
கலியை ஆளும் கிரகம் ராகு என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ராகுவின் ஆதிக்கம் அதிகரிக்க, அதிகரிக்க உயிர்களுக்கு, உறவுகளுக்கு மதிப்பு குறைந்துகொண்டே வரும். அதே சமயம் பொருளாசை மிகுந்துகொண்டே செல்லும். ஒரு கட்டத்தில் பொருளின் மீதான ஆசை அளப்பரியதாக மாறுகையில் அனைத்தையுமே வெறுக்க வைத்து மனிதனை மோட்சப் பாதைக்கு திருப்புவதே ராகுவின் வேலை. அதனால்தான் ராகுவை மோட்ச காரகன் என்கிறார்கள். கொடுத்துக் கெடுப்பவர் ராகு என்பர். அளப்பரிய செல்வத்தை தேடி அடாத செயல்களில் ஈடுபட்டு, அதை அடைந்த பிறகு தான் தேடிய செல்வங்களுக்காக தான் இழந்தவைகளை எண்ணி மனிதன் வருந்துகையில் அவன் ஞானியாக மாறுகிறான் என்பதே இதன் உட்கருத்து. ஜோதிடத்தின் மூலம் வாழ்வின் அனைத்து விஷயங்களையும் தொடர்புபடுத்திப் பார்க்க இயலும். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றாலும் சில விஷயங்கள் மனதை பாதிக்கவே செய்கின்றன. அப்படி தனது உறவுப் பெண்ணின் வாழ்வை பார்த்து மனம் நொந்த அன்பர் ஒருவர் அப்பெண்ணின் செயலுக்கான காரணங்களை ஜோதிட ரீதியாக தெரிந்துகொள்ள வேண்டி எண்ணை தொடர்புகொண்டார். சமீபத்திய தொலைக்காட்டி நிகழ்ச்சி ஒன்றில் தொடர்புடைய விஷயம் அலசப்பட்டதால் அதன் தாக்கத்தாலும் எண்ணை நாடி வந்திருந்தார் அந்த அன்பர்.
பொருளாதாரத்திற்காக மனிதன் இயந்திரம்போல மாறிவரும் இன்றைய காலத்தில் குடும்ப உறவுகள் மதிப்பிழக்கின்றன. மதிப்பான, செழிப்பான வாழ்வு வாழ இன்று கணவன்-மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் கட்டாயம் எழுகிறது. தங்கள் பொருளாதார வரவை தக்கவைத்துக்கொள்ள குழந்தைப்பேறை ஒத்தி வைக்கும் அல்லது வேண்டாம் என முடிவு செய்யும் தம்பதியர் மேலை நாடுகளில் அதிகம். குறிப்பாக ஜப்பான், சீனா போன்ற நாடுகளை கூறலாம். அதனால் அந்த நாடுகளின் குழந்தை பிறப்பு விகிதங்கள் குறைந்து வருவதால் அரசாங்கமே குடிமக்களிடம் குழந்தை பெற்றுக்கொள்ள சலுகைகளை வாரி வழங்கி கெஞ்சி வருகின்றன. கணவன்-மனைவி இருவரும் பணிக்குச் சென்று குழந்தை வேண்டாம் எனும் நிலைப்பாட்டை எடுக்கும் இத்தகைய போக்கை ஆங்கிலத்தில் DINK (Dual Income No Kids) என்று அழைக்கின்றனர். இதைப்பற்றி ஜோதிட ரீதியாக ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஒரு பெண்ணின் ஜாதகம். மாயா என அவரை அழைப்போம்.

