கால மாற்றத்தில் ஜோதிடமும் மனித வாழ்வின் இடர் களைய புதுப்புது வடிவங்களை எடுக்கிறது. நவீன நுட்பங்களை கையாளுகிறது. திருமணப் பொருத்தத்தில் தாம்பத்திய விஷயங்களை அளவிட நட்சத்திரப் பொருத்தங்களில் யோனிப் பொருத்தம் பிரதானமானது. ஆனால் அது மட்டும் போதுமா? என்றால் பண்டைக்கால வாழ்க்கையும் இன்றைய நவீன கால வாழ்க்கையும் வேறு வேறானவை. எனவே அன்றைய விதிகளை அப்படியே என்று ஏற்பது இன்று அறிவுடமையல்ல. அன்றைய காலத்தில் துணைவரின் மீதான விஷயங்கள் சகித்துக்கொள்ளப்பட்டன. சக மனிதர் மீதான சகிப்புத்தன்மை குறைந்துவரும் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஜோடியின் இசைந்து வாழும் தன்மையை ஆராய நட்சத்திரப் பொருத்தங்களைவிட காலத்திற்கேற்ற மேலும் பல நுட்பங்கள் தேவைப்படுகின்றன. உதாரணமாக மிதுன ராசியினருக்கு அறிவார்த்த, காதல் இயல்பு கொண்ட துணை சிறப்பு. அதுவே மேஷ ராசியினருக்கு துடிப்பான, வேகமான, முன்னேற்றமான இயல்பு கொண்ட துணை சிறப்பு. ஆனால் இவை பொதுவான இயல்புகளே. பொது இயல்புகள் தசா-புக்திகளைப் பொறுத்து மாறுதலுக்குள்ளாகும். குறிப்பாக இன்றைய காலத்தில் தாம்பத்திய விஷயத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் அவை கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சம்பாத்திய சூழலில் நிதானம் காட்டுபவர்கள் கூட தாம்பத்திய வாழ்வில் ஒன்றுபடாவிட்டால் அங்கே இல்லற உறவு எளிதாக பாதிப்பை எதிர்கொள்கிறது. இது பற்றி ஒரு தம்பதியின் உதாரண ஜாதகங்களுடன் ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஓரிரு வருடங்கள் முன்னதாக திருமணமான ஒரு பெண்ணின் ஜாதகம்.
மேஷ லக்ன ஜாதகம் என்பதால் ஜாதகி துடிப்பு மிக்கவராக இருப்பார். சனி லக்னத்தில் திக்பல குருவோடு இருப்பதால் நிதானமானவர். வேலைக்கு செல்ல விரும்புவார். சிம்ம ராசி என்பதால் பொதுவாக ஒரு ஆளுமையான எண்ணங்கள் கொண்டவராக ஜாதகி இருப்பார். 7 ஆமிடத்தில் செவ்வாய் அமைந்து வர்கோத்தமம் பெறுவதால் ஜாதகிக்கு கணவர் மீது பிரியம் இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் கணவரை நேசிப்பார். பிரிவினை எண்ணம் இருக்காது. ஆனால் 7 ஆமிடம் செவ்வாய்க்கு மரண காரக ஸ்தானமாகும். அதாவது கணவர் செயலற்றவராக முடங்குவதை இது குறிப்பிடும். ஆனால் லக்னத்தில் சனி நீசமாகி 7 ஆமிட செவ்வாயை பார்ப்பதால் கணவர் பாதிக்கப்படுவார். 7 ஆமதிபதி சுக்கிரனும் கடகத்தில் ராகுவோடு இணைந்து கெட்டுவிட்டார். இதனால் கணவரை நேசித்தாலும் கணவரால் ஜாதகி பாதிக்கப்படுவார். கணவருக்கு கடக ராசி தொடர்புடைய ரத்தம், மார்பு, மற்றும் மரபுரீதியான ஆரோக்ய உபாதைகள் இருக்கும்.
