
ஓரளவு யோகம் பெற்ற ஜாதகர்களுக்கு உறவுகள் சார்ந்த சம்பவங்கள் தடையின்றி நடந்துவிடும். பொருளாதாரம் சார்ந்த சம்பவங்கள் இழுபறியில் நடக்கும்.
ஓரளவு தோஷம் பெற்ற ஜாதகர்களுக்கு பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் தடையின்றி நடந்துவிடும். உறவுகள் சார்ந்த விஷயங்கள் இழுபறியில் நடக்கும்.
ராஜ யோக ஜாதகங்களுக்கு உறவுகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் இரண்டுமே சரியான சமயத்தில் தடையின்றி நடந்துவிடும்.
கடும் தோஷம் பெற்ற ஜாதகங்களுக்கு உறவுகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் இரண்டுமே கடும் தடைகளின் பேரில் நடக்கும்..
சபிக்கப்பட்ட ஜாதகங்களில் சாபங்களுகேற்ப உறவுகள் அல்லது பொருளாதாரம் ஆகிய இரண்டில் ஒன்று மறுக்கப்பட்டிருக்கும்.
சம்பவங்களின் காலத்தை தசா-புக்திகள் மற்றும் நான்கு வருட கிரகங்களின் கோட்சாரத்தின் மூலம் அறியலாம்.
யோகமான ஜாதகர்களுக்கு சம்பவங்கள் யோகமான தசா-புக்திகள் மற்றும் சாதகமான கோட்சாரங்களில் நடக்கும். மோசமான காலங்களில் சம்பவங்கள் நடந்துவிடாதபடி ஜாதக அமைப்பில் தசா-புக்தி கிரகங்கள் தடுத்துவிடும்.
ஆனால் மோசமான ஜாதகர்களுக்கு தவறான தசா-புக்திகளிலும் மோசமான கோட்சாரத்திலும் சம்பவங்கள் குற்றம் குறைபாடுகளுடன் நடக்க காத்துக்கொண்டிருக்கும். இத்தகைய ஜாதக அமைப்பினர் உரிய பரிகாரங்களின் மூலம் நடக்கவுள்ள சம்பவத்தின் கடுமையை குறைத்துக்கொள்ள இயலும். சாதகமற்ற காலத்தில் சம்பவங்களை தள்ளிப்போட்டு பிறகு சாதகமான காலத்தில் அவற்றை நடத்திக்கொள்வது நன்று. ஆனால் இத்தகைய ஜாதகங்களிலும் கூட சாபங்கள் இல்லாமல் இருந்தால்தான் இந்த யுக்தியும் உதவும்.
இன்றைய பதிவு இறுதியாக சொல்லப்பட்ட களத்திர தோஷம் கொண்ட ஜாதக அமைப்பினர் எப்படி சரியான திருமண காலத்தை நிர்ணயம் செய்வதன் மூலம் களத்திர தோஷத்தை தவிர்ப்பது என்பது பற்றியதுதான். ஒரு உதாரண ஜாதகம் மூலம் இதை காண்போம்.
கும்ப லக்னாதிபதி சனி வக்கிரம் பெற்றாலும் ஆட்சி பெற்றது சிறப்பே. வித்யா கிரகமான புதனுக்கு 1௦, 6 ஆமதிபதிகள் தொடர்பு ஏற்படின் கற்ற கல்விக்கேற்ற வேலை அமையும் என்ற விதிப்படி இங்கு புதன் 1௦ ஆமதிபதி செவ்வாயோடு இணைவு பெற்றது கற்ற கல்விக்கேற்ற வேலையை வாங்கிக்கொடுத்தது. தசாநாதன் சனி என்பதால் கல்வியை முடித்தவுடன் எளிதில் வேலை கிடைத்தது. லக்னமும், லக்னாதிபதியும் 6 ஆமதிபதி சந்திரனோடு ராகு-கேதுக்களின் அச்சை விட்டு விலகி இருப்பது ஜாதகர் வேலைக்காக வெளிநாட்டில் உறவுகளை பிரிந்து தனித்து விடப்படுவதை குறிக்கிறது. ஜாதகத்தில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் வர்கோத்தமம் பெற்றுள்ளது ஜாதகரின் மன உறுதியையும், ஜாதகருக்கு நடக்கவுள்ள சம்பவங்கள் உறுதியாக நடக்கும் என்பதையும் கூறுகின்றன.
