
சில தர்ம சங்கடமான சூழ்நிலைகள் நம் அனைவரின் வாழ்விலும் ஏற்படுவது சாதாரணமானது. அப்படியானவற்றுள் நன்கு அறிந்த நபர் நம்மிடம் சேமிப்பு சீட்டுப்போடும்படி கட்டாயப்படுத்துவது. குடும்ப நண்பர் தனது நண்பர் கூட்டணியுடன் திடீரென வந்து நம்மை ஆயுள் காப்பீடு செய்ய வற்புறுத்தி நம்மை அதன் தொடர்ச்சியை எடுத்துச் செல்லும்படி கூறுவது ஆகியவை அடங்கும். தன் குடும்பம் தவிர வேறு எந்த பொறுப்பிலும் யாருக்காகவும் என்னை பணயம் வைக்க மாட்டேன் என கூறுபவர்கள் கூட, குடும்ப உறுப்பினரின் நலனின் பொருட்டு தனது சகோதரர்களுக்காகவோ, நெருங்கிய நண்பர்களுக்காகவோ அவர்களின் வங்கி கடனுக்காக தான் ஜாமீன் கையெழுத்து போடும்படியான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. நம்மை சார்ந்த நமது நலம் விரும்பிகளுக்கு உதவுவது நாளைய நமது தேவைகளுக்கு அவர்களின் உதவியை நாடுகையில் நமக்கு உதவும். இவ்வுலகில் நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. எனவே இவ்வுலகில் ஒருவர் தனிமரமாக வாழ வேண்டுமெனில் அவர் மரமாகத்தான் பிறந்திருக்க வேண்டும். இத்தகைய சூழலில் சிறிய விஷயங்களை தவிர்த்து நமது வாழ்வின் ஆதார அச்சை அசைத்துவிடக்கூடிய எந்த பெரிய முடிவுகளையும் எடுக்கும் முன் ஜோதிடத்தின் உதவியை நாடுவது பல சிரமங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவும். இது பற்றி ஆராய்வதே இப்பதிவு.
மற்றவர்களுக்கு ஒருவர் ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு ஒருவரது ஜாதகத்தில் யாருக்கு உதவுகிறோமோ அவர்களை குறிக்கும் காரக கிரகம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். உதாரணமாக மூத்த சகோதரிக்கு உதவுகிறோம் என்றால் அவரது ஜாதகத்தில் மூத்த சகோதரியை குறிக்கும் சுக்கிரன் ராகு-கேதுக்கள், 8, 12 ஆமதிபதி தொடர்பற்றும் சுபர்களின் தொடர்பிலும் இருக்க வேண்டும். 6 ஆமதிபதி தொடர்பில் இருந்தால் பெரிய பாதிப்பில்லை. குறிப்பிட்ட உறவை குறிக்கும் காரக கிரகம் ராகு-கேதுக்கள் தொடர்பில் இருந்தால் அவர்களுக்கு எவ்வளவு உதவினாலும் அவர்களுக்கு முன்னேற்றம் இருக்காது. நன்றி உணர்வற்றவர்களாக அவர்கள் ஜாதகரிடம் நடந்துகொள்வார்கள். அதனால் அவர்களுக்கு நம்மாலான ஒரு தொகையை திரும்ப வராது என தானமாக கொடுத்துவிடுவது பெரிய தொகைக்கு வரும் ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றும்.
