வாழ்க்கை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நாம் நினைப்பது இயல்பு. அதற்காக நமது வாழ்வின் அனைத்து வித்தைகளையும் பயன்படுத்துவோம். ஆனால் நமது வாழ்க்கை அனைத்து சமயங்களிலும் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பது பல்வேறு அனுபவங்களுக்குப் பிறகே நமக்கு புரிகிறது. இந்த நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். சிலர் போதை மருந்துக்களை நாடிச் செல்கிறார்கள். இவ்வுண்மையை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானிகளாகிறார்கள். வேறு சிலர் இதை அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் அணுகுகிறார்கள். ஜோதிடர்களை அணுகுபவர்கள் ஒரு வகை. உறவுப்பிணைப்பில் முதன்மையானது பெற்றோர்களும் உடன் பிறப்புக்களும்தான். இவர்களின் தொடர்பு வாழ்நாள் முழுமைக்குமானது. தனது வாழ்க்கையே முழுமையாக தன்கையில் இல்லை எனும் சூழலில் அதை உடன் பிறப்புகளின் வாழ்க்கையோடு பிணைத்துக்கொள்வதால் சாதகங்களும் உண்டு. பாதகங்களும் உண்டு. இதை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.
ஜாதகி 1990 பிறந்தவர். இரு சகோதரிகளில் இளையவர். மீன லக்னாதிபதி குரு, 6 ஆமதிபதி சூரியன், கேதுவுடன் இணைந்து கடகத்தில் உச்சம். 10 ஆமிடமான தனுசுவில் வக்கிர சனி அமைந்துள்ளார். சனிக்கு வீடு கொடுத்த குரு உச்சமானதால் ஜாதகி கல்லூரி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிகிறார். வித்யா காரகர் புதனின் வீட்டில், குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமைந்து திக்பலம் பெற்ற சுக்கிரன், 10 ல் குரு வீட்டில் அமைந்த சனியை பார்க்கிறார். 12 ல் 2 ஆமதிபதி செவ்வாய் சாரத்தில் அமைந்த சந்திரனை வித்யா காரகர் புதன் 6 ல் இருந்து பார்க்கிறார். இந்த அமைப்பால் ஜாதகி தனியார் கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். ஜாதகத்தில் மூத்த சகோதரியை குறிக்கும் சுக்கிரன் இங்கு அஷ்டமாதிபதியாக வந்து சுக ஸ்தானத்தில் திக் பலம் பெறுவதால் மூத்த சகோதரியால் ஜாதகிக்கு சிறப்பும் உண்டு அஷ்டமாதிபதி என்பதால் பாதிப்பும் நிச்சயம் ஏற்படும். லக்னாதிபதியின் சாரத்தில் சுக்கிரன் நிற்பதால் ஜாதகிக்கும் அக்காவிற்கும் இணக்கம் உண்டு.
நவாம்சத்தில் ராகு-கேதுக்கள் 1-7 ல் அமைவது ஜாதகியின் திருமண உறவிற்கு தடையை ஏற்படுத்தும் அமைப்பாகும். களத்திர காரகர் செவ்வாய் லக்னத்தில் நின்று களத்திர பாவகத்தை பார்ப்பது சிறப்பென்றாலும், செவ்வாய் ராகு-கேதுக்களுடன் இணைவது கடும் களத்திர தோஷமாகும். 2 ல் நீச நிலையில் அமைந்த மாத்ரு காரகர் சந்திரனை நோக்கி, 4க்கு விரையத்தில் அமைந்த மாத்ரு பாவகாதிபதியாகிய சனி வக்கிரம் பெற்று பின்னோக்கி வருவது சம்பாத்தியத்திற்கு சிறப்பை தருமே தவிர திருமணத்தை தாமதப்படுத்தும். சுக ஸ்தானத்தில் பாதகாதிபதி சூரியன் அமைந்ததும், பாதக ஸ்தானத்தில் குடும்ப காரகர் குரு அமைந்ததும் பொருளாதார வாழ்வுக்கு சிறப்பை தந்தாலும் குடும்ப வாழ்வுக்கு சிறப்பல்ல. சூரியன் மற்றும் சந்திரனின் நிலை, தாய்-தந்தையின் முயற்சிகள் ஜாதகிக்கு குடும்ப வாழ்வு அமைத்துத்தர போதுமானதாக இல்லை என்பதை குறிப்பிடுகிறது. லக்னாதிபதி சுக்கிரன் 9 ல் வர்கோத்தமம் பெற்ற நிலையில், சுக்கிரனுக்கு 10 ஆமிடத்தை உச்ச புதன் பார்ப்பது ஜாதகி தனிப்பட்ட முறையில் சிறப்பாக இருப்பதையும் அவர் கல்வித்துறையில் ஈடுபடுவதையும் குறிக்கிறது.
