
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி காரகங்கள் உண்டு. ஒவ்வொரு பாவகத்திற்கும் தனியான காரகங்கள் உண்டு. அதேபோல ஒவ்வொரு ராசியும் தனக்கான இயல்புகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனிப்பட்ட குணாதியசங்கள் உண்டு. ஒரு காரக கிரகம் ஒரு பாவகத்தில் அமையும் போது அது செய்யக் கடமைபட்டுள்ள செயல்களை செய்தே தீரும். ஆனால் அக்கிரகம் அமைந்த ராசி, அது நின்ற நட்சத்திரத்தின் குணங்கள் அதன் செயல்பாட்டில் வெளிப்படுவதை காணலாம். ஒரு காரக பாவகத்தில் நின்று செயல்படும் கிரகத்தை கட்டுப்படுத்தும் வல்லமை காரக கிரகத்திற்கு உண்டு. உதாரணமாக ஒருவருக்கு புத்திர பாவகமான 5 ஆமிடத்தில் சனி அமைந்து தசை நடத்துகையில் அவருக்கு தாமதமாக குழந்தை பிறக்கலாம் அல்லது குறையுடன் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. ஆனால் ஜாதகத்தில் குழந்தையின் காரக கிரகம் குரு சிறப்புற்று ஏதாவது ஒரு வகையில் 5 ஆமிடத்துடன் அல்லது சனியுடன் தொடர்பில் இருந்தால் சனியின் பாதிப்பை குரு மாற்றியமைத்துவிடுவார். எனவே ஒரு கிரகம் தனது தசா-புக்தியில் என்ன செய்யும் என்பதை அது நின்ற ராசிநாதர், லக்ன ரீதியாக அது நின்ற காரக பாவகத்திற்குண்டான காரக கிரகம் ஆகியவற்றை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். ஒரு கிரக செயல்பாட்டை நுட்பமாக அறிய வர்க்கச் சக்கரங்கள் பயன்படுகின்றன. சர லக்னத்திற்கு 11 ஆமிடமும், ஸ்திர லக்னங்களுக்கு 9 ஆமிடமும், உபய லக்னங்களுக்கு 7 ஆமிடமும் பாதக ஸ்தானமாகும். இன்றைய பதிவில் பாதக ஸ்தானத்தில் நின்ற ஒரு கிரகம் செயல்படும் விதத்தை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராயவிருக்கிறோம்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

உபய லக்னமான மீனத்திற்கு பாதக ஸ்தானமான 7 ஆமிடத்தில் பாதகாதிபதி புதன் உச்சம் பெற்று 6 ஆமதிபதி சூரியனுடன் இணைந்து நிற்கிறார். ஜாதக கிரகங்களிலேயே புதன்தான் வலுவாக உள்ளார். ஆனால் அவர் சூரியனில் 3 பாகை நெருக்கத்தில் அஸ்தங்கமாகியுள்ளார். ஒரு வகையில் நன்மை என்றுதான் கூற வேண்டும். இதனால் இவருக்கு பாதகங்கள் என்றால் மனைவி, நண்பர்கள், அரசு வகை தொடர்புகள் இவற்றால்தான் வர வேண்டும். பாதக ஸ்தானத்தை மூன்றாமிட வக்கிர குரு பார்ப்பதால் பாதகங்களின் வெளிப்பாட்டில் குருவின் காரகங்களான தனம், புத்திரம் நிச்சயம் இருக்கும். ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்று நிற்கிறார்கள். இவையிரண்டும் புதனின் நட்சத்திரங்களான முறையே ஆயில்யம், கேட்டையில் நிற்பதால் பரிவர்த்தனைக்கு முன்னும், பரிவர்த்தனைக்கு பின்னும் பாதகாதிபதி புதனுடன் தொடர்பாகிரார்கள். இதனால் இவருக்கு ஏற்படும் பாதகங்கள் செவ்வாய், சந்திரன், புதன், சூரியன், குரு, 7 ஆமிடம் இவற்றின் தொடர்பில்தான் அமையும்.
7 ஆமிடம் மனைவியை மட்டுமல்ல கூட்டாளியையும் குறிப்பிடும் பாவகமென்பதால் ஜாதகருக்கு மனைவி, கூட்டுத்தொழில் வகையில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கால புருஷ நான்காமதிபதி சந்திரனும் பூமி காரகர் செவ்வாயும் புதன் சாரம் பெறுவதால் ஜாதகர் வீடு, நிலம் விற்பனை வகையில் பாதிப்புகளை அடைய வாய்ப்புண்டு. புதன் நட்பு, தரகு, கமிசனை குறிப்பிடும் கிரகமென்பதால் இவற்றின் வழி பாதகங்களும் ஜாதகருக்கு ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும்.
