
இன்றைக்கு உடனடி வேலை வாய்ப்பைத் தரும் துறையாக தரவு அறிவியல் துறை (Data Science) விளங்குகிறது. அடுத்து வரும் சில வருடங்கள் தரவு அறிவியலின் பொற்காலமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உண்மையில் தரவுகளைக்கொண்டே உலகம் இயங்குகிறது என்பது மிகையல்ல. எளிமையாக ஒரு உதாரணம் கூற வேண்டுமானால், ஒரு நகரின் மக்கள் தொகை தரவுகளை கொண்டே அந்த நகருக்கான சாலை, நீராதாரங்கள், உணவு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. விண்வெளி அறிவியலில் தொலைநோக்கிகள் தரும் தரவுகளின் அடிப்படையில் பல பிரபஞ்சப் புதிர்கள் அவிழ்ந்துகொண்டிருக்கின்றன. எனவே தரவுகள் இல்லாமல் துறைகளே இல்லை எனும் சூழலில், உலகில் அனைத்துத் துறைகளுக்கும் தரவு அறிவியலின் தேவை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தனது மகளுக்கு தரவு அறிவியல் துறை சிறப்பைத் தருமா? என்று தெரிந்துகொள்ள நண்பர் ஒருவர் என்னை அணுகியதன் விழைவே இப்பதிவு.
தரவுகளின் காரக கிரகமாக ஜோதிடத்தில் புதன் அழைக்கபடுகிறார். தரவை மேலாண்மை செய்து அதை ஆய்வு நோக்கில் பயன்படுத்த வேண்டுமானால் அதற்கு செவ்வாயின் தயவு அவசியம். மேலாண்மை என்ற வார்த்தைக்கே செவ்வாய்தான் காரக கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கு ஜீவன காரகர் சனியின் தொடர்பு இருந்தால்தான் ஒருவர் தான் பெற்ற தரவு அறிவை சம்பாத்தியத்திற்கு பயன்படுத்த இயலும். செவ்வாய் சனி தொடர்பு இல்லை எனில் அந்த அறிவு சம்பாத்தியத்திற்கு பயன்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கால புருஷ லக்னாதிபதி செவ்வாயே கால புருஷனுக்கு ஆராய்ச்சி பாவமான 8 ஆம் பாவம் விருட்சிகத்தின் அதிபதியாகவும் வருகிறார். ஆராய்ச்சி அறிவை ஜீவனம் மூலம் லாபகரமாக்குவதற்கு கால புருஷனின் 1௦, 11 ஆமதிபதியான சனி தேவைப்படுகிறார் என்பதே இதன் அடிப்படை. இந்தக் கூட்டணியில் ராகு-கேதுக்கள் தொடர்பாவது இந்த துறையில் தலைசிறந்த நிபுணத்துவத்தை வழங்கும். சந்திரன் ஒருவரது மனநிலையை படம் பிடித்துக்காட்டும் கிரகம் என்பதால் ஒருவரது ஜாதக சந்திரன் நிலை மூலம் அவரது கல்வி சார்ந்த விருப்பங்களை அறியலாம். குறிப்பாக சந்திரனின் சார நாதன் சதுர் விம்சாம்சத்தில் உள்ள நிலை ஒருவரது கல்வி சார்ந்த மனநிலையை தெரிவிக்கும்.
மேஷ சந்திரனை கன்னிச் செவ்வாய் 8 ஆம் பார்வை பார்ப்பதால், ஜாதகருக்கு மருத்துவம் பயில எண்ணம் இருந்தது. சந்திரன், செவ்வாய் தொடர்பாகி இவர்களோடு குருவானவர் மேஷ, விருட்சிகத்தோடு சம்பந்தம் பெற்றால்தான் ஒருவர் மருத்துவராக இயலும். இங்கு குரு செவ்வாயையோ சந்திரனையோ பார்க்கவில்லை. மேலும் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் சஷ்டாஷ்டக (6/8) அமைப்பு உள்ளது. இதனால் இவரின் மருத்துவக் கனவு நிறைவேறவில்லை. அதே சமயம் தரவு அறிவியலுக்கு உரிய புதனும் செவ்வாயும் பரிவர்த்தனை மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பாகிறார்கள். தொழில்நுட்ப மற்றும் செயற்கை அறிவு கிரகங்களான ராகு-கேதுக்களும், திக்பல சூரியனும் இந்தக் கூட்டணியில் இணைவது சிறப்பு. இந்த கூட்டணியை, புதன் சாரம் பெற்ற, உச்ச குரு பார்ப்பது கூடுதல் சிறப்பு. இதனால் இந்த மாணவர் பொறியியலில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பயில்கிறார். ஜாதகத்தில் உள்ள பரிவர்த்தனையானது கல்வியை கடைசி நேரத்தில் மாற்றி விடும் என்பதை அறிக.

