பணம் ஒரு நல்ல வேலைக்காரன் ஆனால் மோசமான முதலாளி என்றொரு கூற்று உண்டு. மனிதன் உயிர் வாழ பொருள் ஈட்டுவது இன்றியமையாதது. பொருளாதாரம் மனித வாழ்வை வளப்படுத்துகிறது. இன்றைய பொருளாதார உலகில் குடும்ப உறவுகள் பொருளாதாரத்தை முன்னிட்டு பாதிப்பிற்கு உள்ளாகின்றன. பற்றாக்குறை பொருளாதாரத்தினால் அல்லது அதீத பொருளாதாரத்தால் குடும்பம் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவு பெருகிவரும் மணவாழ்க்கை பாதிப்புகள். இவை இரண்டையும் சமமாக கையாள்வது ஒரு கலை. கையாளத் தெரிந்தவர்கள் வாழ்வை வாழ்கிறார்கள். கையாளத் தெரியாதவர்கள் வாழ்வை கடக்கிறார்கள் என்பதே உண்மை.
ஜோதிடத்தில் தன ஸ்தானம் எனும் 2ம் பாவம் குடும்பத்திற்கான ஒருவரின் சம்பாத்தியத்தை குறிப்பிடுகிறது. 2 ன் திரிகோணமாகிய 6 ஆம் பாவம் ஒருவர் வேலை செய்து சம்பாதிப்பதை கூறுகிறது. 2 ன் மூன்றாவது திரிகோணமாகிய 1௦ ஆம் பாவம் ஒருவர் தொழில் செய்து பொருளீட்டுவதை குறிப்பிடுகிறது.
உலக தனவந்தர்களில் முதல் 1௦ இடங்களில் இருக்கும் இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானியின் ஜாதகம் இது. 2 ஆமிட வக்கிர சனியை 8 ல் இருந்து 2 ன் அதிபதி செவ்வாய் பார்க்கிறார். 8 ஆமிடத்தில் இருந்து பார்க்கும் கிரகத்திற்கு குரூரத்தன்மை அதிகம். அது தனது பாவமாகவே இருந்தாலும் 2 ஆமிடம் குறிப்பிடும் தனவரவு மற்றும் குடும்ப உறவுகளை பாதிக்கும் அமைப்பே செயல்பட வேண்டும். ஆனால் இவரது குடும்ப உறவும், பொருளாதார வளமும் சிறப்பாகவே உள்ளது. இரண்டையும் சிறப்பாகவே கையாள்கிறார். வக்கிர சனி தனது உச்ச வீடான லக்னம் துலாத்தை நோக்கி வருகிறார். பாதக ஸ்தானத்தில் அமைந்த வக்கிர குரு தனது உச்ச வீடான 1௦ ஆமிடத்தை நோக்கி நகர்கிறார். இவை இரண்டும் முக்கிய காரணங்களாகும். முதல் தன திரிகோணம் 2 ல் மட்டும் சனி உள்ளது. 6, 1௦ ல் கிரகங்கள் இல்லை. இவர் எப்படி உலகின் முதல் தர தனவந்தர்களின் வரிசையில் இடம் பிடித்தார் என்ற கேள்வி எழும். 2, 6, 1௦ பாவங்கள் தன திரிகோணங்கள் என்ற வரிசையில் வந்தாலும் லாப பாவமான 11 ஆமிடத்தை சார்ந்தே இம்மூன்று பாவங்களும் இயங்கும். லாப பாவத்தில் உள்ள தனகாரகர் குரு, அதிக பாகை பெற்ற ஆத்மகாரகராகி அதன் அதிபதி சூரியன் உச்சம் பெற்றுள்ளார். லாபபாவ குரு, பாகை அடிப்படையில் லக்னம், ராகு, கேதுக்களுடனும் செவ்வாயுடனும் நெருக்கமாக உள்ளதை கவனியுங்கள். பாகை நெருக்கம் ஒருங்கிணைந்து செயல்பட வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குரு சாரம் பெற்ற ராகு தசையில்தான் இவர் விஸ்வரூபம் எடுத்தார். தற்போது குரு தசையில் உள்ளார். குரு பாதக ஸ்தானத்தில்தானே உள்ளார் பாதகத்தை செய்ய வேண்டுமே என்று நினைக்கலாம். உண்மையில் குரு தசை துவங்கிய பிறகே உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்தார். காரணம், ஜாதகத்தில் உள்ள செவ்வாய்-சுக்கிர பரிவர்த்தனை.
