லக்னத்திற்கு 6, 8, 12 பாவகங்கள் இணக்கமாக செயல்படாத பாவங்களாகும். லக்னத்திற்கு இவை எப்படியோ அப்படியே ஒவ்வொரு பாவகத்திற்கும் அதன் 6, 8, 12 பாவங்கள் ஒத்திசைவாக செயல்படாது. இவற்றில் அடுத்தடுத்த இரு பாவகங்கள் ஒன்று மற்றொன்றிற்கு 2/12 ஆக அமையும். அதாவது சிம்மத்திற்கு கன்னி 2 ஆவது பாவம் என்றால், கன்னிக்கு சிம்மம் 12 ஆவது பாவமாகும். இப்படி 2/12 ஆக அமையும் பாவகங்கள் த்விர்த்வாதச பாவகங்கள் என அழைக்கப்படும். ஒரு பாவத்தின் அடுத்த பாவம் அதன் வளர்ச்சி பாவம் என அழைக்கப்பட்டாலும், இரண்டாவதாக நிற்கும் பாவத்திற்கு, முந்தைய பாவம் வீழ்ச்சி பாவமாகும். தனக்கு வளர்ச்சியை தரும் பாவத்திற்கே ஒரு பாவம் தீமை செய்யுமா என்றால், செய்யும் என்பதுதான் பதில். மாற்றங்களை உள்ளடக்கிய நெடிய வாழ்க்கையில், ஜாதகப்படி இது தவிர்க்க முடியாததாகும். இப்பதிவில் த்விர்த்வாதச பாகவங்களின் இத்தகைய செயல்பாடுகளை தசா புக்தி அடிப்படையில் நாம் ஆராயவிருக்கிறோம்.
கீழே 1989 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம்.
இந்த மிதுன லக்ன ஜாதகத்தில் 7, 1௦ க்குரிய பாதகாதிபதி குரு, லக்னத்தில் திக்பலத்தில் உள்ளார். 7 ல் அமைந்த சனியும் திக்பலம் பெற்று அமைந்துள்ளார். இதனால் இரு திக்பல கிரகங்களும் சம சப்தம பார்வை செய்கின்றனர். லக்னத்தில் திக்பலம் பெற்ற குருவே ஜாதகரது வாழ்க்கையை வழி நடத்தும் கிரகமாகும். சனி பார்வையில் இருப்பதால் உண்மையான உழைப்பை ஜாதகர் விரும்புவார். குரு பார்வையில் சனி இருப்பதால், ஜாதகரது ஜீவனம் சிறப்பாக இருக்கும். இவை இந்த ஜாதகத்தில் சிறப்பான அம்சங்கள் எனலாம். சனி ஜாதகத்தில் திக்பலம் பெற்றது சிறப்பென்றால், அவர் மிதுன லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் நின்றதால் குருவைவிட சனியே ஜாதகருக்கு பாதகத்தை செய்ய உரிமைமிக்கவர் ஆகிறார். உரிய தசா வராமல் சனி பாதகத்தை செய்ய மாட்டார். ஆனால் சனி தொடர்புடைய பாவங்களின் அடிப்படையில் ஜாதகருக்கு சாதக பாதகங்களை வழங்குவார்.
லக்னத்தில் நின்ற கிரகம் தனது குணத்தை ஜாதகருக்கு வழங்கும் என்ற அடிப்படையில், ஜாதகர் குருவின் நற்குணங்களை கொண்டிருப்பார் எனலாம். 1௦ ஆமதிபதி குரு, ஜீவன காரகர் சனியை பார்ப்பதால் ஜாதகருக்கு கண்ணியம் மிக்க ஆசிரியப்பணி கிடைத்தது. ஜாதகருக்கு தற்போது புதன் திசை நடக்கிறது. மூலத்திரிகோண வலுப்பெற்ற தசாநாதன் புதன் 1௦ ஆமிடத்தை பார்ப்பதால் ஆசிரியராகப் பணிபுரிகிறார். குரு சாரம் விசாகம்- 3 ல், 2 ஆம் அதிபதி சந்திரன் நிற்பதால் ஜாதகருக்கு போதனை வடிவில் வருமானம் வரும் என்றும் எடுத்துக்கொள்ளலாம். 7 ல் திக்பலம் பெற்ற சனி ஜாதகருக்கு நேர்மை குணத்தோடு தனக்கே உரிய கண்டிப்பான குணத்தையும் இணைந்தே ஜாதகருக்கு தருவார். லக்னாதிபதி புதன் வக்கிரம் பெற்று நிற்பதால் மற்றவர்களோடு எளிதில் ஒருங்கிணைய மாட்டார். ஆனால் ஜாதகர் தனது இக்குணத்தை புதன் தொடர்புடைய காரக பாவ விஷயங்களில் மட்டுமே வெளிப்படுத்துவார். ஏனெனில் வக்கிர கிரகம் ஜாதகருக்கு நுண்ணிய அறிவை அதன் காரக அடிப்படியில் வழங்கினாலும் அதன் காரக விஷயங்களில் மட்டும் மாறுபட்டு செயல்படவைக்கும் . புதன் தசையில் ஜாதகரின் இக்குணம் அதிகம் வெளிப்படும் எனலாம்.
