ஒருவரது வாழ்வின் ஆதாரம் அவரது சம்பாத்தியம்தான். சம்பாத்தியத்திற்கு ஆதாரம் ஒருவரது திறமை. ஒரு தொழில் மீது தனக்கு திறமை இருப்பதாக என்னும் நபர், அதில் ஈடுபட்டு, முதலீடு செய்து தொழில் செய்து வருகையில், தனது திறமை மட்டும் அத்தொழிலில் வெற்றி பெற போதாது. அதில் ஈடுபடும் சக பணியாளர்களின் திறமையும் முக்கியம் என ஒரு சூழலில் உணர்வார். பலர் ஈடுபட்டுச் செய்யும் எந்தத் தொழிலிலும் இந்நிலை ஏற்படும். அல்லது தனது திறமை தொழிலை வெற்றிகரமாக நடத்த போதுமானதாக இல்லை எனும் சூழலில் தனது தொழிலுக்கு திறமையான பணியாளர்களை, கூட்டாளிகளை இணைத்துக்கொள்வர். ஒரு திருமணத்திற்கு துணைவரை தேர்ந்தெடுப்பதில் காட்டும் கவனத்தை தொழிலில் கூட்டாளிகளை தேர்ந்தெடுப்பதிலும் காட்ட வேண்டும். நல்ல தொழில் பங்குதாரர், குறிப்பிட்ட அத்தொழில் அவருக்கும் வாழ்வில் ஆதாரம் தரக்கூடியது என்ற பிடிப்பான மனநிலையில் இருக்க வேண்டும். தொழில் பங்கு தாரர்களிடையே கருத்தொற்றுமை இல்லை எனில், அது தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு மாறான நிலையை தரலாம் அல்லது தொழில் கூட்டாளியின் கைக்குச் செல்லலாம். இந்நிலையில் வரன் பார்ப்பது போன்று பங்குதாரராக வரக்கூடியவரின் ஜாதகத்தை பெற்று இருவருக்குமிடையேயான இணக்கத்தை பார்ப்பது சாத்தியமானதா? என்றொரு கேள்வி எழும். அப்படியே பங்குதாரராக இணைய விருப்பமுள்ள நபர் தனது ஜாதகத்தை கொடுத்தாலும் அது உண்மையான ஜாதகமாக இருக்கும் என்று உறுதியில்லை. இந்த நிலைக்கு ஜோதிட தீர்வு என்றால், தொழிலை துவக்கியவருக்கு கூட்டாளியால் யோகமுண்டா? என ஆராய்வது ஒரு வழி. மற்றொரு வழி பிரசன்னம் பார்ப்பது. இன்றைய பதிவு ஜாதக ரீதியாக தொழில் கூட்டு பற்றி ஆராய்வதே.
கீழே ஒரு தொழில் முனைவோரின் ஜாதகம்.
நிர்வாகத் திறமை.
துலாம் லக்ன ஜாதகம். ராகு-கேதுக்கள் லக்னத்திலும் கூட்டாளி பாவகமான 7 லும் நிற்பதால் அந்நிய தொடர்புகளே ஜாதகருக்கு சிறப்பை தரும். ஆன்மிகம், நவீன மின்னணு, மென்பொருள் வகை தொழில்களில் ஈடுபடுவது ஜாதகருக்கு சிறப்பை தரும். தொழில் ஸ்தானமான 10 ஆமிடமாக கடகத்தில் சனி நிற்கிறார். இதனால் இவர் வெளிநாடு, திரவம், பயணம் சார்ந்த வகை தொழில்களை அதிகம் விரும்புவார். சனி அங்கு வக்கிரமாகியுள்ளதால் தொழில் ஈர்ப்பும், தொழில் அறிவும் அதிகம் இருக்கும். ஆனால் வக்கிர சனி தொழிலில் கடும் மன உழைச்சலை ஏற்படுத்தி நோக வைப்பார். தனது தொழில் பற்றுதலுக்கும், அறிவுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று எங்கும் மன நிலையை ஏற்படுத்துவார். தொழில் செய்பவர் லக்னாதிபதியின் நிலையை முதலில் ஆராய வேண்டும். லக்னாதிபதி விரையாதிபதியுடன் இணைவதால் நிறைய விரையங்கள் செய்யும் மன நிலையை இயல்பாகவே ஜாதகருக்கு ஏற்படும். இத்தகையோர் நிர்வாகம் செய்யக்கூடாது. முதலீடு செய்துவிட்டு நிர்வாகத்தை தகுதியான மற்றொருவரிடம் ஒப்படைப்பது சிறந்தது. 5 ஆமிடத்தில் ஏற்படும் இந்த வகை இணைவு மன மகிழ்ச்சிக்காக செய்யும் செலவுகளை குறிப்பிடும்.
