ஒரு விஷயத்தில் பாதிப்புகளை எதிர்கொள்ளும்போது அதை சரியாக கையாள்வதற்கான ஒரு வழிமுறையை கண்டுபிடிக்க அல்லது உருவாக்க நாம் மனதார முயன்றால்தான் அதற்கான தீர்வும் நம்மை நோக்கி வரும். பரிகாரங்களின் அடிப்படை இதுதான். இப்படி தீர்வை நோக்கி செல்பவர்களில் நான்கு வகையினர் உண்டு. முதலாவது வகையினர் தீர்வைப் பற்றியே சிந்திக்காமல் பிரச்சனைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள். இவர்களை மனதால் பக்குவப்பட்டவர்கள் என எடுத்துக்கொள்ளலாம். பிரச்சனைகளை தாங்கள் வணங்கும் தெய்வத்திடம் விட்டுவிட்டு தங்களது செயல்களை தொடர்பவர்கள் இவ்வகையினர். இரண்டாவது வகையினர் சிரமங்களில் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெளியேற வழி தெரியாமல் அல்லது வழிகளை நாடாமல் மன உழைச்சலோடு இது நமது விதி என்று வாழ்பவர்கள். மூன்றாவது வகையினர்தான் தங்களது பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்வு காண முயல்பவர்கள். இவர்கள்தான் தங்களை மீறி இவ்விஷயம் நடக்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொண்டு அவ்விஷயம் தொடர்பான வல்லுனர்களிடமோ அல்லது ஆலோசகர்களிடமோ செல்பவர்கள். இவர்கள்தான் ஜோதிடர்களிடமும் வருவார்கள். நான்காவது வகையினர் எந்தப்பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அதனோடு மோதி அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த முயல்பவர்கள். இவர்கள் குறிப்பிட்ட அவ்விஷயம் தங்களுக்கு எதிர்மறையான பலன்களை தந்தாலும் சாதாரணமாக விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள். வென்றால் நன்மை தோற்றால் அனுபவம் என்று பிரச்சனைகளை கையாள்பவர்கள் இவ்வகையினர். இவர்கள் ஜோதிடர்களை அபூர்வமாகவே நாடுவர். இப்பதிவில் மூன்றாவது வகையினரை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராயவுள்ளோம்.
ஜாதகர் ஒரு ஆண். மேஷத்தில் ஜனன கால வாகன காரகர் செவ்வாய் மீது கோட்சார ராகு செல்கிறார். ஜனன சந்திரன் மீது கோட்சார கேது செல்கிறார். நடப்பது வாகன பாவகமான 4 ல் கேந்திராதிபத்திய தோஷம் பெற்று நிற்கும் லக்னாதிபதியான குரு தசையில் 3, 8 ஆமதிபதி சுக்கிர புக்தி. அந்தர நாதர் ராகு. கடும் பாவிகளான ராகு கேதுக்களின் நிலை வாகன வகையில் விபத்துகள் மூலம் பாதிப்புகளை தரக்கூடிய நிலையில்தான் கோட்சாரத்தில் உள்ளது. இது ஒருவகையில் கண்ட காலமே. இக்காலகட்டத்தில் இந்த இளைஞர் அடுத்தடுத்த சில விபத்துகளை சந்தித்தார். இதனால் இவருக்கு சர்ப்ப சாந்தி செய்துகொள்வது சிறப்பு என்று கூறியிருந்தேன். அதன்படி வழிபாடுகளை செய்து வருகிறார்கள். தற்போது கோட்சாரத்தில் செவ்வாய், கோட்சார மற்றும் ஜனன ராகுவை கடந்து சென்றுள்ளதால் பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது. அதே சமயம் கோட்சார கேது இன்னும் ஜனன சந்திரனின் பாகையை கடக்கவில்லை. இது தோஷம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதை குறிப்பிடுகிறது. துலாத்தில் ஜனன சந்திரனை நோக்கி வரும் கேதுவை 4 ல் இருந்து 5 ஆவது பார்வையாக பார்க்கும் லக்னாதிபதி குரு ஜாதகருக்கு கேதுவால் வாகன விபத்தில் உயிராபத்து ஏற்பட்டுவிடாதபடி தடுக்கிறார். அதனால் வழிபாடுகளை தொடரும்படி சொல்லப்பட்டது. இதனால் சர்ப்ப வழிபாடு செய்ய தற்போது அதற்கான விசேஷ ஸ்தலங்களில் ஒன்றுக்கு சென்றுவர எண்ணியுள்ளோம் எந்த சர்ப்ப ஸ்தலம் சிறப்பு என்று ஜாதகனின் தந்தையார் கேள்வி கேட்டார்.
திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆகிய மூன்றில் எந்த ஸ்தல வழிபாடு எனது மகனின் உயிராபத்து நீங்க உதவும் என்பதே அவரது கேள்வி. ஆயுள் பயம் பற்றியும் பரிகாரமாக சர்ப்ப வழிபாடு பற்றியும் கேட்க விருட்சிகத்தில் ஜனன கேதுவோடு இணைந்து நிற்கும் கோட்சார சந்திரனை ரிஷபத்தில் இருந்து ராகுவோடு இணைந்த சனி பார்ப்பதுதான் காரணம். சனி=ஆயுள். ராகு=சர்ப்பம். 3,7,11 ஆகியவை பரிகாரங்களை குறிப்பிடும் பாவகங்களாகும். ஜனன லக்னமான மீனத்திற்கு 3 ல் கோட்சார லக்னம் ரிஷபத்தில் அமைந்து அங்கிருந்து கோட்சார சந்திரனை சனி+ராகு பார்ப்பதால் இவர் பரிகாரமாக சர்ப்ப வழிபாடு செய்ய முயற்சிக்கிறார். 3 ஆமிடம் பரிகார பாவகங்களில் ஒன்று. 3 ஆமிடம் முயற்சி. கோட்சார லக்னம் செயல். ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 12 ல் 6 ஆமதிபதி சூரியன், 8 ஆமதிபதி சுக்கிரன் ஆகியோர் இணைவது விபரீத ராஜ யோகமாகும். கோட்சாரத்திலும் சனி கும்பத்தில் கோட்சார சூரியனோடு இணைந்து 10 ஆவது பார்வையாக கோட்சார சந்திரனை பார்ப்பது ஜாதகனின் தந்தை மகனின் ஆயுள் தோஷம் விலக கேட்கும் ஆலோசனையில் உள்ள உண்மையான நோக்கத்தை தெரிவிக்கிறது.
ஆயள் ஸ்தானமான எட்டாமிடம் துலாத்தில் கோட்சாரத்தில் உள்ள கேதுவை, கோட்சார சந்திரன் கடந்து வந்துள்ளதை கவனிக்க. மேஷத்தில் கோட்சாரத்தில் ராகுவோடு இணைந்த சொகுசு வாகன காரகரும், ஆயுள் பாவகாதிபதியுமான சுக்கிரன் துலாத்தை பார்த்த நிலையிலும் கோட்சார சந்திரன் துலாத்தை கடந்து வந்துள்ளது. ஜாதகர் சந்தித்த வாகன வகை உயிராபத்தை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. நீதிமன்றத்தை குறிப்பிடும் துலாத்தில் ஜனன சந்திரனை கோட்சாரத்தில் வழக்கு காரகர் கேது தீண்டுவதால் வக்கீல் கல்வி பயிலும் ஜாதகன் நீதிமன்றம் செல்கையில் வாகன விபத்தை சந்தித்துள்ளார். கோட்சார சந்திரன் 8 ஆமிட கோட்சார கேதுவை கடந்து வந்துள்ளது ஜாதகன் அடைந்த பாதிப்பை தெரிவிக்கிறது. தற்போது கோட்சார சந்திரன் கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் ஜனன கால கேது மீது நிற்பது ஜாதகன் இன்னும் பாதிப்புகளை முழுமையாக கடக்கவில்லை என்பதை தெரிவிக்கிறது. பூர்வ புண்ணியத்தை குறிப்பிடும் 5 ஆமதிபதி சந்திரன் நீசம் பெற்று விருட்சிகத்தில் கோட்சாரத்தில் ஜனன கேதுவோடு நிற்பதால் ஜாதகனுக்கு ஏற்படும் பாதிப்புகள் பூர்வ புண்ணிய தோஷத்தால் ஏற்படுபவை என எடுத்துக்கொள்ளலாம்.
பரிகார ஸ்தலத்தை அனுமானித்தல்.
கோட்சார சந்திரனை ஜனன கால ராகு-கேதுக்கள் பார்ப்பதால் சர்ப்ப வழிபாடு சிறப்பு என்று கூறினாலும் திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆகியவற்றில் எதில் பரிகார வழிபாடு செய்வது என்று குழப்பம் வரும். கோட்சார சந்திரன் கேது மீதுதான் செல்கிறார் என்பதால் கேது ஸ்தலமான கீழப்பெரும்பள்ளத்தில் பரிகாரங்களை செய்வதே சிறப்பு. 9 ஆமிடம் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான செயல்களை தெரிவிக்கும். 9 ஆமிடம் விருட்சிகத்தில் ஜனன கேது மீது கோட்சார சந்திரன் செல்வதை கவனிக்க. விருச்சிகம் நீர் பாயும் ஒரு தாழ்வான ராசியாகும். பெயரிலேயே பள்ளத்தை கொண்டிருக்கும் கீழப்பெரும்பள்ளமே வழிபாடு செய்ய உகந்தது. கோட்சார சந்திரனின் செல்லும் கிரகமான கேதுவின் வழிபாட்டிற்கு முதலிடம் தரப்பட வேண்டும். பார்க்கும் கிரகமான ராகுவிற்கு இரண்டாவது இடம் தரலாம். மேலும் ராகு ரிஷபத்தில் இருந்து கோட்சார சந்திரனை பார்க்கிறார். ரிஷபம் ஒரு சமநிலை ராசியாகும். விருட்சிகமே பள்ளமான ராசியாகும். எனவே கீழப்பெரும்பள்ளம் என்பது இங்கு முதன்மைப்படுத்தப்படுகிறது. விருட்சிகத்தை லக்னத்தில் திக்பலம் பெற்ற கோட்சார குரு 9 ஆம் பார்வையாக பார்ப்பதால் பரிகாரங்கள் கீழப்பெரும்பள்ளத்தில் செய்ய பலனளிக்கும். அதே சமயம் ஜனன ராகுவிற்கு கோட்சார மற்றும் ஜனன கால குருவின் தொடர்பு இல்லை என்பதை கவனிக்க. இவற்றின் அடிப்படையில் பரிகாரங்களை கேது ஸ்தளமான கீழப்பெரும்பள்ளத்தில் செய்ய அறிவுரை வழங்கப்பட்டது.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.