முதலில் மனைவி வழியில் வரும் பாதிப்புகள் பற்றி அலசுவோம். களத்திர ஸ்தானத்தில் புதன் உச்சம் பெற்று சூரியனுடன் இணைந்துள்ளதால் மனைவி தொழில் செய்பவராக இருப்பார். களத்திர காரகர் சுக்கிரன் சிம்மத்தில் அமைந்து கும்ப சனியின் பார்வையை பெறுவது மனைவி உழைப்பாளி என்பதை உறுதி செய்கிறது. சுக்கிரனுக்கு முன்னால் உச்ச புதன், பரிவர்த்தனைக்குப் பிறகு சுக்கிரனுக்கு பின்னால் சந்திரன் அமைவது சுக்கிரனுக்கு சுப கர்த்தாரி யோகத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். இது மனைவிக்கு சந்திரன் குறிக்கும் தாய்மை உணர்ச்சியையும், புதன் குறிப்பிடும் நட்பு, கடன், பழக்கத்தால் வரும் சாதக பாதகங்களை குறிப்பிடும். மேலும் 7 ஆமதிபதி புதன் சந்திரனின் ஹஸ்தத்தில் நிற்க, நீச சந்திரன் புதனின் கேட்டையில் அமைந்து நட்சத்திரப் பரிவர்த்தனையில் உள்ளனர். இப்படி 7 ஆபதிபதி சந்திரன் தொடர்பு பெறுவதால் மனைவியின் இரக்க சுபாவமே ஜாதகருக்கு இழப்பை ஏற்படுத்தும். மனைவி வழியில் ஜாதகருக்கு என்ன பாதகங்கள் ஏற்பட வாய்ப்புண்டு? என்பதை இன்னும் நுட்பமாக நவாம்சத்தில் ஆராய்வோம்.

நவாம்சத்தில் களத்திர காரகரும் களத்திர பாவகாதிபதியுமான சுக்கிரன் அஷ்டமாதிபதி புதனுடன் இணைந்து ஸ்திர லக்னமான விருட்சிகத்திற்கு பாதக ஸ்தானத்தில் அமைந்துள்ளது மனைவி வழியிலும் பாதகங்கள் ஏற்படுவதை உறுதி செய்கிறது. ஜாதகரது மனைவிக்கும் புதன் குறிப்பிடும் நட்பு, கடன் வகை பாதிப்புகள் ஏற்படும். கடகத்தில் சுக்கிரன் அமைந்துள்ளதால் மனைவி சந்திரன் குறிப்பிடும் இரக்க சுபாவம், தர்ம சிந்தனை, தாய்மை உணர்வுகள் நிரம்பப் பெற்றவர். புதன் வீட்டிற்கு வந்து தொடர்பாகும் நபர்களை குறிப்பிடும் கிரகமென்பதால் வீட்டுடன் தொடர்புடைய நபர்களாலும் மேற்குறிப்பிட்ட மனைவியின் சுபாவத்தால் ஜாதகருக்கு பாதிப்புகள் ஏற்படும். லக்னாதிபதி செவ்வாய் குருவோடு இணைந்து சுக்கிரன், புதனை பார்ப்பதால் ஜாதகரும், மனைவியும் பணம், வீடு, குழந்தைகள் வகை தொடர்புகள் அதிகம். இதுவே இருவரின் சாதகங்களுக்கும் பாதகங்களுக்கும் காரணமாக அமையும்.
ராசிச் சக்கரப்படி 10 ன் பாவத்பாவமான 7 ல் புதன், சூரியன் இணைந்து 1 – 1௦ அதிபதி குரு பார்வை பெறுவதால் தொழில் வகையில் ஜாதகருக்கு பாதிப்புகள் உண்டா? என்று ஜாதகரின் தசாம்சம் மூலம் ஆராய்வோம் வாருங்கள்.