தனுசு லக்ன ஜாதகம். ஜாதகி தனது எண்ணத்தில் தெளிவான ஒரு இலக்கைக் கொண்டிருப்பார். லக்னத்தில் 7 ஆமதிபதி புதன் திக்பலம் பெற்று அமர்ந்துள்ளார். பாக்யாதிபதி சூரியனுடன் லக்னத்தில் புதன் இணைந்ததால் புத-ஆதித்ய யோகமும் அங்கு செயல்படுகிறது. 7 ஆமதிபதி புதனாகி லக்னத்தில் வந்து அமர்ந்ததால் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் அமைப்பு உண்டு. கணவர் தேடி வருவார். 8 ஆமதிபதி சந்திரன் லக்னத்தில் அமர்ந்ததால் ஜாதகிக்கு கணவர் வேறு இனத்தை சார்ந்தவராக இருப்பார். அதாவது ஜாதகி காதலித்து கலப்பு மனம் புரிவார். கால புருஷ 9 ஆமிடம் தனுசு லக்னமாக அமைந்து, லக்னத்திற்கு 9 ஆமதிபதி சூரியனும் லக்னத்தில் நின்று, நீர் கிரகமான சந்திரனும் லக்னத்தில் அமர்ந்ததால், ஜாதகி கடல் கடந்து சென்று தனது வாழ்வை அமைத்துக்கொள்வார். லக்ன கிரகங்கள் 7 ஆமிடமான மிதுனத்தை பார்ப்பதால் மிதுனம் குறிக்கும் உலகின் முதன்மை தேசமான அமெரிக்காவிற்கு ஜாதகி கணவருடன் திருமணமான பின் செல்வார். சனி 12 ல் அமைந்தது ஜாதகி வெளிநாடு சென்று பணிபுரிவதையும், 12 ஆமிட சனி 2 ஆமிடத்தை பார்ப்பதால் ஜாதகி தாமதமாகவே திருமணம் புரிவார் என்பதையும் குறிப்பிடுகிறது. 6 ஆமதிபதி சுக்கிரன் தனது மூலத் திரிகோண வீட்டில் துலாத்தில் ஆட்சி பெற்று நிற்பதும், 6 ஆமிடத்தை சனி பார்ப்பதும் ஜாதகிக்கு வேலையும் சம்பாத்தியமும் சிறப்பாக அமையும் என்பதை குறிப்பிடுகிறது.
லக்னாதிபதி குரு 3 ல் மறைந்துவிட்டார். அவருக்கு வீடு கொடுத்த சனி லக்னத்திற்கு 12 ல் மறைவு. 5 ஆமதிபதி செவ்வாய் 5 க்கு விரையத்தில் 4 ல் ராகுவுடன் இணைந்துள்ளார். ராகு-கேதுக்களின் அட்சை விட்டு 5 ஆமிடத்திலிருந்து 9 ஆமிடம் வரை உள்ள பாவகங்கள் தனித்து விலகிவிட்டன. இது ஜாதகிக்கு புத்திர வகையில் உள்ள பாதிப்புகளை குறிப்பிடுகிறது.
ஜாதகி மெத்தப் படித்து மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். தனது 3௦ ஆவது வயதில் காதல் திருமணம் புரிந்த ஜாதகி தனது காதல் கணவருடன் அமெரிக்காவில் நல்ல நிலையில் சிறந்த பொருளாதாரத்துடன் வசிக்கிறார். நாற்பது வயதை நெருங்கிக்கொண்டுள்ளார். குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணமில்லை.
ஜாதகியின் எண்ணத்திற்கு இவரது கணவர் உடன்பட்டாரா? என கணவரின் ஜாதகம் மூலம் ஆராய்வோம் வாருங்கள்.
கீழே மாயாவின் கணவரின் ஜாதகம். டிங்கு என அவரை அழைப்போம்.

