ஒரு கிரக காரகம் தனக்கு சிறப்பான வருமானத்தை தந்தது. அதனால் அந்த கிரகத்தின் தெய்வம் மற்றும் இதர விஷயங்களையும் முழு மனதாக ஏற்று செயல்பட்டேன். ஆனால் தொழில் வகையில் அக்கிரகத்தின் மற்றொரு காரகம் மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஏன் இந்த முரண்பாடு? என்று வினவினார் அன்பர் ஒருவர். அவருக்கு ஜாதகம் பார்த்து விளக்கிய பிறகு இவற்றை ஒரு பதிவாக எழுதினால் பலருக்கும் பயனளிக்குமே என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பதிவு வருகிறது. இது தொடர்புடையவரின் ஜாதகமல்ல அது போன்ற மற்றொருவரின் ஜாதகம் காரக தொழில் முரண்பாடுகளை விளக்குவதற்காக இங்கு ஆராயப்படுகிறது.
ஒரு கிரகத்திற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட காரகங்கள் உள்ளன. தொழிலை எடுத்துக்கொண்டால் உதாரணமாக சூரியன் அரசுப்பணி, மருத்துவம், நிர்வாகம், சுயதொழில், தென்னைந்தோப்பு விவசாயி என்று இப்பட்டியல் நீளும். ஒருவரே ஒரு கிரகத்தின் அனைத்து துறைகளிலும் ஈடுபட இயலாது. எடுத்துக்காட்டாக அரசுப்பணியில் இருப்பவர் சுய தொழில் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடே உள்ளது. இந்நிலையில் அவர் சுயதொழிலிலும் அரசுப்பணியிலும் சேர்ந்து இயங்க முடியாது. ஒருவரின் ஜாதகப்படி ஒரு கிரகம் தான் பெற்ற ஆதிபத்தியம், நிற்கும் பாவகம், ராசி, நின்ற நட்சத்திராதிபதி மற்றும் அக்கிரகத்துடன் இணைந்த, பார்த்த கிரகங்களின் தன்மையோடுதான் ஒரு ஜாதகருக்கு பலன்களை வழங்கும். ஒருவரின் வாழ்வில் பல்வேறு நிலைகளில் ஒரு கிரகம் எப்படி செயல்படும் என்பதை தொடர்புடைய வர்க்கச் சக்கரங்களில் ஆராய்ந்தால் மிகத் தெளிவாக அறியலாம்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்
கடக லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் லாப ஸ்தானத்தில் உச்சமானது ஒரு நல்ல அமைப்பு. லக்னத்துடன் தொடர்புகொண்ட ராகு கேதுக்கள் ஜாதகர் வெளியிடம் சென்றால் நல்ல சம்பாத்தியம் பெறுவார் என்பதை பொதுவாக தெரிவிக்கிறது. சந்திரன் கால புருஷனுக்கு 4 ஆமதிபதியாவதால் நான்காமிடம் குறிக்கும் விஷயங்களிலும், சந்திரனின் காரக விஷயங்களிலும் ஜாதகருக்கு நாட்டம் இருக்கும். குறிப்பாக சந்திரன், செவ்வாய் தொடர்பு விவசாய ஈடுபாட்டை தெரிவிக்கும். லக்னாதிபதி சந்திரன் ரிஷபத்தில் செவ்வாயின் மிருகசீரிஷம்-2 ல் நிற்பதாலும் கடகத்தை செவ்வாய் 8 ஆம் பார்வையாக பார்ப்பதாலும் இப்படி