மனித வாழ்வு இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பை வளமாக்கிக் கொள்வதும் பாழ்படுத்திக்கொள்வதும் நம் கையில்தான் உள்ளது. வாய்ப்புகள் கல்வி, சம்பாத்தியம், திருமணம் போன்ற எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். மனிதன் தனது வாழ்கைக்கான வாய்ப்புகளை தெரிவு செய்யும் பொறுப்பை இயற்கை மனிதனிடமே வழங்குகிறது. கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் முயன்று பார்ப்போர் ஒரு ரகம். கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளப் போராடுவோர் மற்றொரு வகை. எந்த வாய்ப்பை தேர்வு செய்வது?, எந்த வாய்ப்பை தவிர்ப்பது?, எந்த வாய்ப்பிற்காக காத்திருப்பது?, கிடைக்கும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக்கொள்வது? என்பதில் ஒரு மனிதன் எடுக்கும் முடிவுகளில்தான் அவனது வாழ்வின் வெற்றி தோல்வி உள்ளது. தனது வாய்ப்புகளை மோசமாக பயன்படுத்திவிட்டு மற்றவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு போல தனக்கு கிடைத்திருந்தால் நானும் மற்றவர்போல வாழ்ந்திருப்பேன் என்று புலம்புவது வீணர்களின் வேலை. அவர்களுக்கு கிடைத்தற்கரிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதையும் அவர்கள் பாழ்படுத்திவிட்டு குறைதான் சொல்வார்கள். உயிர்களைப் படைத்த இயற்கை உயிர்களுக்கு வழங்கும் வாய்ப்புகளில் என்ன நன்மை தீமை உள்ளது என ஜோதிடம் மூலம் அறிந்து செயல்படுவது ஒருவகை. இதில் பிரசன்னம் இயற்கை வழங்கும் வாய்ப்பை பயன்படுத்தினால் என்ன நிகழும் என துல்லியமாக தெரிவிக்கும். நல்ல தசா-புக்திகள் நல்ல வாய்ப்புகளை வழங்கும், மோசமான தசா-புக்திகள் மோசமான வாய்ப்புகளை வழங்கும் என்றாலும் வாய்ப்புகளை சரியாக கையாள ஒருவரின் சுய அறிவு, உறவு, நட்புகளின் ஆலோசனைகளைவிட ஜோதிடம் சிறப்பான ஆலோசனை வழங்கும். அப்படி பணியிடத்தில் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தினால் என்னவாகும் என்று என்னை அணுகிய ஒருவருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.
பிரசன்னம் பார்க்க கேட்டுக்கொண்டவர் ஒரு ஆண். பணியிடத்தில் சக பணியாளர் ஒருவரால் சலனபடுவதாகவும் அதன் விளைவுகளை அறிந்து செயல்பட கேட்டு பிரசன்னம் பார்க்க அணுகியிருந்தார்.
சிம்ம உதயம். உதயம் கேள்வியாளரை குறிப்பிட்டால் 7 ஆமிடம் இவரது எதிரில் நின்று தொடர்புகொள்ளும் நபரை தெரிவிக்கும். உள்வட்ட கிரகங்கள் கேள்வியாளரின் பின்னணியையும், ஜாம (வெளிவட்ட) கிரகங்கள் கேள்வியாளரின் தற்போதய நிலையையும் சுட்டிக் காட்டும். உதயாதிபதி சூரியன் உள்வட்டத்தில் 6 ஆமிடத்தில் மகரத்தில் சுக்கிரனின் பூராடத்தில் நின்று மேஷ ஜாமச் சனியின் 1௦ ஆம் பார்வையை பெறுகிறார். 7 ஆமிட உள்வட்ட சனி திக்பலம் பெற்று உதயத்தை நேர் பார்வை பார்க்கிறார். ஜாமச் சனி மேஷத்தில் உதயாதிபதி சூரியனின் கார்த்திகையில் நிற்கிறார். இவை பணிபுரியுமிடத்தில் கேள்வியாளரும் இவரது சக பணியாளரும் ஈர்ப்புடன் இணைந்து பணிபுரிவதை குறிக்கிறது. 7 ஆமிட சனி ராகுவின் சதயத்தில் அமைந்துள்ளதால் சக பணியாளர் ஒரு பெண் என்பது தெரிகிறது.