நவாம்சத்தில் ராசியின் 7 ஆமதிபதி சுக்கிரன் இங்கு லக்னத்திற்கு 6 ல் தனுசுவில் அமைந்து 11 ஆமிட ரிஷப குருவோடு பரிவர்த்தனை பெறுவது, ஜாதகி தனது கணவரை பொருளாதார வளமை, தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் திருமணம் செய்துகொள்வதை குறிக்கிறது. ஆனால் 6 – 11 ஆமிட பரிவர்த்தனையில் 11 ஆமிடம் லாபம், தோற்றம் ஆகியவற்றில் நன்மையையும், 6 ஆமிடம் கணவரின் ஆரோக்ய வகை பாதிப்புகளையும் குறிப்பிடுகிறது. நவாம்சத்தில் 7 ஆமிடத்திற்கும் 7 ஆமதிபதி சனிக்கும் குரு பார்வை இருப்பது, கணவர் பார்வைக்கு குரு குறிக்கும் தோற்றப் பொலிவைக்கொண்டவர் என்பதை குறிக்கிறது. ஆனால் அவரது இயக்கத்தை, செயல்பாட்டை கன்னியில் அமைந்த 7 ஆமதிபதி சனி குறிப்பிடுவார். நவாம்ச 7 ஆமதிபதி சனி கால புருஷ 6 ஆமிடமான கன்னியில் அமைவது கணவருக்கு ஆரோக்யவை உபாதைகள் வரும் என்பதை குறிக்கிறது. நவாம்சத்தில் களத்திர காரகர் செவ்வாய் துலாத்தில் நின்று பாவகர்த்தாரி யோகத்தில் இருப்பது கணவரது பாதிப்புகளை, செயலற்ற தன்மையை குறிக்கும். குறிப்பாக கால புருஷனுக்கு 7 ஆமிடமான துலாத்தில் செவ்வாய் இந்நிலை பெறுவதால் இல்லற விஷயத்தில் (Sexual activities) கணவரின் செயல்பாடுகள் ஏதோ ஒரு வகையில் முடக்கப்படும் என்பதை குறிக்கிறது. அதே சமயம் சுக்கிரனுக்கு 11 ல் செவ்வாய் அமைந்து, சுக்கிரனும் நவாம்சத்தில் சூரியன், ராகுவிற்கிடையே தனுசில் பாவ கர்த்தாரியில் அமைவது ஜாதகிக்கும் கணவருக்குமிடையே இணக்கம் இருந்தாலும் இல்லறத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பை தெளிவாக கூறுகிறது.
திரேக்காணத்தை பல்வேறு முனிவர்கள் பல்வேறு வகையான கணித வகைகளில் பல்வேறு விஷயங்களை ஆராய கையாண்டுள்ளனர். அவற்றுள் சோமநாத திரேக்காணமானது தாம்பத்ய வாழ்க்கையை அறிய பயன்படுகிறது என்பதால் இங்கு பராசாரர் முறை திரேக்காணத்தை விடுத்து சோமநாத திரேக்காணத்தை பயன்படுத்தியுள்ளேன். ஜாதகியின் சோமநாத திரேக்காணத்தில் ரிஷப லக்னத்தில் சனி நிஷ்பலத்தில் அமைந்து, மரண காரக பாவகமாகவும் அது அமைவது சிறப்பல்ல. இது ஜாதகிக்கு இல்லறத்தை அனுபவிப்பதில் கடும் பாதிப்புகளை சொல்லும். ரிஷப லக்ன சனி இல்லற சுகங்களை அனுபவிப்பதில் மிக நிதானத்தையும், பொறுமையையும், முழுமையான மகிழ்வை எதிர்பார்ப்பதையும் சுட்டிக்காட்டும். இல்லற விஷயங்களை பொறுத்தவரை கால புருஷனுக்கு 7 ஆமதிபதியான சுக்கிரனே காரகராவார். உணர்சிகளுக்குரிய சந்திரன் அடுத்த முக்கிய கிரகமாவார். காமத்தை அடையும் முயற்சிகளுக்கும், தூண்டுதலுக்கும் கால புருஷனின் போக ஸ்தானமான மிதுனத்தின் அதிபதி புதன் அடுத்த முக்கிய கிரகமாவார். பாவங்களில் காமத்தை குறிப்பிடும் 3, 7, 11 ஆகிய பாவகங்களும், உடலுறவால் ஏற்படும் மன நிறைவை 4, 8, 12 ஆகிய பாவகங்களும் குறிப்பிடுகின்றன. 1-7 ஆகிய பாவங்கள் ஆண்-பெண் இருவரின் இணக்கம், ஒத்துழைப்பு உடலுறவில் எந்த அளவு இருக்கும் என்பதை குறிப்பிடும். இங்கு லக்ன சனியானவர் 3, 7 ஆகிய பாவகங்களை பார்த்து அவற்றில் அமைந்த கிரகங்களையும் பார்க்கிறார். தற்போது ஜாதகிக்கு சூரிய தசை நடக்கிறது. கடகத்தில் சூரியன் அமைந்து தசை நடத்துவதால் ஜாதகி இல்லற விஷயத்தில் துணைவரிடம் பாசத்துடன், காதலையும், கௌரவத்தையும் எதிர்பார்ப்பார். ஆனால் இங்கு சனி பார்வை தசா நாதரை முடக்கி வைக்கிறது. சூரியனுக்கு வீடு தந்த சந்திரன் நீசமானதால் சூரியனின் செயல்கள் முடக்கப்படுவதோடு சனி பார்வை சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஏற்படுவது தாம்பத்தியத்தை ஜாதகி அனுபவிக்க இயலா சூழ்நிலையை ஏற்படுத்தும். உண்மையில் என்ன நடக்கிறது என்று கணவரின் ஜாதகம் மூலம் ஆராய்வோம்.