மனைவியின் தனுசு ராசிக்கு கணவரின் மிதுன ராசி சம சப்தமமாக அமைந்தது சிறப்பு. ராசிக்கு 7 ல் ராசியின் 8 ஆமதிபதி சனி நின்றதும், ராசிக்கு 5 ஆமதிபதி சுக்கிரன் ராசிக்கு 8 ல் நின்றதும், ஜாதகர் காதல் கலப்பு மணம் புரிவதை குறிப்பிடுகிறது. ராசிக்கு 7 ல் சனி நின்றது மனைவி ஜாதகரைவிட மூத்தவராக வருவார் என்பதை குறிப்பிடுகிறது. ஆம் இவரது காதல் மனைவி மாயா ஜாதகரைவிட 2 ஆண்டுகள் மூத்தவர். மிதுனத்தில் நீர் கிரகமான சந்திரன் நிற்க, அவரை 7 ஆமிட சனி பார்ப்பதால், ஜாதகர் திருமணமாகி மிதுனம் குறிக்கும் அமெரிக்காவிற்கு பணிக்கு செல்வார் என்பது தெரிகிறது. மிதுன ராசியின் 5 ஆமதிபதி சுக்கிரனாகி அவர் ராசிக்கு 8 ல் மகரத்தில் மறைந்தது மனைவி குழந்தை பெற்றுக்கொள்ள விரும்ப மாட்டார் என்பதை தெரிவிக்கிறது. ராசிக்கு 5 ன் 8 ஆமிடம் ரிஷபத்தில் குரு நின்றதும் இதை உறுதி செய்கிறது. மனைவி குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தால் டிங்கு அதை ஆமோதிப்பாரா அல்லது மறுப்பாரா என்பதை இருவர் ஜாதகத்தையும் ஒப்பிட்டு அறியலாம்.

மனைவியின் ஜாதகத்தில் துலாத்தில் அமைந்த சுக்கிரனை கணவரின் ஜாதக செவ்வாய் மேஷத்திலிருந்து நேர் பார்வை பார்வை பார்ப்பது, கணவன் மனைவிக்கிடையேயான ஈர்ப்பை அதிகரிக்கும் அமைப்பாகும். ஆனால் மனைவியின் ஜாதகத்தில் லக்ன, ராசிக்கு 3 ல் மறைந்த புத்திர காரகர் குருவின் மீது, கணவரின் ராகு நிற்பது, புத்திர வகைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அமைப்பாகும். கணவரின் ஜாதக குருவை மனைவியின் சனி பார்ப்பது புத்திர தடை, தாமதத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். மனைவியின் ஜாதகத்தில் குருவும் மறைந்து, குருவின் இரு வீடுகளிலும் பாவ கிரகங்கள் அமர்ந்துள்ளன. கணவரின் ஜாதகத்தில் தனுசில் சனி அமைத்துள்ளார். குருவின் மற்றொரு வீடான மீனத்திற்கு இரு புறமும் ராகுவும் செவ்வாயும் அமர்ந்து மீனத்திற்கு பாவ கர்த்தாரி யோகத்தை தருகிறார்கள். இப்படி தனிப்பட்ட ஜாதகத்திலும், ஜாதக இணைவிலும் குருவும், குருவின் வீடுகளும் பாதிப்பிற்கு உள்ளாவதால் இவர்கள் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுக்கவே விரும்புவர். பொதுவாக பாவிகள் பொருட்காரகத்தை தடை செய்ய மாட்டார்கள். ஆனால் உயிர் காரகத்தை தடை செய்வர் என்பதற்கேற்ப இவர்களது ஜாதக இணைவில் பாதிக்கப்பட்ட குருவும், குருவின் வீடுகளும் பொருளாதார உயர்வை வழங்கி, குழந்தைப்பேறை வேண்டாம் என நிராகரிக்க வைக்கிறார்கள்.
இத்தகைய ஜாதக அமைப்பினர் வசதி, அந்தஸ்து எனும் மாயைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வம்சா விருத்திக்கு கொடுக்க மாட்டார்கள். அணைத்து உயிர்களும் அடிப்படையில் ஒருங்கிணைவது இனபெருக்கத்தை முன்னிட்டான உடலுறவில்தான் எனும் இயற்கையின் நியதியை மீறும் இவர்கள் ஒரு மாய உலகில் வாழ்பவர்கள். ராகுவே மாயைகளுக்கு காரக கிரகம் என்பதை அறிக. ராகு ஒன்றுக்கு இரண்டான பொருளாதாரத்தை கொடுத்து வம்சா விருத்தியில் பாதிப்பை தடை செய்துவிடும். Double Income No Kinds எனும் மாயையில் மனிதத்தை மறக்கும் DINK குகள் இவர்கள். ஆனால் இவர்களின் இத்தகைய செயல்பாட்டிற்குப் பின்னணியில் ஒரு கடும் தோஷமே இயங்கிக்கொண்டிருக்கும் என்பது மறுக்க இயலாத உண்மை.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.