ஜோதிடத்தில் பல்வேறு பிரிவுகள் உண்டு. அதில் அரசியல் ஜோதிடமும் ஒன்று.. அது அரசியல், அரசு, ஆள்பவர்களின் நிலை, எதிர்க்கட்சிகள் ஆகியவற்றை கூறும். தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அரசியலில் குதிக்க எண்ணியிருக்கிறேன். அதன் நீள, அகல உயரம் என்ன? எந்த இடத்தில் எவ்வளவு உயரத்திலிருந்து நான் அரசியலில் குதித்தால் அடிபடாமல் சம்பாதிக்கலாம்? பெயர் கெடுமா? பண இழப்பா? சம்பாதிக்க முடியாதா? புகழ் உண்டா? என்ற கேள்விகளுடன் சிலர் அணுகியதன் விளைவாக இப்பதிவு இங்கே உங்களுக்காக.
அரசியலில் கிரகங்களின் பங்கு.
சூரியன் – ஆளும் தகுதியை தரும் முதன்மைக்கிரகம். ஆளும் கட்சியை குறிப்பது.
சந்திரன் – பொதுச்சேவை, மக்கள் தொண்டு. இரண்டாவது முக்கியமான ராஜ கிரகம்.
செவ்வாய் – இரண்டாம் நிலை அரசியல்வாதிகள். ஆளும் கட்சியின் கூட்டணிக்கட்சிகள்.
புதன் – அரசியலில் திட்டங்களுக்கான காரக கிரகம். கூட்டணி பேச்சுவார்த்தை. அரசியல் நோக்கர்கள், நடுநிலையாளர்களை குறிக்கும் கிரகம். சூரியனுடன் சேர ஆளும் கட்சிக்கும் சுக்கிரனுடன் சேர எதிர் கட்சிகளுக்கும் உதவி செய்யும் கிரகம்.
குரு – தேச நலன் கருதி செயல்படும் கிரகம். தேர்தல் காலங்களில் எந்த கிரகங்களுடன் தொடர்புகொள்கிறதோ அதன் அடிப்படையில் முடிவுகளை தெரிவிக்கும். ஆளும் கட்சியை அல்லது தேச நலனின்பொருட்டு செயல்படுபவர்களை ஆதரிக்கும் கிரகம்.
சுக்கிரன் – அரசியலுக்கான காரக கிரகங்களில் முக்கியமானது. எதிர்க்கட்சிகளை நேரடியாக குறிக்கக்கூடியது. அரசியலில் நடக்கும் அனைத்து சதிராட்டங்களுக்கும் காரகம் வகிப்பது. பணம் பரிசு, இனாம், தானம் மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெற முயல்பவர்கள் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்களே.
சனி – வாக்காளர்களை, அடித்தட்டு மக்களை குறிக்கும் கிரகம். சூரியனின் பகை கிரகமாவதால் ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படக்கூடியது. ஜனன ஜாதகத்தில் சனி சாதகமாக இல்லை எனில் அரசியலில் வெற்றி பெற இயலாது. வயதான அல்லது பல்லாண்டு உழைப்பிற்குப்பிறகு அரசியலில் வெற்றியை உறுதியாகத்தரும் கிரகம். சாதகமற்ற சனி அரசியலில் தோல்வியை, அவமானங்களை, இழப்புகளை தரக்கூடியது.
ராகு – சட்டத்திற்கு புறம்பான வழிகளில் அரசியல் வெற்றியை பெற வைக்கும் கிரகம்.
கேது – சட்டப்படியான வழிகளில் அரசியலில் வெற்றி பெற வைக்கும் கிரகம்.
மாந்தி – அரசியல் கூட்டணிகள் கடைசி நேரத்தில் மாறுவதற்கான காரக கிரகமாகும். மரணத்திற்கு சமமான பாதிப்புகளை சாதகமற்ற மாந்தி தருகிறார். அரசியல் படுகொலைகளுக்கு ராகு, செவ்வாய், சனி தொடர்பு பெற்ற மாந்தி காரணமாகிறார்..
லக்னாதிபதி கிரகம் வக்கிரமானாலோ அல்லது வக்கிர கிரகம் லக்னத்தில் இருந்தாலோ அதன் திசா-புக்திகளில் அரசியலில் ஒருவரை பின்வாங்கவைக்கும்.
