ரங்க ராட்டினங்கள்!

மனித வாழ்வு பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே வாழ்வில் மாறாதது. மாற்றங்களை சந்திக்க தயங்குபவர்கள் வாழ்வில் பின் தங்கி விடுவர். சாதாரணமான மாறுதல்களை அனைவரும்  எதிர்கொள்வர். ஆனால்  எதிர்பாராமல் புயல் போல வாழ்வை புரட்டிப் போடும் புதையல், லாட்டரி, மரணம், பிரிவினை போன்ற அபூர்வமாக மாற்றங்களையும் அனைவரும் ஒரு காலத்தில் சத்திப்பர். ஆனால் ஒருவர் அத்தகைய மாற்றங்களை தனது வாழ்வில் பல முறை எதிர்கொள்வது, பலமுறை செத்துப்பிழைப்பதற்குச் சமமாகும்.  அத்தகைய பல மாறுதல்களை சந்திக்கும் ஒரு சாதாரண மனிதன், வாழ்வின் புதிர்களை எண்ணி திக்குமுக்காடுகிறான். ரங்க ராட்டினங்களில் மேலும் கீழும் சென்று வரும் மனிதர்களுக்கு ஒப்பானது இவர்களின் வாழ்வு. பின்வரும் ஒரு உதாரணம் மூலம் இதை விளக்கலாம். 

ஒருவர் படகுச் சவாரி செய்கிறார். துரதிஷ்டவசமாக, படகில் ஓட்டை விழுந்துவிட்டது. அதிஷ்டவசமாக அவருக்கு நீச்சல் தெரியும். துரதிஷ்டவசமாக அவர் அன்று மது அருந்தி இருக்கிறார். அதிஷ்டவசமாக அவர் இருக்கும் இடத்திலிருந்து கரை அருகில்தான் இருக்கிறது. துரதிஷ்டவசமாக அணையில் இருந்து புதிதாக திறந்துவிட்ட நீர் பெருக்கெடுத்து வருகிறது. அதிஷ்டவசமாக அருகில் மற்றொரு படகில் சிலர் இருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக அவர்கள் வெள்ள அபாயத்திலிருந்து தங்களை  காப்பாற்றிக்கொள்ள  இவரது கோரிக்கையை நிராகரித்து கரைநோக்கி விரைகிறார்கள். அதிஷ்டவசமாக நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பாதுகாவலர்கள், இயந்திரப் படகொன்றில் விரைந்து வந்து அவரை காப்பாற்றுகிறார்கள். இவ்வாறு பல்வேறு திடீர் திகில் திருப்பங்களுக்கு ஒரே ஜாதகத்தில் இருக்கும் பல பரிவர்த்தனைகள் காரணமாகின்றன. இத்தகையோர் வாழ்வில் யாராலும் பெற இயலாத அனுபவங்களை பெறுகின்றனர் என்பது மறுக்க இயலாத உண்மை. இதை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவு. 

