
மனித வாழ்வை திருமணத்திற்கு முன், பின் என்று இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். திருமண வாழ்க்கை ஒருவரை மாற்றி அமைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருமணத்திற்கு முன் பொறுப்பற்ற பறவைகளாகத் திரிந்தவர்கள் கூட பெரும்பாலும் மணமான பிறகு பொறுப்பாக நடந்துகொள்கிறார்கள். அதனால்தான் பெரியவர்கள் திருமணம் செய்தால் பொறுப்பு கூடும் என்று கூறுகிறார்கள். அபூர்வமாக திருமணம் பொறுப்புகளை திணிக்கும் என்பதால் அதை ஏற்க மனமின்றி தனக்கு திருமணமே வேண்டாம் என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் இன்றைய நிலை வேறு. குறிப்பாக ஆண்களின் நிலை இது விஷயத்தில் பரிதாபத்திற்குரியது. இன்றைய நிலையில் திருமணத்திற்கு முன்னேரே பொறுப்பான ஆண்களாக நல்ல ஒழுக்கம், கல்வி, ஏதேனும் ஒரு துறை சார்ந்த திறமை, சம்பாத்தியம் என்று தன்னை உயர்த்திக்கொள்ளும் ஆண்களுக்கே இன்று திருமணம் நடக்கிறது. வெறும் ஜாதீயம், உறவுகள், பூர்வீகம் என்று பலம் பெருமைகள் மட்டுமே பேசிக்கொண்டு தனது தகுதியை இதர வகைகளில் உயர்த்திக்கொள்ளாத ஆண்களுக்கு திருமண வாழ்வு இன்று கனவாகி வருகிறது. பெண்களின் நிலை இது விஷயத்தில் வேறு. அன்றைய காலத்தில் பணம் கொடுத்து குழந்தைகளை கல்வி கற்க அனுப்பிய நிலையில் ஆண் பிள்ளைகள் சம்பாதிப்பவர்கள், பெண்கள் அடுப்பு ஊதுவதற்கே எனும் நிலையில் அன்று ஆண்களுக்கு கிடைத்த கல்வி பெண்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இன்று கல்வி அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. பாலின வேறுபாடின்றி அரசுகள் கல்வியை வழங்குகின்றன. கல்வியை குழந்தைக்கு வழங்காமல் அவர்களை வீணடிப்பது இன்று சட்டப்படி குற்றம். இதனால் பெண்களும் இன்று நன்கு படித்து ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் சம்பாதிக்கிறார்கள். இதனால் தங்கள் கணவரை தானே தேர்ந்தெடுக்கும் நிலையில் இன்றைய பெண் இருக்கிறாள். ஆண்-பெண் பாலின விகிதத்தில் பெண்கள் குறைவாக இருப்பதால், சாதாரணக் கல்வி கற்ற பெண்கள் கூட நல்ல நிலையில் இருக்கும் கணவரை தேர்ந்தெடுக்கும் நிலை இன்று உள்ளது. மாறாக ஆண்கள் தனது தகுதி நிராகப்படும் தனது சுய சமூகத்தை விடுத்து தனக்கு திருமணமானால் போதும் என்று மாற்றுச் சமூகத்தில் கிடைக்கும் பெண்களை ஏற்கும் பரிதாப நிலை இன்று உள்ளது. இந்நிலையில் தனக்கு மண வாழ்வின் மூலம் அமைந்த துணை எப்படி இருப்பினும் அவர்களை தனக்குத் தக்கபடி மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு கணவன்-மனைவி இருவரில் புத்திசாலியானவருக்கு வாய்க்கும். ஆனால் களத்திர பாவகமான 7 ஆமிடத்தின் லாப பாவகமாக 5 ஆமிடம் அமைவதால் திருமணம் என்பது ஒருவரது பூர்வ ஜென்ம கொடுப்பினைகளுக்கு தக்கபடிதான் அமைகிறது. இதைத்தான் “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று கூறுவர். ஏனெனில் இறை வழிபாட்டை கூறும் பாவகமும் 5 ஆம் பாவகம்தான். இன்றைய பதிவில் திருமணமாகி வரும் மனைவியால் யோகமடையும் ஆண்கள் யார் என்பது பற்றி ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராயவிருக்கிறோம்.

