வளமான வாய்ப்புள்ள துறை.

நண்பர் ஒருவர் எதிர்காலத்தில் வளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறை என சில துறைகளின் பட்டியலுடன் சில மாதங்கள் முன்பு எனை நாடி வந்தார். மென்பொருள் துறையில் பணிபுரியும் நண்பர் என்னிடம் ஜோதிட அடிப்படைகளை படித்தவர். அவர் அளித்த பட்டியலின்படி அவரது மகனுக்கு ஜோதிடப்படி இத்துறைகளில் எத்துறை சிறப்பைத் தரும் என்று வினவினார். மகனின் ஜாதகத்தை ஆராய்ந்த பிறகு இரு துறைகள் மகனது ஜாதகப்படி சிறந்த வேலை வாய்ப்பைத் தரும் என்று கூறினேன். நண்பர் அளித்த பட்டியலில் இறுதியாக அத்துறை இருந்தது. நண்பர் கணிப்பு அதற்கு மாறாக இருந்தது. அவர் ஆசைப்பட்ட துறைகள் ஜாதகப்படி மகனுக்கு ஏன் சிறப்பை தராது? என்றும் நான் குறிப்பிட்ட துறை எப்படி மகனுக்கு வாய்ப்புகளை வழங்கும் என்பதையும் அத்துறையில் பணிபுரியும் சிலரது உதாரண ஜாதகங்களுடன் நண்பருக்கு விளக்கினேன். அதன் பிறகு அதை ஏற்றுக்கொண்ட நண்பர் தற்போது அவரது மகனை அத்துறையில் உயர் கல்வி பயிலவைத்துக்கொண்டுள்ளார். சமீபத்தில் அவரை ஒரு விழாவில் காண நேர்ந்தது. அப்போது அவரது மகனின் கல்விப்பிரிவு பற்றி பேச்சு வந்தது. இன்று அவரது மகன் கல்வி பயிலும் பிரிவு வலைகுடா போரிலும், ரஷ்ய-உக்ரைன் போரிலும் ஏற்படுத்திவரும் தாக்கத்தை பற்றி பேசியதன் விளைவே இப்பதிவு.

வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை காலகட்ட நிலை என்று ஒன்று உண்டு. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு துறை அந்தக் காலத்தை கோலோச்சும். பலரும் பணிபுரியும் துறையானாலும் அதில் நீடித்த தேவையும், மதிப்பும் தனித்தன்மையும் உள்ள பிரிவை தேர்ந்தெடுப்பது நமக்கு வளத்தை கூட்டும். நண்பர் மகனுக்கு நான் பரிந்துரைத்த துறையின் சிறப்புகள், அதன் எதிர்கால வாய்ப்புகள் ஆகியவற்றை அதில் பணிபுரியும் ஒருவரின் உதாரண ஜாதகத்துடன் இங்கு ஆராய்வோம். 

