
காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அபூர்வமாக எந்தக் காலத்திலும் சில விஷயங்கள் மாறுவதேயில்லை. சில காலங்களில் அவை விசேஷமாகக் கவனிக்கப்டுகின்றன. பெரும்பாலான காலங்களில் கவனத்திற்கு வருவதேயில்லை. ஆனால் அவை அனைத்து காலங்களிலும் இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. உதாரணமாக வானிலை இலாக்காவை கூறலாம். புயல் மற்றும் மழைக்காலங்களில்தான் வானிலை அறிவிப்புகள் மக்கள் கவனத்தை கவருகின்றன. விவசாயிகளும், மீனவர்களும் இவற்றை நிதமும் கவனித்துப் பலனடைவது போல அனைவரும் கவனிப்பதில்லை. தற்போது போக்குவரத்து நெரிசல் தொடர்பான அறிவிப்புகள் பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் அனைவராலும் முக்கியமாகக் கவனிக்கப்படுகின்றன. வானிலை மற்றும் போக்குவரத்து நெரிசல் தொடர்பானவற்றில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலுமே முன்னோக்கி அறியும் திறன் அவசியம். நாளைய நமது நாட்களை திட்டமிட அது உதவும். பண்டைய ஜோதிடம் இந்த நூற்றாண்டிலும் அழியாமல் இருப்பதன் காரணம் இதன் எதிர்கால நோக்குதான். எதிர்காலத்தை அறிந்துகொள்வதால் என்ன பயன்?. உதாரணமாக பங்கு வணிகத்தை எடுத்துக்கொண்டால் முதலீடு செய்யவும் அல்லது விலகி இருக்கவும் இந்த முன்னறிவிப்புகள் உதவும். ஒவ்வொரு தொழில் துறையும் அதற்கேற்ற பல சாதக, பாதகங்களை கொண்டுள்ளன. எந்தக் காலத்தில் அவை ஏற்படும் என்று பொதுவாக அத்துறையில் இருப்பவர்கள் ஓரளவு அறிந்திருந்தாலும், அதையும் மீறி எதிர்பாராத பல விஷயங்கள் நடந்துவிடுவதுண்டு. இதுபோன்ற காலங்களில் பேரிடர் மேலாண்மை போல தொழிலும் பல நெருக்கடியான காலங்களை கவனித்து முன் அனுமானித்து செயல்பட ஒவ்வொரு பெரு வணிக, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும் Risk Assessment என்றொரு பிரிவை வைத்துள்ளன. தொழிலில் எந்த அளவு அபாயங்களை எதிர்கொள்ளலாம் என்பதை சரியாக அனுமானித்துவிட்டால், பிறகு துணிந்து செயல்பட்டு சாதிக்கவும், அல்லது கவனமாக பின்வாங்கி நிதானிக்கவும் உதவும். இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.
சரியாக முன்னறிவிப்புகள் கொடுக்கப்பட்டாலும் அவற்றை பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் தொடர்புடையவர்கள்தான். இங்கு நாம் தொழில் துறையில் எக்காலத்திலும் நீடித்திருக்கும் ஒரு பிரிவான Risk Assesment துறையில் ஈடுபட்டுள்ளவர்களைப் பற்றி ஒரு உதாரண ஜாதகத்துடன் ஆராயவிருக்கிறோம்.
கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

பொதுவாக இப்பிரிவு பாதுகாப்பு மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில்தான் அதிக கவனம் பெறுகிறது. இதனால் இப்பிரிவு மனிதவளம் மற்றும் நிதி நிர்வாகம் ஆகியவற்றை சார்ந்தே பெரும்பாலும் இயங்குகிறது. ஜாதகியும் மனிதவளத்துறையின் ஒரு அங்கமாக செயல்படுகிறார். மீன லக்னம் பன்னாட்டு நிறுவன தொடர்பை வழங்கும். ஆறாமதிபதி சூரியன் லக்னத்தில் அமைவதால் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் பணி. தகவல் தொடர்பை குறிக்கும் மூன்றாமதிபதி சுக்கிரன் லக்னத்தில் இருப்பதால் இவர் பணிபுரிவது ஒரு தகவல்தொடர்பு நிறுவனம். எட்டாமதிபதி சுக்கிரன் லக்னத்தில் இருப்பதால் இயல்புக்கு மாறான நுட்பமான விஷயங்களில் ஈடுபடுவார். 6, 8 ஆமதிபதிகள் ஒருங்கிணைந்து லக்னத்தில் இருப்பது நிர்வாகத்தின் பின்னணியில் இருந்து இயங்குவதை குறிக்கும்.
ஜீவன காரகர் சனி 12 ஆமிடத்தில் மூலத்திரிகோணம் பெற்று புதனுடன் இணைவு பெற்றது வெளிநாடு தொடர்புடைய பணியில் திட்டமிடுதல் துறையில் ஜாதகி பணிபுரியும் அமைப்பை குறிப்பிடுகிறது. 9 ஆமிட ராகு புதனின் கேட்டை-2 ல் நிற்பது ஜாதகி தனது பணிக்காக பலதரப்பட்ட தரவுகளை ஆராய்வதை குறிப்பிடுகிறது. லக்னாதிபதி குரு 7 ல் புதனின் உச்ச வீட்டில் வக்கிரம் பெற்று அமைந்திருக்க, புதன் குரு சாரம் பூரட்டாதி-1 ல் நிற்பது தரவுகளை ஜாதகி தேடிச் சென்று திரட்டி ஆராய்வதை குறிப்பிடுகிறது. சனி இங்கு செவ்வாயின் அவிட்டம்-3 ல், 4 ஆமிட செவ்வாய்க்கு திரிகோணத்தில் நிற்பது பணியில் ஜாதகி எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு, அறிவுறுத்தல் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவதை குறிப்பிடுகிறது. பாதுகாப்பை குறிப்பிடும் நான்காமிடத்தில் பாதுகாப்பு, எச்சரிக்கை காரகர் செவ்வாய் கால புருஷனுக்கு பாதுகாப்பு பாவகாதிபதி (4 ஆமதிபதி) சந்திரனுடன் இணைந்து நிற்பது பாதுகாப்பு, எச்சரிக்கை தொடர்பான விஷயங்களை ஜாதகி கையாள்வதை குறிப்பிடுகிறது. சந்திரன் மிதுனத்தில் திக்பலம் பெற்று லக்னாதிபதி குருவுடன் சாரப்பரிவர்தனை பெற்று நிற்பது மிக மிகச் சிறப்பான விஷயம்.
4 ல் திக்பலம் பெற்ற 5 ஆமதிபதி சந்திரன் 9 ஆமதிபதி செவ்வாயுடன் இணைந்து நிற்பது நன்மை. இருவரும் குருவின் புனர்பூஷத்திலேயே நிற்பது ஜாதகிக்கு உள்ள உறுதியான நிலைப்பாட்டை குறிப்பிடுகிறது. செவ்வாயின் நான்காம் பார்வை குருவிற்கு விழுவது கூடுதல் சிறப்பு. 