நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி, அதன் அதிபதி, அது பெற்ற நட்சத்திர சாரம், அக்கிரகத்தின் மற்றும் அது நின்ற நட்சத்திரத்தின் பிற நட்சத்திரங்களில் நிற்கும் மற்ற கிரகங்கள், அக்கிரகத்துடன் இணைந்த, பார்த்த கிரகங்கள் இவற்றோடு குறிப்பிட்ட அக்கிரகத்தின் கேந்திர, திரிகோணங்களில் நிற்கும் கிரகங்கள் அதன் வலுவை கூட்டுமா? அல்லது குறைக்குமா?, அக்கிரகம் அடுத்து எந்த கிரகத்தை தொடவுள்ளது போன்ற பல காரணிகள் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். கூடுதலாக ஒரு கிரகம் ஒருவரது வாழ்வில் எந்த அங்கத்தில் எப்படிச் செயல்படும்? என்பதை அறிய தொடர்புடைய வர்க்கச் சக்கரத்தை பயன்படுத்துவது மேலும் அதன் செயல்பாட்டை துல்லியமாக எடைபோட உதவும். குறிப்பிட்ட காலத்தில் ஒரு கிரகத்தின் செயல்பாட்டை தசா-புக்தி கிரகங்களுக்கும் அதற்குமான தொடர்பையும் ஆராய்ந்து முடிவு செய்யலாம்.

மருத்துவத்துறையில் இருக்கும் நண்பர் ஒருவர் தனது மகன்கள் இருவரும் தன்னைப் போலவே மருத்துவராகி தான் உருவாக்கிக்கொண்டிருக்கும் மருத்துவமனையை தொடர்ந்து நடத்துவார்களா? என்று கேட்டு என்னை அணுகினார். அவரது மகன்கள் இருவரும் சிறார்கள். மகன்களில் ஒருவரது ஜாதகத்தில் வித்யா காரகரும், மருத்துவத்தின் காரக கிரகங்களுள் முக்கியமானதுமான புதன் நீசம் பெற்றிருந்தார். மருத்துவருக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும். எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர். அவ்வப்போது சந்தேகங்களை கேட்பார். அவரது மகன்களின் ஜாதகத்தை ஆராய்ந்துவிட்டு புதன் நீசமான அவரது மகன்தான் மருத்துவராவார் என்றும், புதன் பாதிக்கப்படாத மற்றொரு மகன் மின்னணுப் பொறியியல் படிப்பார் என்றும் கூறினேன். அவரால் நான் கூறிய பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் புதன் நீசம் பெற்ற ஜாதகன் எப்படி மருத்துவராவார் என்பதே அவரது சந்தேகம். புதன் நீசம் பெற்றால் ஜாதகன் படிப்பதே சந்தேகம். அதிலும் மருத்துவம் பயில்வான் என்றால் எப்படி? என்பது அவரது கேள்வி. பலருக்கும் இத்தகைய சந்தேகங்கள் உள்ளன. ஒரு கிரகம் ஜாதகத்தில் நின்ற  நிலையை மட்டும் வைத்து அதன் செயல்பாட்டை தீர்மானிக்கக் கூடாது என்றும், புதன் நீசம் பெற்று மருத்துவரான சில ஜாதகங்களை எப்படி அவர்கள் மருத்துவரானார்கள் என்றும் காரணங்களுடன் விளக்கினேன். அவருக்கு நான் கூறிய விளக்கங்களே இன்றைய பதிவாக வருகிறது.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