தசாம்சத்தில் 10 ன் பாவத்பாவம் 7 ல் இருந்து லக்னாதிபதி செவ்வாய் மேஷ லக்னத்தையும் 10 ஆமிடத்தையும் பார்ப்பதிலிருந்து செவ்வாய் தொடர்புடைய காரகங்களே ஜாதகரை தொழில் ரீதியாக ஆளுமை செய்யும் என்பது தெளிவாகிறது. 10 ஆமிடத்தில் நான்காமதிபதி சந்திரன் நிற்பது நான்காமிடமும் செவ்வாயும் குறிப்பிடும் பூமி, வீடு தொடர்புடைய விஷயங்களை குறிப்பிடுகிறது. ஆனால் 10 ஆமிடத்தில் சந்தின் வக்கிரம் பெற்ற குருவுடனும், நிரந்தர வக்கிர கிரகம் கேதுவுடனும் இணைந்து தன் வீடு கடகத்தில் நிற்கும் ராகுவின் பார்வையை பெறுவதும், ராகு சாரம் சுவாதி-1 ல் இருந்து செவ்வாயின் நான்காம் பார்வையை பெரும் சந்திரன் தொழில் விஷயத்தில் ஜாதகரின் கடினமான, மன உழைச்சலான நிலையையும், பொருளாதார நெருக்கடிகளையும் குறிப்பிடுகிறார். ராசிச் சக்கரத்தில் உச்சம் பெற்ற பாதகாதிபதி புதன் தசாம்சத்தில் எட்டாமிடத்தில் நின்று தன ஸ்தானமான 2 ஆமிம் ரிஷபத்தை பார்ப்பதால் புதனின் காரகங்களான தரகு, கமிசன், நட்பு, கடன் வகையில் வருமான பாதிப்புகள் வரும் என்பது தெரிகிறது.
மேற்கண்ட விஷயங்கள் ஜாதகருக்கு பாதகங்கள் மனைவி, நட்பு, கடன், தரகு, கமிசன், மற்றும் வீட்டிற்கு புதிதாக வந்திணையும் தொடர்புகளால் ஏற்படும் என்பதை குறிப்பிடுகிறது. ஜாதகப்படி மனைவி இரக்கமும், கருணையும் உள்ளவர். 7 ஆமதிபதி புதன் சூரியனுடன் இணைந்ததால் சுய தொழில் செய்யும் அமைப்புள்ளவர் என்பதும், சூரியன் 6 ஆமதிபதி என்பதால் மனைவி தொழிலில் கொடுக்கல் – வாங்கல் வகை பாதிப்புகள் ஏற்படும் என்பதும் புரிகிறது. ஜாதகப்படி குடும்ப பாதிப்புகளைவிட தொழில், வருமானம் வகை பாதிப்புகள்தான் அதிகம் ஏற்படும் என்பதும் புரிகிறது.
இந்த ஜாதகர் ஜாதகம் குறிபிட்டபடி நிலத்தரகராக தொழில் செய்கிறார். மனைவி சொந்தமாக அழகு நிலையம், தையல் நிலையம், Fancy Stores ஆகியவற்றை வைத்துள்ளார். தாய்மை குணம் நிரம்பிய மனைவி, இறந்துவிட்ட தனது அக்காளின் இரு பெண் குழந்தைகளையும் தனது குடும்பத்துடன் இணைத்துக்கொண்டு பராமரிப்பது புதனுக்கு சந்திரனுக்கும் உள்ள தொடர்பால் ஏற்பட்டுள்ளது தெரிகிறது. இது மனைவி வழி தொடர்பால் வந்த பாதிப்பு என்றாலும் ஜாதகரும் குடும்பத்திற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதைப்பற்றி கவலைபடாமல் ஏற்றுக்கொண்டார். ஆனால் மனைவி ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் தான் பழகிய நட்பு வட்டத்தில் பெருமளவு பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளார். உச்ச புதனுடன் சூரியன் இணைந்து பாதகத்தில் நிற்கும் அமைப்பால் ஜாதகர் பெரும்புள்ளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிலம் வாங்கித்தந்த கமிசனை பெற இயலாமல் ஏமாற்றப்படுகிறார். (சூரியன்-அரசியல்வாதிகள், புதன்-கமிசன்).
நிவர்த்தி ஸ்தானம் என்பதை 7 ஆமிடம் குறிப்பிடும். இங்கு பாதக ஸ்தானமான 7 ஆமிடமே நிவர்த்தி ஸ்தானமாகவும் அமைகிறது. 7 ஆமிட புதன், பூர்வ புண்ணியம், புத்திர ஸ்தானதாதிபதி சந்திரனுடன் சாரப் பரிவர்தனையாவதால் ஜாதகரும் மனைவியும் பெற்றோர்களற்ற இரு பெண் குழந்தைகளை ஆதரித்து வளர்ப்பதால் இவர்களது சொந்த புத்திரர்களுக்கு அந்தப் புண்ணியத்தின் பலன் கிடைக்கும்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501