வித்யா கிரகம் புதன் தரவு மேலாண்மை காரகர் செவ்வாயுடன் வணிகத்திற்குரிய துலா ராசியில் இணைந்துள்ளார். இவர்களை நோக்கி வரி வசூல் கிரகமான ராகு வருகிறார். இந்த இளைஞர் குரு தசை சுக்கிர புக்தியில் கல்லூரி சென்றார். குரு, சுக்கிரன் இரண்டும் பொருளாதாரக் கிரகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் வணிகவியல் கல்வி பயின்றார். குருவும், சனியும் செவ்வாயின் சாரத்திலே அமைவது கவனிக்கத்தக்கது. ஜீவனத்திற்கு ஆராயவேண்டிய தசாம்சத்தில் இவர்கள் ஒன்றாக அமைந்துள்ளதை கவனியுங்கள். இந்த அமைப்பால் இந்த ஜாதகர் குரு தசை முடிந்து தற்போதைய சனி தசையில் கற்ற கல்விக்குரிய வணிகவியல் துறையில் வரி வசூல் தரவுகளை கையாளும் (Tax Analyst) பொறுப்பில் பணியாற்றுகிறார். கல்வியை தேர்ந்தெடுக்கும்போது அடுத்து வரும் தசா-புக்திகள் அவர் கற்ற கல்வியை பயன்படுத்துமா என்பதை ஆராய்வது அவசியம். அப்படி பயன்படுத்தாவிட்டால் கற்ற கல்வி வீணாகிவிடும். பின் வரும் ஜாதகம் இதற்கொரு உதாரணம்.
இந்த இளைஞர் சுக்கிர தசையில் புதன் புக்தியில் கல்லூரியில் சேர்ந்தார். சுக்கிரன் குருவுடன் பரிவர்த்தனைக்குப் பிறகு வாயு ராசியான துலாத்திற்கு வருகிறார். உத்திராடம்-2 ல் இருந்து வாயு வீடான மிதுனத்தை பார்வை செய்யும் புதன் நவாம்சத்தில் உச்சம். இந்த அமைப்பால் ஜாதகர் வானவூர்தி அறிவியலில் (Aeronautical Engineering) பொறியியல் பட்டம் பெற்றார். ஜாதகத்தில் 1௦ ஆமிடத்தில் தனது மூலத்திரிகோண வீட்டில் உள்ள சனி, சிம்ம சந்திரனின் நேரடி பார்வை பெறும் அமைப்பால் இவருக்கு தொழில் சிந்தனையே அதிகமிருக்கும். ஜாதகர் சுக்கிர தசை முடிந்து அடுத்து வந்த சூரிய தசையில், தான் கற்ற கல்விக்குரிய வேலைக்கு செல்லாமல் தொழில் தரவுகளை அலசும் (Business Analyst) பணியில் இருக்கிறார். தன்னுடன் இணைந்த கிரகங்களை சூரியன் அஸ்தங்கம் செய்துவிட்டதால் தான் அஸ்தங்கம் செய்த கிரகங்களின் காரகங்களையும் சேர்ந்து தனது தசையில் செயல்படுத்துகிறார். தரவுகளுக்குரிய புதன், தரவு மேலாண்மைக்குரிய செவ்வாய், பொருளாதாரதிற்குரிய குரு, சுக்கிரன் ஆகியோருடன் சூரியன் தொடர்பாவதால் தொழில் ரீதியான தரவுகளை ஆராய்கிறார். தனுசு ராசி கிரகங்கள் அனைத்தும் சுக்கிரன் சாரத்தில் உள்ளன. அடுத்த தசாநாதன் சந்திரனும் சுக்கிரன் சாரத்திலே அமைந்துள்ளார். இதனால் சந்திர தசையிலும் இவர் தற்போதைய துறையில்தான் இருப்பார். தான் கற்ற கல்விக்குரிய வேலைக்கு செல்ல மாட்டார். காரணம் சூரியன் வானூர்தியின் காரக கிரகங்களை அஸ்தங்கம் செய்துவிட்டதுதான். வாயு ராசியான கும்பத்தில் அமைந்த சனியின் சாரநாதன் செவ்வாயும் அஸ்தங்கம் என்பதால் சனியும் சூரியனின் பிடியில்தான் இருக்கிறார். இதனால் இங்கு சூரியனின் வலுவே பிரதானமாகிறது. இதனாலேயே இவர் கற்ற கல்வி பயனற்றதாகிறது.
