
உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில் இந்தியர் என்ற உணர்வுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாலும், நல்ல ஸ்திரமான, வலுவான அரசியல் தலைமையும் இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லலாம். நல்ல தலைவர்கள் நமது தேசத்தை கல்வியாலும், நவீனத்துவத்தாலும் நம்மை கௌரவமான நிலைக்கு உலக அரங்கில் உயர்த்தியுள்ளனர். உலக நாடுகளை தங்கள் காலனி ஆதிக்கத்தால் கொள்ளையடித்து தங்களை மேலை நாடுகள் வளப்படுத்திக்கொண்டனர் என்றால் அது மிகையல்ல. இங்கிலாந்திடமிருந்து 4 நூற்றாண்டுகளுக்கு முன் சுதந்திரம் பெற்ற அமெரிக்கா உலகின் முன்னணி நாடாக உருவெடுக்க ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளாயின. ஆனால் இன்று இந்தியா சுதந்திரம் பெற்று ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மேலை நாடுகளைப் போல இந்தியா உலகின் எந்த நாட்டையும் கொள்ளையடிக்காமல் தங்கள் உழைப்பால் இந்த நிலையை எட்டியுள்ளது. ஆனால் நமக்கு ஒரு நாள் முன்னதாக சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் உலக அரங்கில் ஒரு ஒதுக்கப்பட்ட நாடாக உலக வங்கியிடமும், தனது நட்பு நாடுகளிடமும் தங்கள் வறுமையிலிருந்து மீண்டுவர பிச்சை எடுத்துக்கொண்டுள்ளது. பெரும்பாலும் ஒரே மதத்தினராக இருந்தாலும் தவறான தலைமை அமையப்பெற்ற தேசங்கள் கல்வியிலும் உழைப்பிலும் பின்தங்கி பாகிஸ்தான் போன்று இன்று உலகின் வறுமைக்கோட்டிற்கு கீழேதான் உள்ளன. இதில் சில நாடுகளுக்கு இயற்கை வளங்களை வாரி வழங்கியிருந்தாலும், தவறான தலைவர்களால் அத்தகைய வளங்கள் பயனற்றதாகி, மக்களை தீவிரவாதிகளாக்கியதன் விளைவாக தற்போது வறுமையினாலும், போரினாலும் பாதிக்கப்பட்டுக்கொண்டுள்ளனர். இத்தகைய தேச மக்களுக்கு உழைப்பு தரும் கௌரவம் தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தீவிரவாதமும் ஏமாற்றுத்தனமும்தான். இத்தகைய ஏமாற்றுத்தனங்கள் இன்றைய நவீன உலகில் நாமனைவரையும் ஆட்டுவிக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காத மேலை நாடுகளாலும், பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, கனடா போன்ற பகை நாடுகளாலும், நைஜீரியா போன்ற வறுமை நாட்டு ஆசாமிகளால் நவீன தகவல்தொடர்பு சாதனங்களைக்கொண்டு நமது தேசத்தின் பொருளாதாரத்தை உருக்குலைக்க சதி நடக்கிறது. இதன் விளைவாக உந்தப்பட்டு நம்மிடையேயும் சிலர் இத்தகைய மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இது பற்றி ஒரு உதாரண ஜாதகத்துடன் ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

அனைத்து கிரகங்களும் கேதுவிலிருந்து ராகுவை நோக்கிச் செல்வதால் இது ஒரு கால சர்ப்ப தோஷ ஜாதகம். 8 ஆமிடம் என்பது இருப்பதிலேயே தீமையான பாவகமாகும். மரணம், அவமானம், விபத்து, தண்டனை, குறைபாடு போன்ற காரகங்களே நல்ல ஒரு சில காரகங்களைவிட இங்கு அதிகம். இந்த ஜாதகத்தில் கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகமே லக்னமாக அமைந்ததும் அதில் சனி அமைந்ததும் தோஷத்தை கடுமையாக்குகின்றன. சனி வக்கிரமடைந்து லக்னத்தில் அமைந்தது ஜாதகர் தனது தவறுகளை திருத்திக்கொள்ளும் மனநிலையை தடுக்கும் அமைப்பாகும். நேர்கதி சனியே தவறுகளை திருத்திக்கொள்ள வைக்கும். லக்னபுள்ளி 8 ஆமதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளதால் ஜாதகருக்கு திருட்டுக் குணம் இயல்பாகவே இருக்கும். மனமும் புத்தியும் கெட்டால்தான் ஒருவர் திருடுவார். சந்திரன் ராகுவோடு இணைந்து குரு பார்வை பெறாததால் ஜாதகருக்கு மனம் கெட்டது. புத்தி ஸ்தானமான 5 ன் அதிபதி குரு, 5 க்கு விரையத்தில் அமைந்ததால் புத்தி கெட்டது. புத்திகாரகரான புதன் இந்த லக்னத்திற்கு 8 ஆமதியும் ஆகி, அவர் 8 ன் திரிகோணமான 4 ஆமிடத்தில், 5 ஆமதிபதி குருவோடு 5 க்கு விரையத்தில் இணைந்ததால் பண விவகாரங்களில் ஜாதகருக்கு புத்தி தடுமாற்றம் ஏற்படும். தொழில் ஸ்தானம் சிறப்பாக அமைந்து நல்ல லாபம் வந்தால் ஒரு ஜாதகருக்கு பெரும்பாலும் திருட்டு எண்ணம் வராது. ஜாதகத்தில் 1௦ ஆமதிபதி சூரியன் 1௦ க்கு 8 ல் மீனத்தில் மறைந்துள்ளார். சூரியன் 8 ஆமதிபதி புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 5 ல் இப்படி நின்றதால் இவர் என்ன தொழில் செய்தாலும் அதில் திருட்டுத்தனமிருக்கும். லக்னாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 2 ல் நட்பு பெற்று அமைந்தது சிறப்பே. ஆனால் 2 ஆமிட செவ்வாயின் திரிகோணத்தில் 6 ஆமிடம் மேஷத்தில் சந்திரன், சுக்கிரனுடன் ராகு அமைந்தது ஜாதகரை பொருளாதார வகையில் தவறுகள் செய்ய ராகு தூண்டுவார். அது ராகு, செவ்வாய் தொடர்புடைய தசா-புக்திகளில்தான் ஏற்படும். ஆனால் இவையெல்லாம் செயல்பட ஜாதகருக்கு தசா-புக்திகள் வர வேண்டும். இல்லையேல் ஜாதகருக்கு மனதில் உள்ள எண்ணம் செயல்பாட்டிற்கு வராது.