மேற்கண்ட கணவரின் ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் உள்ளது. ஆனால் நவாம்சத்தில் இருவருக்கும் சர்ப்ப தோஷம் உள்ளதால் இது பெரிய பாதகமில்லை. மிதுன லக்னத்திற்கு 7 ஆமதிபதி குரு சிம்மத்தில் நிற்கிறார். மனைவியின் ராசி சிம்மமாக அமைந்தது இது கர்மா போட்ட முடிச்சு என்பதை குறிப்பிடுகிறது. 3 ஆமிடமானது குருவிற்கு மரண காரக பாவகமாகும். ஏற்கனவே 7 ஆமதிபதி குரு, ராகு-கேதுக்களின் அச்சை விட்டு விலகிய நிலையில் 7 ஆமதிபதி மரண காரக ஸ்தானத்தில் அமைந்ததும் மனைவியுடன் ஜாதகரால் ஒன்றுபட்டு பயணிப்பதில் ஏற்படும் பாதிப்புகளை கூறுகிறது. குருவின் வக்கிரம் பாதிப்பின் தீவிர நிலையை சுட்டிக்காட்டுகிறது.
நவாம்சத்தில் ராசியின் 8 ஆமதிபதி குருவே லக்னாதிபதியாகி, அவர் தனுசு லக்னத்திற்கு 8 ல் உச்சத்துடன் வக்கிரம் பெற்று மறைந்தது ஜாதகரின் இல்லற வாழ்வு பாதிக்கும் என்பதை தெளிவாக்குகிறது. லக்னாதிபதி குரு, குறைபாட்டை குறிக்கும் 8 ஆமிடத்தில் நின்றது ஜாதகருக்கு இல்லறவகையில் ஏற்படும் பாதிப்பானது சரி செய்ய இயலாதது என்பதை குறிப்பிடுகிறது. கொழுப்பு காரகர் குரு கால புருஷ 4 ஆமிடத்தில் இப்படி பாதிக்கப்பட்டு நிற்பது உடலின் கட்டமைப்பில் ரத்தம், மார்பு, கொழுப்பு வகையில் பாதிப்பு ஏற்படுவதை குறிப்பிடுகிறது. 7 ஆமதிபதி புதன் விரையாதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனையாகி ராகு தொடர்பில் பாதிக்கப்பட்டு நிற்கிறார். இத்தகைய ஜாதகர்களுக்கு திருமணம் ஆனதும் இல்லறம் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோமநாத திரேக்காணத்தில் லக்னமும் லக்னாதிபதியும் கேதுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 7 ஆமிடத்தில் அதன் அதிபதி சனி ஆட்சி பெற்று திக்பலத்தில் அமைந்துள்ளார். இது இல்லற விஷயத்தில் துணைவர் செயல்பாட்டுத் தன்மையில் இருப்பதையும் ஜாதகர் (கணவர்) செயல்பட இயலா நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டும். சுக்கிரன் ராகுவோடு இணைந்தது பாதிப்பே. 3 ஆமிட செவ்வாய் 5 ஆமிட புதனுடன் பரிவர்த்தனை ஆவது சிறப்பானதே. ஆனால் பரிவர்த்தனைக்கு முன்பும் பரிவர்த்தனைக்கு பின்பும் செவ்வாயும் சுக்கிரனும் 6/8 ஆக அமைவது இவர்களின் இல்லற விஷயத்தில் மனதில் இருக்கும் காதல் உடலுறவில் இருக்காது என்பதை குறிப்பிடுகிறது. விருச்சிகம் கால புருஷனுக்கு குறைபாட்டு பாவகமான 8 ஆவது பாவகமாகும். அங்கு செவ்வாய் குருவோடு இணைவது உடலியல் குறைபாட்டால் கணவர் செயலிழப்பதை குறிப்பிடுகிறது. கணவர் குரு தசையின் ராகு புக்தியில் உள்ளார். குரு 7 ஆமிடமான மகரத்திற்கு பாதக ஸ்தானமான விருட்சிகத்தில் பரிவர்த்தனை செவ்வாயோடு இணைவது ஜாதகர் உடலுறவில் செயல்பட இயலா நிலையில் மனைவி பாதிக்கப்படுவதை தெளிவாக கூறுகிறது.