ஜாதகருக்கு தற்போது புதன் தசையில் சந்திரன் புக்தி நடக்கிறது. சந்திரன் குரு பார்வை பெற்று நிற்பதால் ஜாதகருக்கு தற்போது புத்திரம் அமையக்கூடிய காலமாகும். ஆனால் தசா நாதனும் புக்தி நாதனும் 2/12 ஆக நிற்பதால் புத்திரத்திற்கு தடை உள்ளது. புத்திரத்தடை உள்ள ஜாதகர் தற்போது புத்திரத்திற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். ஜனன காலத்தில் 8 ஆமிட ராகு சாரம் பெற்ற குரு, தற்போது கோட்சாரத்தில், ஜனன ராகு நிற்கும் ஆதே பாகையில் செல்கிறார். இது புத்திரம் அமைய சிகிச்சை எடுக்க அருமையான காலமாகும். புக்தி நாதன் 5 ல் குரு சாரம் பெற்று புக்தி நடத்தும் காலத்தில் புத்திரம் அமைய ஜாதகருக்கு வாய்ப்புள்ளது. ஆனால் புத்திர வாய்ப்பை எதிர்நோக்கும் ஜாதகர் பணியில் பாதிப்பை எதிர்கொள்வார். 5 , 6 ஆகிய இரு பாவகங்களும் 2/12 அமைப்பில் வரும் த்விர்த்வாதச பாவகங்களாகும். 5 ஆம் பாவ பலனை ஜாதகர் அனுபவிக்க நேர்ந்தால் 6 ஆம் பாவ பலன் பாதிப்பிற்கு உள்ளாகும்.
லக்னாதிபதி புதன் மட்டும் ஜாதகத்தில் வக்கிரம் பெற்றுள்ளதை கவனிக்கவும். இதனால் ஜாதகர் உடன் பணிபுரியும் மற்ற ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படாமல் தனித்துவமாக செயல்பட்டார். வக்கிர கிரகம் நேர்கதி கிரகங்களுடன் இணைந்து செயல்படாது என்பதும் இதற்கு மற்றொரு காரணம். 7 ஆமிடம் என்பது உடன் பணிபுரியும் சக பணியாளர்களை குறிக்கும் பாவமாகும். சனி சக பணியாளர்களை குறிக்கும் காரக கிரகமாவதால் இவர் உடன் பணிபுரியும் சக ஆசிரியர்களின் தோழமையை பேணாமல் அவர்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார். அதன் வெளிப்பாடு சனி அவமான பாவமான 8 ஆமிடதிற்கு கோட்சாரத்தில் வருகையிலும் 8 ல் நிற்கும் ஜனன கால ராகுவோடு தொடர்பாகும் போதும் தெரியும் எனலாம். லக்ன குரு ஜனன காலத்தில் அவமான ஸ்தானமான 8 ஆமிட ராகுவோடு கோட்சாரத்தில் தொடர்பாகும்போது ஜாதகர் அவமானத்தை சந்திப்பார் எனலாம். அதற்கு தசா புக்திகளும் ஒத்துழைக்க வேண்டும். கோட்சாரத்தில் சனி தற்போது லக்னத்திற்கு 8 ல் நிற்பதையும், கோட்சார குரு கோட்சார ராகுவோடு தொடர்பாகியுள்ளதையும் கவனியுங்கள்.
கோட்சாரத்தில் ஏற்பட்ட இவ்வமைப்பால் ஜாதகர் மேல் அதிருப்தி கொண்டிருந்த சக ஆசிரியர்களின் முயற்சியால் ,மாணவி ஒருவர் மூலம் ஜாதகரை தவறானவராக சித்தரிக்க ஏற்பாடு நடந்தது. மாணவியை குரு சாரம் பெற்ற சுக்கிரன் குறிக்கிறார். நிர்வாகத்தை குறிக்கும் சூரியன் எதிர்ப்புகளுக்குரிய 6 ஆமதிபதி செவ்வாயை ஜனன காலத்தில் அஸ்தங்கம் செய்துள்ளதால், ஜாதகர் எதிர்கொண்ட எதிர்ப்பு, நிர்வாகம் ஜாதகருக்கு துணை நின்றதால் முறியடிக்கப்பட்டது. பாதகத்தை செய்ய பாதகாதிபதி குரு துனைநின்றாலும், அவர் ஜனன காலத்தில் திக்பலம் பெற்றதால் பாதிப்பின் தீவிரத்தை குறைத்துவிடுகிறார். இதனால் ஜாதகர் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இதர மாணவர்கள் நிராகரித்ததால் ஜாதகர் தனக்கு ஏற்படவிருந்த பாதிப்பில் இருந்து மீண்டாலும், ஜாதகருக்கு இந்நிகழ்வு மன உலைச்சலை கொடுத்தது உண்மை.
அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். வெற்றி பெறுவோம்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501