“வாழ்க்கையில் எது முக்கியம்?” எனும் கேள்விகள் எழும்போது பலரிடம் பலவிதமான பதில்கள் கிடைக்கும். கல்வி, வேலை, குடும்பம், ஆரோக்கியம், ஒழுக்கம், பக்தி என்று வயதையும் அனுபவத்தையும் பொறுத்து பதிலின் தரம் இருக்கும். தெனாலி ராமனிடம் கிருஷ்ணதேவராயர் இக்கேள்வியை எழுப்பியபோது அதற்கு தெனாலிராமன் “காலையில் மலஜலம் கழிப்பதுதான் எனக்கு முக்கியமான வேலையாக தெரிகிறது” என்று நகைச்சுவையான பதிலைக்கூறி ராயரின் கோபத்திற்கு ஆளாகி, பிறகு தெனாலிராமன் அதை ராயருக்கு புரியவைத்த சிறுவயது நகைச்சுவை கதை நினைவுக்கு வருகிறது. பலவிதமான ஜாதகங்களை பார்த்தாலும் சில ஜாதகங்கள் திகைப்பை ஏற்படுத்தி விடும். அப்படி வாழ்க்கையில் தனக்கு வாழ்க்கையில் தனது உயர் கல்வியைவிட தலை முடியே முக்கியம் என்று கூறி தலை முடிக்காக தனது உயர் கல்வியையே துறந்த ஒரு விடலை வயதினனின் ஜாதகம் இன்றைய அலசல் ஜாதகமாக வருகிறது.
மேஷம் கால புருஷனுக்கு லக்ன பாவகமாகும். உடலில் தலையை குறிக்கும் ராசியாகும். மேஷத்தில் அமைந்த, மேஷத்தை பார்த்த கிரகங்களே ஒரு ஜாதகரின் தலையின் அமைப்பு, முடி, முடியை ஒருவர் அலங்கரிக்கும் விதம், அதில் சூடும் ஆபரணங்கள், மலர்கள், தொப்பி, கிரீடம், தலையில் ஏற்படும் காயங்கள் ஆகியவற்றை தெரிவிக்கும். லக்னமும் கால புருஷ லக்னமான மேஷம் போன்றே செயல்படும் என்பதை நினைவில் கொள்க.
ஜோதிடத்தில் சிகை அலங்காரங்கள்.
ஜோதிடத்தில் கலை நயத்தை குறிக்கும் கிரகம் புதனாகும். வித்யா காரகரும் ஆன புதன் மேஷத்தில் உச்ச சூரியனுடன் அமைந்துள்ளார். ஜோதிடத்தில் அழகை குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும். அவர் லக்னத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகத்தில் உள்ளார். ஜோதிடத்தில் ரசனையை குறிக்கும் கிரகம் சந்திரனாகும். சந்திரன் கடகத்தில் ஆட்சி பெற்று சிறப்பாக அமைந்துள்ளார். சுக்கிரன் ரசனையின் காரகர் சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். 17 வயது ஜாதகனுக்கு தனது அழகின்மேல் மிகுந்த மதிப்பு. லக்னமும் மேஷமும் வலுவாகிவிட்டடால் ஒருவருக்கு தனது சிகை அழகின் மீது மிகுந்த பற்றுதல் ஏற்படும். மேற்சொன்ன கலை, அழகு, ரசனை கிரகங்களுடன் மேஷத்துடனோ, லக்னத்துடனோ ராகு-கேதுக்கள் தொடர்பானால் அத்தகைய ஜாதக அமைப்பினர் முடி அலங்காரத்தில் அதிகப்படியான முடிச்சாயங்கள், கோமாளித்தனமான சிகை அலங்காரங்கள் ஆகியவற்றை செய்துகொள்வர். தலையை முண்டாசு கட்டுவது, முக்காடிட்டுக்கொள்வது ஆகியவையும் ராகு கேதுக்களின் வேலையே. இந்த ஜாதகத்தில் மீனத்தில் ராகு புதனது ரேவதி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெற்றோரின் செல்லப்பிள்ளைகள்.
ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் சிறப்புற்று, 4, 9 பாவகங்களும் அதன் அதிபதிகளும் வலுப்பெற்றால் அந்த ஜாதகர் பெற்றோரின் செல்லப் பிள்ளையாக இருப்பார். அத்தகைய ஜாதகரை பெற்றோர்கள் வீட்டில் செல்லமாகவும் மரியாதையுமாக நடத்துவர். இந்த ஜாதகத்தில் மேற்சொன்ன பெரும்பாலான அமைப்புகள் உள்ளன. “வாங்க தம்பி, சாப்பிடுங்கள் தம்பி” என்பது தந்தை இந்த ஜாதகனை நடத்திய விதத்தை நான் நேரில் கண்ட காட்சி”.
வயதும் பிடிவாதமும்.