தொடர்பு பாவம் எனும் 7 ஆமிடம் சிறப்புற்றிருந்தது ஒருவர் ஜாமீன் கையெழுத்து போட்டால் பாதிப்பு பெரிதாக ஏற்படாது. ஏனெனில் ஜோதிடத்தில் உதவுபவர் லக்னாதிபதி என்றால் உதவியை பெறுபவர் 7 ஆமிடமாகிறார். 7 ஆமிடம் பாதிக்கப்பட்டு, 7 ஆமதிபதியும் பாதிக்கப்பட்டிருந்தால் ஒருவர் மற்றவருக்கு உதவுவதால் பாதிப்புகளையே அடைவார். ஜாமீன் கையெழுத்து போடுகையில் இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய ஜாதகர்கள் ஜாமீன் கையெழுத்து போட்டால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. பொருளாதாரத்தை திரும்பப்பெற முற்பட்டால் ஜாதகரின் உறவு அவரை விட்டு விலகிச்சென்றுவிடும். இத்தகையோர் பொருளாதாரம், உறவு ஆகிய இரண்டில் ஒன்றை இழப்பது உறுதி.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
தனது மைத்துனருக்கு ஜாமீன் கையெழுத்து போடலாமா? என்பது கேள்வி. மைத்துனரை குறிக்கும் செவ்வாய், இவரது ஜாதகத்தில் தனது மூலத்திரிகோண வீட்டில் பஞ்சமாதிபதி சந்திரனுடன் சிறப்பாக அமைந்துள்ளது. பாவிகள் தொடர்பு செவ்வாய்க்கு இல்லை. ஆனால் கோட்சாரத்தில் ராகு ஜாதகரின் செவ்வாய், சந்திரன் மேல் செல்வதால் ஜாமீன் கையெழுத்து போடுவதை நினைத்து பயந்து ஜாதகம் பார்க்க வந்தார். மைத்துனர் மருத்துவம் பயில வங்கியில் தான் வாங்கும் கடனுக்காக ஜாதகரை ஜாமீன் கையெழுத்து கேட்டு ஜாதகரை அணுகியுள்ளார். மேஷ செவ்வாய் மேல் கோட்சார ராகு செல்வது மைத்துனரின் சூழலை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. இந்நிலையில் ராகுவின் காரக விஷயங்களுக்கு உதவுவதால் ஜாதகருக்கு தீமை ஏற்படாது. ஏனெனில் ராகு மருத்துவத்தை குறிப்பவர். ஜனன காலத்திலும் ராகு 11 ல் சிறப்பாக அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் தாராளமாக அவரது மைத்துனருக்கு உதவலாம். மைத்துனரால் ஜாதகர் பாதிக்கப்பட மாட்டார். இதனால் உறவும் பலமடையும்.
கீழே மற்றொரு ஜாதகம்.
மேற்கண்ட ஜாதகத்தில் மனோகாரகரான லக்னாதிபதி 8 ல் மறைந்து விட்டார். இதனால் இவர் தனது முடிவுகளால் தவறு செய்வார். லக்ன யோகாதிபதி செவ்வாய் 7 ஆமதிபதி சனியோடு 3 ல் இணைவு பெற்றது சிறப்பான அமைப்பாகும். இதனால் ஜாதகருக்கு நன்மைகளே ஏற்படும். இதனால் கடும் உழைப்பினாலும் தனது தீவிர முயற்சியினாலும் ஜாதகர் முன்னேறுவார். லக்னத்தின் 1௦ ஆமதிபதி கால புருஷ 1௦ ஆமதிபதியோடு 3 ல் இணைந்ததால் ஜாதகர் கட்டுமானத்துறையில் சிறப்பான நிலையில் இருக்கிறார். இங்கு 7 ஆமதிபதி சனி செவ்வாயுடனான இணைவால் பாதிக்கப்படமாட்டார். ஆனால் செவ்வாயுடனான பரிவர்த்தனைக்கு பிறகு சனியுடன் இணையும் புதனால் சனி பாதிக்கப்படும். 7 ஆமிடம் சர்ப்பக் கிரகங்களால் பாதிக்கப்படுவதுடன் பாதகாதிபதி சுக்கிரன் 7 ல் கேதுவோடு இணைவது இவரது லாப வரவுகள் பாதிக்கப்படுவதை குறிப்பிடுகிறது.