கூட்டு கிரக சேர்க்கையில் உள்ள சுக்கிரன் இங்கு பரிவர்த்தனை பெறுகிறார் என்பது கவனிக்கத்தக்கது. இதனால் சுக்கிரன் பரிவர்த்தனைக்கு முன் தான் இணைந்திருந்த கிரகக்கூட்டின் குணத்தை பெற்றிருப்பார். அதாவது சுக்கிரன் தன்னுடன் தனது கூட்டணி கிரகங்களையும் ரிஷபத்திற்கு பரிவர்த்தனை ஆனவுடன் அழைத்து வருகிறார் என எடுத்துக்கொள்ளலாம். (வட இந்தியாவில் இக்கூற்றை ஜோதிடர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். தென் இந்தியாவில் நமது ஜோதிடர்களில் பெரும்பாலோனோர் இக்கூற்றை ஆதரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) பரிவர்த்தனையால் பாதகாதிபதி சூரியன் 8 மறைந்து வலு குன்றுகிறார். பாக்ய விரையாதிபதி புதன் 8 மறைந்து விபரீத ராஜ யோகத்தை தருகிறார் (12 ஆமதிபதி 8 ல் மறைவதால்). இதனால் தனது தந்தையின் மறைவிற்கு பிறகே ஜாதகர் உயர்வை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பரிவர்த்தனைக்குப் பிறகு கால புருஷனின் தன ஸ்தானமான ரிஷபத்தில் அதிக கிரகங்கள் நின்று லக்னத்தின் முதல் தன திரிகோணத்தை பார்க்கின்ற அமைப்பே இவர் உலக தனவந்தர்கள் வரிசையில் முன்னிலை பெற வழி வகுத்தது. பரிவர்த்தனைக்குப் பிறகு மனைவியை குறிக்கும் சுக்கிரனும் களத்திர பாவாதிபதி செவ்வாயும் ஆட்சி பெறுகிறார்கள். இதனால் மனைவி வழியில் ஜாதகருக்கு பாதகமில்லை. ஆனால் செவ்வாய்க்கு பரிவர்த்தனையால் பாதகாதிபதி சூரியன், கேது, விரையாதிபதி புதன் இவர்கள் தொடர்பு ஏற்படுகிறது. இதனால் மனைவி மூலம் ஜாதகருக்கு ஏற்படவேண்டிய தோஷம் சகோதரனுக்கு இடம் மாறிவிட்டது. இதனால் இவரது தம்பி அனில் அம்பானி பாதிப்பை சந்தித்தார்.
இது ஒரு ஆணின் ஜாதகம். 2 ஆம் பாவத்தில் லக்னாதிபதி சுக்கிரன் இருப்பது சிறப்பு. ஆனால் பாதக ஸ்தான செவ்வாய் பார்வை பெறுவது வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். 6 ஆம் பாவத்தில் கிரகங்கள் இல்லை என்றாலும் பாதக ஸ்தான செவ்வாயின் 8 ஆம் பார்வையை பெறுவதும், விரைய பாவ கிரகங்களின் பார்வையை கால புருஷ விரைய பாவமான 6 ஆமிடம் மீனம் பெறுவதும் சிறப்பல்ல. இதனால் தனவரவு பாதிப்படையும். விரையங்கள் அதிகரிக்கும். 2 ன் மூன்றாவது திரிகோணம் கடகத்தில் சந்திரனும் ராகுவும் இருப்பது தனவரவில் நூதன மற்றும் தடைகளுடன் கூடிய தனவரவை குறிப்பிடும். பெரும்பாலான கிரகங்கள் மோட்ச பாவங்களான நீர் ராசிகளை தொடர்புகொள்வதாலும், லக்னத்திற்கு 12 ஆம் பாவத்தையும், கால புருஷ 12 ஆம் பாவம் மீனத்தையும் தொடர்புகொள்வதாலும் எளிய திருக்கோவில் ஒன்றின் அர்ச்சகராக இருக்கிறார். ஜாதகர் வளமைக்கு பெயர் பெற்ற லக்னாதிபதி சுக்கிரனின் தசாவில்தான் இருக்கிறார். ஆனால் சுக்கிரன் பாதக ஸ்தான கிரக பார்வையை பெறுவதாலும், சுக்கிரனுக்கு திரிகோணத்தில் ராகு இருப்பதாலும் வருமானத்தில் தடைகளுடன் கூடிய நிலையிலேயே உள்ளார். குடும்ப வாழ்வும் அமைந்து பாதிக்கப்பட்டுவிட்டது. 2, 6, 1௦ பாவங்களை கிரகங்கள் தொடர்புகொன்டாலும் ஜாதகத்தில் கிரகங்களின் அமைவு சாதகமாக இல்லாததால் வளமையான தசாவிலும் ஜாதகர் பாதிக்கப்படுகிறார்.