ஒரு மனோ நிலை ஜாதகருக்கு ஏற்படும். செவ்வாய் பூமியை குறிப்பிட்டால் சந்திரன் விளைச்சலை குறிப்பிடும். சந்திரன் செவ்வாய் தொடர்பு வீடு, நிலம், விவசாயம், வாகன யோகம் போன்றவற்றை குறிக்கும் கால புருஷனுக்கு 4 ஆமிடமான கடகம் மட்டுமல்ல, லக்னத்திற்கு 4 ஆமிடமும் வீடு, வாகனம், விவசாயம் போன்றவற்றை குறிப்பிடும். லக்னத்திற்கு 4 ஆமிடத்தில் சுக்கிரன் தனது மூலத் திரிகோண வீட்டில் ஆட்சி பலத்துடன் புதனுடன் சேர்க்கை பெற்று விஷ்ணு-லக்ஷ்மி யோகத்திலும், மாளவ்ய யோகத்திலும் உள்ளார். இதனால் தசா-புக்திகள் சந்திரன் செவ்வாயோடு தொடர்புடையதாக வரும்போது ஜாதகர் மேற்குறிப்பிட்ட விஷயங்களில் ஈடுபடுவார். ஜாதகர் குரு தசையை கடந்து சனி தசையில் உள்ளார். இவை இரண்டும் உச்ச சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் உள்ளதால் இவருக்கு மேற்சொன்ன விஷயங்களில் ஈடுபட குரு தசையிலும் சனி தசையிலும் அமைப்பு உள்ளது. ஆனால் இங்கு சந்திரனும் செவ்வாயும் 6/8 அமைப்பில் உள்ளதை கவனிக்க. இதனால் ஜாதகர் விவசாயத்தில் ஈடுபட்டால் நீர்வளம் சிறப்பாக இருக்கும் ஆனால் விளைச்சல் சிறப்பாக இராது. ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் எப்படி இருந்தாலும் லக்னத்தோடு தொடர்புடைய ராகு/கேதுக்களே ஜாதகரை இயக்கும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது லக்னத்தில் அமைந்த ராகுவை 6 ஆமிட செவ்வாய் 8 ஆம் பார்வையாக தொடர்புகொள்வதால் ராகு-செவ்வாய் காரக விஷயங்களே ஜாதகரை இயக்கும். கடந்துபோன தசாநாதர் குருவும் தற்போதைய தசாநாதர் சனியும் விவசாயத்தை குறிக்கும் 4 ஆம் பாவகத்திற்கு விரையத்தில் லக்னத்திற்கு 3 ல்தான் நிற்கிறார்கள் என்பதால் விவசாயம் இவர்களுக்கு கைகொடுக்க வாய்ப்பில்லை. ஆனால் குருவும் செவ்வாயும் உச்ச சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் நிற்கிறார்கள். இதனால் ஜாதகருக்கு சம்பாத்தியத்தில் ராகு-செவ்வாய் தொடர்போடு 3 ஆமிடமும் இணைந்து இயங்கத்தக்க தொழிலில் ஈடுபட்டால்தால் வாழ்வு சிறக்கும்.
குரு 6 ஆமிடாதிபதி என்பதால் சுய தொழிலில் ஈடுபடாமல் வேலை செய்துள்ளார். நெருப்பு ராசியான 6 ஆமிடத்திலமைந்த தனுசு செவ்வாய், லக்ன ராகுவை பார்த்த நிலையில் வீரத்தை குறிக்கும் 3 ஆமிடத்தில் நிற்கும் 6 ஆமதிபதி குரு தசை முழுவதும் ஏறக்குறைய 16 வருடங்கள் ஜாதகர் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.
.