சகோதர உறவிற்கு ஆராய வேண்டிய திரேக்காணத்தில் லக்னத்தில் குரு திக்பலம் பெற்று அமைந்தது ஒரு அருமையான அமைப்பு. குரு இங்கு 6, 9 பாவகாதிபதியாவதால் ஜாதகிக்கும், சகோதர உறவுகளுக்கும் சிறந்த பொருளாதார உயர்வு ஏற்படும். சகோதர பாவகாதிபதியும், இளைய சகோதரத்தை குறிப்பவருமான மூன்றாம் பாவகாதிபதி புதன், சகோதர காரகரும் 3 ன் 8 ஆமதிபதியுமான செவ்வாயுடன் இணைவது இவருக்கு ஒரு உடன் பிறப்பு உள்ளதை தெரிவிக்கிறது.
மூத்த சகோதர பாவகாதிபதியும், காரகருமான சுக்கிரன் திரேக்காணத்தில் லக்னாதிபதி சந்திரனுடன் இணைவு பெறுவது சகோதரிகளுக்குள் உள்ள ஒற்றுமையை குறிப்பிடுகிறது. சந்திரனும், சுக்கிரனும் இணைந்து 2 ல் நிற்கும் சனியை பார்ப்பதால் இருவரது சம்பாத்தியமும் குடும்பத்திற்கு வரும். 11 ல் ராகு அமைந்து 11 ஆமதிபதி சுக்கிரன் 11 க்கு, 10 ல் அமைந்து சனி பார்வை பெறுகிறார். சுக்கிரனுக்கு 2 ல் சூரியன் குரு பார்வை பெற்று நிற்கிறார். இந்த அமைப்பால் இவரது மூத்த சகோதரி வங்கி ஒன்றில் பணிபுரிகிறார். 11 ஆமிடம் சுக்கிரனின் வீடான ரிஷபமாக அமைவதால் இவரது மூத்த சகோதரியின் லக்னம் சுக்கிரனுடையதாக இருக்க வேண்டும். இவரது மூத்த சகோதரி துலாம் லக்னத்தில் பிறந்தவர். 11 ன் 7 ஆமதிபதி செவ்வாய் 11 க்கு 8 ல் புதனுடன் இணைந்து மறைந்தது மூத்த சகோதரிக்கு கடும் களத்திர தோஷத்தை தெரிவிக்கிறது. செவ்வாய் புதனுடன் இணைவு பெறுவது கடும் செவ்வாய் தோஷமாகும். இது மூத்த சகோதரிக்கும் அவரது கணவருக்கும் புரிதலில் ஏற்படும் வேறுபாட்டையும் ஒருவரது அறிவை மற்றவர் அலட்சியம் செய்வதையும் குறிப்பிடும். மூத்த சகோதர பாவகமே இந்த லக்னத்திற்கு பாதக ஸ்தானமாக வந்து இரு பாவகாதிபதிகளும் கும்பத்தில் இணைவது மூத்த சகோதரியால் ஜாதகியின் குடும்ப வாழ்வும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதை குறிப்பிடுகிறது. 7,8 அதிபதி சனி 2 ல் அமர்ந்து, 8 ஆம் பாவகத்தை பார்ப்பது சம்பாத்தியத்தை தந்தாலும் குடும்பம் அமைவதை தாமதப்படுத்தும். 2 ஆமிட சனி லக்னாதிபதியையும் பாவகாதிபதியையும் பார்ப்பதால் மூத்த சகோதரி இவருக்கு குடும்பம் அமைய பெரும் தடையாக இருப்பார் என்பதை தெரிவிகிறது.
இந்த ஜாதகியின் மூத்த சகோதரி (அக்கா) திருமணமாகி கணவருடனான கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றவர். மணமுறிவுற்ற அக்காவின் மறுதிருமணத்திற்கு பிறகே தனது திருமணத்தை ஏற்பேன் என்று கூறி 32 வயது கடந்துவிட்ட நிலையிலும் தனது குடும்ப வாழ்வை தாமதப்படுத்துகிறார். திரேக்காணம் இதை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. ஜாதகிக்கு மேற்சொன்ன அமைப்புகளை சுட்டிக்காட்டி தனது திருமண வாழ்வு பற்றி அக்காவை எண்ணாமல் சுயமாக முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டது.
விரைவில் மற்றொரு பதிவில் மீண்டும் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.