
வாழ்வில் கணிசமான காலங்கள் நமக்கு தேவையான பொருளாதாரத்தை அடைவதற்கே செலவாகிறது. அப்படி பொருளாதாரத்தில் இலக்குகளை அடைந்தவிட்டவர்கள், எஞ்சிய தங்கள் வாழ்நாட்களையாவது தங்கள் எண்ணயபடி அனுபவிக்க எண்ணி தங்கள் பணியிலிருந்து முன்கூட்டியே விருப்ப ஓய்வு (VRS) பெறுகின்றனர். இதில் பல வகையினர் உண்டு. அவற்றில் சில, பணியிடக்கடுமை காரணமாகவோ, குடும்ப நலனை முன்னிட்டோ, தங்கள் ஆரோக்கிய நிலை கருதியோ பணியிலிருந்து முன்னதாக விருப்ப ஓய்வு பெறுபவர்கள் ஒரு வகை. வெகு சிலர் அரசுப்பணியை நிராகரித்து சுயதொழில் செய்து அதிக பொருளீட்டும் நோக்கில் விருப்ப ஓய்வு பெறுகிறார்கள். தங்களது கௌரவத்திற்கு பங்கம் வருமெனும் சூழலில் முன்னதாக விருப்ப ஓய்வு பெறுபவர்கள் ஒரு வகை. பாலியல் சீண்டலுக்கு அஞ்சி முன்னதாக பணி துறக்கும் ஒரு வகையினர் இன்று அதிகரித்து வருகிறார்கள். மேற்சொன்ன ஏதாவது ஒரு வகையில் விருப்ப ஓய்வு பெறும் நிலைப்பாட்டை எடுப்பவர்களுக்கு ஜோதிடத்தின் மூலம் அவர்களது எதிர்கால சூழலுக்கேற்ற வகையில் ஆலோசனை வழங்கலாம்.
கீழே ஒரு ஜாதகம்.
ஜாதகி அரசுப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியை. பணிக்கடுமை காரணமாக இன்னும் ஓரிரு வருடங்கள் பணிக்காலம் இருக்கையில் தற்போது ஓய்வு பெற எண்ணுகிறார். மகர லக்னத்திற்கு 2 ல் வக்கிர சனி, 8 ல் இருந்து சூரியனோடு இணைந்த புதனின் பார்வையை பெறுகிறார். இதனால் அரசுப்பள்ளி ஆசிரியையாக பணி கிடைத்துள்ளது. ஆனால் லக்னத்திற்கு 8 ல் தன் ஆட்சி வீட்டில் இருந்துதான் சூரியன் சனியை பார்க்கிறார். இதனால் 8 ஆமிட கெடு பலன்களையும் ஜாதகி எதிர்கொள்ள நேரிடும். 1௦ ல் செவ்வாய் 1௦ ஆமதிபதி சுக்கிரனோடு இணைந்து திக்பலம் பெற்று, 6 ஆமிட குரு பார்வையையும் பெறுகிறார். இது பணியிடத்தில் அதிகாரமிக்க செல்வாக்கான நிலைக்கு ஜாதகியை உயர்த்தும். தசாம்சத்தில் சூரியன் மேஷ லக்னத்தில் உச்சம். இதனால் ஜாதகி பள்ளித்தலைமை ஆசிரியையாக உயர்ந்துள்ளார். லக்னம் திக்பல செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் அமைந்து, அந்த செவ்வாய் திக்பலம் பெற்ற நிலையில் லக்னத்தை 4 ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் ஜாதகி தனது பணியில் எப்போதும் அதிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். பொதுவாக எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னாதிபதியோடு கௌரவத்தின் காரகர் சூரியன் தொடர்புகொண்டால் ஜாதகர் தனது செயல்களில் கௌரவத்திற்கு முக்கியம் கொடுப்பார். ஆனால் மகர லக்னத்தை பொறுத்தவரை கௌரவ காரகர் சூரியனே அவமான பாவமான 8 ஆமிடத்திற்கு அதிபதியாக வருவதால் தனது காரகம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு அவமானத்தை தருவார். 2 ஆமிட சனியே அவமானம் தருவார் என்ற நிலையில், 2 ஆமிட சனிக்கு 8 ல் நின்ற கிரகம் அல்லது 8 ஆமதிபதி தொடர்பு ஏற்படுகையில் அவர்களின் தசா-புக்திகளில் ஜாதகருக்கு நிச்சயம் அவமானம் ஏற்படும்.
