“திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்று அன்றே நமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். சொந்த பூமி, சொந்த இனம் என்று வாழ்வது அனைவருக்கும் ஒரு கொடுப்பினைதான். ஆனால் நவீன மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களின் உதவியால் குறுகிவிட்ட இன்றைய உலகில் நாம் சொந்த ஊரிலேயே குறுகிவிட்டால் முன்னேற இயலாது. இந்த நிலையில் சொந்த ஊரில் வாழ வழி தெரியாவிட்டால் வெளியிடம் சென்றாவது பொருளாதாரத்தை அடைபவர்களுக்கே அன்றைய உலகம் மட்டுமல்ல, இன்றைய உலகமும் மதிப்புடன் வாழ வழிவிடுகிறது. உள்ளூர் வாழ்வு ஒருவகை சௌகரிய வட்டமாகி (Comfort Zone) நமது முயற்சிகளுக்கு தடை போடுகிறது, முன்னேற்றத்தை தடுக்கிறது. வெளி தேச வியாபாரத் தொடர்புகள் நமது பண்டைய தமிழ் சமுதாயத்தில் சிறப்பாக இருந்துள்ளது. இன்று சொந்த ஊரில் இருந்து சொகுசு வாழ்வு வாழ்பவர்கள் தங்களது அடுத்த தலை முறையை முடக்குகிறார்கள். நமது ஊரில் இருந்தே அந்நிய தேசங்கள், தொலை தூர ஊர்களோடு வியாபாரத் தொடர்பு செய்துகொண்டு சொந்த ஊரில் வாழ்வது என்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல. இன்று கல்வி எளிதாகிவிட்டது என்பதால் விளைந்த காட்டை நோக்கிப் பறக்கும் குருவிகளாய் நாம் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படி வெளியிடம் செல்லும் அனைவருக்கும் சிறப்பான வாழ்வு அமைந்துவிடுகிறதா? என்றால், சிலர் வாழ்வு சிறப்பானதாக இல்லை. ஆனால் பெருவாரியான சதவீதத்தினர் உள்ளூர் வாழ்வை விட வெளியிடத்தில் சிறப்பாக வாழ்வதாகவே கூறுகிறார்கள். இதன் தாக்கம் இன்றைய சமுதாயத்தில் திருமண வாழ்வில் எதிரொலிக்கிறது. நல்ல கல்வி பயின்று, உள்ளூரிலோ அல்லது வெளியூரிலோ சிறப்பான சம்பாத்தியம் பெறும் ஆண்களுக்கே இன்று திருமண வாழ்வே அமைகிறது. உள்ளூரில் அரசுப்பணியோ, சுய தொழிலோ, சிறப்பான தனியார் துறைப்பணியோ அமைந்து, திருமணமாகி, வளமான வாழ்வு வாழும் ஆண்களின் சதவீதம் குறைவு. “Survival of the fittest” எனும் நிலையில், சரியான கல்வியோ, தொழிலோ அமையாதவர்களின், குறிப்பாக ஆண்களின் திருமண வாழ்வு இன்று மறுக்கப்படுவதாக அமைந்துவிடுகிறது. இந்நிலையில் வெளிநாடு சென்று கௌரவமாக வாழ கணவன்-மனைவி இருவரும் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்போதுதான் சம்பாதிக்கும் தேசங்களிலே வீடு-வாசல் என்று வாங்க முடிகிறது. ஒருவர் மட்டும் சம்பாதிக்கும் சூழலில் அது சாத்தியமற்றதாகி விடுகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் அரசுப்பணி அமைவது வெகு அபூர்வம். அப்படி வெளிநாடு சென்று அந்த நாடுகளில் அரசுப்பணி புரிவதற்கான ஜாதக அமைப்பை ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
ஜாதகத்திற்கு உரியவர் ஒரு ஆண். ராகு மிதுன லக்னத்திற்கு 2 ஆமிடமான கடகத்தில் அமைந்துள்ளார். ஜாதகர் ராகு தசையில் உள்ளார். இதனால் இவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். கனடாவில் அரசு வங்கி ஒன்றில் வேலை. ஆனால் இவரது அரசுப்பணி தற்காலிகமானதே. பணி இன்னும் நிரந்தரமாக உறுதி செய்யப்படவில்லை. ராகுவிற்கு திரிகோணத்தில் சூரியன் உள்ளதாலும், சூரியனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் ராகுவை பார்ப்பதாலும் இவர் வெளிநாட்டில் அரசாங்க தொடர்புடைய பணியில் இருக்கிறார். ஆனால் ஏன் இவருக்கு அரசுப்பணி உறுதி செய்யப்படவில்லை என காண்போம். ராசி ஒரு ஜாதகரின் பொதுவான விஷயங்களையே கூறும். நமக்கு துல்லியமான விபரங்கள் தேவை என்பதால் வேலை தொடர்பான விஷயங்களை நுட்பமாக அறிய தசாம்சத்தை எடுத்துக்கொள்வோம்.
