
பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும் அதன் பின்னால் உள்ள வலிகளை அவர்களது ஜாதகங்கள் மூலம் என் போன்ற ஜோதிடர்களால் இருந்த இடத்தில் இருந்தே உணர முடியும். அப்படி சமீபத்தில் நான் பார்த்து, எனது மனதை பாதித்த ஒரு ஜாதகத்தை இன்றைய ஆய்வில் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
ஜாதகத்தில் முயற்சி ஸ்தானம் எனும் மூன்றாமிடம்தான் வீரம், வெற்றி, ஆண்மை, வீரியம் போன்ற பல காரகங்களை தன்னகத்தே வைத்துள்ளது. “முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்” என்பார்கள். வாழ்க்கைக்கான ஒருவரின் முயற்சி எந்த அளவு இருக்கும் என்பதை மூன்றாமிடம் சுட்டிக்காட்டிவிடும். திருமண முயற்சிகளுக்கு ஜாதகத்தில் தசா-புக்தி நாதர்களின் தொடர்பில் கால புருஷனுக்கு மூன்றாமதிபதி புதனோ அல்லது லக்னத்திற்கு மூன்றில் நின்றோன் அல்லது மூன்றாம் அதிபதி தொடர்போ இருக்க வேண்டும். இல்லையேல் மூன்றின் திரிகோண கிரகங்களின் தொடர்பு இருக்க வேண்டும். அவ்வாறு எதுவும் இல்லையெனில் ஒரு ஜாதகருக்கு திருமணத்திற்கான ஆசை மட்டுமே இருக்கும். முயற்சி இருக்காது. மூன்றாமிடம் காமத் திரிகோணங்களில் முதல் திரிகோணம் என்பதால் ஒருவர் இல்லற வாழ்வை அனுபவிப்பதற்கான முயற்சியை குறிப்பிடும். மூன்றாமிடத்தை காதல் கடிதம் என்று கொண்டால் அது அங்கீகரிக்கப்படுமா? நிராகரிக்கப்படுமா? என்பதை 7 ஆமிடம் தெரிவிக்கும். அங்கீகரிக்கப்பட்டு இல்லற வாழ்வில் ஜாதகர் நுழைந்தால் அது இனிக்கும் இல்லறமா? கசக்கும் இல்லறமா? என்பதை 11 ஆமிடம் கூறிவிடும். ஜாதகத்தில் 4 ஆமிடம் கற்பை குறிப்பிடும் பாவகமாகும். ஒருவருக்கு திருமணமாகி இல்லற வாழ்வை அவர் அனுபவிப்பதை கற்பு ஸ்தானத்தின் விரைய ஸ்தானமான மூன்றாமிடம் சுட்டிக்காட்டும். மூன்றாமிடம் அனுமதிக்காமல் ஒருவர் காமத்தை அனுபவிக்க முடியாது. அது முறையான இல்லற அனுபவமா? அல்லது முறையற்ற இல்லற அனுபவமா? என்பதை 7 ஆமிடம் கூறிவிடும்.
கீழே திருமணமான ஒரு பெண்ணின் ஜாதகம்.

