அனைவரும் செல்லப்பிராணிகள் வளர்க்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஒவ்வொரு வீட்டின் பின்கட்டில்களிலும் ஆடுகள், பசுக்கள் எருதுகள், கோழிகள் இவற்றை காவல் காக்க நாய்கள் என ஒரு பண்ணையே அன்றைய கிராமங்களில் தவறாமல் இருக்கும். எளிய வாழ்க்கையில் ஜீவகாருண்யத்துடன் இயற்கையை நேசித்த மனிதர்கள் வசித்த பொற்காலம் அது. தன்னை நேசிக்கும் ஒரு மனிதனால்தான் பிற உயிரினங்களையும் நேசிக்க முடியும். இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது. இந்த உலகில் பிற உயிர்களை நாசம் செய்துவிட்டு மனிதர்கள் மட்டும் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவை எதுவுமின்றி இருந்தால், அதைவிட நரகம் மனிதர்களுக்கு எதுவும் வேண்டியதில்லை. செயலிகள் வழி வாழ்க்கை மனிதர்களிடையே விலங்குகளுடனான தொடர்பை குறைத்துவிட்டது மட்டுமின்றி சக மனிதர்களுடனான தொடர்பையும் ஆத்மார்த்தமாக இல்லாமல் செயற்கையாக மாற்றிவிட்டது. வசதிகளை தந்துவிட்டு மனிதத்தை எடுத்துக்கொண்டுவிட்டது இன்றைய அவசர உலகம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த உலகம் நம் அனைவருக்குமானது. இறைவன் நம்மை ஒரு நோக்கத்திற்காக ஒருங்கினைத்துள்ளார் அதை கண்டுகொள்வோம் என்ற மனோபாவம் வளர வேண்டும். இயற்கையையும் அதன் பிற படைப்புகளையும் ஏற்றுக்கொள்ளவும் சகித்துக்கொள்ளவும் யாருக்கு மனம் இருக்கிறதோ அவர்களுக்கே இந்த உலகில் வசந்தம் நிலைக்கும். பொருளாதாரத்தினால் அனைத்தையும் அடைந்துவிட முடியாது என்ற உண்மை தாமதமாக புரிந்த பிறகே சிலருக்கு பிற மனிதர்களையும் பிற உயிர்களையும் நம்பிக்கையுடன் பார்க்கும் மனோபாவம் வருகிறது. பெரும்பாலோருக்கு இந்த எண்ணம் வருவதேயில்லை. இத்தகையவர்களே இந்த உலகில் நம்பிக்கையற்றவர்களாக திரிகின்றனர்.
என்னிடம் வரும் வாழ்வில் நம்பிக்கையற்ற இத்தையயோருக்கு அவர்களது ஜாதக அமைப்பை பொருத்து மனோதத்துவ ரீதியான பரிகாரமாக பிராணிகள் வளர்ப்பை பரிந்துரைப்பதுண்டு. ஜாதகத்தில் எட்டாமிடம் எதிர்மறையாக தூண்டப்பட்டிருந்தால் அது வெறுப்பு, மறுப்பு, நம்பிக்கையற்ற எண்ணங்களை தரும். நேர்மறையாக தூண்டப்பட்டிருந்தால் அது பல அறிய மறைபொருள் உண்மைகளை தெரிந்துகொள்ள வழிவகுக்கும். இத்தகைய ஜாதக அமைப்புகளை சரி செய்ய 8 ஆமிடம் நேர்மறையாக தூண்டப்பட்டிருந்தால் பிராணிகள் வளர்ப்பை பரிந்துரைக்கலாம். ஒருவர் சக உயிரிக்கு என்ன தருகிறாரோ அதையே திரும்ப பெறுகிறார். செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்பது ஒருவர் சக உயிர்களின் மீது கனிவுடன் இருக்கிறார். என்பதை குறிக்கிறது. இதனால் ஒருவரது கடின மனோபாவம் கனிவடைகிறது. இதனால் குடும்பம், சமுதாயத்தில் அவர் நேசிக்கப்படுகிறார். இன்றைய பதிவில் எத்தகைய ஜாதக அமைப்பினருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பு சிறந்தது. எத்தகைய ஜாதக அமைப்பினர் அதை தவிர்க்க வேண்டும் என்பதை ஆராய்வதே. குறிப்பாக செல்லப்பிராணிகளில் நாய் வளர்ப்பைப்பற்றி மட்டும் இப்பதிவில் ஆராய்வோம். பிற பிராணிகள் வளர்ப்பை எதிர்கால பதிவுகளில் ஆராய்வோம்.