இந்த ஜாதகி ஆங்கில மருத்துவம் இறுதியாண்டு படித்துக்கொண்டுள்ளார். மருத்துவம் என்பது வியாதிகளை குணமாக்கும் துறை என்பதால் அதற்கு நெருப்பு ராசிகளும் அதன் அதிபதிகளும் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். நீர் ராசிகள் உடலை, மனதை சுட்டிக்காட்டுபவை என்பதால் அவையும் மருத்துவத்துடன் தொடர்புடையவைதாம். மருத்துவம் இருப்பதிலேயே உயர்நிலைக் கல்வி என்பதால் அதைப் பயில வித்யா காரகர் எனப்படும் புதனின் அமைப்பு ஜாதகத்தில் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் புதன் உயர் கல்வி ஸ்தானமான கடக லக்னத்திற்கு 9 ஆமிடம் மீனத்தில் நீச பங்கப் பட்டிருக்கிறார். 1௦ ஆமிடத்தில் திக்பலத்தில் நெருப்பு ராசியில் நெருப்பு கிரகம் சூரியனும் ஜீவன காரகர் சனியும் இணைந்து நீச பங்கப்பட்டு இவர்களை செவ்வாய் 4 ஆமிடத்தில் இருந்து நேர் பார்வை பார்க்கிறார். இதனால் இந்த ஜாதகிக்கு மருத்துவம் பயிலும் அமைப்பு  உண்டு. லக்னாதிபதி சந்திரன் லாபஸ்தானத்தில் உச்சம் பெற்று அதன் அதிபதி சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் ஜாதகி வாழ்வில் உயர வாய்ப்புகள் தேடி வரும். மனோ காரகர் சந்திரன் உச்சம் பெற்றது மனத்தெளிவும், கிரகிப்புத் திறனும் ஜாதகிக்கு அதிகம் உள்ளதை குறிப்பிடுகிறது.  கால புருஷ 2 ஆமிடமான ரிஷபத்தில் சிறப்பாக இரு சுபர்கள் அமைந்து, லக்னத்திற்கு 2 ஆமிடத்ததிபதி சூரியன் திக்பலம் பெற்ற நிலையில், தன காரகர் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமைந்திருப்பது ஆகியவை, செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து அடிப்படை மற்றும் உயர்நிலைக் கல்வி பயில ஜாதகியினுடைய குடும்பம் செலவு செய்யத் தகுதியுடையதாக இருப்பதையும்  குறிப்பிடுகிறது. உடன் ஆட்சி பெற்ற குருவால் நீசபங்கப்படும் புதன் உயர்கல்வி காலத்தில் சிறு தடையை ஏற்படுத்தும் என்றாலும், 9 ல் ஆட்சி பெற்ற தன காரகர் குருவின் நிலையால் ஜாதகி தனது பொருளாதார வலிமையால் அத்தடையை போக்கிக் கொண்டுவிடுவார் என்பதை குறிப்பிடுகிறது.

உயர் கல்விக்கு ஆராய வேண்டிய சதுர்விம்சாம்சச் சக்கரத்தில் லக்னம் நெருப்பு ராசியாக அமைந்து, உயர் கல்வியை குறிப்பிடும் 9 ஆமிடமான தனுசும் நெருப்பு ராசியாகி, 9 ல் சூரியனும்  குருவும் அமைந்ததும், தனித்த புதன் இந்த வர்க்கத்தில் பாதிப்படையாமல் நின்றதும் சிறப்பு. இங்கு புதன் மருத்துவத்தின் தனிச் சிறப்பான கிரகங்களான ராகு-கேதுக்களை நோக்கி நகர்கிறார். அவர்கள்  புதனை நோக்கி வருவது ஜாதகி உயர் கல்வியில் மருத்துவத்தை தேர்வு செய்வதற்கு சிறந்த அமைப்பாகும். இனி தசா-புக்திகள் மட்டும் சாதகமாக நடந்தால் ஜாதகி மருத்துவம் பயில்வார். ஜாதகிக்கு லாப ஸ்தானமான கும்பத்தில் நிற்கும் ராகு தசையில், உடன் நிற்கும் கேது புக்தியில் மருத்துவம் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டது. லாப ஸ்தானத்தில் நிற்கும் ராகுவும், கேதுவும்  உயர் கல்வியை குறிப்பிடும் 9 ஆமிட குருவின் பூரட்டாதியில்தான் நின்று தசை-புக்தி நடத்துகிறார்கள். இவை அனைத்தும் ஜாதகி உயர் கல்வியில் மருத்துவம் பயில சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தும். ராகு-கேதுக்களுக்கு வீடு கொடுத்த சனி 1-8 அதிபதி செவ்வாயுடன் இணைந்து 2 ஆமிடத்தில் சந்திரனின் ரோஹிணியில் நிற்கிறார். இது வெளிநாட்டில் இருக்கும் ஜாதகி உயர் கல்வி பயிலும் காலம் ஒரு பாதிப்பை எதிர்கொண்டு தனது தாய்நாட்டிற்கு திரும்பி கல்வியை தொடர்வார் என்பதை குறிக்கிறது.  