ஜாதகர் குரு தசையிலும் தற்போதைய சனி தசையிலும் விவசாயத்தில் ஈடுபட்டு கையை சுட்டுக்கொண்டவர். விவசாயத்திற்கு அசையா சொத்துக்களை குறிக்கும் வர்க்கச் சக்கரமான D4 எனும் சதுர்த்தாம்சத்தை ஆராய்வோம் வாருங்கள். இந்த வர்க்கத்திலும் லக்னத்தை ராகு-கேதுக்களே ஆளுகின்றன. கடந்த தசாநாதர் குரு லக்னத்திற்கு 12 ல் தனுசில் இருந்து 4 ஆமிட புதனை பார்ப்பதால் ஜாதகர் குரு தசையில் நிலம் வாங்கினார். 2 ஆமிட சூரியன் 4 ஆமதிபதியும், பூமி காரகருமான செவ்வாய் சாரம் பெற்று தன் வீட்டை பார்ப்பதாலும், தசாநாதர் குரு சிம்மத்தை பார்க்கும் நிலையில் சூரியன் குறிக்கும் மலைப்பகுதியில் ஜாதகர் நிலம் வாங்கினார். லக்னாதிபதி சனி இங்கு விரையாதிபதியுடன் இணைந்து லக்னத்திற்கு 12 ல் மறைந்துவிட்டதால் ஜாதகர் வீடு, மனை, விவசாயம் போன்ற விஷயங்களில் ஈடுபடுவது விரையத்தையே ஏற்படுத்தும் என்பது புரிகிறது. சிம்ம ராசி 8 ஆமிடமாக அமைவதால் மலைப்பகுதிகளில் பூமி விஷயங்கள் சாதகமில்ல. சதுர்த்தாம்சத்திலும் கடகம் கேதுவால் பாதிக்கப்பட்டுள்ளது. கடகாதிபதி சந்திரன் கடகத்திற்கு 8 ல் லக்ன அஷ்டமாதிபதி சூரியனுடன் இணைந்து 4 க்கு பாதகத்தில் அமைந்துள்ளார். 4 ஆமதிபதி செவ்வாய் 4 க்கு விரையத்தில் 3 ல் அமைந்த நிலையில் நான்காமிடமான மேஷத்தில் 6, 9 ஆமதிபதி புதன் அமைந்துள்ளார். இவை ஜாதகர் பூமியை பயன்படுத்தி செய்யும் விஷயங்கள் சிறப்பை தராது மாறாக நில விற்பனை செய்யும் செயல்கள் சிறப்பை தரலாம் என்ற அமைப்பையே குறிப்பிடுகிறது. ராசியில் 3 ஆமிடம் செயல்படுவதைகொண்டு அறிவதை சதுர்த்தாம்சம் துல்லியமாகக் குறிப்பிடுகிறது. சதுர்த்தாம்சம் பூமி அமையும் வகையை தெளிவாக காட்டினாலும் பூமியை பயன்படுத்தி ஜாதகர் சம்பாதிக்கும் அமைப்பு எப்படி உள்ளது என்பதை D1௦ எனும் தசாம்சத்தில் ஆராயலாம் வாருங்கள்.
ஜீவன விஷயங்களை இதர வர்க்கச்சக்கரங்களைவிட தசாம்சம் துல்லியமாகக் காட்டும். தசாம்சத்தில் லக்னத்தில் அமைந்த சூரியன் ஜாதகர் அரசாங்கப்பணி புரிபவர் என்பதை குறிப்பிடுகிறது. தசாம்சத்தில் கன்னி லக்னத்திலமைந்த ராகு-கேதுக்ளுகள் பிற கிரகங்களைவிட வலிமை மிக்கவை என்பதால் லக்னத்தில் அமைந்த மற்ற கிரகங்களை மீறி செயல்படும் வல்லமை மிக்கவை. ஆனால் தன்னுடன் தொடர்புடைய பிற கிரகங்களின் காரகங்களையும் சேர்த்து ஜாதகரை இயக்கும் என்பதை குறிப்பிட வேண்டும். லக்ன ராகு சூரியன், சனியுடன் இணைந்ததால் தசாம்சத்தில் ஜீவன விஷயத்தில் ஜாதகருக்கு அரசின் ராணுவ சேவையில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதை அறியலாம். லக்னத்திலமைந்த கிரகங்களை 6 ஆமிட செவ்வாய் 8 ஆம் பார்வையாக பார்ப்பதால் அரசின் ராணுவ சேவையாகும். எனவே இங்கு ஜாதகரது ஜீவனமானது ராகு,சூரியன்,சனி, செவ்வாய் ஆகியன தொடர்புடையது என்பது தெளிவாகிறது. லக்னத்தை செவ்வாய் 