கும்ப ராசியின் சந்தியில் இருந்து வக்கிரமாகும் சனியை மகரத்தில் நின்று செயல்படுவதாக எடுத்துக்கொள்ளலாம். பாவப்படியும் சனி மகரத்தில் இருக்கிறார் என்பதால் சனி மகரத்தில் இருந்து செயல்படுவதை உறுதி செய்யலாம். ஜாதகருக்கு சனி தசா நடக்கிறது. இப்படி மகரத்தில் இருந்து சனி குடும்ப பாவமான மீனத்தை 3 ஆம் பார்வையாக பார்வை செய்கிறது. இதனால் ஜாதகர் ஜீவனத்திற்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டு என்பது ஒரு புறம் சிறப்பு. ஆனால் கோட்சார ரீதியாக சனி கும்பத்திற்கு வந்தால்தான் ஜாதகம் உண்மையாகவே வலுவடையும். அதன் பிறகு ஜாதகருக்கு திருமணம் செய்வது சிறப்பு. சனியின் மூன்றாம் பார்வை குடும்ப பாவத்தின் மீது விழுவதால் பொருளாதாரத்தை கொடுத்து குடும்பத்தை வீழ்த்தும் அமைப்பு உள்ளது. ஜனன குரு லக்னத்திற்கு 8 ல் மறைந்துள்ளதால், கோட்சார குருவும் லக்னத்திற்கு 2 ல் மீனத்திற்கு வந்து ஆட்சி பெறும் வேளையில்தான் குடும்பம் அமைய வேண்டும். அதற்கு முன் திருமணம் செய்வித்தால் 8 ல் மறைந்து 12 ஆமிடத்தை பார்க்கும் குரு முதலில் இழப்பைத்தான் தருவார். அஷ்டம குரு தனது நீச வீட்டை பார்ப்பதுதான் அதற்கு காரணம்.
ஜாதகத்தில் சனியும் குருவும் ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு வகையில் தொடர்புகொண்டு இருவரில் ஒருவர் 2 ஆமிடத்தை பார்க்கையில் குடும்பம் அமையும் யோகம் உண்டு. கோட்சாரத்தில் மகரத்தில் குருவோடு இணைந்த சனி 3 ஆம் பார்வையாக மீனத்தை பார்த்தபோது ஜாதகருக்கு அத்தகைய வாய்ப்பு வந்தது. அந்த வேளையில் இவ்விரு கிரகங்களுடன் 7 ஆமதிபதியும் இணைந்து தசா-புக்திகள் ஒத்திசைவாக வந்தால் அது திருமண காலமாகும். ஜாதகர் அத்தகைய ஒரு வாய்ப்பை பயன்படுத்தி கடந்த வருடம் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார். திருமண நாளின் கோட்சாரம் கீழே.

நவாம்சத்தில் மேஷ லக்னத்திற்கு 7 ல் நின்ற சனி தசாவில் லக்னத்தில் இருந்து 7 ஐ பார்க்கும் கேது புக்தியில் சனி அந்தரத்தில் ஜாதகருக்கு திருமணம் நடந்தது. 14 நாட்கள் மட்டுமே நீடித்த திருமண உறவு அது. ராசியில் களத்திர காரகர் சுக்கிரன் களத்திர பாவத்தில் நிற்பது களத்திர தோஷமாகும். சிம்மம் சுக்கிரனுக்கு பகை வீடு என்பதோடு, சுக்கிரன் நின்ற களத்திர பாவாதிபதி சூரியன் 8 ல் மறைவதால் களத்திர தோஷம் கடுமையாக செயல்பட்டுள்ளது. லக்னாதிபதி, 7 ஆமதிபதி, குரு மூவரும் 12 ல் மறைந்த கால திருமணம் கடும் விளைவை குறுகிய காலத்தில் கொடுத்துவிட்டது.
காலத்தே பயிர் செய் என்பதை விட காலம் பார்த்து பயிர் செய்வது என்பது மிக முக்கியமானது. சில தோஷமான அமைப்புகளை கூட வேலை செய்யாது சரியான காலத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் தவிர்க்க முடியும். இந்த ஜாதகருக்கு லக்னாதிபதி லக்னத்தில் வந்து வலுவடையும் காலத்திலும், குரு குடும்ப பாவம் மீனத்தில் இருக்கும் காலத்திலும், சூரியன் கோட்சாரத்தில் கெடாத காலத்திலும் திருமணம் செய்தால் தோஷம் தவிர்க்கப்படும். ஆனால் ஜாதகத்தில் உள்ள சாபம் கடும் விளைவை கொடுத்துள்ளது. சாப பாவமான 12 ஆமிடத்தை கோப பாவமான 8 ல் இருந்து சூரியனோடு இணைந்த குரு 5 ஆம் பார்வையாக பார்த்ததால் தந்தை வழி குடும்ப சாபம் கடுமையாக பாதித்துள்ளது. இத்தகைய குரு சாபங்கள் குருவின் காரகமான பொருளாதாரத்தை வழங்கி குருவின் மற்றொரு காரகமான குடும்ப வாழ்வை வீழ்த்தும். இதற்கு ஜாதக பரிகாரமாக குரு கால புருஷ ரோக ஸ்தானத்தில் லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் நிற்பதால் குறைபாடுகொண்ட துணையை ஏற்றுக்கொள்வது சிறந்தது. இதர பரிகாரங்கங்கள் எல்லாம் இதற்கு அடுத்த வகையிலேயே பலன் தரும்.
தொடர்ச்சி அடுத்த பதிவில்….
அதுவரை வாழ்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.