
ஜோதிட உலகில் நம்புவதற்கு ஆச்சரியமான பல செய்திகள் உண்டு. அப்படி ஒரு செய்தியில் நடிகர் சிவக்குமார் (தற்போதைய கார்த்திக், சூர்யாவின் தந்தை) ஒரு முறை காலஞ்சென்ற அவரது தந்தை ராக்கியாக்கவுண்டரின் ஜோதிட ஞானத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். நடிகர் ராஜேஷ் ராணி வார இதழில் எழுதிய ஜோதிடத்தொடரிலும் இதை பதிவு செய்திருக்கிறார். சிவக்குமார் அவரது தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது, குழந்தைக்கு பிறக்கும் முன்பே ஜாதகம் கணித்திருக்கிறார் அவரது தந்தை. அதில் பிறக்கும் குழந்தை ஒரு ஆணாகும். குழந்தைக்கு ஒரு வருடம் நிறைவு பெறுவதற்கு முன்பே தான் மரணித்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார். அதன்படி சிவக்குமாருக்கு 1௦ மாதம் ஆனபோது அவரது தந்தை மரணமடைந்துள்ளார். மற்றொரு செய்தி குமுதம் ஜோதிட இதழில் கண்டது. ஜோதிட மேதை AMR, ஒரு தம்பதிக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்ற கேள்விக்கு. அனுஷ நட்சத்திரத்தில் குழந்தை பிறக்கும் என்ற செய்தியையும், அதன்படியே குழந்தை பிறந்த பிறகு அந்த தம்பதியர் நன்றி தெரிவித்து எழுதியிருந்த கடிதத்தை குமுதம் ஜோதிடத்தில் வெளியிட்டிருந்தனர். இந்த இரு சம்பவங்களின் மூல காரணத்தை ஜோதிட ரீதியாக புரிந்துகொள்ள பல ஆண்டுகள் செலவு செய்திருக்கிறேன். பிரசன்னம் கற்றுக்கொண்ட பிறகுதான் அதற்கான சூட்சுமம் எனக்கு புரிந்தது. அப்படியான நான் பார்த்த ஒரு பிரசன்னத்தை இங்கு காண்போம்.
இந்த மாதம் 4 ஆம் தேதி என்னை தொடர்புகொண்டவர் தனது உறவுப்பெண்ணுக்கு தற்போதைய மே 15 முதல் 26 வரையிலான காலத்தில் குழந்தை பிறக்குமென மருத்துவர்கள் கூறியிருப்பதால், அதற்குள் ஒரு நாளை குறித்துத்தருமாறு கேட்டார். பொதுவாக இது போன்ற விஷயங்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பிவிடுவேன். ஏனெனில் அறுவை சிகிச்சைக்கு நேரம் குறித்து தந்து ஒருவரது ஜாதகத்தை நல்ல முறையில் மாற்றிவிட ஜோதிடத்தால் இயலாது என்பது எனது அனுபவ உண்மை. அப்படி குறித்து தரும் நேரப்படி அபூர்வமாக ஓரிருவர் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறேன். மேலும் குழந்தை உருவான துவக்கத்தில் இதுபோன்ற கேள்விகளுக்கு ஜோதிடர்கள் பதில் கூறினால் கருக்கலைப்பு செய்ய முனைபவர்கள் சிலர். அது சட்ட விரோதம் என்பதும், கருக்கலைப்பின் பாவம் ஜோதிடரியும் பாதிக்கும் என்பதால் இவற்றை நான் தவிர்த்து விடுவேன். என்னை அணுகியவர் தனிப்பட்ட முறையில் எனது நலம் விரும்பி என்பதாலும், குழந்தை பிறக்க இன்னும் சில நாட்களே இருப்பதாலும் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜாமக்கோள் பிரசன்னம் பார்க்கப்பட்டது.
உதயம் குருவின் மூலத்திரிகோண வீடாகிய தனுசு. எனவே ஒரு சுப விஷயத்திற்கான மற்றும் குழந்தைப்பேறுக்கான பிரசன்னம் என்பதை அது தெளிவாக கூறிவிடுகிறது. ஆரூடம் 5 ல் அமைகிறது. மேஷம் அறுவை சிகிச்சை காரகர் செவ்வாயின் வீடு. மேஷ ஆரூடத்தை அதன் அதிபதி செவ்வாயோடு சேர்ந்த சனி 3 ஆம் பார்வையாக பார்க்கிறார்.எனவே குழந்தை மற்றும் அறுவை சிகிச்சைக்கான விஷயம் என்பதை இது உறுதி செய்கிறது. 2 ல் கவிப்பு வீட்டிற்கு வரும் புது வரவை கூறுகிறது. உதயத்திற்கு 1௦ ல் கன்னியில் ஜாம குரு அமைந்து பிரசன்னம் குழந்தை பிறப்பை பற்றியது என்பதை உறுதி செய்கிறது.