ஜாதகர் 90 களின் முன்பகுதியில் பிறந்த ஒரு ஆண். ஜாதகத்தில் வித்யா காரகர் புதனும், வித்யா ஸ்தானாதிபதி செவ்வாயும் நீசம். உச்ச சுக்கிரனுடன் இணைவதாலும், குருவுடனான பரிவர்த்தனையாலும் புதன் நீச பங்கமடைகிறார். செவ்வாயும் சந்திரனுடனான பரிவர்த்தனையால் நீச பங்கமடைகிறார். புதன் இங்கு உயர் கல்வி பாவகமான 9 க்கு விரையம் 8 ஆமிடத்தோடு பரிவர்த்தனையாகிறார். செவ்வாய் இங்கு 12 ஆமிடாதிபதியான விரையாதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை ஆகிறார். இதனால் ஜாதகர் உயர் கல்வியை அடைய முடியாது. இது பள்ளிக் கல்வியை பயனற்றதாக்கி அனுபவக் கல்வி மூலம் ஜாதகரை உயர்த்தும் அமைப்பாகும். இவ்விதிப்படியே ஜாதகர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில் செவ்வாய் தசையில் இருந்தார். இதனால் இவரது பள்ளிக் கல்வி 10 ஆம் வகுப்புடன் முடிவுக்கு வந்தது. பள்ளிக்கல்வி தடைபட்ட நிலையில் நல்லதொரு எதிர்காலம் பற்றி பயம் வருவது இயற்கை. ஜாதகருக்கும் அந்த ஐயம் இருந்தது. இது ஒரு வித தாழ்வு மனப்பான்மையை வழங்கும்.
ஜாதகத்தில் குடும்ப பாவாதிபதி புதனும் குடும்ப காரகர் குருவும் பரிவர்த்தனை ஆவதால் ஜாதகருக்கு குடும்பம் அமைந்த பிறகு வாழ்வில் பொருளாதார வளமை ஏற்படும் என்பது பொருள். சுக்கிரன் உச்சமான நிலையில் 7 ஆமிடத்தில் சனி திக்பலத்தில் நிற்பதை கவனியுங்கள் இதனால் இவருக்கு குடும்பம் அமைந்து மனைவி வந்த பிறகு வாழ்வு பொருளாதார ரீதியாக உயரும். குடும்பம் அமைந்த பிறகு இரண்டாமிடம் வலுவடைவதால் செல்வ வளம் மனைவி வந்த பிறகு கூடும். ஜாதகருக்கு சம்பாத்தியத்தை புதன் மற்றும் சுக்கிரனின் காரக தொழில்கள் வழங்கும்.
களத்திர காரகர் சுக்கிரன் ராசியில் உச்சம் என்றால் நவாம்சத்தில் மூலத்திரிகோண வலுவுடன் குரு பார்வை பெற்று பாவிகள் தொடர்பற்று சிறப்பாக அமைந்துள்ளார். ராசியில் ராகு 4 ஆமிடத்தில் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நின்று 10 ஆமிடத்தை பார்க்கிறார். நவாம்சத்தில் 7க்கு லாபத்தில் ராகு அமைந்துள்ளார். புதன் நவாம்சத்தில் 4 ஆமிடத்தில் நின்று 10 ஆமிடத்தில் திக்பலத்தில் நிற்கும் சூரியனை நேர் பார்வை பார்க்கிறார். இது ராகு தசையில் ஜாதகருக்கு திருமணம் நடக்கும் என்ற உறுதியையும், ஜாதகர் ராகு-புதன் சார்ந்த தொழிலில் ராகு தசையில் சிறப்படைவார் என்பதையும் குறிப்பிடுகிறது. நவாம்சத்தில் தன ஸ்தானமான இரண்டாமிடத்தில் அதன் அதிபதி சுக்கிரன் மூலத்திரிகோண வலுவுடன் நிற்பதால் மனைவி வந்த பிறகே வாழ்வில் ஜாதகருக்கு வசதி வாய்ப்புகள் கூடும் என்பது உறுதியாகிறது.
ராகு நவீன மின்னணு மென்பொருள் சாதனங்களையும், புதல் தகவல் தொடர்பு சாதனங்களையும் குறிக்கும் கிரகங்களாகும். ஜாதகருக்கு ராகு தசையில் குரு புக்தியில் திருமணமானது. ஜாதகர் இன்று தனது சொந்த ஊரில் இந்தியாவின் முதன்மை தகவல் தொடர்பு நிறுவனத்தில் அதன் வட்டார உரிமையைப் பெற்று சிறப்பான சம்பாத்தியத்தை அடைந்து வருகிறார்.
ஜாதகர் கல்வி அறிவு குறைந்ததால் தனது வாழ்வு என்னவாகுமோ என்ற ஐயப்பாட்டில் இருந்த நிலையில், மனைவி வந்த பிறகே தனது வாழ்வில் வளர்ச்சி வந்துகொண்டிருக்கிறது என்கிறார். தனது மனைவியை பற்றி ஜாதகர் கூறுகையில் தனது மனைவி “பெண்ணல்ல தேவதை” என்கிறார்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501