இந்த ஜாதகர் தன்னுடன் பழகிய பெண்மணிக்கு பொருளாதார உதவிகள் செய்து நிறைய நஷ்டங்களை அடைந்தார். சுக்கிரன் ராகு, கேதுக்களுடன் இணைந்த ஜாதகர்கள் பெண்களிடம் வரவு செலவு செய்யக்கூடாது. மீறி செய்தால் அவமானங்களையும் வழக்குகளையும் எதிர்கொள்ள நேரிடும். இவர் அவமானங்களை தவிர்க்க தனது பொருளாதாரத்தை அப்பெண்மணியிடம் விட்டுக் கொடுத்துவிட்டார். 7 ஆமிட கிரகங்கள் இவ்வாறு பாதிப்பை கொடுத்தன என்றால், 3 ல், 7 ஆமதிபதி சனியுடன் இணைந்து நிற்கும் செவ்வாயுடன் பரிவர்த்தனைக்குப் பிறகு இணையும் புதன் வேறு வகையில் பாதிப்பை தருவார். காரணம் புதனானவர் செவ்வாய் போன்று லக்ன யோகாதிபதி அல்ல. 3 ஆமிடாதிபதியான புதன் விரைய பாவம் 12 க்கும் அதிபதி என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். புதன், சனி இணைவே ஏமாற்று யோகம் என அழைக்கப்படும். இணைவில் புதன் சனிக்கு பின்னால் இருந்தால் ஜாதகர் ஏமாறுவார். புதன் சனிக்கு முன்னால் நின்றால் ஜாதகர் பிறரை ஏமாற்றுவார். இங்கு பரிவர்த்தனைக்குப்பிறகு புதன் சனிக்கு பின்னால் செவ்வாய் நின்ற அதே பாகைக்கும், செவ்வாய் புதன் நின்ற அதே பாகைக்கு விருச்சிகத்திற்கும் மாறிவிடும். இதனால் ஜாதகர் ஏமாறுவது உறுதி. அதுவும் புதனின் காரக வகையில்தான் ஜாதகர் ஏமாறுவார். ஆனால் ஜாதகர் தன்னை ஏமாற்றுபவரை மிகவும் நேசிப்பார். காரணம் ஜாதகத்தில் குறைந்த பாகை பெற்ற கிரகமாக செவ்வாயும் அதிக பாகை பெற்ற கிரகமாக புதனும் ஒரு பாவகத்தில் அமைந்துள்ளனர். பரிவர்த்தனையால் செவ்வாயின் குறைந்த பாகைக்கு வரும் புதனின் காரக விஷயங்கள் ஜாதகரை மிகவும் ஈர்க்கும். இதனால் தான் புதனின் காரக உறவுகளால் ஏமாற்றப்பட்டாலும் கூட அந்த உறவை குறை சொல்ல இயலாத நிலைக்கு ஜாதகர் உள்ளாவார். புதன் நண்பர்கள், காதலி போன்றவர்களை குறிக்கும். அவர்களிடம் ஜாதகர் ஏமாறுவார்.
செவ்வாய் வீட்டை குறிக்கும் கிரகமாகும். புதன் நண்பரை குறிக்கும் கிரகமாகும். தனது நண்பரின் கடனுக்காக சனி தசா புதன் புக்தியில் 2019 ல் ஜாதகர் ஜாமீன் கையெழுத்து போட்டார். கடனை குறிக்கும் ராசி, கால புருஷனின் 6 ஆமிடமான கன்னியாகும். புதன் கால புருஷனின் 6 ஆமதிபதி என்ற வகையில் கடனுக்கு பொறுப்பேற்கிறார். கையெழுத்து மூன்றாம் பாவமாகும். தற்போதைய சூழலில் கடன் கட்ட இயலாத நிலையில் நண்பர் தனது வீட்டை ஜாதகரின் பெயருக்கு எழுதிக்கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். பரிவர்த்தனையானது நண்பர் , பத்திரத்தை குறிக்கும் புதனுக்கும் வீட்டை குறிக்கும் செவ்வாய்க்கும் என்பதால் நண்பர் வீட்டை ஜாதகருக்கு பத்திரம் செய்து கொடுத்துவிட்டார். இதனால் புதனின் அம்சமான நண்பர் தான் அடையவிருந்த பாதிப்பை நண்பருக்கு மாற்றிவிட்டு தான் தலைமறைவாகிவிட்டார். ஆனால் பொருளாதார மந்த சூழ்நிலையில் நண்பர் தனக்கு அளித்த வீட்டை விற்று கடனை அடைக்க முடியாமல், மாதாமாதம் கணிசமான ஒரு தொகையை, நண்பருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டதற்காக, அவர் கட்ட வேண்டிய வட்டி தொகையை தான் கட்டி வருகிறார். இதற்கு காரணம் பரிவர்த்தனையே ஆகும்.
ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விதமாகவோ, தீய விதமாகவோ பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு செயலை செய்வதற்கும் முன் ஜோதிடத்தின் உதவியை நாடுவது ஜாதகருக்கு ஏற்படவுள்ள பாதிப்பை தவிர்க்க அல்லது குறைத்துக்கொள்ள உதவும்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501