வக்கிர கிரகம் அரசியலில் நடிப்பவர்களை குறிப்பிடும்.
கடகம், சிம்மம் ஆகியவை ஆட்சி அதிகாரங்களுக்குரிய ராஜ ராசிகள் என அழைக்கப்படுகின்றன.
தனுசு ராசியும் அதன் அதிபதி குருவும், மகர ராசியும் அதன் அதிபதி சனியும் தேசத்தை ஆள்பவர்களை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குருவும் சனியும் கால புருஷனுக்கு தர்ம-கர்மாதிபதிகளாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குருவும் சனியும் கோட்சாரத்தின் கால புருஷனின் ராஜ்ய ஸ்தானமான மகரத்தில் ஒருங்கிணைந்து நிற்கும் வேளையில் தமிழக தேர்தல் வந்தாலும் வாக்குப்பதிவு காலத்தில் குரு கும்பத்திற்கு அதிசாரமாக சென்றுவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ ராசிகளில் ஒன்றான கடகம் மக்கள் சேவையை குறிக்கும் ராசியாகும். கடகத்தின் எதிர் ராசியான மகரம் மக்களை குறிக்கும் சனியின் ராசியாவதால் மகரம் மக்களளின் மனநிலையை வெளிக்காட்டும் ராசியாகும். சிம்மத்தின் எதிர் வீடும் சனியின் கும்ப ராசிதான். ஆனால் கும்பம் மக்கள் மனோநிலையை வெளிக்காட்டாத ராசியாகும். இதன் பொருள் சந்திரனுக்குரிய தாய்மை உணர்ச்சியுடன் மக்களை அணுகினால் மக்கள் ஆதரவு உண்டு என்பதும் சிம்மத்தின் அதிகாரத்தோடு மக்களை அணுகினால் மக்கள் தங்கள் மனநிலையை வெளிக்காட்டாது தேர்தலில்தான் எதிரொலிக்கும் என்பதாகும். ஒவ்வொரு ராசியும் செயல்படுவது அதன் எதிர் ராசியின் வலுவைப்பொறுத்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழே ஒரு அரசியல்வாதியின் ஜாதகம்.
லக்னம் மக்கள் சேவையை குறிக்கும் கடக ராசியாகும். கடகத்தின் எதிர் ராசியாதிபதி சனியும் லக்னத்திற்கு மூன்றாமிடத்தில் சிறப்பாக அமைந்துள்ளனர். லக்னத்திற்கு 6 ஆமதிபதியும் 8 ஆமதிபதியும் லக்னத்திற்கு மூன்றில் அமைந்து விபரீத ராஜ யோகத்தை வழங்குகின்றனர். இவர்கள் கால புருஷனின் தர்ம கர்மாதிபதிகள் என்பது இங்கே குறிப்படத்தக்கது. கடக லக்னத்தின் பாதகாதிபதி சுக்கிரன் நீசம் பெற்று லக்னத்திற்கு மூன்றில் மறைவது ஒருவகையில் நன்மையே என்றாலும் சுக்கிரன் நீசமாகும் கன்னிக்கு அடுத்த ராசி துலாம் சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதால் சுக்கிரன் விரைவில் நீசபங்கம் பெற்று விடுவார். இது ஜாதகர் அரசியல் செல்வாக்கால் இல்லற விஷயத்தில் தவறாக நடந்துகொண்டால் ஜாதகர் தண்டனையையும் பெண்கள் மூலமான அவமானத்தையும் அடைவார் என்பதை குறிப்பிடுகிறது. இந்த அரசியல்வாதி தற்போது சுக்கிர திசையில்தான் உள்ளார். 11 ஆமதிபதியான சுக்கிரன் நீசம் பெற்று இப்படி திசை நடத்துவது இல்லற விஷயத்தில் ஜாதகர் தவறு செய்துகொண்டுள்ளார் என்பதையும் தனது நிலையை தக்கவைத்துக்கொள்ள அதிகம் செலவு செய்வதையும் குறிக்கிறது. ஆனால் இவை யாவும் வெளி உலக்கிற்கு தெரியாது காரணம் சுக்கிரன் மறைவு பெற்றதுதான். லக்னத்திற்கு 2 ல் சூரியன் ஆட்சி பெற்று நிற்பது ஜாதகருக்கு அரசியல் மூலம் வருமானமும் வருகிறது என்பதை குறிப்பிடுகிறது. லக்னத்தில் நிற்கும் செவ்வாய், சந்திரன் ராகு ஆகிய கிரகங்களின் சேர்க்கை ஜாதகர் அரசியலில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் செயல்படுவதையும் அவரது நிலைப்பாடு கடுமையாகவும் இருக்கும் என்பதையும் குறிக்கிறது. அதே சமயம் லக்ன ராகு ஜாதகர் முறையற்ற குறுக்கு வழிகளில் சென்று தனது காரியங்களை முடிக்கிறார் என்பதையும் குறிப்பிடுகிறது. இரண்டாமிட புதன் ஜாதகர் அரசியலின் பொருட்டு செய்யும் செலவுகளை குறிப்பிடுகிறது.