சுக்கிரன் செல்லப்பிராணிகளின் பொதுவான காரக கிரகமாகும். காரக பாவங்கள் 4 ம் அதன் திரிகோணமாகிய 8 ம் ஆகும். கால புருஷனுக்கு 7 ஆமதிபதியான சுக்கிரன் கெட ஒருவர் சக உயிர்களை அணுகும் விதம் சிறப்பாக இருக்காது. செல்லப்பிராணிகள் வளர்ப்பிற்கு ஜாதகத்தில் 1, 2, 4, 8 ஆகிய பாவங்கள் தொடர்பில் இருக்க வேண்டும். குடும்ப பாவமான இரண்டில் நான்காமதிபதி இருந்தாலோ அல்லது நான்கில் 2 ஆமதிபதி இருந்தாலோ அவர்களுக்கு செல்லப்பிராணிகள் வளர்க்கும் அமைப்பு உண்டு. கிரகங்களில் கால புருஷனின் 1, 8 ஆமதிபதியான செவ்வாய், கால புருஷ 4 ஆமதிபதி சந்திரனோடு தொடர்பு இருப்பவர்களுக்கும், செவ்வாய் லக்னத்திற்கு நான்காமிடத்தில் இருப்பவர்களுக்கும் பிராணிகள் வளர்ப்பில் ஈடுபாடு இருக்கும். இத்தகைய அமைப்புகள் ராசியில் இருப்பதைவிட சதுர்த்தாம்ச சக்கரத்தில் (D4) இருப்பது மிகச் சிறப்பு. சதுர்த்தாம்சம் மிகத்துல்லியமாக செல்லப்பிராணிகள் வளர்ப்பிற்கான சூழலை காட்டும்.. தாய்மை குணத்திற்கு உரிய சந்திரன் ஒரு ஜாதகத்தில் சிறப்பாக அமைந்தால் மட்டுமே ஒருவர் செல்லப்பிராணிகளை பிரியமாக வளர்க்க முடியும். ஜோதிடத்தில் செவ்வாய் நாயை குறிக்கும். செவ்வாய்-சனி தொடர்பு வீடு, தோட்டத்தின் காவல் நாய்களை குறிக்கும். செவ்வாய்-சனி-ராகு தொடர்பில் குரு இணைவது ராணுவம், காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மையில் பயன்படுத்தப்படும் நாய்களை குறிப்பிடும்.
இந்த ஜாதகிக்கு 8 ஆமதிபதி செவ்வாய் லக்னத்தில் வந்து அமைந்து லக்னத்திற்கு 4 ஆம் பாவத்தை பார்க்கிறார். இந்த அமைப்பால் இவருக்கு பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் இருக்கும். கேது தசையில் மழலை பருவத்தையும் பருவ வயதில் சுக்கிர தசையையும் கடந்தவருக்கு அடுத்த தசையான சூரிய தசை பரிவர்த்தனையோடு விரைய பாவ தொடர்பும் பெற்றதால் செல்லப்பிராணிகள் வளர்ப்பிற்கான எண்ணத்தை தரவில்லை. சூரியன் சதுர்த்தாம்சத்தில் பிராணிகள் வளர்ப்பிற்குரிய பாவமான 4 ன் விரைய பாவம் 3 ன் அதிபதி என்பதும் சூரிய தசை வரை ஜாதகிக்கு நாய் வளர்க்கும் சூழல் அமையவில்லை. சூரிய தசையை அடுத்து வந்த சந்திரன் லக்னத்திற்கு 8 ல் நின்று, சந்திரனின் பாவாதிபதி செவ்வாய் சந்திரன் சாரம் ஹஸ்தத்தில் லக்னத்தில் நின்றதால் ஜாதகி சந்திர தசை துவங்கியது முதல் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்க்கிறார். சந்திரனும் செவ்வாயும் 1, 8 தொடர்பு நாய் வளர்க்க வைத்தது. தற்போது ராகு தசை நடப்பில் உள்ளது ராகு 4 ஆமிடத்தில் அதன் அதிபதி குருவோடு சுபத்துவ அமைப்பில் இருந்து 8 ஆமதிபதி செவ்வாயின் 4 ஆம் பார்வையை பெறுகிறார். இதனால் ஜாதகி இன்னும் நாய்களை சிறப்பாக வளர்க்கிறார்.
