நம்மை படைத்து இந்த மஹா பிரபஞ்சத்தை ஆளுமை செய்துகொண்டிருக்கும் இறைவனை சாமான்ய மனிதர்களால் பார்த்து உணர முடியாது. அனுபவித்துத்தான் உணர முடியும். வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இறை துணையுடன் எதிர்கொள்வது, நமது பெற்றோர்களின் முன் நீச்சல் கற்றுக்கொள்வது போன்ற ஒருவித பாதுகாப்பு உணர்வைத் தரும். குழந்தைப்பேறு, கல்வி, காது குத்து, கல்வி துவங்கி வாழ்வின் கடைசி தருணங்களில் ஆரோக்யத்திற்கு இறைவனை துணைக்கொள்வது வரை இது தொடர்கிறது. தான் வழிபடும் தெய்வத்தை முழுமையாக சரணடைந்து அந்த மகாபாரத கிருஷ்ணன் போல எனது வாழ்க்கைப் பயணத்திலும் சாரதியாக இருந்து வழி நடத்தி என்னை ஆட்கொள்வாய் என்பது ஒரு சாரார் பக்தி. இதில் படைத்தவனுக்கும் பக்தனுக்குமான உறவு தந்தைக்கும் மகனுக்குமான உறவு போன்றது. இதுவே பாதிப்பற்ற பக்தி. எதிர்பார்ப்பற்ற பரஸ்பர அன்பால் விளைவது. மற்றொரு வகை பக்தியானது படைத்தவனிடம் பக்தன் பேரம் பேசுவது. தனக்கு ஒரு விஷயம் சிறப்புற உதவினால் பதிலீடாக தான் வணங்கும் இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக நேர்ந்துகொள்வது இந்த வகையில் வரும். இதில் படைத்தவனுக்கும் பக்தனுக்குமிடையே ஒரு ஒப்பந்தத்தை பக்தனே படைத்தவனிடம் திணிக்கிறான். அதனால் அதன் சாதக பாதகங்களையும் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு பக்தன் தன்னையே பணயம் வைக்கிறான். இறைவன் தான் படைத்த உயிரினங்களிடம் நேர்ச்சை எதுவும் கேட்பதில்லை. பூசாரிகள் கேட்பதுண்டு. நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகளே. தனது குழந்தைகளின் நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பது பெற்றோர்களின் கடமை. ஆனால் நமது செயல்களுக்கு நாமே பொறுப்பு. நமது கர்ம வினைகளே நம்மை ஆளுமை செய்கின்றன. நம்மை கோடானு கோடி நட்சத்திரங்களின் வடிவில் இறைவன் கவனித்துக்கொண்டிருக்கிறான் என உணராமல் நாம் செய்யும் செயல்களே நமது வாழ்வின் உயர்வு தாழ்வுகளுக்கு காரணம். குழந்தையின் நல்ல செயல்களை பெற்றோர் ஆராதிப்பது போலவே நமது தீய செயல்களைப் பார்த்து நம்மை நெறிப்படுத்த இறைவன் தரும் தண்டனைகளே நமது தீவினைகள் என பூர்வ பராசர்யம் போன்ற புராதன நூல்கள் கூறுகின்றன. சில சமயம் தீவினைகள் கடுமையாகவும் இருக்கின்றன. அது அவரவர் வினைப்பயனே. இறைவனுக்கு நேர்ந்துகொள்ளும் நேர்த்திக்கடன் பற்றிய ஒரு ஜாதக அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே இன்றைய பதிவு.
கடக லக்ன ஜாதகி. தனது முப்பதுகளில் இருப்பவர். கடகம் ஒரு நீர் ராசி. மோட்ச ராசிகளுள் முதன்மையானது. இதனால் ஜாதகிக்கு இயல்பாகவே ஆன்மீக நாட்டம் இருக்கும்.
நேர்த்திக்கடனும் செவ்வாயும்.
