ஜோதிட நுணுக்கங்கள் வாசகர்களுக்கு வணக்கங்கள்.
வலைப்பூவில் 8 வருடங்களுக்கு மேலாக ஜோதிடப்பதிவுகளை எழுதி வந்த நான் எனது சொந்த வலை மனையில் எழுதும் முதல் பதிவு இது. எனது வாடிக்கையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கூடுதல் சிறப்புகளை அளிக்கும் வகையில் எனது வலைமனை செயல்படும். எனது வலைப்பூவிற்கு அளித்த ஆதரவை தொடர்ந்து இந்த வலைமனையில் அளிக்க எனது அன்பான வாசகர்களை கோருகிறேன்.

ஒரு தேசத்தை பாதுகாக்க ஒரு பலம் பொருந்திய ராணுவம் அவசியம். அத்தகைய ராணுவத்தை வெற்றிகரகாக வழிநடத்திச் சென்று போரில் வெற்றிகளை ஈட்டித்தருவது ஒரு வீரம் பொருந்திய படைத்தலைவருக்கு அழகு. பண்டைய காலத்தில் அப்படி வெற்றிகரமான செயல்பட்ட ராணுவத்தளபதிகளின் ஜாதககங்களை தொகுத்து ஆய்வு செய்து குறித்து வைத்துள்ளனர். அப்படிப்பட்ட ஜாதகங்கள் சேனாதிபதி யோகம் பெற்றவை என்றே அழைக்கப்பட்டன. அதை வைத்து அத்தகைய தளபதிகளின் காலத்திற்குப்பிறகு அது போன்ற ஜாதக அமைப்பை பெற்றவர்களை தளபதிகளாக நியமிக்க அது பெருமளவு உதவியது. இன்றைக்கும் அது போன்ற நடைமுறைகள் சில குறிப்பிட்ட அமைப்புகளில் செயல்படுத்தப்படுகிது. ஆனால் அவை வெளியே தெரியாவண்ணம் செயல்படுத்தப்படும். குறிப்பாக சில பாரம்பரிய ஆன்மீக தலைமை பீடத்தில் அடுத்த மடாதிபதியை நியமிக்க வாய்ப்புள்ள பலரின் ஜாதகங்களை ஆய்வு செய்து அதில் சிறந்த ஒருவரை நியமிப்பதை பெரும்பாலோனோர் அறிந்திருக்கலாம்.
தற்போதைய காலத்தில் இது போன்ற யோகங்கள் எப்படி செயல்படுகின்றன என ஆராய முற்பட்டபோது பல ஆச்சரியங்களை அறிய முடிந்தது. இன்று ஒரு பெரும் பொருளாதார வளம்கொண்ட நிறுவனத்தை வழிநடத்தும் செயல்வீரர்களை (CEO) சேனாதிபதிகளுக்கு ஒப்பிடலாம் என்பது எனது கருத்து. இதன் அடிப்படையிலேயே இன்றைய கால சேனாதிபதி யோகங்களின் செயல்களை பார்க்கிறேன். கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

கடக லக்ன ஜாதகத்தில் லக்னம் ஆயில்யம்-4 ல் அமைந்துள்ளது. குருவோடு இணைந்து நீச பங்கப்பட்ட புதன், ராசியிலும், தசாம்சத்திலும் (தொழிலை பற்றிக்குறிப்பிடுவது) மீனத்தில் அமைந்து வர்கோத்தமம் பெறுகிறது. இது சம்பாத்திய வகையில் ஜாதகியை புதனே இயக்குகிறார் என்பதை தெரிவிக்கிறது. ஒரு சிறந்த நிர்வாகிக்கு, செயல் வீரருக்கு ஜாதகத்தில் முக்கியமாக இருக்க வேண்டிய அமைப்பில் முதன்மையானது சூரியன் மற்றும் செவ்வாயின் வலுவாகும். சூரியன் ஆளுமையையும், செவ்வாய் பின்வாங்காத செயல்பாட்டையும் குறிப்பவை. சூரியன் ஜோதிடக்கோட்பாட்டின்படி ராஜாவாகவும், செவ்வாய் சேனாதிபதியுமாக அமைகின்றன. ராஜ கிரகமும், கால புருஷனுக்கு சிந்தனை பாவாதிபதியுமான சூரியன், கால புருஷனின் லக்னமான செவ்வாயின் மூலத்திரிகோண வீடு மேஷத்தில்தான் உச்சமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கால புருஷனின் லக்னாதிபதியான செவ்வாய் கால புருஷனின் 1௦ ஆம் பாவமான மகரத்தில்தான் உச்சமாகிறார். மேலும் சூரியனும் செவ்வாயும் எந்தவொரு ஜாதகத்திலும் போர்க்களத்தை குறிக்கும் 1௦ ஆமிடத்தில்தான் திக்பலம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பொருள் என்னவெனில், போரில் ஒரு அரசனும் சேனாதிபதியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதும், தன் வீட்டில் உச்சமாகும் அரசன் சூரியனுக்கு, சேனாதிபதி செவ்வாய் கட்டுப்பட்டவர் என்பதுமாகும். தற்காலத்தில் ஒரு நிறுவன முதலாளிக்கு அதன் CEO கட்டுப்பட்டவர் என இதை எடுத்துக்கொள்ளலாம்.