ஜாதகர் 1947 ல் பிறந்தவர். ஜாதகத்தில் மொத்தம் 3 பரிவர்த்தனைகள் உள்ளன. குருவும் சுக்கிரனும் மற்றும் சனியும் சந்திரனும் ராசிப்பரிவர்த்தனை. புதனும் சுக்கிரனும் நட்சத்திர பரிவர்த்தனை. சந்திரன் மகரத்தில் சுய சாரமான திருவோணம்-4 ல் நிற்கிறார். ஜாதகர் கல்வி முடித்த காலத்தில் வேலை பாவமான 6 ஆமிட உச்ச ராகு தசை நடப்பில் இருந்தது.  ராகு 2 ல் நிற்கும்  சந்திரனின் ரோஹிணி-1 ல் நிற்கிறார். இரண்டாமிடம் என்பது உள்ளூர் வாழ்க்கை, வருமானம்,  குடும்பம் ஆகியவற்றை குறிக்கும். 8 ஆமிடம் என்பது மறைவிடம் எனபதால் கண்காணாத இடத்தில் மறைந்து வாழ்வதை குறிக்கும். ஜாதகத்தில் 2 – 8 பாவ கிரகங்கள் சந்திரனும், சனியும் தங்கள் சுய சாரம் திருவோணம் மற்றும் பூசத்தில் உள்ளனர். சந்திரன் இட மாற்றத்தையும், சனி வேலையையும் குறிக்கும் என்பதால் ராகு தசாவில் ஜாதகருக்கு வேலை கிடைத்து சொந்த ஊரை விட்டு ராணுவத்தில் சேர்ந்தார். ஜாதகருக்கு வேலை கிடைத்ததும் இடம் பெயர்வது என்பது சனி-சந்திர பரிவர்த்தனையால் ஏற்பட்டது.  ராசிக்கு 1௦ ஆமிடத்தை உச்ச சூரியன், செவ்வாய், புதன் மற்றும் ராகு பார்ப்பதால் இவர் ராணுவத்தில் பணியாற்றினார். மேஷத்தை நோக்கி வரும் ராகு மேஷத்தில் உள்ளதாகவே எடுத்துக்கொள்ளலாம். ராகு 2 ஆமிட சந்திரன் தொடர்பு பெறுவதால் ஜாதகருக்கு திருமணத்தையும் செய்து வைத்தார். ஜீவன காரகர் சனிக்கு 1௦ ஆமிடத்தில் செவ்வாய், சூரியன், புதன், ராகு இணைவும், சனி- செவ்வாய் பரஸ்பர பார்வையும் ஜாதகர் ராணுவத்தில் பணியாற்றுவதை குறிக்கிறது என்பதை கவனிக்க. ஜாதகர் வளமையான காலத்தில் இருப்பதை இக்காலம் குறிப்பிடுகிறது.

ஜாதகருக்கு ராகு தசை முடிந்து குரு தசை துவங்குகிறது. குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை ஆகிறார்கள் என்பதால் ஜாதகரின் வாழ்க்கைச் சூழல் மாறுகிறது. ராகு குரூரர் என்பதாலும் சூரியன், புதன், செவ்வாயோடு முதலில் இணைகிறார் என்பதாலும் ஜாதகர் ராணுவத்தில் வேலை செய்தார். ஆனால் குரு பரம சுபர் என்பதாலும், அவர் உச்ச சுக்கிரனுடன் பரிவர்த்தனை ஆகிறார் என்பதாலும் ஜாதகர் ராணுவத்தை விட்டு விலகி குரு குறிக்கும் சாத்வீக வேலைக்கு செல்ல வேண்டும். பரிவர்தனைக்கு பிறகு குரு சுக்கிரன் நிற்கும் புதனின் சாரத்திலே சென்று அமர்ந்து 1௦ ஆமிடத்தை பார்க்கிறார் என்பதால் இது உறுதியாகிறது. ஜாதகத்தில் சூரியன்-புதன் சேர்க்கையால் தர்ம கர்மாதிபதி யோகம் செயல்படுகிறது. இதனால் குரு, புதன் சாரத்தில் பரிவர்த்தனைக்கு பிறகு சென்று அமர்வதால், தசா நாதன் குருவை சார நாதன் புதன் இயக்குகிறார். இதனால் ஜாதகர் ஆசிரியர் தேர்வில் வென்று அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்கிறார். ஆனால் குரு சென்று அமர்வது 7 ஆமதிபதி புதன் நீசமாகும் இடம் என்பதாலும் இது மனைவியின் உடல்நலத்தை பாதிக்கிறது. குரு லக்னாதிபதி எனும் வகையில் ரங்க ராட்டினத்தில் உயரே ஜாதகர்  சென்றார் என்றாலும், மனைவியின் உடல் நலம் வகையில் ராட்டினம் கீழே ஜாதகரை இறக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஜாதகர் உத்தியோக உயர்வுகளில்  சிரிக்கிறார். குடும்பத்தில் அழுகிறார். 