இந்தப் பெண்மணியின் ஜாதகத்தில் தன ஸ்தானத்தில் எந்த கிரகமும் இல்லை. இரண்டின் முதல் திரிகோணம் 6 ஐ சூரியன் பார்க்கிறார். இதனால் ஜாதகியின் பொருளாதாரத்தில் சூரியன் பங்கு இருக்கும் என்பது நிச்சயம். 2 ன் மூன்றாவது திரிகோணம் 1௦ ல் செவ்வாய் திக்பலத்தில் இருந்து லக்ன சந்திரனை நீசபங்கப்படுதுகிறார். சூரியனின் வீட்டில் செவ்வாய் திக்பலம் பெற்றதால் சூரியன் தனது நீசத்தில் இருந்து விடுபடுகிறார். இவர் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை. இந்த ஜாதகத்தில் 1, 5,1௦,11, 12 ஆகிய பாவங்களில் கிரகங்கள் அமைந்துள்ளன. 12 ஐ தவிர மற்றவை நல்ல பாவங்கள். இதனால் ஜாதகி நன்கு சம்பாதிக்கிறார். குடும்பம் சிறப்படைகிறது. இந்த ஜாதகத்தில் கிரக அமைவுகள் சிறப்பாக இருப்பதால் எந்த தசா-புக்தி வந்தாலும் பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பில்லை.
கல்வி மற்றும் உயர்கல்வி பாவாதிபதி (4, 9 ஆமதிபதி) செவ்வாய் திக்பலம் பெற்று 1௦ அமைந்துள்ளார். இது நல்ல கல்வியையும் நல்ல சம்பாத்தியத்தையும் குறிப்பிடுகிறது. 2 வது தன திரிகோணமான 6 ஆமிடம் அதிக கிரகங்களின் தொடர்பை பெறுகிறது. இதனால் சிறந்த சம்பாத்திய சிறப்பு பெற்ற ஜாதகம். 6 ஆமிடம் என்பது 1௦ ஆமிடத்திற்கு பாக்ய ஸ்தானம் என்பது குறிப்பிடத்தக்கது. களத்திர பாவமான 7க்கு விரைய பாவம் 6 ல் அதிக கிரகங்கள் இருப்பதால் 7ம் பாவமும் அங்குள்ள சுக்கிரனும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. ஜாதகரின் செல்வச்செழிப்பு தந்த அதிகார போதை குடும்ப வாழ்வு பாதித்து மணமுறிவுக்கு வழிவகுக்கிறது. ராசிக்கு 2 ல் இச்சேர்க்கை அமைந்துள்ளது ராசிக்கு நெருக்கமாக கோட்சாரத்தில் சனி, ராகு-கேது போன்ற கடும் கிரகங்கள் வரும்போது ஜாதகர் சம்பவங்களை சந்திப்பார். அதன்படி ராசியில் சனியும் கேதுவும் கோட்சாரத்தில் வந்தபோது திருமணம் நடந்து, மணமுறிவும் தற்போது ஏற்பட்டுவிட்டது. 12 ஆமிட குருவோடு பரிவர்த்தனையான விரையாதிபதி சந்திரன் 5 ஆமிடத்தையும், பிரிவினை பாவமான 8 ஆமிடத்தையும் ஆளுமை செய்வார் என்பதால் சந்திர தசை, ஜாதகருக்கு திருமணத்தை செய்வித்து மணமுறிவையும் வழங்கிவிட்டது. முதலில் பார்த்த முகேஷ் அம்பானியின் ஜாதகத்தில் பரிவர்த்தனை ஜாதகரை உயர்த்தி பாதிப்பை சகோதரனுக்கு கொடுத்தது என்றால், என்றால் இந்த ஜாதக பரிவர்த்தனை செல்வ வளத்தை கொடுத்து பாதிப்பை மனைவி வழியில் கொடுத்துவிட்டது.
செல்வ வளம் அனைத்தையும் தரும் என்று எண்ணுபவர்களுக்கு கடைசி ஜாதகம் ஒரு எச்சரிக்கை. இன்று மணமுறிவை சந்திப்பவர்களில் பொருளாதார வளம் குறைந்தவர்களைவிட, பொருளாதார வளம் அதிகம் பெற்றவர்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501