பிரசவத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே உள்ளன. இதனால் நாட்கோள் சந்திரனை இதற்கு ஆராய வேண்டும். கோட்சார சந்திரன் உச்ச நிலையில் புதனுடன் இணைந்து உதயத்திற்கு 6 ல் ரிஷபத்தில் நிற்கிறார். 7 ஆமிடம் என்பது 2வது குழந்தையை குறிக்கிறது. சந்திரன் 7 ஆமிடாதிபதி புதனுடன் இணைந்து உதயத்திற்கு 6 ல் நின்று 7 ஆமிடத்தை நோக்கி நகர்வது கேள்வியாளருக்கு இது 2 ஆவது குழந்தை என்பதை குறிக்கிறது. உதயம் மற்றும் ஆரூடம் ஆகியவை ஆண் ராசியில் அமைந்தாலும் இரண்டும் கேதுவின் சாரம் பெற்றுள்ளது. ராகு-கேதுக்கள் பாலினத்தை மாற்றிவிடும் என்ற விதிப்பதி பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும். உதயத்தில் அமைந்த ஜாம சூரியன் சுக்கிரனின் பூராடம்-1 ல் நின்று 7 ல் இருந்து சுக்கிரனால் பார்க்கப்படுவது இதை உறுதி செய்கிறது. உள்வட்ட குருவும் ஜாம குருவும் பெண் ராசியில் அமைந்து உச்ச சுக்கிரன், மற்றும் சந்திரன் தொடர்பு பெறுகிறார்கள். இவையும் பிறக்கும் குழந்தை பெண்தான் என்பதை உறுதி செய்கின்றன.
இப்போது எந்த நாளில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்பதை ஆராய்வோம். கோட்சார சந்திரன் பரிவர்த்தனைக்கு முன் புதனுடனும் பரிவர்த்தனைக்கு பிறகு சுக்கிரனுடனும் தொடர்பாகிறார். சம்பவத்தில் விளைவை கூறும் கவிப்பு திருவோணம்-4 ல் அமைந்து, 1௦ ஆமிடத்தில் புதனின் கன்னி ராசியில் அமைந்த ஜாம குருவும் சந்திரனின் ஹஸ்தம்-2 ல் அமைந்து மீன சந்திரன், சுக்கிரனின் தொடர்பை பெறுகிறார். இதனால் பிறக்கும் குழந்தைக்கு சந்திரன், புதன், சுக்கிரன் தொடர்பு நிச்சயம் இருக்கும். உச்ச சந்திரன் புதனுடன் இருப்பதாலும் 2 உள்ள கவிப்பும், 1௦ ஆமிட ஜாம குருவும் சந்திரனின் நட்சத்திரத்தில் இருப்பதாலும் குழந்தை சந்திரனின் நட்சத்திரத்தில்தான் பிறக்க வாய்ப்புண்டு. இதன்படி பார்ப்பின் ஹஸ்த நட்சத்திரம் இந்த மே மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. ஆனால் கேள்வியாளர் கேட்டது 15 முதல் 26 க்குள்ளான நாட்களை குறித்து தரச் சொன்னார். ஆனால் நான் பிரசன்னம் சுட்டிக்காட்டியபடி மே மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஹஸ்த நட்சத்திரத்தில் குழந்தை பிறந்துவிடும். 15 ஆம் தேதி வரை செல்லாது என்றேன். நண்பர் குழப்பத்துடன் அறைமனதாக இதை ஏற்றுக்கொண்டார். இறுதியாக பிரசவ மருத்துவர் வெளியூர் செல்வதால் முன்னமேயே அவர்களே எதிர்பாராதபடி மே 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை புதனின் கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் புதனின் மிதுன லக்னத்தில் பெண் குழந்தை பிறந்தது. நண்பர் நம்ப முடியாத ஆச்சரியத்துடன் என்னை பாராட்டினார்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆட்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501