ஜாதகருக்கு இப்போது குரு தசை முடிந்து கர்ம காரகர் சனி தசை துவங்குகிறது. குருவும் சுக்கிரனும் 4, 11 ஆகிய இரு சுப ஸ்தான  பரிவர்த்தனை என்பது பகை கிரக பரிவர்த்தனை என்பதையும் மீறி சுப கிரகங்களின் பரிவர்த்தனை என்பதால் நன்மைகளை அதிகம் செய்தது. ஆனால் சனியும் சந்திரனும் பகை கிரகங்கள் என்பதையும் மீறி 2-8 ஆகிய தொடர்பு கடும் பாதிப்பை செய்கிறது. ஜாதகரின் வாழ்க்கை சூழலை தசாநாதன் சனி தற்போது மாற்றி அமைக்கிறார். 8 ஆமிட சனி, பிரிவினை இழப்பு என்ற வகையில் கடும் பாதிப்பை தருகிறார்.  சனி தசா புதன் புக்தியில், மனைவி மரணிக்கிறார். களத்திர பாவாதிபதியான புக்தி நாதன் புதனும்,  களத்திர காரகர் சுக்கிரனும் நட்சத்திர பரிவர்த்தனை. பரிவர்தனைக்கு பிறகு புதன் நீசமாகிறார். இதனால் புதன் புக்தியில் மனைவி மரணத்தை தழுவுகிறார். ஜாதகரின் வாழ்க்கை மீண்டும் கீழே இறங்கி விடுகிறது. 

பரிவர்த்தனைக்குப் பிறகு சனி 2ஆம் வீட்டில் வந்து ஆட்சி பெறுகிறார். இதனால் சனி 2 ஆமிட பலனை வழங்கியாக வேண்டும். ஒருவருக்கு குடும்ப வாழ்வை இழக்க 8 ஆம் பாவம் செயல்பட வேண்டும். மீண்டும் குடும்ப வாழ்வு அமைய 8  ஆமிடத்தோடு தொடர்புடைய கிரகம் 7 ஆமிடத்தையோ அல்லது 7 ஆம் அதிபதியையோ தொடர்பு கொள்ள வேண்டும் என்பது விதி. பரிவர்த்தனைக்கு பிறகு மகரத்திற்கு வரும் சனி, 4 ஆம் பாவம் மீனத்திற்கு பரிவர்த்தனையாகி வரும் களத்திர பாவாதிபதி புதனை 3 ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் இந்த ஜாதகருக்கு மறு திருமணம் இந்த ஜாதகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்திநாதன் புதன் 5 ஆம் பாவத்தில் இருந்து  4 ஆம் பாவத்திற்கு வருவதை கவனியுங்கள். 5 ஆம் பாவம் காதல், விருப்பம் ஆகியவற்றை குறிக்கும். புதன் காதல் காரகர். 4 ஆம் பாவம் மறு திருமணத்தை குறிப்பிடும் பாவமாகும். மிதுனமும், மீனமும் ஒரு விஷயத்தை இருமுறை செய்யவைக்கும் இரட்டை ராசிகளாகும். புதன் வயதில் மிக இளைய பெண்களை குறிக்கும் கிரகமாகும். சனி வயதில் முதியவரை குறிக்கும் கிரகமாகும். இத்தகைய தொடர்புகளால் ஜாதகர் தன்னைவிட 2௦ வயதிற்கும் மேல் வயதில் குறைவான இளைய, தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியை ஒருவரை புதன் புக்தியிலேயே விரும்பி திருமணம் செய்துகொள்கிறார். ஜாதகரின் வாழ்வு மீண்டும் ராட்டினத்தில் உயரே செல்கிறது.

என்னே கிரக லீலைகள். 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கிரகங்கள்

மாத்தி யோசி!

ஜோதிடத்தில் இயல்புக்கு மாறான கிரகங்கள் என்று ராகு-கேதுக்களையும், அவற்றைப் போலவே  செயல்படும் வக்கிர கிரகங்களையும் குறிப்பிடலாம். இதில் வக்கிரமடையாமல் நேர்கதியிலேயே இயல்புக்கு மாறான குணத்தை பெற்றிருக்கும் ஒரே கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் வக்கிரமானால் இயல்புக்கு

மேலும் படிக்க »
இல்லறம்

செல்வம்!

இன்றைய காலத்தில் பணி அழுத்தம் காரணமாக குழந்தைப் பிறப்பை தள்ளிபோடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். தாங்கள் விரும்பியபோது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம். அதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் இன்றைய நவீன மருத்துவத்தின் மூலம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English