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

துலாம் லக்னத்தில் லக்ன யோகாதிபதியும் ஜீவன காரகருமான  சனி உச்சம். உடன் 2, 7 அதிபதியும் உத்தியோக காரகருமான செவ்வாய் இணைந்துள்ளார். நீதித்துறை, கட்டுமானம் போன்ற துறைகளில் சிறப்பைத்தரும் ஜாதக அமைப்பு இது. ஆனால் சனி ராகு சாரம் சுவாதியிலமைந்து, 2 ல் அமைந்த கேதுவும் சனி சாரத்திலமைந்ததும், 10 ல் சூரியனைவிட அதிக பாகை பெற்று அஸ்தங்கமடையாமல் நிற்கும் லக்னாதிபதி சுக்கிரனும் ஜாதகருக்கு கணினித்துறையில் ஈடுபடும் வாய்ப்புள்ளதையும் குறிப்பிடுகிறது. தொடர்பு ஸ்தானமான 7 ல் சுக்கிரன் சாரத்தில் பரணியில் அமைந்த சந்திரன் ஜாதகருக்கு வெளிநாடு தொடர்புடைய பணி அமையும் வாய்ப்புள்ளதை குறிப்பிடுகிறது. ஆனால் ஜாதக அமைப்பு மட்டுமே ஒருவருக்கு வேலை வாய்ப்பை தந்துவிடாது. ஜாதக அமைவிற்குரிய தசா கிரகங்களே அவர் என்ன பணியில் இருக்க வேண்டும் என முடிவு செய்கின்றன. ஜாதக அமைவுகள் குறிப்பாக சனி மற்றும் ஜீவன பாவகங்கள் தசா-புக்திகளின் அடிப்படையில் ஒருவர் தனது பணியில் எவ்விதம் செயல்படுவார் என்பதை குறிப்பிடும். முதலில் வேலை விஷயங்களை ஆய்வு செய்யுமுன் ஜாதகரின் பொதுவான நிலைப்பாடுகள் என்ன என்பதை மேலும் காண்போம்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னத்தில் அமைந்த சனியும், செவ்வாயும் நீதி ராசியான துலாத்தில் அமைந்துள்ளதை கவனிக்க. இவ்விரு கிரகங்களும் குற்றங்களோடு தொடர்புடைய கிரகங்களாகும். குறிப்பாக பாதிக்கப்பட்ட சனி நீதி தவறுவதை குறிப்பிடும். வலுபெற்ற சனி நேர்மையில் உறுதியாய் இருப்பதை குறிப்பிடும். இந்த ஜாதகத்தில் உச்ச வலுப்பெற்ற சனியுடன் அமைந்துள்ள செவ்வாய் ஜாதகர் தனது பணியில் தவறு நேர வண்ணம் செயல்படுவதை கண்காணிக்கும். 10 ஆமிடத்தில் அமைந்த சூரியனும் சுக்கிரனும் உச்ச சனி சாரம் பெறுவதால் ஜாதகர் பணியிடத்தில் தனித்துவமானதொரு பிரிவில் பிறர் தலையீடற்ற வகையில் தலைமைப் பொறுப்பில் இருந்து செயல்படுவார் என்பதை குறிப்பிடுகிறது. வேலை பாவகமான 6 ன் அதிபதி குரு தகவல் தொடர்புகளை குறிப்பிடும் 3 ஆமிடத்தில் ஆட்சி பெற்று வக்கிர கதியில் கேது சாரம் மூலத்தில் நின்று  மேஷத்திலமைந்த 10 ஆமதிபதி சந்திரனை பார்ப்பதால் இவர் வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் தகவல் தொடர்புகளை கையாளும் துறையில் இருக்க வாய்ப்புள்ளது தெரிகிறது. இவ்வமைப்புகளின் அடிப்படையில் ஜாதகர் நீதித்துறை மற்றும் கணினித்துறையில் ஒரு பிரிவில் கண்காணிப்பாளராக செயல்படும் அமைப்பு உள்ளதை பொதுவாக அறியலாம்.

இனி இவர் உயர்கல்வி காலத்தில் எந்தத் துறை சார்ந்த கல்வி பயிலும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்தால்தான் எத்துறையில் பணிபுரியும் அமைப்புண்டு என்பதை உறுதியாக கூறலாம். உயர்கல்வி பற்றி ஆராய்வதற்கான வர்க்கச் சக்கரம் சதுர்விம்சாம்சம் கீழே.

இவர் பள்ளிக் கல்வியை முடித்து உயர் கல்வி செல்லும் காலம் சூரிய தசையின் இறுதியில் இருந்தார். தசாநாதர் சூரியன் செவ்வாயின் ராசியான விருட்சிகத்தில் நிற்கிறார். சூரியனின் முதல் திரிகோணமான மீனத்தில் செவ்வாய் ராகு-கேதுக்களுடன் நிற்க, சூரியனின் மூன்றாவது திரிகோணமான கடகத்தில் ராசிச் சக்கரத்தில் அமைந்த இடத்திலேயே சுக்கிரன் சதுர்விம்சாம்சத்திலும் அமைந்து வர்கோத்தமம் பெற்றுள்ளார். சூரியன் இந்த வர்க்கத்தில் உச்ச புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நிற்க, 10 ல் அமைந்த புதன் சூரியனின் உத்திரத்தில் நின்று சாரப் பரிவர்த்தனை பெறுகிறார்கள். சாரப் பரிவர்தனைக்குப் பிறகு தசாநாதன் சூரியனுக்கு செவ்வாய்-ராகு-கேதுக்களின் நேரடிப் பார்வை கிடைக்கிறது. சனியோ, துலாம் ராசியோ இந்த தொடர்பில் வராததால் ஜாதகர் நீதித் துறை பயில வாய்ப்பில்லை, மாறாக கணினித்துறையில் உயர் கல்வி பயிலவே வாய்ப்புண்டு என்பதை சதுர்விம்சாம்சம் தெரிவிக்கிறது.

கல்விக்கேற்ற வேலைவாய்ப்புகள் அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. இதனால் இவர் பணிக்குச் செல்லும் காலம் இவருக்கு நடக்கும் தசை இவர் கற்ற கல்வியின் தொடர்புடன் குறைந்த பட்சம் 20 வருடங்களாவது நடந்தால்தான், ஒருவர் கற்ற கல்விக்கு பலன் இருக்கும். அதற்கு இவரது தசாம்சம் ஆராயப்பட வேண்டும். கீழே இவரது தசாம்ச சக்கரம்.

