இயற்கையே இறைவன். இயற்கையின் வடிவங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையே நாம் உருவகப்படுத்தி இறைவனாக எண்ணி நமது கோரிக்கைகளை, நன்றிகளை வழிபாடுகள் எனும் வகையில் தெரிவிக்கிறோம். இயற்கையை சேதப்படுத்தாமல் கொண்டாடுவதே நமது கடமை. இன்று நாம் இந்த பஞ்ச பூதங்களை சரியாக வழிபாடு செய்து பராமரிக்கிறோமா? என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் கூறவேண்டியுள்ளது. பஞ்ச பூதங்களை மாசுபடுத்திவிட்டு அதன் வடிவங்களை கோவில்களில் சென்று வழிபடுவது எந்த வகையில் சரி என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தங்கள் வாழிடங்களிலேயே தெய்வ விக்கிரகங்களை வைத்து வழிபடுபவர் ஒரு வகையினர். கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு இறை சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்பவர்கள் இரண்டாவது வகையினர். இது நடைமுறையில் நமது சமுதாயத்தில் காண்பது. ஆனால் இவ்விரண்டில் சில சாதகங்களும் பாதகங்களும் உண்டு. இதை ஆராய்வதே இன்றைய பதிவு.
கோவிலுக்கு தனது செலவில் சிலை செய்து தர தாமதமாகிறது என்றவருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம்.
பொதுவாக தெய்வ வழிபாடுகளுக்கு மோட்ச ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று நீர் ராசிகளும், தெய்வ அனுக்கிரகத்தை குருவின் மூலத்திரிகோண ராசியும், கால புருஷனின் 9 ஆவது ராசியுமான தனுசு ராசியும் குறிப்பிடும். கிரகங்களில் நெருப்பு ராசிகளின் அதிபதிகளான குரு, சூரியன், செவ்வாய் ஆகியோர் தொடர்பாக வேண்டும். ஜாமக்கோள் பிரசன்னத்தில் உதயம், ஆரூடம், கவிப்பு ஆகியவை மேற்சொன்ன அமைப்போடு தொடர்பாக வேண்டும். உதயத்திற்கு 10 ஆமிடம் கேள்வியாளர் ஈடுபட்டுள்ள செயலை கூறும்.
மேற்கண்ட ஜாமக்கோள் பிரசன்னத்தில் மீன உதயத்தில் குரு ஆட்சிபெற்று அமைந்துள்ளார். இது கேள்வியாளரின் ஆன்மீக எண்ணத்தை கூறுகிறது. உதயமும் குருவும் சனியின் உத்திரட்டாதியில் அமைந்திருக்க, அதை மகர சனி வக்கிர நிலையில் மூன்றாவது பார்வையாக பார்ப்பது, கேள்வியாளரின் செயல்கள் தடை மற்றும் தாமதத்தை சந்தித்துக்கொண்டிருப்பதை குறிப்பிடுகிறது. தெய்வ வழிபாடுகளை குறிக்கும் 5 ஆமிடத்திலேயே ஆரூடம் நீர் ராசியான கடகத்தில் அமைந்தது கேள்வியாளரின் ஆன்மீக எண்ணத்தை தெளிவாக குறிப்பிடுகிறது. சிலை செய்ய கொடுத்தவரை உதயாதிபதியும், சிற்பியை உதயத்திற்கு 7 ஆமதிபதியும் குறிப்பிடும். 