ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில் உள்ள அனைத்து யுக்திகளையும் அறிந்த ஜோதிடர்கள் மிக மிக அரிதானவர்களே. பொதுவாக அடிப்படை ஜோதிடத்தை அறிந்தவர்களே பெரும்பான்மையினர். அனைத்து ஜோதிட யுக்திகளையும் அறியும் முயற்சியில் இருப்பவர்கள் ஒரு வகையினர். இவர்களும் தாங்கள் அறிந்த ஜோதிட யுக்திகளில் எது தங்களுக்கு மிகச் சிறப்பாக கைவரப் பெறுகிறதோ அவற்றை மட்டும் பயன்படுத்திக்கொண்டு மற்றவற்றை விட்டுவிடுகின்றனர். சிலர் தாங்கள் அறிந்த மிகச் சிறப்பான யுக்தியை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி அவற்றில் மட்டும் பெயர் பெற்ற வல்லுனராகின்றனர். இவற்றில் வர்க்கச் சக்கரங்கள் மூலம் கிரக வலுவறிந்து பலன் கூறுவது ஒரு முறை. வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் முறை இது என்றாலும் தென்னிந்தியாவில் தற்போது பெருகி வருகிறது. வர்க்கச் சக்கர நுட்பத்தை அறிந்துகொள்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இதில் தெளிந்த அறிவுடைய நம்பத்தகுந்த ஜோதிட குருமார்கள் தமிழகத்தில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள வட இந்திய குருமார்கள் விளக்கியுள்ள வர்க்கச் சக்கர நூல்கள் ஓரளவு உதவிகரமாக உள்ளன. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர். V.P.கோயல். தமிழில் வெளிவந்துள்ள வர்க்கச் சக்கர நூல்களும், தமிழகத்தில் வர்க்கச் சக்கரத்தை போதிக்கும் குருமார்களும் ஏமாற்றத்தையே எனக்களித்தனர் என்பதை கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
சமீபத்தில் வர்க்கச் சக்கரத்தில் நானறிந்த யுக்திகளின் அடிப்படையில் ஒரு நபருக்கு அவர் குறிப்பாக கேட்டுக்கொண்டதற்கிணங்க குறிப்பிட்ட ஒரு கிரகம் பல்வேறு வர்க்கங்களில் எப்படி செயல்படுகிறது என்று பலன் கூறினேன். அதில் கவரப்பட்டதன் விளைவாக அவர் என்னை தூண்டியதன் விளைவே இன்றைய பதிவு. குறிப்பிட்ட கிரகமாக செவ்வாய் இங்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
சிம்ம லக்னத்தில் விரையாதிபதி சந்திரன் அமைந்துள்ளார். ஆனால் கடகத்தில் வக்கிரச் சனி அமைந்துள்ளார். இது சந்திரன் குறிக்கும் உயிர் காரக உறவிற்கு குறைகளையும், நெருப்பு ராசியில் நிற்கும் சந்திரன் ஜாதகரது செயலில் வேகத்தையும் தூண்டும். லக்னாதிபதி சூரியனும் செவ்வாயும் லக்னத்திற்கு 4 ஆமிடம் விருட்சிகத்தில் நிஷ்பலத்தில் (திக்பலத்திற்கு எதிர்) நிற்கிறார்கள். இது ஜாதகருக்கு செவ்வாய், சூரியன் ஆகியவற்றின் பொருட்காரகங்களில் நன்மையையும், இவை குறிப்பிடும் உயிர் காரகங்களுக்கு பாதிப்பையும் கூறும் அமைப்பாகும். இங்கு நாம் செவ்வாயை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராயவிருப்பதால் பிற கிரகங்களை விட்டுவிடுவோம். செவ்வாயின் பொருட்காரகங்கள் என்றால் வீடு, வாகனங்கள் ஆகியவற்றைக் கூறலாம். இவை ஜாதகருக்கு சிறப்பாக அமையும். ஆனால் செவ்வாயின் உயிர் காரகங்கள் எனும் வகையில் சகோதர இனத்திற்கு இவரது ஜாதக அமைப்பு பாதிப்பை தரக்கூடியது. உத்தியோக காரகர் செவ்வாய் சூரியனுடன் இணைந்து 1௦ ஆமிடத்தை பார்ப்பதால் ஜாதகர் அரசுத்துறையில் பணிபுரிகிறார். செவ்வாயும் சூரியனும் கல்வி, மருத்துவத்தை குறிப்பிடும் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நிற்பதாலும் 4 ஆமிடம் நூலகத்தை குறிப்பிடுவதாலும் இவர் அரசுத்துறையில் நூலகராக பணிபுரிகிறார்.