மேலும் 2 ல் அமையும் சனி 2 ஆமிடத்தோடு கோட்சாரங்களில் எப்போதெல்லாம் தொடர்புகொள்கிறதோ அப்போதெல்லாம் ஜாதகருக்கு அவமானம் ஏற்படும். இந்த ஜாதகிக்கு இவ்வாண்டு துவக்கத்தில் லக்னத்திற்கு 2 ஆமிடம் கும்பத்திற்கு கோட்சாரத்தில் சனி பெயர்ச்சியாகி சென்றபோது, ஜனன கால 8 ஆமிட சூரியனின் பார்வையை கோட்சார சனி பெற்றதால் அரசு வழியில் ஜாதகியின் பணியில் கடுமையான சூழல் ஏற்பட்டது. மேலும் 1௦ ஆமிட திக்பல செவ்வாய் மீது கோட்சார கேது தற்போது செல்வதால் உயரதிகாரிகளால் ஜாதகி கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் பணி ஓய்வுக்கு இருக்கும் முன்னரே விருப்ப ஓய்வு பெற எண்ணி அதற்கான முயற்சிகளை செய்தார். ஆனால் பிற்பாடு தனது முடிவிலிருந்து பின்வாங்கினார். ஜாதகி தனது முடிவில் இருந்து பின்வாங்க காரணம் 2 ஆமிட ஜனன சனி வக்கிரமாகியுள்ளதுதான். வக்கிர கிரகங்கள் பிடிவாதம் பிடித்தாலும் தனது நிலைப்பாட்டில் பின்வாங்கும் என்பதால் கோட்சார கும்ப சனி வக்கிரமாகி மகரத்தை நோக்கி நகரத்துவங்கியதும் ஜாதகி தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.. சனி மீண்டும் அடுத்த 2023 துவக்கத்தில் மகரத்திலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகி செல்லும் காலத்தில் மீண்டும் விருப்ப ஓய்வு கொடுக்க எண்ணுவார். இவர் விருப்ப ஓய்வு பெற இவரது தசா-புக்திகளும் அனுமதிக்க வேண்டும்.
கீழே 2௦ மாத அரசுப்பணிக்காலம் மீதமுள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறலாமா என்ற கேள்விக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம்.

கேள்வியாளர் ஒரு ஆண். அரசுத்துறையில் கூட்டுறவு வங்கியில் முதுநிலை அதிகாரியாக பணிபுரிகிறார். ஒரு நிர்வாகம் தொழிலாளர்களின் பணிச்சுமைகளுகேற்ப உதவியாளர்களை நியமிக்க வேண்டும். அல்லது பொறுப்புகளை பிரித்துதர வேண்டும். ஆனால் தற்போது இவரது பணிச்சுமையை குறைக்க எந்த நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படாத பட்சத்தில் ஜாதகர் உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்துவிட்டார். இதனால் இவரது ஆரோக்கியம் சீர்கெடுகிறது. கால புருஷனுக்கு 6 ஆமிடத்தில் உச்சமடையும் புதன் வியாதியை தருவார் என்பதற்கேற்ப கேள்வியாளர் சர்க்கரை வியாதியால் அல்லலுருகிறார். இந்த நிலையில்தான் உடல் ஆரோக்கியத்தின் பொருட்டு விருப்ப ஓய்வு பெற்றுவிடலாமா ? என்ற கேள்வியுடன் என்னை அணுகினார்.
கன்னி உதயத்தில் உதயாதிபதி புதன் உச்சம். உதயத்திற்கு 1௦ ல் மிதுனத்தில் குரு அமைந்துள்ளது கேள்வியாளர் வங்கித்தொழிலில் உள்ளவர் என்பதை பிரசன்னம் தெளிவாக தெரிவிக்கிறது. வெளிவட்ட சூரியன் உதயத்தில் அமைந்தது ஜாதகர் அரசாங்க தொடர்புடையவர் என்பதை தெரிவிக்கிறது. இங்கு சூரியன் விரையாதிபதி என்பதால் பெரிய அளவில் கேள்வியாளருக்கு நன்மை செய்துவிட மாட்டார். உள்வட்டத்திலும் சூரியன் உதயத்திற்கு 12 ல்தான் நிற்கிறார். எனவே அரசாங்கத்திடம் கேள்வியாளர் உதவியை எதிர்பார்ப்பது வீண்.
உதயம் அடுத்து தொடவுள்ளது 2 ஆமிட கேதுவைத்தான். 2 ஆமிடம் வருமானம். அங்குள்ள கேது வருமானத்தை தடை செய்யும் நிலையில் உள்ளார். கவிப்பும் அங்கு அமைந்துள்ளது வருமானத்தில் தடையை கேள்வியாளர் எதிர்கொள்வார் என்பதை கூறுகிறது. உதயத்திலேயே உச்ச புதனுடன் மாந்தியும் அமைந்துள்ளது கேள்வியாளர் உடல் ஆரோக்கியதிற்கே முன்னுரிமை தர வேண்டும் என்பதை கூறுகிறது. ஆரோகியத்திற்கு முன்னுரிமை தராவிட்டால் கேள்வியாளர் உயிராபத்தை சந்திப்பார் என்பதை பிரசன்னம் தெளிவாக்கும் அதே வேலை இது கேள்வியாளர் வருமானம் தடைபடும் காலம் என்பதையும் மிகத்தெளிவாக உணர்த்துகிறது. அதனடிப்படையில் முடிவெடுக்குமாறு கேள்வியாளரிடம் கூறப்பட்டது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.