கீழே தான் அரசியலில் ஈடுபட்டால் சாதிக்க முடியுமா எனக்கேட்ட ஒரு இளைஞனுக்காக பார்த்த ஜாமக்கோள் பிரசன்னம்.
கும்ப உதயத்தில் முதன்மை ராஜ கிரகம் சூரியன். இது ஜாதகரின் அரசியல் ஈடுபாட்டை காட்டுகிறது. உதயத்தில் உள்ள சூரியன் தேஜேஸ்வர் என்ற பெயரை கேள்வியாளருக்கு கொடுத்துள்ளது. முயற்சி ஸ்தானத்தில் அதன் அதிபதிகளான இரு செவ்வாயும் உள்ளது. இது ஜாதகரின் துணிவான நிலையை குறிக்கிறது. இரண்டு செவ்வாய்களும் 1௦ ஆமிடத்தை 8 ஆம் பார்வையால் பார்ப்பது கேள்வியாளரின் அரசியல் ஆசையை குறிக்கிறது.. ஆரூடம் குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறது.. ஜாம குரு மீனத்தில் ஆட்சி பெற்று நின்றாலும் உள்வட்ட குரு நீசம் பெற்று நிற்கிறது. இது ஜாதகர் தன்னை பொருளாதார ரீதியாக முதலில் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதையும், தனக்கு ஒரு குடும்பத்தை இன்னும் அமைத்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்பதையும் குறிப்பிடுகிறது. கும்ப உதயம். சனியினுடையது. ஜாம சனி துலாத்தில் உச்சமாகி மகர சுக்கிரனுடன் பரிவர்தனையாகிறார். இதனால் இரு உதயாதிபதிகளும் உதயத்திற்கு விரையதிலேயே அமைகிறார்கள். இப்படி உதயாதிபதி கிரகம் உதயத்திற்கு விரையத்தில் அமைவது கேள்வியாளர் முதலில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது. ஜாம சனி மூன்றாவது திரிகோணத்தில் உச்சமாகியுள்ளது ஜாதகரின் எண்ணம் நிறைவேற பல ஆண்டுகள் ஆகும் என்பதை தெரிவிக்கிறது. 5 ஆவது திரிகோணம் சில ஆண்டுகள் கழித்து நடக்கும் சம்பவங்களையும் 9 ஆவது திரிகோணங்கள் பல ஆண்டுகள் கழித்து நடக்கும் சம்பவங்களையும் குறிக்கும். உச்ச சனி பலனை மெதுவாக கொடுக்கும் என்பதை குறிக்கிறது. கவிப்பு 1௦ ஆமதிபதி செவ்வாயின் மிருகச்சீரிஷ நட்சத்திரத்தில் ஜாம சூரியனோடு நிற்பதும் 1௦ல் கேது நிற்பதும் ஜாதகரின் அரசியல் எண்ணங்களுக்கு தற்போது உள்ள தடைகளையும் குறிக்கிறது. அரசியலில் ஈடுபட எண்ணம் கொண்டுள்ள ஜாதகருக்கு வயது தற்போது 21. எனவே ஜாதகர் தற்போது தன்னை முதலில் நிலைநிறுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.
மீண்டு விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501