ஒருவரின் உயர்கல்வி வாய்ப்புகளை ஆராய சதுர்விம்சாம்சம் பயன்படுகிறது. பொதுவாக ஒரு ஜாதகத்தில் இதர கிரகங்களைவிட வலுப்பெற்ற கிரகமே அந்த ஜாதகரை வாழ்வில் வழிநடத்தும் கிரகமாக செயல்படும். ஆனாலும் வர்க்கத்திக்கு வர்க்கம் இது மாறும் என்பதை அறிக. ராசியிலேயே கல்வி, நூலகத்தை குறிப்பிடும் 4 ஆம் பாவாதிபதியும், உயர் கல்விக்குரிய 9 ஆம் பாவாதிபதியுமான செவ்வாய் ஆட்சி பெற்றிருந்ததால் இவருக்கு உயர்கல்வி வாய்ப்புகள் சிறப்பாக அமையும். சதுர்விம்சாம்சத்தில் உயர் கல்வியை குறிப்பிடும் 9 ஆமிடத்தில் செவ்வாய் புதனுக்கு திரிகோணத்தில் ஒருவருக்கொருவர் உச்சம் பெற்று அமைந்த நிலையில் உச்ச செவ்வாயுடன் சனி, ராகு, கேது ஆகிய 3 கிரகங்களுடன் இணைந்துள்ளார். இதனால் இவர் உயர் கல்வியில் ஒன்றுக்கு பல பட்டங்களை முயல்வார். சனி வக்கிரம் பெற்றுள்ளதால் அதிகபட்ச உயர்கல்வி மிகத் தாமதமாக கிடைக்கும். 9 ல் உச்ச செவ்வாய் சந்திரனின் திருவோணத்தில் அமைய உடன் ராகு-கேதுக்கள் அமைந்ததால் ஜாதகர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் கற்றார். கன்னி புதன் சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் உச்சம் பெற்றதால் முதுகலையில் நூலக அறிவியலில் பட்டம் பெற்றார். பிறகு தத்துவவியலில் (Mphil) முதுகலை முடித்தார். தற்போது முனைவர் பட்டத்திற்கான (PhD) ஆய்வில் இருக்கிறார். அதிக பட்ச உயர்கல்வி இது என்பதால் வக்கிர சனி தாமதப்படுத்துகிறார்.
திருமணத்திற்கு ஆராயவேண்டிய நவாம்சத்திலும் செவ்வாயே உச்சம் பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறார். 7 ல் உச்ச செவ்வாய் சனியுடன் நின்று மேஷத்தில் அமைந்த சுக்கிரனை 4 ஆம் பார்வையாகப் பார்க்கிறார். ஜாதகரது மனைவி மேஷ ராசி. 1௦ ஆமதிபதி செவ்வாய் சனியுடன் இணைந்து 7 ல் நிற்பதால் இவரது மனைவியும் பணிபுரிபவரே. மீனத்தில் அமைந்த சூரியனை 7 ஆமதிபதி சனி 3 ஆம் பார்வை பார்ப்பதாலும், தனுசு குரு பூராடத்தில் நின்று மேஷ சுக்கிரனை 5 ஆம் பார்வையாக பார்ப்பதாலும் மனைவி அரசுப்பள்ளி ஆசிரியை. காதலைக் குறிப்பிடும் 5 ஆமதிபதி செவ்வாய் களத்திர பாவகமான 7ல் உச்சம் பெற்றதால் காதலியே மனைவியாக வாய்க்கப் பெற்ற அதிஷ்டசாலி இவர்.
குழந்தைகளை அறிய உதவும் சப்தாம்சத்தில் லக்னத்தில் குருவும் செவ்வாயும் அமைந்தது சிறப்பே. செவ்வாயைத் தவிர இதர கிரகங்கள் பாதிப்பான நிலையிலேயே அமைந்துள்ளனர். வக்கிரம் பெற்றதால் ஆண் எனும் தன் சுபாவ நிலையை இழந்த குரு 5 ஆமிடத்தை பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்தார். இரண்டாவது குழந்தையை குறிப்பிடும் 7 ஆமிடத்தையும் வக்கிர குருவே பார்த்தாலும் முழுமையான ஆண் கிரகமான செவ்வாயும் தன் வீடு மேஷத்தை நேர் பார்வை பார்ப்பதால் ஜாதகருக்கு 2 ஆவது குழந்தையாக ஆண் மகனாகப் பிறந்தார். மூன்றாவது குழந்தையை குறிப்பிடும் 9 ஆமிடத்தில் சனி அமைந்து, 9 ஆமதிபதி புதன் நீசம் பெற்றுவிட்டதால் ஜாதகருக்கு 2 க்கு மேல் புத்திரமில்லை.