கணவரின் தசா நாதர் குரு கொழுப்பை குறிக்கும் கிரகமாவார். கணவர் உடற்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல் எடை 200 கிலோவை நெருங்குகிறது. இந்த உடல் எடை உடலுறவில் செயல்பட இயலா நிலையை கூறும். மனைவி 70 கிலோவை சார்ந்த எடையுள்ளவர் என்பதால் இவர்களுக்குள் தாம்பத்திய வாய்ப்பு இல்லை. அதிக உடற் பருமனானது நமது உடலில் Testosterone எனும் உடலுறவிற்கு அவசியமான சுரப்பியை செயல்படாமல் செய்துவிடும். இதனால் ஜாதகருக்கு உடலுறவின் மீது நாட்டம் இருக்காது. இந்த ஜாதகர் அப்படியே அதற்கு முயற்சித்தாலும் உடல் ஒத்துழைக்காது இதனால் இவர்களது குடும்ப வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. உடற்பருமனால் கணவர் வேலைக்கும் செல்ல இயலா நிலையில், கணவரால் தாம்பத்தியமும் கிடைக்கா நிலையில், குழந்தைப் பேற்றிற்காண வாய்ப்பு இல்லா நிலையில் மனைவியின் நிலை பரிதாபத்திற்குறியதாக மாறியுள்ளது. உடற்பருமனால் தனது குடும்ப வாழ்வு ஆபத்தில் இருப்பதை உணர்ந்த கணவர், இல்லறத்தில் ஏமாற்றமாக உணரும் மனைவியுடன் மணமுறிவை தவிர்க்க போராடுகிறார். தற்போது உடற்பருமனை குறைக்க சிகிச்சை எடுத்து வருகிறார்.
இன்றைய நிலையில் மணமுறிவை சந்திப்பவர்களில் அதிக சதவீதத்தினர் தங்களது இல்லற விஷயங்களில் ஏமாற்றங்களை சந்திப்பவர்களே. ஆனால் பெரும்பாலோர் அதை நாகரீகம் கருதி கருத்து வேறுபாடு எனும் சாயம் பூசி மறைப்பர். சகிப்புத்தன்மை அதிகம் நிலவிய கடந்த நூற்றான்றில் இத்தகைய விஷயங்களை மூன்றாவது நபர் உறவில் ஈடுபட்டு அதனால் பலர் வாழ்வு பாதிக்கப்பட்டதை அறிவோம். ஆனால் இன்றைய காலத்தில் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்ளும் நல்ல குடும்பத்தை சார்ந்தவர்கள் நாகரீகமாக விலகுவர். மோசமான ஜாதக அமைப்புடையோர் தவறான வழியில் தங்கள் இல்லற ஆசைகளை அடைய எண்ணி வாழ்வில் சீரழிவை சந்திக்கின்றனர். திருமணப் பொருத்ததில் இன்றைய காலத்தில் கவனமாக ஆராய வேண்டியது தாம்பத்திய ஒற்றுமைதான். படுக்கையறையில் மகிழ்வாக இருக்கும் தம்பதியர் வாழ்வு எந்தப் புயலையும் தாங்கி நிற்கும். படுக்கையறையில் தோல்வியுறும் தம்பதிகள் இல்லறம் எத்தனை வசதிகளை பெற்றிருந்தாலும் நீடிப்பதில்லை என்பது கண்கூடு.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501