8 ஆம் பார்வை பார்ப்பதும் லக்னாதிபதி புதன் லக்னத்திற்கு 8 ல் செவ்வாயில் வீட்டில் அமைந்ததும் ஜாதகர் தனது உயிரை துச்சமாக மதித்து, எதிரிகளின் உயிரை எடுக்கும் மனோபாவத்தில் இருப்பவர் என்பதை குறிப்பிடுகிறது. ஜாதகர் குரு தசையில்தான் ராணுவத்தில் பணிபுரிந்தார். குரு தசை முடிவில் விருப்ப ஓய்வில் ராணுவத்திலிருந்து வெளியேறியுள்ளார். காரணம் 6 ஆமிட செவ்வாய் சிம்மத்தில் அமைந்த குருவை நேர் பார்வை பார்த்ததால் ஜாதகர் சொந்த ஊரை விட்டு வெளியே ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். தற்போதைய சனியையும் 6 ஆமிட செவ்வாய் 8 ஆமிடத்திலிருந்து பார்த்தாலும் தசாநாதர் சனி வேலை பாவகமான 6 க்கு 8 ல் லக்னத்தில் அமைந்ததால் பணிபுரியும் எண்ணம் விலகி சுயதொழில் செய்யும் எண்ணம் மேலோங்குகிறது. இதற்கு சனி சூரியன் தொடர்பு பெற்றதும் காரணம். ஆனால் தவறான தொழிலை தேர்ந்தெடுத்தது பாதிப்பிற்கு காரணம். விவசாயத்தில் ஜாதகர் மற்றொருவருடன் துவக்கத்தில் கூட்டு சேர்ந்து இயங்கியதில் ஜாதகர் பாதிக்கப்பட்டார் கூட்டாளி ஆதாயமடைந்தார். காரணம் கூட்டாளியை குறிக்கும் 7 ஆமிடம் கன்னி லக்னத்திற்கு பாதக ஸ்தானம் என்பதே.
ராணுவ வீரராக சிறப்புற்றவர் விவசாயியாக தோல்வியடைய காரணம்.
ஜாதகப்படி செவ்வாயின் ராணுவ வீரர் எனும் காரகம் ஜாதகருக்கு நல்ல வேலையையும் வருமானத்தையும் கொடுத்துள்ளது. ஆனால் சனி தசையில் சனிக்கு செவ்வாய் தொடர்பு ஏற்பட்டாலும் செவ்வாயின் காரகங்களுள் ஒன்றான விவசாயம் ஜாதகருக்கு பல லட்சங்கள் இழைப்பை தந்துள்ளது. சனி+செவ்வாய் தொடர்பு விவசாயத்திற்கு வளத்தை தராது. நீண்டகால நோக்கில் நன்மை தரலாம். தசாம்சப்படி செவ்வாய் 3, 8 ஆகிய பாவங்களுக்கு அதிபதி. 3 ஆவது பாவகம் விவசாயத்தை குறிக்கும் 4 க்கு விரைய பாவகம் என்பதாலும் அவரே இந்த லக்னத்திற்கு 8 ஆமதிபதி என்பதாலும் அவர் விவசாயத்திற்கு பாதகம் செய்து சுபாவப்படியான தனது காரகமான 3 ஆமிடம் குறிக்கும் வீரம் மற்றும் 8 ஆமிடம் குறிக்கும் உயிரை எடுத்தல் போன்ற விஷயங்களுக்குத்தான் உதவியுள்ளார் என்பதும் புரிகிறது. அதாவது ஒரு கிரகத்திற்கு பல்வேறு காரகங்கள் இருந்தாலும் சம்பாத்தியத்தை பொறுத்தவரை தசாம்சத்தில் அக்கிரகம் என்ன நிலை பெற்று அமைந்துள்ளது என்பதே அதன் காரகங்களில் எது நன்மை நன்மை செய்யும், எது தீமை செய்யும் என்பதை தீர்மானிக்கிறது. இவ்விதி அணைந்து வர்க்கங்களுக்கும் பொருந்தும்.
தற்போது ஜாதகர் விவசாயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு செவ்வாய் குறிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்றுனராக மகிழ்ச்சியாக செயல்பட்டு வருகிறார். இது தனக்கு ஓரளவு பொருளாதாரத்தை வழங்கினாலும் திருப்தியளிப்பதாகக் கூறுகிறார்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501