உரிய தசா-புக்திகள் வந்து, ஜாதகருக்கு புத்தி கெட்டு, திருட்டுத்தனத்தில் ஈடுபட்டு அதனால் பாதிப்படைவாரா? என்பதை கண்டுபிடிக்க திரிம்சாம்சம் எனும் வர்க்கச் சக்கரம் உதவும். கீழே ஜாதகரது திரிம்சாம்ச சக்கரம்.

திரிம்சாம்ச லக்னம் ராசியைப் போன்றே விருட்சிகமாகி வர்கோத்தமம் பெற்றது ஜாதகரது தீய கர்மாவைவின் தீவிரத்தை உணர்த்துகிறது. லக்னத்தில் 1௦ ஆமதிபதி சூரியன் 8 ஆமதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைய, 8, 11 ஆமதிபதி புதன் 12 ல் அமைந்துள்ளதை கவனிக்க. இது ஜாதகர் தனது தொழில் அறிவை திருட்டுத்தனத்திற்கு பயன்படுத்துவார் என்பதையும் அதனால் ஜாதகர் தொழிலை, கௌரவத்தை இழந்து சிறை செல்வார் என்பதையும் குறிப்பிடுகிறது. லக்னாதிபதி செவ்வாய் 2 ல் வர்கோத்தமம் பெற்று தன கிரகங்களான குரு, சுக்கிரனுடனும் இணைந்தது பணத்தின் மீதான ஜாதகரின் ஈர்ப்பை குறிப்பிடும். ஆனால் அங்கு 2 ஆமிடத்தின் 8 ஆமதிபதியும் சலன காரகருமான சந்திரனும் அமைந்ததால் பண விஷயங்களில் ஜாதகர் மனம்கெட்டு தவறு செய்வார் என்பது உறுதியாகிறது. இவர்களை புத்தி ஸ்தானமான மீனத்தில் 8 ஆமதிபதி புதனின் ரேவதி நட்சத்திரத்தில் நின்று வக்கிரம் பெற்ற சனி 1௦ ஆம் பார்வையாக பார்ப்பது ஜாதகர் தவறு செய்து அதனால் தண்டனை அடைவார் என்பதும் உறுதியாகிறது.
முன்பே பார்த்தபடி செவ்வாய்-ராகு தொடர்புடைய தசா-புக்திகளில்தான் ஜாதகர் திருட்டுத்தனங்களில் ஈடுபடுவார் எனக்கண்டோம். ஜாதகர் செவ்வாய் தசையில்தான் உள்ளார். செவ்வாய் லக்னத்திலமைந்த சூரியனின் உத்திராட நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. இது சம்பவம் செவ்வாய் தசையில் நடப்பதை குறிப்பிடுகிறது. மேலும் செவ்வாயுடன் சேர்த்து 4 கிரகங்கள் 8 ஆமிடத்தை பார்ப்பதால் 8 ஆமிட காரகங்களின்மீது ஜாதகருக்கு அதிக விருப்பமிருக்கும். ராகு குருவின் பூரட்டாதியில் நிற்கிறார். இதனால் ராகு புக்தியில் பணத்தாசையில் தனது திருட்டுத்தனத்தை ஜாதகர் செயல்படுத்துவார் என அனுமானிக்கலாம்.
ஜாதகருக்கு செவ்வாய் தசையின் ராகு புக்தி நடப்பில் இருந்தபோது, online பண மோசடியில் ஈடுபட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பல கடும் முயற்சிகளுக்குப் பிறகு குரு புக்தியில் பெரும் தொகையை நீதிமண்டத்தில் ஈடாக கட்டி தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். 8 ஆமிடத்தின் திரிகோணத்தில் நீதி ராசியான துலாத்தில் 8 ஆமதிபதி புதன் லக்ன விரையத்தில் நிற்பதும், அதன் திரிகோணத்தில் ராகு-கேதுக்கள் நிற்பதும் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஜாதகர் திருட்டுத்தனத்தில் ஈடுபட்டு மோசடியாக லாபமடைந்ததும் அதனால் சிறை சென்றதும் தெளிவாகிறது. 11 ஆமிடம் லாபத்தையும், 8 ஆமிடம் மோசடியையும், புதன் தகவல் தொடர்பையும், ராகு-கேதுக்கள் மின்னணு சாதனங்களையும் குறிப்பிடும் என்பதை அறிக.
இன்று இத்தகையவர்கள் நம்மிடையே அதிகரித்துவிட்டனர். உலகில் அனைத்தும் நவீன வடிவமெடுக்கின்றன. திருட்டு உட்பட. கவனமாக இருக்க வேண்டியது நாம்தான்.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.
அதுவரை தீபாவளி வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501