தொழில் கூட்டாளி.
கூட்டாளியை குறிப்பிடும் பாவகம் 7 ஆமிடமாகும். 7 ல் ராகு-கேதுக்கள் நிற்பதால் கூட்டாளி ராகு-கேதுக்களின் குணத்தை பெற்றிருப்பார். இங்கு 7 ல் கடனை குறிக்கும் 6 ஆமதிபதி குரு கேதுவுடன் இணைவதால் கூட்டாளியால் ஜாதகருக்கு கடன் ஏற்படும். கூட்டாளியை குறிக்கும் காரக கிரகமான புதன் இங்கு விரையாதிபதியாகி அவர் 7 க்கு பாதகத்தில் நிற்பது இதை உறுதி செய்கிறது. ஆனால் கூட்டாளியை குறிக்கும் பாவாதிபதி செவ்வாய் பாக்ய ஸ்தானமான 9 ல் நிற்கிறார். இதனால் புதன் தர வேண்டிய 9 ஆமிட பலனை செவ்வாய் தருவார். அப்படியானால் 7 ஆமதிபதி 9 ல் நிற்பது யோகமா என்றால் 9 ஆமிடத்திலமைந்த 7 ஆமதிபதி செவ்வாய் தனது காரகமான கண்டிப்பையும் 9 ஆம் பாவாகாதிபதி புதனின் அறிவையும் ஒருங்கே பெறுவார். செவ்வாய்க்கு 10 ல் லக்ன பாதகாதிபதி சூரியன் நிற்பது, கூட்டாளிக்கு திக்பலம் தருகிறது. ஜாதகருக்கு அல்ல. இதனால் கூட்டாளி வலிமையடைவார். ஜாதகர் வலு குறைவதை ஜாதகம் சுட்டிக்காட்டுகிறது.
தடுமாறும் தொழிலை கையாள்தல்.
தொழில் தடுமாறும் சூழலில் அதை மற்றவரிடம் ஒப்படைத்துவிட்டு தனது முதலீட்டை காப்பாற்றிக்கொள்வது சிறப்பு. தொழில் முடக்கம் தசா-புக்தி தொடர்புடைதென்றால் குறிப்பிட்ட தசா-புக்தி முடியும் வரை தொழில் முடக்கம் இருக்கும். மாறாக தொழில் முடக்கம் கோட்சாரம் தொடர்புடையது என்றால் கோட்சார நிலை மாறியதும் தொழில் நிலை வலுவடையும். அதுவரை தொழிலை விட்டு விலகாமல் உரிய காலம் வரும் வரை தொழிலை குறைத்துகொள்ளலாம். இன்று பல நிறுவனங்கள் பணியாளர்களை குறைப்பது இதன் அடிப்படையில்தான்.
கூட்டாளி பற்றி முடிவெடுத்தல்.
மேற்கண்ட ஜாதகர் ஒரு கூட்டாளியை தனது தொழிலில் இணைத்துக்கொள்வது பற்றி ஆலோசனை கேட்டு என்னை அணுகினார். ஜாதகம் பார்த்த நேரத்திற்கான கோட்சார ஜாதகம் அருகிலேயே பதிவிடப்பட்டுள்ளது. கூட்டாளியை குறிக்கும் 7 ஆமிடம், அதன் அதிபதி செவ்வாயோடு தசா-புக்தி கிரகங்கள் தொடர்பானால் தொழில் கூட்டு அமையும். இல்லாவிட்டால் அமையாது. வருட கிரகங்கள் 7 ஆம் பாவகத்தோடு தொடர்பானால் அவை கூட்டாளி தொடர்பான விஷயங்களில் தற்காலிக நன்மை, தீமைகளை செய்யும். கூடுதலாக ஜீவன விஷயம் என்பதால் ஜீவன காரகர் சனி மற்றும் சம்பவங்களை ஜாதகர் தற்போது எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதா? என்பதை லக்னாதிபதி சுக்கிரன் ஆகியோரது ஜனன, கோட்சார நிலைகளின் ஆராய்வதன் மூலம் அறியலாம். கோட்சார சந்திரன் ஒருவரின் மன ஓட்டங்களை கூறும். கோட்சார சந்திரன் கடந்து வந்த ராசி அவரது கடந்த கால எண்ணங்களையும் தற்போது நிற்கும் ராசி அவரது தற்போதைய எண்ணங்களையும் அடுத்து சந்திக்கவுள்ள ராசிகளை வைத்து அடுத்து அவர் செயல்பட எண்ணியுள்ள விஷயங்களையும் தெரிவிக்கும். ஆனால் கோட்சார லக்னம்தான் தனது எண்ணங்களை ஜாதகர் செயலுக்கு மாற்றுவாரா இல்லையா என்பதை கூறும். இவற்றோடு தசா-புக்தி கிரகங்களின் தொடர்பு மட்டுமே ஜாதகர் கூட்டாளியை அமைத்துக்கொள்வதை உறுதி செய்யும்.