சதுர்த்தாம்சத்தில் 4 ஆமதிபதி புதன் 2 ஆமிடத்தில் அதன் அதிபதி சந்திரனோடு சிறப்பாக அமைந்துள்ளார். இதனால் தனது நாய்களிடம் ஜாதகி தாய்மை குணத்தை வெளிப்படுத்துகிறார். மிதுனம் இரட்டை ராசி என்பதால் ஜாதகி ஒன்றுக்கு இரண்டு நாய்களை வளர்க்கிறார். சதுர்த்தாம்ச லக்னம் சுப கர்த்தாரி யோகத்தில் அமைந்துள்ளது. இதனால் தனது நாய்களை AC யில் குளிரூட்டி தூங்க வைக்கிறார். சந்திரன், செவ்வாய், தற்போதைய தசாநாதன் ராகு ஆகியோர் 2, 4 ஆம் பாவங்களுடன் தொடர்புகொள்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. பாதுகாப்பிற்காக வளர்க்கப்படும் நாய்களுக்கு செவ்வாய்-சனி தொடர்பு இருக்க வேண்டும். சனி ராசிச்சக்கரத்தில் செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் நிற்பது கவனிக்கத்தக்கது. சனி வக்கிர கதியில் இருப்பது நாய் வளர்ப்பில் ஜாதகிக்கு உள்ள தீவிர எண்ணத்தை குறிப்பிடுகிறது.
இவர் ஒரு ஆண். ஜாதகத்தில் பிராணி வளர்ப்பிற்கான முக்கிய பாவமான 8 ன் அதிபதி புதன் லக்னத்திற்கு 2 ல் நீசமாகியுள்ளார். புதனின் கன்னியில் நீசமாகும் சுக்கிரன், புதனின் மற்றொரு வீடான மிதுனத்தில் செவ்வாயுடன் இணைந்து நிற்கிறார். சுக்கிரன், செவ்வாயின் வீட்டோன் நீசமானதால் இந்த ஜாதகருக்கு பிராணி வளர்ப்பு யோகம் இல்லை. மீறி வளர்த்தால் சுக்கிர, புதன் தசா-புக்திகளில் கடும் பாதிப்பை ஜாதகர் அடைவது உறுதி.
லக்னம், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் சதுர்த்தாம்சத்தில் வர்க்கோத்தமத்தில் உள்ளனர். புதன் சதுர்தாம்சத்தில் சுக்கிரனின் நேர் பார்வையில் உள்ளார். ஜாதகருக்கு சுக்கிர தசா நடந்தால் மிதுனம் மற்றும் கன்னி ஆகிய இரு வீட்டு பலன்களையும் சுக்கிரன் வழங்க வேண்டும். சுக்கிரன் 5 ஆமிட பலன்கள் சிறப்புறும் 8 ஆமிடம் சுக்கிரனின் நீச வீடு என்பதால் சுக்கிரன் கன்னி ராசிக்கான பலன்களை வழங்கினால் அது ஜாதகருக்கு பாதகமான பலன்களை வழங்கும். கன்னி ராசி அதிபதி புதன் நீசம் எனும் சூழலில் அது மிக கடினமாகவே இருக்கும். இந்த ஜாதகருக்கு சுக்கிர தசாவில் புதன் புக்தியில் நாய் ஒன்று கடுமையாக கடித்துவிட்டது. ஏறக்குறைய இருபதுக்கும் மேற்பட்ட தையல்கள் ஜாதகருக்கு போடப்பட்டது.
சதுர்த்ததாம்சத்தில் செவ்வாய் 4 ஆம் பாவத்தில் கெட்டாலும் நாய் வளர்க்கக் கூடாது. செவ்வாய் சுபத்துவ அமைப்பில் 8 ஆமிட தொடர்பு நாய் வளர்ப்பிற்கு சிறப்பென்றாலும், அசுப அமைப்பில் 8 ஆமிடம், பாதக, மாரக பாவ தொடர்பு பாதிப்பை வழங்க தசா-புக்திகளின் அடிப்படையில் வாய்ப்பு உண்டு.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501