ரிஷப லக்ன ஜாதகத்தில் 7 ல் வக்கிர சனி. 7 ஆமதிபதி செவ்வாய் கடகத்தில் சனி சாரத்தில் பூசம்-3 ல் நீசம். சூரியனை விட்டு 12 பாகைகள் விலகியுள்ளதால் அஸ்தங்க தோஷம் செவ்வாய்க்கு பெரிதாக இல்லை. சுக ஸ்தானாதிபதி சூரியன் குறைந்த பாகை பெற்று தன் பாவகத்திற்கு 12 ல் மறைந்தது, ஜாதகிக்கு காம சுகம் அனுபவிக்க தடை உள்ளதை குறிப்பிடுகிறது. சனி வக்கிரம் பெற்று லக்னத்தை பார்ப்பதால் ஜாதகி பணிபுரிய விரும்புவார். ஆனால் அவர் வக்கிரம் பெற்றுள்ளதால் வேலை செய்வதா? வேண்டாமா? என்பதை ஜாதகிதான் முடிவு செய்வார். சனி வக்கிரமானது 7 ஆமிடத்தில் அவருக்கு கிடைக்கும் திக்பலத்தை தவிடுபொடியாக்குகிறது. 7 ல் சனியின் நிலையும், 7 க்கு பாதகத்தில் களத்திர பாவாதிபதியும், களத்திர காரகருமான செவ்வாய் நீசமானதும் இந்த ஜாதகியின் கணவர் மிகுந்த பழமைவாதி, பலகீனமானவர் என்பதை குறிப்பிடுகிறது. 7 ஆமிடத்தின் மீதும், 7 ஆமதிபதி மீதும் கேதுவின் நிழல் விழுவதாலும், செவ்வாயை கேது முதலில் தொடுவதாலும் கணவர் மீது கேதுவின் ஆதிக்கம் இருக்கும். அதாவது கணவர் தனிமை விரும்பி, ஆன்மீகவாதி. செவ்வாய் நிற்கும் பாகையிலே செவ்வாய்க்கு திரிகோணத்தில் செவ்வாய்க்கு வீடு கொடுத்த சந்திரனுடன் இணைந்து மோட்ச ராசியான மீனத்தில் ராகு நிற்பதும் கணவருக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகம் என்பதை குறிப்பிடுகிறது. . சந்திரன்-ராகு சேர்க்கை ஜாதகியின் வாழ்வும் ஆன்மீக வழியிலேயே செல்ல வாய்ப்புள்ளதை குறிப்பிடுகிறது. சந்திரன் ராகுவை கடந்து நிற்பதாலும் குரு லக்னத்திற்கு 12 ல் மறைவு பெற்றுள்ளதாலும், ஜாதகி தனது கணவர் போல அதீத ஆன்மீகத்தையோ தனிமையையோ நாட மாட்டார். மேலும் லக்னாதிபதி சுக்கிரன் 2 ஆமிடத்தில் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்து நிற்பது ஜாதகிக்கு சராசரிப் பெண்ணுக்குரிய இல்லற விருப்பங்கள் உண்டு என்பதையும் குறிப்பிடுகிறது. புதன் கால புருஷனுக்கு போக ஸ்தானம் மிதுனத்தின் அதிபதி என்பதும், மிதுனத்திலேயே சுக்கிரன் புதனுடன் இணைந்து நிற்பது இதை உறுதி செய்கிறது. புதன், சுக்கிரன் இணைவு மதன கோபால யோகம் என்பதை நினைவுபடுத்துகிறேன். மிதுனத்திற்கு லாபத்தில் மேஷத்தில் குரு நின்று லக்னத்திற்கு சுப கர்த்தாரி யோகத்தை தருவதால் ஜாதகிக்கு குடும்பத்தில் நல்ல நிலையும், சிறப்பான பொருளாதாரமும் உண்டு. ஆனால் ஜாதகிக்கு மதன கோபால யோகமும் கணவருக்கு இல்லறத் துறவி என்ற அமைப்பும் உள்ளது கவனிக்கத்தக்கது. செவ்வாய்க்கு 12 ல் சுக்கிரன் மறைந்துள்ளார் என்பதை கவனிக்க. முதல் காமத் திரிகோணமான மூன்றாமிடத்தில் செவ்வாய் நீசம் என்பதால் ஜாதகி தனது உடலியல் இச்சைகளுக்கு முயற்சி எடுத்தால் கணவர் அதை நிராகரிக்கும் அமைப்பு உள்ளது. இதை மேலும் விரிவாக நாவாம்சத்தில் ஆராய்வோம்.

ராசிச் சக்கரத்தில் பார்த்தது போலவே நாவாம்சத்திலும் 7 ல் சனி வக்கிரமாகி தன்னிலை இழந்து நிற்கிறார். இது ஜாதகிக்கு கணவர் வகையில் சிறப்பைத் தராது. லக்ன சூரியனுக்கு 7 ஆமிட சனி பகையே. ஆனால் 7 ல் சனி வக்கிரமாகிவிட்டதால் இங்கு பகை உணர்வு செயல்படாது. ஆனால் ஒருங்கிணைத்த உறவு கணவன் – மனைவிக்குள் நிச்சயம் இருக்காது. களத்திர காரக கிரகங்களான செவ்வாயும் சுக்கிரனும் தங்களுக்குள் 6-8 அமைவில் நின்று செவ்வாயோடு ராகு இணைவு பெற்றதும், சுக்கிரனை நோக்கி கேது வருவதும் இல்லறத்தில் கணவன்-மனைவி இருவரும் இணைந்து செயல்படாமல் இல்லறத் துறவிகளாக வாழும் அமைப்பை காட்டுகிறது. ஜாதகியின் படுக்கை அறையில் என்ன நடக்கிறது என்பதை ஒருவரது காமத்தை ஆராயப் பயன்படும் சோமநாத திரேக்காணம் எனும் வர்க்கச் சக்கரத்தின் மூலம் ஆராய்வோம் வாருங்கள்.