இந்த ஜாதகத்தில் 7 ஆமிடமான மேஷத்தில் ஜனன ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்துள்ளனர். அங்கு கோட்சாரத்தில் ராகு நிற்கிறார். 7 ஆமிடத்தை ஜனன சனி 10 ஆம் பார்வையாக பார்க்கிறார். இது தொழிலில் முதலீடு முடங்கியுள்ளதை தெரிவிக்கிறது. கோட்சார சந்திரன் 7 ஆமிடத்தை கடந்து வந்துள்ளதன் மூலம் தொழிலுக்கு ஒரு கூட்டாளியை இணைப்பது பற்றி ஜாதகர் எண்ணியுள்ளார். ஆனால் கோட்சார லக்னம் மேஷத்திலேயே அமைந்தும் தனது எண்ணங்களை செயல்படுத்த இயலாமல் போனதற்கு 7ல் நிற்கும் கோட்சார ராகுவே காரணம். கோட்சார சந்திரன் 7 ஆமிடத்தை கடந்து 8 ஆமிடத்தில் 7 ஆமதிபதி செவ்வாயுடன் நிற்பதால் அவர் கூட்டாளி பற்றிய எண்ணத்தில் தயங்கி நிற்பது புரிகிறது. காரணம் ரிஷபம் ஜாதகருக்கு தொழில் பாவகமான 10க்கு பாதக ஸ்தானமாகும். கோட்சார சந்திரன் கடந்து வந்தது 7 ஆமிட ஜனன கால குரு, கேது, சனி தொடர்புகளே. இதனால் இம்மூன்று கிரகங்களின் கோட்சார நிலைகளையும் கவனித்தால் ஜாதகரின் கூட்டாளி பற்றிய தற்போதைய கேள்விக்கு பதில் கிடைக்கும்.
மீனத்தில் ஆட்சி பெற்றுள்ள கோட்சார குருவும், கோட்சார லக்னாதிபதி சுக்கிரனும் ஜனன கால சூரியனிடம் அஸ்தங்கமடைந்துள்ளனர். கோட்சார சுக்கிரனும், கோட்சார சனியும் கோட்சார கும்ப சூரியனிடம் அஸ்தங்கமடைந்துள்ளனர். இவை தொழிலுக்கு உரிய பணியாட்களும் பொறுப்பாளர்களும் கிடைக்காமல் ஜாதகர் அவதியுறுவதை குறிக்கிறது. ராகு-கேதுக்கள் கூட்டாளி பாவகத்தில் தடையை ஏற்படுத்தும் வகையில் நிற்கையில் பாதகாதிபதி சூரியனின் நிலை ஜனன காலத்திலும் கோட்சாரத்திலும் சாதகமற்று பாதகத்தை செய்யும் வகையிலேயே அமைந்துள்ளதை கவனியுங்கள். இதனால் கூட்டாளி பற்றி தற்போது ஜாதகர் எடுக்கும் முடிவுகள் பாதகத்தையே செய்யும். கோட்சார சந்திரன் அடுத்தும் ஜனன காலத்தில் மிதுனத்தில் அமைந்த செவ்வாயை நோக்கித்தான் செல்கிறார் என்பதால் மீண்டும் ஒரு தொழில் கூட்டாளியை இணைந்துக்கொள்வது பற்றி யோசிப்பார். ஆனால் மிதுன செவ்வாய்க்கு திக்பலம் தரும் வகையில் ஜனன கால சூரியன் அமைந்திருப்பதால் கூட்டாளியை சேர்த்தால் கூட்டாளி இவரது தொழிலை அபகரித்துக்கொள்வார். கோட்சார ராகு ஜனன சூரியனை நோக்கி வரும்போதும் மிதுன செவ்வாய்க்கு 10 ல் திக்பல வலுவோடுதான் சூரியன் நிற்பார். தொழிலில் ராகுவால் வரும் தடைகளை எதிர்கொள்ள கூட்டாளியும் தயாராகவே இருப்பார். எனவே புதிய கூட்டாளியை தற்போது இணைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறப்பட்டது. கூட்டாளியை குறிக்கும் 7 ஆம் பாவகத்தில் கூட்டாளி அமையாமல் தடைகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் ராகுவே தற்போதைய தசா நாதர் என்பதால் கூட்டாளியை ஜாதகர் தற்போது அமைத்துக்கொள்ள இயலாது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.