தசாம்சத்தில் ராகு ராசியை போன்றே கடகத்தில் அமைந்து வர்கோத்தமாகியுள்ளார். இவருக்கு 12 ஆமிட ராகு தசையில் 9 ல் நின்று 10 ஆமதிபதி சுக்கிரனின் பார்வையை பெறும் குருவின் புக்தியில் 2 ல் நிற்கும் சனியின் அந்தரத்தில் கனடாவில் வங்கிப்பணி கிடைத்தது. ஆனால் ராசியில் ராகுவிற்கு திரிகோணத்தில் அமைந்த சூரியன் சப்தாம்சத்தில் ராவிற்கு 6 ல் அமைகிறார். இதனால் தசாநாதனுக்கும் அரசை குறிப்பிடும் சூரியனுக்கும் 6 / 8 அமைப்பு செயல்படுகிறது. இதனால் இவருக்கு அரசுபணி உறுதியளிக்கப்படாமல் தடைபடுகிறது. செவ்வாயுடனான பரிவர்த்தனைக்கு முன்னும், பின்னும் குருவின் பார்வை சிம்ம லக்னத்திற்கு விழுவதால் ஜாதகர் இதே துறையில் தொடர்ந்து பணிபுரிவார். 3 ஆமதிபதி சுக்கிரனே 10 ஆமிடத்திற்கும் அதிபதியாகிறார். இதில் மூன்றாமிடம் என்பது ஒப்பந்தப்பணி என்பதைக் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சப்தாம்சத்தில் உள்ள இத்தகைய அமைப்புகளால் ஜாதகர் முழுமையான அரசுப்பணியாளராக தடை உள்ளது.
இரண்டாவதாக மற்றுமொரு ஜாதகம் கீழே.
ஜாதகத்திற்கு உரியவர் ஒரு பெண்மணி. அமெரிக்காவில் அரசு வங்கி ஒன்றி பணிபுரிகிறார். கன்னி லக்னத்தை, லக்னத்திற்கும் 10 ஆமிடத்திற்கும் உரிய புதன், லக்ன 12 ஆமதிபதி சூரியனுடன் இணைந்து, கால புருஷ 12 ஆமிடமான மீனத்தில் இருந்து பார்க்கிறார். இதில் 12 ஆமிடமும் மீனமும் வெளி நாட்டை குறிப்பவை. சூரியன் அரசை குறிப்பிடும். புதன் வங்கியை குறிப்பிடும். இந்தப் பெண்மணி துவக்கத்தில் அங்கு ஒப்பந்த முறையில் பணிபுரிந்தார். தற்போது 2 வருடங்கள் முன்பு அரசுப்பணியாளராக அங்கீகரிக்கப்பட்டார். ஜீவன காரகர் சனி ரிஷபத்தில் சூரியனின் கார்த்திகை-4 ல் நிற்கிறார். மீன சூரியன் சனியின் உத்திரட்டாதி-2 ல் நின்று நட்சத்திரப் பரிவர்த்தனை பெறுகிறார்கள். இதனால் ஜீவன காரகர் சனிக்கு அரசை குறிக்கும் சூரியன் தொடர்பு ஏற்படுகிறது. சனிக்கு ராசியில் செவ்வாய் தொடர்பும் உள்ளதால், ஜாதகி சில காலம் தனியார் துறையிலும் பிறகு அரசுத்துறையிலும் பணிபுரிகிறார். இதன் பின்னணியை காலகட்டத்துடன் தசாம்சம் துல்லியமாக காட்டுகிறது.
தசாம்சத்தில் தசாநாதன் சனி துலாம் லக்னத்திற்கு வேலை பாவகமான 6 ஆமிடமான மீனத்தில் இருந்து தசை நடத்துகிறார். இதனால் இவருக்கு கடல் கடந்த தேசத்தில் பணி கிடைத்தது. தாமதத்திற்கு காரகர் சனி என்பதால் இவருக்கு அமெரிக்காவில் இவரது 47 ஆவது வயதில்தான் அரசுப்பணியாளராக அங்கீகரிக்கப்பட்டார். இவருக்கு சனி தசையில் சூரியனுடன் இணைந்து 10 ஆமிடமான கடகத்தை பார்க்கும் உச்ச செவ்வாய் புக்தியில் இவருக்கு அரசுப்பணி அங்கீகாரம் கிடைத்தது.
மேற்கண்ட இரு ஜாதகங்களிலும் வெளி நாட்டில் பணிபுரிவதற்கான அமைப்பு உள்ளது. அரசுத்தொடர்பு ஏற்படவும் அமைப்பு உள்ளது. அரசுப்பணிக்கு ஜீவன காரகர் சனிக்கு அரசு காரகர் சூரியனுடன் தொடர்பு இருக்க வேண்டும். தசாநாதர் நீர் ராசியில் அல்லது 12 ஆமிடத்தில் அமைய வேண்டும். தசாநாதருக்கு சனி, சூரியன் தொடர்பு இருக்க வேண்டும். இவ்வமைப்புகள் லக்னத்துடனோ அல்லது லக்னாதிபதியுடனோ தொடர்பாக வேண்டும். இவைகளே வெளிநாட்டில் ஒருவர் அரசுப்பணியை அடைவதற்கான ஜாதக அமைப்புகளாகும். முக்கியமாக தசாம்சத்தில் இவ்வமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்து அறியலாம்.
விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501.