மனித வாழ்நாளில் வயதுப்படி கிரக ஆதிக்க காலம் என்றோரு முறை உண்டு. 5 வயது வரை மனிதர்களுக்கு குருவின் ஆதிக்க காலமாகும். அதன் பிறகு புதனது ஆதிக்க காலமான விளையாட்டுப் பருவமாகும். அதாவது வயதுக்கு வரும் காலம் வரை. அதன் பிறகு ஆண்களுக்கு செவ்வாயின் ஆதிக்க காலம் துவங்கும். வயதின் ஆதிக்க கிரகங்கள் ஜாதகத்தில் அமையும் விதத்திற்கேற்ப கிரகங்கள் ஜாதகரின் மேல் ஆதிக்கம் செலுத்தும். ஜாதகன் தற்போது புதனின் ஆதிக்க காலம் முடிந்து செவ்வாயின் ஆதிக்க கால துவக்கத்தில் உள்ளான். 17 வயதில் அனைவருக்கும் பிடிவாத குணம் இயல்பாக இருக்கும். இந்த ஜாதகத்தில் வயதுப்படியான ஆதிக்க கிரகம் செவ்வாய் லக்னத்திற்கு 10 ல் திக் பலத்தில் உள்ளதால் பிடிவாத குணம் இந்த ஜாதகருக்கு மிகுந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாதகனுக்கு இவ்வாண்டு ஆகஸ்டு முதல் புதன் தசை துவங்கியுள்ளது. புதன் தலையை குறிக்கும் மேஷத்தில் முடியை குறிக்கும் கேதுவின் அஷ்வினியில் உச்ச சூரியனுடன் அமைந்துள்ளார். இப்போது ஜாதகன் பள்ளி முடித்து கல்லூரி செல்லும் காலம். வித்யா காரகர் புதன், தடைகளின் காரகர் கேதுவின் சாரத்தில் அமைந்துள்ளார். உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவகாதிபதி சனி, 9 க்கு 6 ல் மிதுனத்தில் மறைந்துள்ளார். 9 ன் பாவத் பாவமாக ஐந்தாம் பாவகம் அமையும் என்பதால் உயர் கல்விக்கு 5 ஆவது பாவகமும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். 5 ல் கேது அமைந்து, 9 ன் விரயாதிபதி குரு 5 ல் அமைந்துவிட்டதால் ஜாதகனுக்கு உயர் கல்வியில் தடைகள் ஏற்படும். கால புருஷனுக்கு 9 ஆம் பாவகாதிபதி குரு, தசா நாதன் புதனின் மூலத்திரிகோண உச்ச வீட்டில் அமைந்து, தனது நீச வீடான மகரத்தை பார்ப்பதால் உயர் கல்வியில் ஏற்படும் தடை கடுமையானதும் பூர்வ ஜென்ம கர்மாவின் அடிப்படையில் ஏற்படுவதுமாகும். எதனால், எப்படி தடை என்பதை தசா-புக்தி நாதர்களின் அமைவும் கோட்சாரமும் சுட்டிக்காட்டும். ஜாதகனுக்கு புதன் தசை இவ்வாண்டு ஆகஸ்டு மாதம்தான் துவங்கியுள்ளது. ஜனன காலத்தில் புதனின் ரேவதியில் அமைந்த ராகு, கோட்சாரத்தில் ஜனன கால புதன், சூரியன் மேல் செல்வது கவனிக்கத்தக்கது. வித்யா காரகர் புதனும், கால புருஷப்படி உயர்கள் கல்வியை குறிக்கும் குருவும் 6 / 8 அமைப்பில் அமைந்தால் உயர் கல்வி ஒருவருக்கு பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜாதகன் உயர்கல்விக்கு கல்லூரியை அணுகியபோது, கல்லூரியில் தலைமுடியை சீராக வெட்டிக்கொண்டு வர கூறியுள்ளனர். அதை ஏற்றுக்கொள்ளாத ஜாதகன் கல்வியை விட, தனது அலங்காரமான முடியே முக்கியம் என்று தனது முடியை வெட்டிக்கொள்ள மறுத்து கல்லூரிக்கு செல்லவில்லை. தந்தை பல கல்லூரிகளை ஜாதகனுக்காக அணுகியும் அனைத்து கல்லூரிகளிலும் முடிவெட்டி வர கூறியுள்ளதால் கல்லூரி செல்லும் எண்ணமின்றி ஜாதகன் உள்ளான்.
உயர் கல்விக்கு ஆராய வேண்டிய சதுர்விம்சாம்சத்தில் 9 ஆமதிபதி புதன் நீசமாகியுள்ளார். கல்வி பாவகமான 4 ஆம் பாவகாதிபதி லக்னத்திற்கு 8 ல் மறைந்துள்ளார். கால புருஷ 9 ஆமதிபதி குரு அஷ்டமாதிபதி சூரியனுடன் உச்சமாகி வக்கிரமானது ஆகியவை உயர் கல்வியில் ஜாதகருக்கு உள்ள சாதகமற்ற அமைப்பை கூறுகிறது. லக்னத்தை தலையின் காரக கிரகமான அஷ்டமாதிபதி சூரியன் பார்ப்பது தலை சார்ந்த வகை பாதிப்பால் உயர் கல்வி தடைபடுவதை குறிக்கிறது.
நெருப்பு ராசியும் தலை ராசியுமான மேஷத்தில் உச்ச சூரியனுடன் இணைந்து தசை நடத்தும் தலை வழுக்கையின் காரக கிரகமான புதன் நெருப்பு ராசியான மேஷத்தின் வெப்பத்தையும், உச்ச சூரியனின் உஷ்ணத்தையும் ஏற்றுத்தான் செயல்படுவார். தனது தசையிலேயே ஜாதகனின் பெருமளவு தலைமுடியை காலி செய்துவிடுவார். ஆனாலும் ஆட்சி சுக்கிரன் அதை ஓரளவு தடுத்து நிறுத்துவார். எண்ணம்போல வாழ்வு எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. உன்னதமான வாழ்வின் அர்த்தமென்பது மனமகிழ்ச்சியே. தனது தலைமுடிக்காக கல்வியை துறக்கும் இவ்விளைஞனின் முடிவு கண்களை விற்று சித்திரத்தை வாங்கும் நிலைக்கு ஒப்பானது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501