ராசிச் சக்கரத்தில் உயர் கல்வி பாவகமான 9 ஆமிடத்தில் புதன் நீசமானத்தை கவனிக்க. இது ஜாதகி உயர் கல்வி பயிலும் சூழலில் ஒரு பாதிப்பு வரும் என்பதையும், அங்கு ஆட்சி பெற்ற குருவால் புதன் நீசம் பங்கப்பட்டது அந்த பாதிப்பு விலகிவிடும் என்பதையும் முன்பே பார்த்தோம்.   இந்த ஜாதகி வெளிநாட்டில் 11 ஆம் வகுப்பு வரை படித்தவர், அங்கு மருத்துவம் பயில சாதகமான சூழல் இல்லாததால் 12 ஆம் வகுப்பை தாய் நாடான இந்தியாவில் படித்து சிறப்பாகத் தேறினார். அதன் பிறகு NEET தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்வானவர். தற்போது ஆங்கில மருத்துவத்தில் MBBS இறுதியாண்டு படித்துக்கொண்டுள்ளார்.

கீழே மற்றொரு ஜாதகம்.

கடந்த ஜாதகத்திலும் இந்த ஜாதகத்திலும் உள்ள முக்கியமான வேறுபாடு முந்தைய ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் வலுவாக இருந்தார். புதன் நீசபங்கப்பட்டிருந்தார். ஆனால் இந்த ஆணின் ஜாதகத்தில் லக்னாதிபதியான புதன் நீசத்தில் நிற்கிறார். அவர் நீசபங்கப்படவில்லை. ஆனால் உயர்கல்வி பாவாகமான 9 ஆமதிபதி சனி மேஷத்தில் நீசபங்கப்பட்டுள்ளார். கால புருஷ 9 ஆமதிபதி குரு இங்கு தனுசுக்கு மூன்றிலும் மீனத்திற்கு 12 இலும் மறைந்துவிட்டார். லக்னம் இங்கு வாயு ராசியானதாலும் மருத்துவம் பயிலும் அமைப்பே இங்கு இல்லையா? என்ற கேள்வி எழலாம். லக்னாதிபதி வலுவிழந்து ராசி உச்ச பலத்துடன் எழுந்து நிற்பதை கவனிக்க. லக்னாதிபதி வலுவிழந்தது இந்த ஜாதகர் முதலில் பார்த்த ஜாதகி போல வசதி வாய்ப்புள்ள குடும்பத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்பதை குறிப்பிடுகிறது. அதே சமயம் நெருப்பு ராசியான மேஷத்தில் நெருப்பு கிரகங்களான சூரியன் செவ்வாயுடன் சனியும் சந்திரனும் அமையப்பெற்றதால் இவர் தனக்கான வாய்ப்புகளை தானே உருவாக்கிகொள்வார். அதாவது சாதாரணப் பின்னணியில் பிறந்திருந்தாலும் தனது கடும் முயற்சியால் வாழ்வின் உச்சத்திற்கு செல்வதற்கான தகுதிகளை தானே உருவாக்கிக்கொள்வார் என்பதையே ராசி வலுவானது குறிப்பிடுகிறது. ராசியின் திரிகோணமான சிம்மத்தில் மருத்துவ கிரகங்களுள் விசேஷமான ராகு நிற்பது மிகச் சிறப்பு. ராசியின் மூன்றாவது திரிகோணாதிபதி குரு லாப ஸ்தானத்தில் ராகு-கேதுக்கள் தொடர்பில் 5-12 அதிபதி சுக்கிரனுடன் இணைந்து நிற்பது ஜாதகர் உயர் கல்வியில் மருத்துவம் பயில சிறப்பான அமைப்பாகும். கால புருஷனுக்கு 12 ஆமிடத்தில் லக்னாதிபதி புதன் நீசமாகி, 5-12 அதிபதி சுக்கிரன் லக்னத்திற்கு 9 ல் நிற்பது ஜாதகர் தனது உயர் கல்வி வாய்ப்புகளுக்காக விடுதியில் தங்கிப் படிக்கும் அமைப்பை சுட்டிக்காட்டும்.