ஒரு வர்க்கத்தில் அதிக வலுப்பெற்ற கிரகமே அந்த வர்க்கத்தை இயக்கும் என்பதற்கேற்ப ஜீவன வகைகளுக்கு ஆராய வேண்டிய தசாம்சத்தில் பாக்யாதிபதி சூரியன் உச்சம் பெற்றுள்ளார். சூரியன் நின்ற வீட்டதிபதி செவ்வாயும் உச்ச சூரியனால் வலுவடைவார். இதனடிப்படையில் ஜாதகருக்கு அரசு வேலை கிடைத்தது. நூலகத்தை குறிக்கும் 4 ஆமதிபதி குரு மகரத்தில் நீசமடைந்து வக்கிரம் பெற்றதால் நீச பங்கப்படுகிறார். நீசபங்க குரு நூலகத்தின் காரக கிரகமும் 7, 1௦ ஆமதியுமான புதனையும் 1௦ ஆமிடத்தையும் பார்ப்பதால் ஜாதகருக்கு அரசு நூலகத்தில் நூலகராக வேலை கிடைத்தது. சூரியன் உச்சம் பெற்றுள்ளதால் மாவட்ட அளவிலான முதன்மையான பொறுப்பில் தற்போது உள்ளார். லக்னத்தில் 6 ஆமதிபதி சுக்கிரன் ராகு-கேதுக்கள் தொடர்பில் நின்று சனி பார்வை பெற்றதால் துவக்கத்தில் 1௦ ஆண்டுகள் தற்காலிக பொறுப்பில் இருந்து பிற்பாடு பணி நிரந்தரம் கிடைக்கப் பெற்றார்.
அசையாச் சொத்துக்களுக்குறிய வர்க்கமான சதுர்த்தாம்சத்தில் விருட்சிக லக்னத்திற்கு 4 ல் சந்திரன் திக்பலத்தில் நிற்க, 1௦ ஆமிடமான சிம்மத்தில் திக்பலம் பெற்ற செவ்வாயும், சூரியனும் 4 ஆமிட சந்திரனை பார்க்கிறார்கள். லக்னத்திற்கு 2 ஆமிடத்தை புதன் பார்க்கிறார். இதன் பொருள் ஜாதகர் தனியாக மாடி வீடு கட்டுவார். வீடு அமைந்த பகுதியில் நீர்ப்பிடிப்பான விவசாய நிலம், கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும். வீட்டின் முன் மரம் செடிகள் இருக்க வேண்டும். ஜாதகருக்கு வீடு மேற்குறிப்பிட்டபடியே அமைந்துள்ளது.
நாம் இதுவரை பார்த்த வர்க்கங்களிலேயே சகோதரத்தை அறியப் பயன்படும் இந்த திரேக்காண வர்க்கத்தில் மட்டும்தான் செவ்வாய் பலகீனமாகியுள்ளார். சூரியனுடன் இணைந்து கடகத்தில் நீசம் பெற்ற செவ்வாய் தனுசு லக்னத்திற்கு 8 ல் மறைந்துவிட்டார். இது சகோதர வகைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஜாதகரின் தந்தைக்கு இவரையும் சேர்த்து மொத்தம் 7 குழந்தைகள். 6 ஆண்கள். 1 பெண். ஜாதகரே கடைசிக் குழந்தை. திரேக்காணத்தில் லக்னத்தில் குரு வக்கிரம் பெற்றதால் வலுவிழந்துவிட்டார். மற்ற இரு ஆண் கிரகங்களான சூரியனும் செவ்வாயும் மறைவு. பெண்ணை குறிக்கும் சுக்கிரன் மட்டும் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமைந்துள்ளார். இவரது 5 சகோதரர்களில் நால்வர் குறைந்த ஆயுளிலேயே மரணித்துவிட்டனர். கடும் வியாதி, விபத்து என்ற வகையில் மரணங்கள் இருந்தன.
திரேக்காணத்தில் 8 ல் மறைந்த நீச செவ்வாய் சகோதர வகையில் ஜாதகருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் இதே செவ்வாய்தான் இதர வர்க்கங்களில் ஜாதகருக்கு நன்மைகளையும் வழங்கியுள்ளார். எனவே ஒரு கிரகம் பாதிக்கப்பட்டுள்ளது எனில் அது எந்த வகையில் பாதிப்பைத்தரும் என்பதையறிந்து இதர வகையில் அதன் சிறப்புகளை பயன்படுத்தி வாழ்வில் வளமடையலாம். இந்த வகையில் பார்க்கப்போனால் எந்த கிரகமும் ஒரு மனிதருக்கு அனைத்து வகையிலும் நன்மையையோ அல்லது தீமையையோ தராது என்பது தெளிவாகிறது. பதிவின் நீளம் கருதி இதர வர்க்கங்கள் பதிவிடப்படவில்லை.
விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.