தனது மகளுக்கு தரவு அறிவியல் கல்வி கிட்டுமா என பிரசன்னம் மூலம் அறிய என்னை அணுகிய நபருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.
உதயத்திற்கு வெளியே கல்விக்கிரகம் புதன், உயர்கல்வி பாவாதிபதி குருவின் சாரத்தில். ஜாம குரு முயற்சி பாவம் 3 ல் 4, 11 ஆமதிபதி சுக்கிரனின் சாரத்தில் அமைந்துள்ளார். 9 ஆம் பாவத்தில் புதனின் சாரத்தில் கவிப்பு. எனவே பெண்ணின் உயர்கல்வி பற்றிய கேள்வி என்பதை பிரசன்னம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. உதய புதனை 7 ஆமிட சனி, செவ்வாய் பார்ப்பதால் மகளுக்கு தரவு அறிவியல் படிக்க எண்ணம் உள்ளது தெரிகிறது. ஆனால் பிரசன்னத்தில் குருவும் புதனும் பரிவர்த்தனை. செவ்வாயும் சனியும் பரிவர்த்தனை. இது இவரது மகள் விரும்பிய கல்வியை மாற்றிப் பயில உள்ளதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இந்தக்கருத்தை வந்தவருக்கு தெரிவித்தேன். குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் தொடர்பு எண்ணை பெற்று வைத்திருப்பதாகவும், ஒரு கைபேசி அழைப்பில் முன்பணம் செலுத்தி இடத்தை உறுதி செய்ய தன்னால் இயலும் என்றும், பிறகு நுழைவுத்தேர்வு முடிவில் சேர எண்ணம் என்றும் கூறினார். உதயத்திற்கு 9 ஆமிட கவிப்பு 3 ஆமிட புதன் சாரம். 3 ல் பரிவர்த்தனை குரு. எனவே தற்போது உங்களால் அவர்களிடமிருந்து எந்த உறுதியையும் பெற இயலாது என்று கூறினேன். வந்தவர் சற்றே கோபம் கொண்டு உங்கள் முன் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டு கைபேசியில் அழைத்தார். எதிர்முனையில் இவரது அழைப்பை எடுக்கவே இல்லை. ஏறக்குறைய 2௦ நிமிடங்கள் முயற்சித்தவரை ஆசுவாசப்படுத்தி கிரகங்கள் அனுமதிக்காமல் பேசக்கூட இயலாது, பிரசன்னம் அதை சுட்டிக்காட்டுகிறது என்றேன். கைபேசி அழைப்பு என்பது 3 ஆம் பாவம். அது கவிப்புடன் தொடர்புகொள்வதால் பேச இயலாது. ஓரளவு ஜோதிடம் அறிந்தவர் என்பதால் பிரமிப்புடன் பிரசன்னக் கட்டத்தை வெகு நேரம் பார்த்தார். தற்போது தரவு அறிவியல் வேண்டாம் என்ற முடிவில் உள்ளார்கள். மகள் தற்போது பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுத தயாராகிக் கொண்டுள்ளார்.
தரவு அறிவியல் கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பயில்வது சிறப்பாக இருக்கும் என்பது எனது எண்ணம்.. ஏனெனில் இத்துறை எளிதாக தானியங்கித் துறையாக (Automation) மாற்றப்பட்டுவிடும். தரவுகளை உள்ளிட மட்டுமே மனித வளம் தேவைப்படும் என்பதால், ஜாதக அமைப்பு, தசா-புக்திகள் அடிப்படையில் கல்வியை தேர்வு செய்வதே நீண்ட கால நோக்கில் சிறந்தது.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501