டார்கள்.
எத்தகையை திருமண தோஷத்தின் தீவிரத்தையும் குறைத்துவிடும் வலிமை தோழன் கிரகத்திற்கு உண்டு. எனவே வாழ்க்கைத்துணைவரின் ராசி, நட்சத்திரம், தொழில் போன்ற ஏதாவது ஒரு வகையில் தோழன் கிரக தொடர்பு பெற்றுவிட்டால் ஜாதகர் திருமணவாழ்வு ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாகும். தோழன் கிரகம் 7 ஆமிட தொடர்பு பெற்றுவிட்டால், வாழ்க்கைத்துனைவர் ஜாதகரைவிட்டு ஒருபோதும் பிரிய மாட்டார். மீறி பிரிந்தால்,அந்த ஜாதகர் தனது வாழ்வின் ஆதாரங்கள் அனைத்தையும் இழப்பதை அது குறிக்கிறது.
வழிபாட்டில் தோழன் கிரகம் நிகழ்த்தும் அற்புதங்கள்.
ஜாதகருக்கு உள்ள தோஷங்களை போக்கி ஜாதகரை மன்னித்து அரவணைக்கும் குணம் தோழன் கிரகத்திற்கு உண்டு.
ஆத்மார்த்தம் என்றாலே அது ஜோதிடத்தில் 5 ஆவது பாவத்தை குறிக்கும். தோழன் ஒரு ஜாதகரின் உள்ளுணர்வில் நின்று செயல்படும் கிரகமாகும். இந்த வகையில் ஜாதகத்தில் தோழன் ஜாதகத்தில் எந்த ஆதிபத்தியம் பெற்றிருந்தாலும், அது 5 ஆவது பாவத்தின் மூலமே இயங்கும். அதனால்தான் நமக்கு சிறந்த பலனை தரும் 5 ஆமிட கிரகத்தைக்கொண்டு குலதெய்வத்தை கண்டுணர வழிகாட்டியுள்ளனர் நமது முன்னோர்கள். இதனால் குலதெய்வமே தெரியாதவர்கள் கூட 5 ஆமிட தொடர்பு கிரக தெய்வத்தை வழிபட்டால் சிறப்புறுவர்.
ஒரு ஜாதகரின் கடந்த பிறவியை 9 ஆம் பாவமும், தற்போதைய பிறவியை லக்னமும், அடுத்த பிறவியை 5 ஆவது பாவமும் குறிக்கும். தோழன் கிரகம், ஒரு ஜாதகர் தனது கடந்த பிறவிகளில் அக்கிரக காரக விஷயங்களுக்கு செய்த நல்வினையின் பயனாக அவருக்கு இப்பிறவியில் உதவும் வகையில் செயல்படும் கிரகமாகும். கடந்த பிறவியை குறிக்கும் 9 ஆவது பாவத்தின் பாவத் பாவமாக 5 ஆடம் வருவதால் கடந்த பிறவியின் நல்வினைப்பலனை 5 ஆவது பாவத்தின் மூலம் உள்ளுணர்வாக ஜாதகர் இப்பிறவியில் உணர்கிறார். இதனால் தோழன் கிரகம், ஜாதகர் தனது அடுத்த பிறவியை சிறப்புற அமைத்துக்கொள்ளும் வகையில் செயல்பட அவருக்கு உதவுகிறது. 5 ஆம் பாவம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த பிறவியும் சிறப்புறாது என்பது ஜோதிடக்கோட்பாடு.
தோழன் கிரகம் 5 ஆமிட தொடர்பு பெற்று அமைந்து, அதன் காரக தெய்வத்தை ஒருவர் வழிபட ஜாதகர் திடீர் அதிஷ்டங்களால் திக்குமுக்காடுவார்.
கால புருஷ 5 ஆமதிபதி சூரியனே நமது முன்வினைப்பயனை தனது கிரகணங்கள் மூலம் தசா-புக்திப்படி ஒரு ஜாதகருக்கு வழங்க உத்தரவிடுவார். எனவே லக்னத்திற்கு 5 ஆம் பாவம், 5 ஆமதிபதி சிறப்புற்றாலும், கால புருஷ 5 ஆம் பாவம் சிம்மமும் சூரியனும் சிறப்புற்றாலும் ஒரு ஜாதகர் தோழன் கிரகத்தால் சிறந்த பலன்களை அனுபவிப்பதை அது குறிக்கிறது.
கால புருஷ 9 ஆமதிபதி குருவும், கர்மகாரகர் சனியும், ஒரு ஜாதகர் தோழன் கிரகத்தின் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகங்களாகும். அதாவது தோழன் கிரகத்தால் ஒரு ஜாதகர் அனுபவிக்கவிருக்கும் நற்பலன்களின் அளவு என்ன என்பதை தெரிவிக்கும் கிரகங்களாகும்.
ராகு-கேதுக்களின் தொடர்பு தோழன் கிரகத்திற்கு சிறப்புற அமைந்தால் ஒருவர் ஒன்றுமில்லா சூழலில் இருந்தாலும் உலகை ஆளும் நிலைக்கு உயர்த்தவல்லவை. இவைகளின் தொடர்பு பாதிப்பை தரும் வகையில் அமைந்திருப்பின், அது கடந்த பிறவியில் ஜாதகர் செய்த புண்ணிய பலன்களை அவர் செய்த தீவினைகள் இப்பிறவியில் அனுபவிக்க இயலாமல் தடை செய்வதை குறிக்கும்.
சில உதாரண ஜாதகங்களின் மூலம் தோழனின் சிறப்புகளை அடுத்து வரும் பதிவுகளில் ஆராய்வோம்.
தொடர்ச்சி அடுத்த பதிவில்…
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501