1௦ ஆமிடத்தையும் 1௦ ஆமதிபதியையும் செவ்வாய் பார்ப்பதால் வேலையில் கண்காணிப்பு, எச்சரிக்கை ஆகியவற்றை கையாள்பவராக ஜாதகி இருப்பார். கேது சந்திரனின் ரோஹிணியில் நிற்பது ஜாதகி தனது பணியில் தெளிவான, உண்மையான விஷயங்களை மட்டுமே நம்பி துணிச்சலான முடிவெடுப்பவராகவும், வதந்திகளையும், மேலோட்டமான கருத்துக்களையும் நம்பி செயல்பட மாட்டார் என்பதையும் குறிப்பிடுகிறது. ஆனால் இது ஜாதகிக்கு அதிக மன உழைச்சலையும் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதகி மனித வளத்துறையில் Risk Assessment பிரிவில் பணியாற்றுவது ஏன்? என்பதை தசாம்சம் மேலும் கூடுதல் தெளிவுடன் காட்டுகிறது. சிம்ம லக்னத்தில் லக்னாதிபதி சூரியன் உச்சம் பெற்று நிற்க, லக்னத்தில் புதன் திக்பலம் பெற்று நிற்கிறார். லக்னத்துடன் ராகு-கேதுக்களும், சனி, செவ்வாயும் தொடர்பு பெறுகிறார்கள். புதன் மனிதவளப்பிரிவை குறிப்பிடுகிறார். புதனின் திக்பலமும், லக்னாதிபதி சூரியனின் உச்சமும் ஜாதகிக்கு சாதுர்யத்தையும், விவேகத்தையும் வழங்குகிறது. ராகு-கேதுக்கள் லக்னத்துடன் தொடர்பாவது பாதிப்புகளை ஆராயும் ஜாதகியின் பொறுப்பை குறிப்பிடுகிறது. சனியும் செவ்வாயும் பாதிப்புகளை ஆராய்ந்தறிந்து எச்சரிப்பதை குறிப்பிடுகிறது. 7 ல் திக்பலம் பெற்ற சனி லக்னத்தையும், மேஷத்திலமைந்த லக்னாதிபதியையும் பார்ப்பதால், தனது பணியில் ஜாதகி கவனமாக மற்றும் நிதானமாக பொறுப்பை உணர்ந்து செயல்படுவதை குறிப்பிடுகிறது.
இத்தகைய ஜாதக அமைப்புகள்தான் ஒருவரை Risk Assessment பணியில் ஈடுபடவைக்கும். இத்தகைய அமைப்புகள் ஏதுமற்றவர்கள் இத்துறையில் பணிபுரிந்தால் அவர்களால் இதில் சிறப்பாக செயல்பட இயலாது. அத்தகையவர்கள் முக்கியமான நேரத்தில் தனது பணியில் கவனக்குறைவால் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இதுபோன்ற துறையில் இருந்து விலக்கப்படுவார்கள். இத்தகைய அமைப்புகள் பெற்ற அனைவரும் இத்துறையில்தான் பணிபுரிகிறார்களா? என்பதை அவர்களது தசா-புக்தி கிரகங்களே முடிவு செய்கின்றன. ஜாதகிக்கு நடப்பது புதனின் தசை. இதனால் ஜாதகி இப்பணியில் இருக்கிறார்.
ஜாதக அமைப்புகள் ஒருவரது திறமை எங்கே உள்ளது? என்பதை தெளிவாக்குகின்றன. அதையறிந்து ஒருவர் கல்வியையும், தொழிலையும் தேர்வு செய்தால் வாழ்வில் வெற்றி எளிதில் வசப்படும். ஆனால் இன்றைய பெரு நிறுவனங்களில் சாதரணக் கல்வி பெற்றவர்களைக்கூட உயர்ந்த பொறுப்பான பதவிகளில் அமர்வதை காணமுடிகிறது. காரணம் ஒருவர் எத்தகைய பணிகளில் சிறப்பாக செயல்படுகிறார் என்பதை அவர்களை தொடர்ந்து கவனிக்கும் மனிதவள மேலாளர்கள் கண்டு அவர்களுக்கான பணிகளை ஒதுக்குகிறார்கள். இத்தகைய நேரங்களில் கற்ற கல்வி ஒருவருக்கு பயனற்றதாகிவிடுகிறது. ஆனால் பரிமளிக்கும் செயல்கள் ஒருவருக்கு மதிப்பை ஈட்டித் தருகின்றன என்றால் அது மிகையல்ல. ஜோதிடம் ஒருவரது திறமையையும் அதற்கான கல்வியையும் முன்கூட்டியே அறிவித்து கல்வியும் ,திறமையும் ஒருங்கிணைந்து செல்ல வழி காட்டுகிறது.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501