உயர் கல்வி வாய்ப்புகளுக்கான சதுர்விம்சாம்சத்தை ஆராய்ந்தால் இவர் மருத்துவம் பயில என்ன காரணம்? என்பது மேலும் எளிதாகப் புரிகிறது. கால புருஷனுக்கு உயர் கல்வியை குறிப்பிடும் தனுசே லக்னமாக அமைந்தது மிகச் சிறந்த அமைப்பு. ராசிச் சக்கரத்தில் நீசமான புதன், சதுர்விம்சாம்சத்தில் தனுசு லக்னத்திற்கு 1௦ ல் உச்சம் பெற்று அங்கு திக்பலம் பெற்ற செவ்வாயுடனும் சனியுடனும் இணைந்து நிற்கிறார். இவர்களை வித்யா ஸ்தானமான மீனத்திலிருந்து லக்னாதிபதி குரு தனது நேர் பார்வையால் புனிதப்படுத்துகிறார். ராசியில் நீசமான புதன் இங்கு வலுவானது ஜாதகரை கல்வி விஷயத்தில் புதன் பாதிக்கமாட்டார் என்பதை குறிப்பிடுகிறது.  லக்னம் நெருப்பு ராசியான தனுசாக அமைந்து, நெருப்பு கிரகங்களான 7 ஆமிட சூரியனாலும், 1௦ ஆமிட செவ்வாயின் 4 ஆம் பார்வையை பெறுவதாலும் இவர் மருத்துவம் பயில சதுர்விம்சாம்சம் நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது. உயர் கல்வி பாவகாதிபதியான சூரியன் இங்கு 1௦ ஆமிடம் கன்னிக்கு திக்பலத்தில் அமைந்துள்ளார் என்பதையும் 9 க்கு லாபத்தில் நிற்கிறார் என்பதையும் கவனிக்க. தசா-புக்திகள் சாதகமாயின் இவர் மருத்துவம் பயிலலாம். ஜாதகர் சந்திர தசையில் ஆங்கில மருத்துவத்திற்கு தேர்வாகி பயின்றார். முயற்சி ஸ்தானமான மூன்றாமிடத்தில் நிற்கும் சந்திரன் 1௦ ல் திக்பலம் பெற்ற செவ்வாயின் அவிட்டம்-3 ல் உள்ளார். இது ஜாதகர் மருத்துவம் பயில வாய்ப்பை வழங்கும். 1௦ ல் திக்பலம் பெற்ற நெருப்புக் கிரகம் செவ்வாய் உயர் கல்வியை குறிப்பிடும் 9 ஆமதிபதியான மற்றொரு நெருப்புக் கிரகம் சூரியனின் உத்திரம்-4 ல் நிற்கிறார் என்பதும் இவர் உயர்கல்வியில் மருத்துவம் பயில சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. ஜாதகர் தற்போது செவ்வாய் தசையில் உள்ளார். செவ்வாய் இரட்டை கிரகமான புதனோடு இணைந்துள்ளதாலும் செவ்வாயின் சாரநாதர் சூரியன் இரட்டை ராசியான மிதுனத்தில் நிற்பதாலும் ஜாதகர் தற்போது இளங்கலையில் MBBS முடித்து முதுகலையில் MD Radio Diagnosis பயின்றுகொண்டுள்ளார். இரட்டை கிரக மற்றும் ராசித் தொடர்புகள் ஜாதகருக்கு ஒன்றிக்கு மேற்பட்ட பட்டங்கள் பயில வாய்ப்புகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே புதன் நீசமானது ஒருவருக்கு எந்த விதத்தில்  தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தேர்ந்த ஜோதிடர்களிடம் ஆலோசித்து உயர்கல்வி வாய்ப்புகளை ஒருவருக்கு ஏற்படுத்தித் தரலாம். கல்வி, காதல், வாக்கு, தாய்மாமன், காலி நிலம் போன்ற பல புதனின் காரகங்களில் எது பாதிக்கும் என்பதை அளவிட்டுவிட்டால் அதனை முன்னிட்டு கல்வியை தேர்தெடுப்பது சிறப்பு. ராசிச் சக்கரத்தில் புதன் வலுக் குன்றியது கல்வியில்தான் பாதிக்கவேண்டும் என்று அவசியமில்லை.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English