வெளி வட்டத்தில் உதயாதிபதி சூரியன் ஆசை, காதல் இவற்றை குறிப்பிடும் உதயத்திற்கு 5 ஆமிடமான தனுசில், சுக்கிரனின் பூராடத்தில் நின்று, உள்வட்ட சுக்கிரன், புதன், செவ்வாயுடன் இணைந்து மேஷ குருவின் 9 ஆவது பார்வையையும், மிதுனத்தில் அமைந்த சுக்கிரன், சந்திரனின் நேர் பார்வையையும் பெறுகிறார். உதயாதிபதி உள்வட்டத்திலூம் வெளிவட்டத்திலும் சுக்கிரனின் பூராடத்தில் நிற்பதை கவனிக்க. உள்வட்ட உதயாதிபதி கேள்வியாளரின் பின்னணியை தெரிவித்தால் ஜாம உதயாதிபதி கேள்வியாளர் தற்போது ஈடுபட்டுள்ள விஷயங்களை தெரிவிக்கும். பிரசன்னத்தில் இரு சூரியனும் 3, 1௦ ஆமதிபதி சுக்கிரனின் பூராடத்தில் நிற்பதாலும் ஜாமச் சூரியன் 5ல் நிற்பதாலும், கேள்வியாளர் பணிபுரியுமிடத்தில் தன் சக பணியாளரின் மீது காதல் கொண்டிருப்பதை அறியமுடிகிறது. இங்கு சக பணியாளரைக் குறிக்கும் 7 ஆமதிபதி சனி உதயத்தை பார்க்க, ஜாமச் சனி உதயாதிபதி சூரியனின் சாரம் பெறுவதால் அவரும் கேள்வியாளர் மீது ஈர்ப்புடன் இருப்பதை அறியலாம்.
ஆரூடம் 8 ல் 7 ஆமிட சனியின் உத்திரட்டாதியில் அமைந்துள்ளது சாதகமில்லை. அங்கு ராகுவுடன் சந்திரன் இணைவு கேள்வியாளர் மனம் தவறானதை சிந்திப்பதை தெரிவிக்கிறது. மீனச் சந்திரனும் ராகுவும் புதனின் ரேவதியில் அமைந்து ஜாமச் சூரியன் தனுசில் காதல் காரகன் புதனுடன் இணைந்திருப்பது கேள்வியாளர் தனது சக பெண் பணியாளர் மேல் கொண்டுள்ள காதலை தெரிவிக்கிறது. 8 ஆமிடம் இவரது காதலில் உள்ள தவறு, குற்றம், அவமானம் ஆகிய பாதிப்புகளை தெரிவிக்கிறது.