நேர்த்திக்கடனின் காரக கிரகம் செவ்வாயாகும். ஒருவர் எந்த வகையில் தனது வழிபாட்டு தெய்வத்தை நேர்ந்துகொள்வார் என்பதை செவ்வாயோடு தொடர்புடைய கிரகங்கள், பாவகங்கள், செவ்வாய் தொடர்புகொள்ளும் ராசிகள் மூலம் அறியலாம். நேர்த்திக்கடன் மூலம் ஒருவர் அடையும் சாதகங்களையும் நேர்த்திக்கடன் முறையாக செலுத்தப்படாவிட்டால் அவர் அடையும் பாதகங்களின் வெளிப்பாடு எந்த வகையில் இருக்கும் என்பதையும் இதே தொடர்புகளே சுட்டிக்காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பக்தன் தன்னிஷ்டப்படி நேர்ந்துகொள்வதால் நேர்த்திக்கடனை முன்னிட்ட சாதக அல்லது பாதக பலனை இங்கு பக்தனே தீர்மானிக்கிறானேயன்றி தெய்வமல்ல. செவ்வாய் ஒரு ஜாதகத்தில் நல்ல ஆதிபத்தியத்திற்கு உரியவராகி நல்ல தொடர்புகளுடன் சிறப்புற்றிருந்தால் ஒருவரது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறி நேர்த்திக்கடனையும் தடங்கலின்றி நிறைவேற்றிவிடுவார். மாறாக செவ்வாய் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டோ அல்லது தீய பாவகங்களுக்கு ஆதிபத்தியம் பெற்றிருந்தாலோ தங்களுக்கு தகுதியற்ற அல்லது அவர்களது கர்மா அனுமதிக்காத விஷயங்கள் நிறைவேற நேர்ந்துகொள்கிறார்கள். அதனால் பாதிப்புகளையும் அடைகிறார்கள். இந்த ஜாதகத்தில் திக்பல சனியோடு சேர்ந்த செவ்வாய் லக்னத்தை பார்க்கிறார். இதனால் இவர்களது நேர்த்திக்கடன் விஷயங்களில் தீவிரத்தன்மை இருக்கும். (இவர்களுடன் ராகு தொடர்பானவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற அபாயகரமான அலகு குத்துதல், அக்னி சட்டி, தீமித்தித்தல் போன்றவைகளை நேர்ந்துகொள்கிறார்கள்). குரு சிம்மத்தில் நின்றாலும் வக்கிரமாக லக்னத்தை நோக்கி வருவதால் சிம்மம், கடகம் இரண்டிலும் தனது ஆதிக்கத்தை செயல்படுத்துவார். அதே சமயம் இங்கு குருவிற்கு சூரியனுடனான பரிவர்த்தனையும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி லக்னத்துடன் தொடர்பாகும் குரு 7 ஆமிட சனி-செவ்வாயை பார்ப்பதால் இவர்களது வேண்டுதல்கள் தனம், குடும்பம், குழந்தைகள் இவற்றின் நலனை முன்னிட்டு அமையும்.
இந்த ஜாதகி கொரானா துவங்கிய காலத்தில் 2020 ல் தனது ஒரு வயது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அதற்காக பழனியில் முருகனுக்கு பால் காவடி எடுப்பதாக நேர்ந்துகொண்டார். முன்பே கூறியபடி உச்ச செவ்வாயுடன் அதன் பகை கிரகமும், 7 ல் திக்பலம் பெற்றாலும் அஷ்டமாதிபதியுமான சனியுடன் இணைவது ஒருவரது நேர்த்திக் கடனில் தடை தாமதங்களை ஏற்படுத்தும். சனி-செவ்வாய் இணையும் அனைத்து கோட்சார காலங்களுமே பாதிப்பானதுதான் எனும் நிலையில் இந்த ஜாதகத்தில் ஜனன காலத்தில் இருந்த அதே இடத்தில் கோட்சார சனியும், கோட்சார குருவும் ஜனன கால ராகுவையும் கோட்சார கேதுவையும் கடந்து மகரத்திற்கு வந்து அங்கு ஜனன காலத்தில் நிற்கும் சனியுடனும், செவ்வாயுடன் இணைகிறார்கள். 2020 ல் கோட்சார குரு மகரத்தில் நீசமானாலும் ஜனன காலத்தில் அங்கு அமைந்த சனி-செவ்வாயால் நீச பங்கமும் ஆகிறார். இது குருவின் அம்சமான குழந்தைக்கு ஆரோக்ய குறைவும் ஏற்படும் குணமும் ஆகும் என்பதை குறிக்கிறது. இதன்படியே ஜாதகியின் மகனுக்கு காய்ச்சல் வந்து சரியானது. கொரான காலத்திய காய்ச்சல் பயத்தை ஏற்படுத்தியதால் ஜாதகி மகன் குணமாக நேர்ந்துகொண்டார். மகனுக்கு உடல்நிலை சரியாகி தற்போதுவரை 3 ஆண்டுகளாகியும் பல்வேறு சூழ்நிலைகளால் ஜாதகி தனது நேர்த்திக்கடனை செலுத்த இயலவில்லை. இதனால் தற்போது அதன் பாதிப்புகளை அடைந்துகொண்டுள்ளார்.