7 ஆமதிபதி புதன் உள்வட்டத்திலும் வெளிவட்டதிலும் 7லிலேயே நிற்பது சிற்பியின் செயல் ஏதோ ஒரு காரணத்தால் தடைபட்டு நிற்பதை குறிப்பிடுகிறது. ஜாம உதயாதிபதி குரு உதயத்திற்கு 8 ல் துலாத்தில் கேதுவுடன் இணைந்து நிற்பது சிலை செய்ய ஏற்படும் தடையால் கேள்வியாளருக்கு ஏற்படும் கௌரவ குறைவான உணர்வை குறிப்பிடுகிறது. உதயத்திற்கு 10 ஆமிடத்தில் தனுசுவில் செவ்வாய் திக்பலம் பெற்று நிற்கிறார். அவரை குருவின் புனர்பூசத்தில் மிதுனத்தில் நின்று ஜாம சனி பார்க்கிறார். ஜாம குருவும் உதயத்திற்கு 7 ஆமிடத்தை நோக்கி நகர்கிறார். இதனால் சிற்ப வேலை விரைவுபடுத்தப்படும். கவிப்பு லாப ஸ்தானத்தில் நிற்பது தாமதமானாலும் பணி சிறப்புறும் என்பதையும், கவிப்பு சூரியனின் உத்திராடத்தில் நிற்பது சிலை சிவன் கோவிலுக்கானது என்பதையும் கூறுகிறது. உதயம் 2 ஆமிட ராகுவை நோக்கி நகர்வது தடையை குறிக்குமா? என்றால், ராகு-கேதுக்கள் ஆன்மீக கிரகங்கள் என்பதால் தங்கள் காரகங்களில் தடையை ஏற்படுத்த மாட்டார்கள். உள்வட்ட குரு, சனி, புதன் ஆகியோர் கோட்சாரத்தில் வக்கிர நிவர்த்தி ஆனதும் சிலை கேள்வியாளருக்கு கிடைக்கும். உதயம் மோட்ச ராசியான மீனமாவதாலும், உதயாதிபதி திக்பலம் பெற்று உதயத்திற்கு 9 ஆமிடத்தை பார்ப்பதாலும் கேள்வியாளர் சிலை செய்து கோவிலுக்கு தருவதால் புண்ணியத்தை பெறுவார்.
அடுத்து மற்றொரு ஜாமக்கோள் பிரசன்னம்.
ஜாமக்கோள் பிரசன்னம் தெய்வ வழிபாடுகள் தொடர்புடையதாக இருந்தால் உதயம், ஆரூடம், கவிப்பு ஆகியவை நீர் ராசிகளும், குருவும் தொடர்பாக வேண்டும் என்று முன்னதாக பார்த்தோம். இந்த பிரசன்னத்தில் உதயம், ஆரூடம் கவிப்பு ஆகியவை நீர் ராசிகளில் அமையவில்லை. லக்னம் மட்டும் விருட்சிகத்தில் அமைந்துள்ளது. உள்வட்ட குருவும், ஜாம சந்திரனும் மீனத்தில் உள்ளது சாதாரண தொடர்பை மட்டுமே குறிப்பிடுகிறது. மகர உதயத்திற்கு குரு விரையாதிபதியாகிறார். எனவே இந்த பிரசன்னம் சிறப்பான தெய்வ அனுக்கிரகத்தை சுட்டிக்காட்டவில்லை. குரு, உள்வட்டத்தில் மூன்றில் சந்திரனுடன் மறைந்துள்ளார். ஜாம குரு 9 ல் அமைந்திருந்தாலும், அவர் 8 ஆமதிபதி சூரியனுடன் இணைந்துள்ளது இவருக்கு தெய்வ அனுக்கிரகம் இல்லை என்பதை தெளிவாக்குகிறது.