கவிப்பு ஆசை பாவமான 5 க்கு விரையத்தில் 4 ஆமிடமான கால புருஷனின் 8 ஆமிடம் விருட்சிகத்தில் அமைந்தது ஆசை செயல் வடிவம் பெறும் சூழலில் ஏற்படும் பாதிப்பை தெரிவிக்கிறது. 4 ஆமிடம் தன் சுகத்திற்கான செயல். 8 ஆமிடம் அவமானம். இவை இரண்டும் கேள்வியாளரின் காதலுக்கு சாதகமற்ற நிலையை குறிப்பிடுவதால் இவர் தன் காதலை செயலாக்கும் சூழலில் கேள்வியாளருக்கு அவமானமும் கடும் பாதிப்புகளும் ஏற்படும் எனத் தெரிகிறது. மீனம் காலபுருஷனுக்கு காமத்தை செயல்படுத்தும் படுக்கை ஸ்தானம். விருச்சிகம் கால புருஷனுக்கு உடலுறவை குறிப்பிடும் 8 ஆம் பாவகம். 4 ஆமிடம் தன் சுகத்திற்காக கேள்வியாளர் செய்யும் செயல்கள். கேள்வியாளருக்கு தன் சக பெண் பணியாளர் மீது இருப்பது காதல். அதே சமயம் இவரது சக பணியாளருக்கு கேள்வியாளர் மீது ஈர்ப்புள்ளதையும் பிரசன்னம் தெரிவிக்கிறது. கேள்வியை அன்பர் நேரடியாகக் கேட்திருந்தார். எனவே உதயமே பதிலை தெரிவித்துவிடும். ஜாம 7 ஆமதிபதி சனி, ஸ்திர உதயம் சிம்மத்தின் பாதக ஸ்தானம் 9 ல் மேஷத்தில் நீசமாகியுள்ளது கேள்வியாளரின் எண்ணத்தில் உள்ள குறையை குறிப்பிடுகிறது. உதயம் கேதுவை நோக்கி நகரும் அதே சமயம், பாதக ஸ்தானமான மேஷத்தில் உள்வட்டத்தில் நின்று உதயத்தை பார்க்கும் 8 ஆமதிபதி குரு வெளிவட்டத்தில் கன்னியிலிருந்து உதயத்தை நோக்கி வருகிறார். இது கேள்வியாளர் பாதிப்பை நோக்கி செல்வதையும், அதனால் அவர் குரு குறிக்கும் தனம், குடும்பம், கௌரவம் வகையில் ஒரு அவமானத்தை சந்திக்க வாய்ப்புள்ளதையும் பிரசன்னம் தெளிவாக குறிப்பிடுகிறது. 1௦ ஆமிடமான ரிஷபத்தை கவிப்பு பார்க்கிறது. பாதகாதிபதி செவ்வாய் துலாத்தில் இருந்து 1௦ ஆமிடத்தை 8 ஆம் பார்வையாக பார்ப்பதால் இவர் தனது காதலை செயலாக்கினால் இவரது வேலையும் பாதிக்கப்படும் சூழல் உள்ளதை பிரசன்னம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
கேள்வியாளர் மற்றும் இவரது சக பெண் பணியாளர் இருவருமே நன்கு படித்து, நல்லதொரு கௌரவமான துறையில் பணி புரிந்துகொண்டிருப்பவர்கள். இருவருமே திருமணமாகி நிறைவான குடும்ப வாழ்வை வாழ்பவர்கள். தங்கள் நடுத்தர வயதை கடந்துகொண்டிருப்பவர்கள். இத்தகைய சூழலில் இவர்கள் இருவரையும் நெருக்கமாக இணைந்து பணி புரியவைத்து விதி விளையாடுகிறது. இந்நிலையில் எங்கே இந்தப் பணிச் சூழல் தன்னை தவறு செய்யவைத்து தனது மனைவிக்கும், குடும்பத்திற்கும் துரோகம் செய்ய வைத்துவிடுமோ என்ற பயத்தில் கேள்வியாளர் என்னை அணுகினார். கேள்வியாளர் இப்படி கவனமாக செயல்பட சிம்ம உதயத்தையும், தனுசில் அமைந்த உதயாதிபதி சூரியனையும் மேஷ குரு பார்ப்பதுதான் காரணம். பூர்வ புண்ணியாதிபதி குரு இப்படி பார்ப்பதால் இவரது ஏதோ ஒருவகை பூர்வ ஜென்ம நல்வினை கேள்வியாளரை தவறு செய்யா வண்ணம் சலனப்படாமல் எச்சரிக்கையாக செயல்பட அறிவுறுத்துகிறது.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.