மேற்கண்ட ஜாதகத்தில் சூரியன் ராசிச்சக்கரத்தில் லக்னத்திற்கு 1௦ ல் உச்சத்துடன் திக்பலமும் பெற்றுள்ளார். தசாம்சத்திலும், ராசிக்கு 1௦ ல் உச்சத்துடன் திக்பலமும் வர்கோத்தமும் பெற்று மிக வலிமையாக அமைந்துள்ளார். ராசியிலும் தசாம்சத்தில் செவ்வாயும், புதனும் வர்கோத்தமம் பெற்றுள்ளனர். தசாம்சத்திலும் சூரியன் 1௦ ஆமதிபதியாகி உச்சம் பெறுவது மிகச் சிறப்பு. வாயு ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும், அதன் அதிபதிகளான புதன், சுக்கிரன், சனி ஆகிய மூன்று கிரகங்களும் விமானத்தை குறிக்கும். இவற்றோடு நவீனத்திற்குரிய ராகுவும் பொறியியலுக்குரிய செவ்வாயும் தொடர்பாகும்போது ஒருவர் விமானத்துறையில் பிரகாசிக்கிறார். தசாம்ச லக்னத்தில் செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்ற நிலையில், 1௦ ஆமதிபதி சூரியன் உச்சம் பெற்று சனி, ராகு, குரு ஆகியவற்றோடு இணைந்துள்ளது ஜாதகிக்கு விமானத்துறையில் வாய்ப்பை வழங்கியுள்ளது. நவாம்சத்தில் புதன்-சுக்கிர பரிவர்த்தனையும், தசாம்சத்தில் சுக்கிர செவ்வாய் பரிவர்த்தனையும், சூரியனுடன் குரு தொடர்பாவதும், இவரது பணி வெளிநாட்டில் என்பதை குறிப்பிடுகிறது. இவர் ஒரு நாட்டின் ராணுவத்தலைவர் அல்ல. ஆனால் உலகின் பல நாட்டு ராணுவங்களுக்கு தேவையான விமானங்களை தயாரித்து வழங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றின் முதன்மை செயல் இயக்குனராக உலகின் முதன்மை தேசத்தில் பணிபுரிகிறார். இவரது பணி ஒரு தேசத்தின் ராணுவ தலைமைப் பணியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது.
சிறந்த தளபதிகளை உருவாக்கும் காஹள யோகம்.
தலைமை CEOக்களுக்கு இருக்க வேண்டிய மற்றொரு ஜாதக அமைப்பு காஹள யோகமாகும். ஒரு பெரிய சேனையை வெறித்தனமான மனோபாவதுடன் முன்னெடுத்துச் செல்லும் படைத்தளபதிகளுக்கு இருக்க வேண்டிய யோகம் என்று இந்த யோகத்தை ஜோதிடம் குறிப்பிடுகிறது. பண்டைய காலத்தில் சக்கரவர்த்திகளின் சேனைத் தளபதிகளுக்கு இந்த யோகம் அமைத்திருந்ததை ஜோதிடர்கள் குறித்து வைத்துள்ளனர். ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று குருவும் செவ்வாயும் தங்களுக்குள் கேந்திரம் பெறுவது காஹள யோகமாகும்.
கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.

தலைமைப்பண்பை குறிக்கும் சிம்ம லக்ன ஜாதகம். ஜாதகத்தில் 5, 8 க்குரிய குருவும் லக்னத்தில் திக்பலம் பெற்று நிற்பது மிகச்சிறப்பு. சூரியன் ராசியிலும் தசாம்சத்திலும் லக்னத்திற்கு 1௦ ல் திக்பலம் பெற்று வலுவாக அமைந்துள்ளார். லக்னாதிபதி சூரியன் திக்பலம் பெறுவதால் லக்ன கிரகங்களுக்கும் வலுவடைகின்றன. சூரியனின் இரு நட்புக்கிரகங்கள் திக்பலம் பெறுவது இந்த ஜாதகத்தில் மிகச் சிறப்பு. ஜீவன காரகர் சனி, 8 ஆமதிபதி குரு, 9 ஆமதிபதி செவ்வாய் ஆகியோர் லக்னத்தில் இணைந்து நிற்பது ஜாதகி வெளிநாட்டில் வேலையால் சிறப்படைவதை குறிக்கிறது. 1௦ ஆமதிபதி சுக்கிரனும் சந்திரனும் லாப பாவத்தில் ஆட்சி புதனுடன் மிதுனத்தில் இணைவது ஜாதகி திட்டமிடல், தரவுகளை (Data science) கையாளுதல் போன்றவற்றில் சிறந்த நுட்பத்தை பெற்றிருப்பார் என்பதை குறிக்கிறது. தரவுகளை குறிக்கும் புதனின் ஆயில்யம்-4 ல், லக்னத்திற்கு 12 ல் ராகு அமைவது அதில் மிகுந்த மதி நுட்பத்தை ஏற்படுத்துவதையும், இந்த திறமையை ஜாதகி வெளி நாட்டில் செயல்படுதுவார் என்பதோடு இரவில் கண்விழித்து அதிக நேரம் பணி புரிவார் என்பதையும் குறிக்கிறது.
தசாம்சத்திலும் வக்கிரம் பெற்ற சுக்கிரன் மிதுனத்திலேயே அமைந்து வர்கோத்தமம் பெற்று கேதுவோடு இணைந்திருப்பது பணி விஷயத்தில் ஜாதகி பிடிவாதமானவர் என்பதையும் தனது பணியில் சிறந்த நுட்பத்தை பெற்றிருப்பதையும் குறிப்பிடுகிறது. தசாம்சத்தில் சூரியன் நீசமானது வலு குறைந்த தன்மையை குறிக்கிறது. தசாம்சத்தில் குரு செவ்வாய் பரிவர்த்தனையால் சந்திரன் வலுவாகிறார். இது, இட மாற்றத்தின் மூலம் ஜாதகியின் சிந்தனை சிறப்புறுவதை குறிக்கிறது. ராசியிலும் தசாம்சத்திலும் சனி-குரு தொடர்பாவது பணியில் சிறப்படைவதையும், நல்ல பொருளாதாரத்தை அடைவதையும் குறிக்கும். ஜாதகிக்கு தற்போது லாபாதிபதி புதனின் தசை நடக்கிறது. ஜாதகி தற்போது கணினி தரவுகளை கையாளும் துறையில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார்.
காஹள யோக விதிகள் இந்த ஜாதகத்தில் அமைந்துள்ளதை பார்க்கலாம். இன்றைய காலத்தில் பெரும் நிர்வாகத்தின் முதன்மை செயல் தலைவர்களுக்கு (CEOs) இந்த யோகம் செயல்படுவதை காண முடிகிறது. இந்த ஜாதகி, உலகின் முதன்மை தேசத்தில் நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் கணினி தரவுகளை கையாளும் உலகலாவிய நிறுவனத்தில் தரவுகளை கையாளும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவருக்கு கீழ் மிகப்பெரும் மென்பொருள் வல்லுனர்களைக்கொண்ட படையே இரவும் பகலுமாக இயங்கிக்கொண்டுள்ளது.
உங்களின் ஜாதகத்தில் இந்த யோகம் உள்ளதா?
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501