உதயாதிபதி சனி உதயத்தில் வக்கிரமாகி, பாம்புடன் இணைத்துள்ளதும், ஜாம சனி நீசமாகி ராகுவுடன் இணைந்துள்ளது இவர் சர்ப்ப அம்சங்களை வழிபடுபவர் என்பதை கூறுகிறது. உதயம் பாதகாதிபதி செவ்வாயில் அவிட்டத்தில் அமைந்துள்ள நிலையில், ஆரூடம் உதயத்திற்கு 4 ல் ராகு தொடர்பில் அமைந்திருப்பதும், இவர் வீட்டில் தெய்வ வடிவங்களை வைத்துள்ளதையும் குறிப்பாக சர்ப்ப வடிவங்களை வைத்துள்ளதையும் அதனால் கேள்வியாளர் பாதகத்தை சந்திப்பதையும் கூறுகிறது. உதயத்திற்கு 2 ஆமிடமான குடும்ப ஸ்தானத்தில், கவிப்பு குருவின் பூரட்டாதியில் அமைந்துள்ளதால் இவரின் வழிபாடுகளாலும், வீட்டில் வைத்துள்ள தெய்வ சிலைகளாலும் இவரது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது. ஜாம உதயாதிபதி சனி நீசமாகி ராகுவுடன் இணைவு பெற்றுள்ளது இவருக்கு ஏற்படும் பாதிப்பு ஜீவன வகையில் இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்த அமைப்பு இவர் சம்பாதிக்க வேண்டுமெனில் குடும்பத்தை பிரிய வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. கேதுவின் அஸ்வினியில் ஜாம சனி நீசமான நிலையில், கேது உதயத்திற்கு 10ல் சனியின் உச்ச வீட்டில் அமைந்துள்ளது, இவருக்கு ஏற்படும் பாதிப்பு தொழில், சம்பாத்தியம் ஆகிய வகைகளில் ஏற்படும் என்பதை உறுதிபடுத்துகிறது. உதயத்தில் சனி வக்கிரமாகியுள்ள நிலையில், உதயாதிபதி சனி நீசமாகி ராகு இணைவு பெறுவது இவர் வீட்டில் வைத்துள்ள சுவாமி சிலைகளில் சிதிலமான சிலைகளையும் வைத்துள்ளார் என்பதை குறிப்பிடுகிறது உதயத்திக்கு 9 ல் 8 ஆமதிபதி சூரியன் நிற்பதும், சுக்கிரன் 8 ல் மறைவதும் இவர் பெண் தெய்வ துர்தேவதை வடிவங்களை வழிபடுவதால் அடையும் பாதிப்புகளை கூறுகிறது. இதனால் இவரது மனைவியும் மூத்த மகளும் பாதிக்கப்படுவர்.
கேள்வியாளர் காவிரி ஆற்றில் அடித்துவரப்பட்ட உடைந்த சுவாமி சிலைகளையும், ஊர் காளி கோவில் சிலைகளையும், அவற்றின் பாதுகாப்பு கருதி ஊரார் கேட்டுக்கொண்டதற்காக, பல ஆண்டுகளாக தனது வீட்டில் பாதுகாத்து வருகிறார். இதனால் இவரது குடும்பம் படும் துயரம் சொல்லி மாளாது. கேள்வியாளர் சம்பாத்தியதிற்காக குடும்பத்தை விட்டு பிரிந்து பல வருடங்கள் வெளி நாட்டில் வேலை பார்த்தார். தற்போது கொரானாவால் சொந்த ஊர் திரும்பிய நிலையில், இங்குள்ள சூழ்நிலைளுக்கேற்ப தன்னை பொருத்திக்கொள்ள இயலாமல் எந்த வேலைக்கும் செல்லாமல் குழம்பியுள்ளார். இவரது மூத்த மகள் இவரை வெறுக்கிறார். வெளி நாட்டில் இருந்த வரை கணவருக்காக ஏங்கிய இவரது மனைவி, இவர் உள்ளூரில் சம்பாதிக்க இயலாமல் தடுமாறுவதை நினைத்து மன வேதனையுறுகிறார்.
சனியின் உதயங்களான மகரமும், கும்பமும் குருவின் ராசிகள் போன்று சுத்தம், மனத்தெளிவு, ஆன்மிகம் ஆகியவற்றிற்கு உரியது அல்ல. சிரமங்கள், குறைகள், நேர்மை ஆகியவற்றிக்கு உரியது மட்டுமே. உதயம் சனியிடையதாக அமைந்துள்ளதால் இவர்களது ஆன்மீக எண்ணங்கள் தூய்மை உடையதாக இருக்காது. மேலும் சிறு குற்றங்களுடையவர்களாகவும் சுத்தமற்றவர்களாகவும் இருப்பார்கள். எனவே இவர்கள் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். வீட்டில் தெய்வீக சிலைகளை வைத்து வழிபாடு செய்யக்கூடாது. இவருக்கு சிதிலமான சிலைகளை ஆற்றில் விட்டுவிடும்படியும், இதர கோவில் சிலைகளை கோவிலில் கொடுத்துவிடும்படியும் அறிவுறுத்தப்பட்டது. இந்த கேள்வியாளர் தெய்வ வழிபாடுகள் செய்தும் வாழ்வில் கடும் சோதனைகள் ஏன் என்ற கேள்வியுடன் பிரசன்னம் பார்க்க வந்தார்.
மீண்டும் மற்றொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501