கோட்சார சந்திரன் ஜாதகியின் நிலைப்பாட்டை தெளிவாக கூறுகிறது. கடக லக்னத்திலேயே கோட்சார செவ்வாயும் சந்திரனும் நிற்கிறார்கள். நேர்த்திக்கடனை குறிக்கும் செவ்வாய் பிரசன்ன லக்னத்திலோ அல்லது ஜனன லக்னத்திலோ கோட்சாரத்தில் நிற்பது நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படவில்லை என்பதை குறிக்கும். கோட்சார சந்திரனை ஜனன கால செவ்வாயும் சனியும் நேர்பார்வை பார்க்கிறார்கள். கோட்சாரத்தில் செவ்வாய் பலகீனமாகி லக்னத்தில் சந்திரனுடன் நிற்கையில், சனி கோட்சாரத்தில் லக்னத்திற்கு 8 ஆமிடமான கும்பத்தில் ஜனன சுக்கிரனுடன் நிற்கிறார். செவ்வாய் முருகனையும், சந்திரனும் கடக ராசியும் பாலையும் குறிப்பிடுபவை. ஜாதகி முருகனுக்கு பால்குடம் எடுப்பதான நேர்த்திக்கடனை செலுத்தாததை இது குறிப்பிடுகிறது. அதனால் ஜாதகி அடையும் பாதிப்புகளையும் அது குறிக்கிறது. சந்திரன் பெண்களுக்கு கர்ப்பப் பையையும் செவ்வாய் உதிரப்போக்கையும் குறிக்கும். இந்த ஜாதகிக்கு மாதவிடாய் உதிரப்போக்கு 20 நாட்களுக்கு தொடர்வதாக கூறுகிறார். கடக ராசியை பார்க்கும் 7 ஆமதிபதி சனி ஜீவனத்தை குறிப்பதால் இந்த பாதிப்பால் ஜாதகியால் பணிக்கு செல்ல இயலாமல் பணியை விட்டுவிட்டார். 7 ஆமிடமும் அங்கு அமைந்த செவ்வாயும் கணவரை குறிப்பதால் கணவருக்கும் வேலையிலும் ஆரோக்கியத்திலும் பாதிப்புகளை அடைந்து வருகிறார். 7 ஆமிடத்தோடு வக்கிர குருவும் தொடர்பாவதால் இந்த ஜாதகிக்கு குடும்ப அமைதி, பொருளாதாரம் மற்றும் 2 ஆவது குழந்தைக்கான வாய்ப்பு ஆகியவை பாதிக்கப்படுகின்றன. கோட்சார குருவும் மேஷ ராகுவுடன் இணைந்துள்ளதால் ஜாதகி, கணவர், மகன் ஆகிய மூவருக்கும் ஆரோக்ய பாதிப்பு உள்ளது. கவனிக்க நேர்த்திக்கடனின் விதத்தையும் அது நிறைவேற்றப்படாததன் பாதிப்புகளையும் ஒரே கோட்சார நிலையே சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஜாதகிக்கு கர்ம வினையால் ஏற்பட்ட ஜாதக ரீதியான இத்தகைய பாதிப்புகளில் இருந்து மீளவும், தசா-புக்தி ரீதியான சூழ்நிலைகளையும் ஆராய்ந்து ஆலோசனைகளுடன் இயன்ற அளவு உடனடியாக நேர்த்திக்கடனை நிறைவேற்றிவிடுமாறு கூறப்பட்டது.
விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.