தசாம்சத்தில் விருட்சிக லக்னம். லக்னாதிபதி செவ்வாய் புதனின் மிதுனத்தில் அமைந்துள்ளார். லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த புதன் 10 ஆமிடத்தில் சுக்கிரனுடன் அமைந்துள்ளார். கணினித் துறையை குறிக்கும் சுக்கிரன், தரவுகளை குறிப்பிடும் புதனுடன் இணைந்ததால் இவருக்கு தான் கற்ற கணினித் துறையிலேயே வேலை கிடைக்கும். சுக்கிரன் 7 ஆமிட சூரியனுடன் பரிவர்த்தனை ஆகிறார். பர்வர்த்தனைக்குப் பிறகு சூரியன் 10 ல் திக்பலம் பெறுகிறார். இதனால் இவர் தனது பணியில் பிறர் தலையீடு இல்லாத தனித்துவமான சூழலில் முதன்மையான பொறுப்பாளராக இருந்து பணிபுரிவார். ராசிச் சக்கரத்திலேயே இவ்வமைப்பு இருந்ததை பார்த்தோம். இங்கு சூரிய தசைக்கு அடுத்து வந்த சந்திர தசையும் கேதுவோடு இணைந்து தனது நீச வீட்டை நோக்கி இருப்பதாலும் 10 ஆமதிபதி சூரியனின் நீச வீடான துலாம் ராசி அமையும் நிலையில் சந்திரனுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் பரிவர்த்தனைக்குப் பிறகு துலாம் ராசிக்கு 8 ல் அமைவதாலும், துலாம் ராசிக்கு 6 ல் சனி அமைந்துள்ளதாலும் இவர் நீதித் துறையில் பணிபுரிய வாய்ப்பில்லை. சூரியன் சுக்கிரனோடு புதன் இங்கு தொடர்பாகிறார். லக்னாதிபதி செவ்வாய் புதன் வீட்டில் அமைந்துள்ளார். எனவே ஜாதகர் சூரியன், சந்திர, செவ்வாய் தசையிலும் அதற்கு அடுத்து புதனின் திரிகோணத்தில் செவ்வாய் வீட்டில் அமைந்த ராகு தசையிலும் சுக்கிரன் குறிப்பிடும் கணினித் துறையில், புதன் குறிப்பிடும் தரவுகளோடு தொடர்புடைய, செவ்வாய் குறிப்பிடும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அமைப்பு உள்ளது தெரிகிறது. ஜாதகர் தற்போது ராகு தசையில் உள்ளார்.

மேற்கண்ட ஜாதக அமைப்பினடிப்படையில் இவருக்கு தகவல் தொழில் நுட்பத் துறையில் தரவுகளை பாதுகாக்கும் கல்வி பயில ஆலோசனை கூறினால் அது இவருக்கு பயன்படும் கல்வியாக, சம்பாத்தியத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஜாதக அமைப்பிற்கு மாறுபட்ட கல்வியையோ, வேலையையோ ஜாதகம் அனுமதிக்காது என்பதால் அவற்றை கற்பதும் வீணே. அத்தகைய பணிகளில்  ஜாதகர் நிலைக்க இயலாத நிலை ஏற்படும். இந்த ஜாதகர் மின்னணு தொழில்நுட்பக் கல்வி முடித்து ஒரு பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் System Administrator ஆக பணிபுரிகிறார். பணியை பொறுத்தவரை மதிப்பான நிலையில் இருக்கிறார்.

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பலர் Programming, Coding, Data Science, AI, Software Developer போன்ற பல பிரிவுகளில் கல்வி கற்கின்றனர். System Administrator எனும் கணினித் தரவுகளை மேலாண்மை செய்யும் துறை இன்றைய நவீன உலகில் வளர்ந்து வருகிறது.  இதில் கணினிகளை நிறுவுவது, பராமரிப்பது, தரவுகளை பாதுகாப்பது, Cyber Threats எனும் இணைய வழி ஆபத்துகளை கையாள்வது போன்ற பல விஷயங்கள் உண்டு. இதனோடு தொடர்புடைய இதர பிரிவுகள் பல ஏற்ற இறக்கங்களை கண்டாலும் Cyber Securities இல்லாமல் ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தை நடத்துவது இயலாது. இப்பிரிவு எப்போதும் நிலைத்திருக்கும் ஒரு பிரிவாகும். மென்பொருள்துறை மட்டுமல்லாமல்  வங்கிகள், பாதுகாப்பு, ராணுவம், விமானத்துறை, மருத்துவம்,  போன்ற பெரும்பாலான அனைத்து நவீன தொழில்நுட்பத் துறைகளிலும் Cyber securities வல்லுனர்களின் தேவை இன்று அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் இப்பிரிவின் தேவை மேலும் கூடும் என்பது நிச்சயம். ஜாதக அமைப்பு ஒத்துழைத்தால் பணியிழப்பை பற்றிக் கவலைப்படாமல் இப்பிரிவில் தங்களது வாய்ப்புகளை இன்றைய இளைஞர்கள் அமைத்துக்கொள்ளலாம். 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English