கல்வி என்ற அடித்தளத்தின் மீதே நமது வாழ்வு இன்று கட்டமைக்கப்படுகிறது. விருப்பப் பாடமாக எடுத்துப் பயின்ற துறையை விடுத்து ஒருவர் வேறு துறைக்கு வேலைக்குச் செல்லலாம். ஆனால் அனைவருக்கும் அடிப்படையில் கல்வி அவசியம். பள்ளி செல்லாத கமலஹாசன்கள் கூட தனக்குத் தேவையான தொழில் நுட்பங்களை தேடித்தேடிச் சென்று கற்று தமது திரைப்படங்களில் பயன்படுத்துகிறார்கள். இன்று கல்விமுறை மாறிவிட்டது. குறிப்பாக பள்ளிகளில் இன்று மாணவர்கள் இயந்திர மனிதர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள். கல்லூரிகளில் இதில் மாற்றங்கள் இருக்கலாம். அறமும், பொருளும், இன்பமும் வாழ்க்கைக்குத் தேவை. மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் இன்றைய கல்வி முறைகளால் மாணவர்களிடைய மன அழுத்தமும், வாழ்க்கைக்கு முக்கியத் தேவையான அறமும் குறைந்து வருவது கண்கூடு. சக மாணவர்களோடு இணைந்து விளையாடி வெற்றி-தோல்வியை சமமாக ஏற்கும் மனோபாவம் இன்று இல்லை. தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மேலும் கூடுகிறது. பின்லாந்து போன்ற நாடுகள் இதை நன்கு உணர்ந்து அதற்கேற்ப அவர்களது கல்வி முறையில் மாறுதலை ஏற்படுத்திவிட்டனர். பின்லாந்துக் கல்வி முறை இன்று உலக நாடுகளால் மெச்சப்படுகிறது. உலகில் மகிச்சியாக வாழும் நாட்வர்கள் என்பதில் பின்லாந்து முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தகது. “வாழ்க்கையின் உன்னதங்களை நெகிழ்வுத்தன்மையோடு வாழ்ந்து அனுபவித்துத்தான் உணரமுடியும். மன அழுத்தங்களால் அல்ல”. இன்றைய பதிவில் ஜோதிட ரீதியாக எத்தகைய கிரக அமைப்புகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தையும், தேர்வு பயத்தையும் ஏற்படுத்தும் என்பதை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வோம். இதனால் மாணவர்களது மன அழுத்தத்தை கையாள வழி பிறக்கும் என்பதாலேயே இப்பதிவு வருகிறது.
கீழே கடந்த வருடம் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய ஒரு மாணவனின் ஜாதகம்.
ஜாதகத்தில் உணர்சிகளுக்குரிய ராசி கடகமாகும். காரக கிரகம் சந்திரன். கோபமான, கொந்தளிப்பான, தீவிரமான, பிடிவாதமான உணர்சிகளின் காரக கிரகம் செவ்வாயாகும். பய உணர்சிகளுக்குரிய காரக கிரகங்கள் கருமை கிரகமான சனி, நிழல் கிரகங்களான ராகு-கேது ஆகியவைகளாகும். 3 ஆமிடம் ஒருவரின் மனோபலத்தையும், 5 ஆவது பாவகம் ஒருவரின் சிந்தனையின் போக்கு எத்தகையது என்பதையும் காட்டும்.