சோமநாத திரேக்காணத்தில் முதல் காமத் திரிகோணமான மூன்றாமிடம் மீனத்தின் அதிபதி குரு, சுக ஸ்தானத்தில் நீச பங்கப்பட்ட லக்னாதிபதி சனியோடு இணைவு பெற்றது தனது உடலியல் சுகங்களை அடைவதற்கு ஜாதகி தயாராக இருப்பதை குறிப்பிடுகிறது. ஆனால் உடலுறவை குறிப்பிடும் இரண்டாவது காமத் திரிகோணாதிபதியும் 7 ஆமதிபதியுமான சந்திரன் விருட்சிகத்தில் நீசம் பெற்றது கணவர் உடலுறவிற்கு தகுதியற்றவர் என்பதை தெரிவிக்கிறது. ஆனால் சந்திரன் மூன்றாவது காமத் திரிகோணமான 11 ஆமிடத்தில் நீசமானாலும் அங்கு ஆட்சி பெற்ற செவ்வாயால் நீச பங்கப்பட்டுவிடுகிறார். மூன்றாவது காமத் திரிகோணம் உடலுறவில் ஒருவர் திருப்தி அடைவதை குறிப்பிடும் இடமாகும். அங்கு 7 ஆமதிபதி நீசபங்கப்படுவது தடைகள் இருந்தாலும் கணவன் மனைவிக்குள் உடல் உறவு உண்டு என்பதை கூறுகிறது. மேஷத்தில் நிற்கும் லக்னாதிபதி சனிக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் 7 ஆமதிபதி சந்திரனும் செவ்வாயும் நிற்பது ஜாதகியின் காம எண்ணங்களும், கணவரின் காம எண்ணங்களும் வெவ்வேறானவை என்பதை குறிப்பிடுகிறது. காம எண்ணங்களின் வேறுபாடு உடலுறவு மறுப்பை தெரிவிக்காது. ஆனால் இங்கு மறுப்பு சந்திரன் செவ்வாயுடன் இணைந்த ராகுவால் ஏற்படுகிறது. 7 ஆமதிபதி சந்திரனின் நீசத்தை ஆட்சி பெற்ற செவ்வாய் பங்கப்படுத்தினாலும் செவ்வாய், சந்திரன் இருவருமே ராகுவால் பாதிக்கப்படுவது கணவர் வகையில் உடலுறவுக்கான மறுப்பை தெரிவிக்கிறது.
இந்த ஜாதகிக்கு திருமணம் நடந்த சுக்கிர தசைதான் தற்போதும் நடப்பில் உள்ளது. ராசிச் சக்கரத்தின்படி 2ல் நின்ற தசா நாதன் சுக்கிரன் பொருளாதார யோகத்தை தந்தாலும் அவர் முதல் காமத் திரிகோணமான 3 ஆமிடத்திற்கு விரையத்தில் மிதுனத்தில் நின்று தசை நடத்துகிறார். இதனால் மூன்றாமிடம் செயல்படாமல் தடைபடுகிறது. இது ஜாதகியை காமத்தை அனுபவிக்க இயலாமல் தடுக்கிறது. 7 ஆமதிபதி நீசமானதும் ஜாதகி இல்லற வாழ்வை அனுபவிக்க கணவர் வகையில் ஒத்துழைப்பில்லை என்பதை குறிப்பிடுகிறது. மூன்றாமிடம் செயல்படாமல் இல்லறமில்லை என்று குறிப்பிட்டோம். ஜாதகியின் கணவர் உடலுறவு விஷயத்தில் நாட்டமற்றவர். அதனால் ஜாதகி விரும்பினால் வேறு திருமணம் செய்துகொள்ளுமாறு கூறுகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உருவாகி கரு தங்கவில்லை. இதனால் இல்லற நாட்டமற்ற கணவரை பிரியவும் மனமின்றி, தனது இல்லறத் தேவைகளை அடையவும் வழியின்றி ஒரே வீட்டில் நண்பர்களாக ஜாதகியும் கணவரும் வாழ்ந்து வருகிறார்கள்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: +91 8300124501