மேற்கண்ட ஜாதகத்தில் லக்னமே கடகமாக அமைந்து அங்கு சந்திரன் ஆட்சி பெற்றது சிறப்பு என்றாலும், தைரிய காரகர் செவ்வாய் நீசமடைந்து ஆட்சிச் சந்திரனுடன் இணைந்து நீசபங்கமடைவது நல்ல அமைப்பு. ஆனால் லக்னத்தில் சந்திரன், செவ்வாயுடன் 8 ஆமதிபதி சனி இணைவு பெறுவது இந்த நல்ல அமைப்பை பாதிக்கிறது. லக்னத்திலமைந்த இம்மூன்று கிரகங்களும் சனியின் பூசத்திலேயே நிற்பது ஜாதகரின் உள்மனதில் பய உணர்ச்சி படிந்து கிடப்பதை தெளிவாக்குகிறது. வித்யா ஸ்தானமான 4 ஆமிடத்தில் வக்கிர குரு அமைந்து 10 ல் அமைந்த நான்காமதிபதி சுக்கிரனால் பார்க்கப்படுவது நன்மையே. ஆனால் கல்யின் காரக கிரகமான மிதுனத்திலமைந்த புதனுக்கும், வித்யா ஸ்தானாதிபதி சுக்கிரனுக்கும் இரு புறமும் பாவிகள் அமைந்ததால் பாவகர்த்தாரி யோகம் உள்ளது கல்வி ரீதியாக ஜாதகருக்கு சிறப்பான அமைப்பல்ல. ஆனால் இவ்வமைப்புகள் பொதுவானவைகளே. முக்கியமாக தேர்வுக் காலத்தில் ஜாதகனுக்கு நடக்கும் தசா-புக்திகளும், கோட்சார கிரக அமைப்புகளுமே தேர்வு காலத்தில் அவனது மனோ பலம் எப்படி இருக்கும் என்பதை காட்டும். இதை தைரிய பாவகமான 3 ஆமிடத்தின் விரிவாக்கமான திரேக்காணம் மூலம் நாம் துல்லியமாக அறியலாம். பராசர திரேக்காணம் பொதுவான தைரியம், வீரியம், இளைய சகோதரம் போன்ற அமைப்புகளை சுட்டிக்காட்டும். ஜகந்நாத திரேக்காணமானது போட்டி, பந்தயங்கள், தேர்வு, தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்ளும்போது ஒருவரது மன தைரியத்தை தெளிவாகக் காட்டக்கூடியது என்பதால் இங்கு பராசர மகரிஷியின் திரேக்காணத்தை விடுத்து ஜகந்நாத திரேக்காணத்தை எடுத்துக்கொண்டு ஆராய்வோம்.
எந்த ஒரு வர்க்கத்திலும் லக்னாதிபதி வலுவிலக்கக்கூடாது. ஜெகந்நாத திரேக்காணத்தில் மீன லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 12 ல் மறைந்துவிட்டார். இது இதர நல்ல கிரக அமைவுகளையும் பயனற்றதாக்கும். தைரிய ஸ்தானமான 3 ஆமிடத்தில் பாவியான சூரியன் அமைந்தது சிறப்பே. ஆனால் ஒளி கிரகமான சூரியன், கருமையை உமிழும் சனியின் கடுமையான நேர் பார்வையை பெறுவது நன்மையல்ல. தைரிய காரகர் செவ்வாய் நீசமாகி, மனோ காரகர் சந்திரனுடன் சிந்தனை ஸ்தானமான 5 ஆமிடம் கடகத்தில் இணைந்து ராகு தொடர்பு பெறுவது மன உறுதியை பாதிக்கும் அமைப்பாகும். மேலும் இது பய உணர்ச்சியையும் ஏற்படுத்தும். 8 ல் பொதுவாக புதன் மறைவது கடும் பாதகமல்ல என்று சொல்லப்பட்டாலும் இங்கு புதன் 8 ல் மறைந்து ராகுவோடு இணைந்த நீச செவ்வாயின் 4 ஆம் பார்வையை பெறுவது கல்வி விஷயத்தில் கலக்கத்தை ஏற்படுத்தும். கல்வியில் மாணவனின் மன உறுதியை இங்கு ஆராய்கிறோம் என்பதால் புதனின் நிலையும் இங்கு முக்கியம். செவ்வாயால் பாதிக்கப்பட்ட புதன் கல்வி பயத்தை தரும். ஒரு மாணவரின் தேர்வுக் காலத்தில் எவ்வித உணர்சிகளில் இருப்பார் என்பதை கல்விக்கென்றே ஆராய வேண்டிய வர்க்கச் சக்கரமான சதுர் விம்சாம்சத்தில் காண்போம் வாருங்கள்.
சதுர்விம்சாம்சத்தில் மிதுன லக்னம் சூரியன் மற்றும் சனி ஆகியோர் லக்னத்திற்கு இரு புறமும் அமைந்து பாவகர்தாரி யோகம் பெற்று ராகு-கேதுக்களால் பார்க்கப்படுவது சிறப்பான அமைப்பல்ல. ஆனால் லக்னாதிபதி புதன் தனது நண்பர் சூரியனின் வீட்டில் தைரிய ஸ்தானத்தில் அமைவது சிறப்பாகும். பொதுவாக மனோ காரகர் சந்திரனுடன் செவ்வாய் இணைவது உணர்ச்சிவசப்படும் மனநிலையை அதிகப்படுத்தும் அமைப்பாகும். 5 ல் சந்திரனும் செவ்வாயும் இணைந்து செவ்வாயின் 8 ஆம் பார்வை சனிக்கு விழுவது சிறப்பல்ல. ஆனால் சனி தசையோ புக்தியோ நடந்தால் இது பாதிப்பை ஏற்படுத்தும். மாணவன் தேர்வு எழுதிய காலத்தில் சனி தசையின் இறுதியில் இருந்தான் என்பது இங்கு பாதிப்பை ஏற்படுத்தியது. சதுர்விம்சாம்சத்தில் 5 ஆமிடம் என்பது மேல்நிலைக் கல்வியை (11, 12 ஆம் வகுப்புகள்) குறிக்கும் பாவகமாகும். ஜாதகன் 12 ஆம் வகுப்புத் தேர்வை கடந்த 2023 மார்ச்சில் எழுதியபோது சனி தசையில் 4 ல் வக்கிரம் பெற்ற குரு புக்தியில் இருந்தான் தசாநாதர் சனி 5 க்கு 8 ல் நின்று செவ்வாயின் 8 ஆம் பார்வையை பெறுகையில் குரு மேல்நிலைக் கல்வியை குறிக்கும் 5 க்கு விரையத்தில் 4 ல் வக்கிரம் பெற்ற நிலையில் இருந்து புக்தி நடதுவது பாதகமான அமைப்பாகும். தசாநாதர் சனியும் புக்தி நாதர் குருவும் முறையே சந்திரனின் ரோஹிணி, ஹஸ்தத்தில் இருந்து தசா-புக்தி நடத்துகின்றனர்.
இந்த மாணவர் சனி தசையின் குரு புக்தியில், ராகுவின் சுவாதியில் நின்ற சந்திரனின் அந்தரத்தில் தேர்வு எழுதினார் ஆனால் அதன் பிறகான செவ்வாய் மற்றும் ராகுவின் அந்தரத்தில் தேர்வு முடிவுகள் வரும் வரை தேர்வு முடிவை எண்ணி கடும் மன பயத்தில் இருந்தார். லக்னத்திற்கு பகைவரான செவ்வாய் சுய சாரம் சித்திரையில் அமைந்தாலும் ராகு சுக்கிரனின் பூராடத்திலும் சுக்கிரன் ராகுவின் சதயத்திலும் அமைந்து நட்சத்திரப் பரிவர்த்தனை பெறுகிறார்கள். கவனிக்க ராசிக்கு மேல்நிலை கல்வியை குறிக்கும் 5 ஆமிடமான கும்பத்தில் அமைந்த சுக்கிரன், ராசிக்கு 8 ஆமிடமான ரிஷப சனியோடு பரிவர்த்தனை பெறும் சூழலில் அவர் தனுசிலமைந்த ராகுவோடு நட்சாத்திரப் பரிவர்த்தனையும் பெறுகிறார். இதனால் கேள்விகளுக்கு பதில்களை மாற்றி எழுதிவிட்டதாக பல்வேறு குழப்ப நிலைக்கு ஆளான மாணவர், தேர்வு முடிவை எண்ணி மிகுந்த மன பயத்தில் இருந்தார். ஆனால் உண்மையில் மாணவர் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றுவிட்டார். 5 ஆமிடமும் 9 ஆமிடமும் நேரடியாக பாவிகளால் பாதிக்கப்படவில்லை என்பதால் நல்ல மதிப்பெண்களில் மாணவர் தேறினார். கோட்சாரத்தில் மேல்நிலைக் கல்வியை குறிக்கும் 5 ஆமிடமான துலாத்தில் கேது சென்றுகொண்டிருந்ததும் இதற்கு முக்கிய காரணம்.
இத்தகைய ஜாதக அமைப்பை பெற்ற மாணவர்களுக்கு தேர்வுக்காலத்தில் உளவியல் ஆலோசனைகளும், சுதந்திரமான ஒழுங்கமைக்கப்பட்ட கற்றல் முறைகளும், சில வழிபாடுகளும், மனவள பயிற்சிகளும் கைகொடுக்கும். நமது அரசுகள் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க வலைத்தளங்கள் மூலமும் உதவி-ஆலோசனை எண்களின் மூலமும் உதவி வருகிறது குறிப்பிடத்தக்கது. அனைத்து பள்ளிகளிலும் இதற்காண வழிகாட்டு முறைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501.