நவாம்ச அற்புதங்கள்!

வாழ்க்கை பல திருப்பங்களைக்கொண்ட ஒரு நெடும் பயணமாகும். செல்லும் வழியிலெல்லாம் எதிர்படும் காட்சிகளை கண்டு ரசித்துக்கொண்டே செல்லலாம். பயணத்தில் பல பருவ கால மாறுதல்களை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது. சமவெளிகள், பள்ளத்தாக்குகள், மேடுகள், மலைகள், ஆறு-கடல்கள் என எவை எதிர்பட்டாலும் பயணத்தை தொடர்ந்துதான் ஆக வேண்டும். கடலையோ, மலையையோ பார்த்து எப்படி அவற்றைக் கடப்பது என்று திகைப்பவர்கள் வாழ்வில் பின்தங்கி விடுகிறார்கள். மலையை அடுத்து பள்ளத்தாக்கும், சமவெளியும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று அனுமானிப்பவர்களும், கடலை கடந்து செல்லத் துணிபவர்களும் பலவகை அனுபவங்களைப் பெறுகிறார்கள். அவர்களின் பயணம் நில்லாது தொடர்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் எதுவுமே நிலையில்லாது நகர்பவையே. எனவே ஒருவரின் பயணம் முடிவது என்பது அவரது மரணத்தில் மட்டுமே இருக்க வேண்டும். நமது முன்னோடிகளின் பயண அனுபவங்கள் நமக்கு உதவும் என்றாலும் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பாதையும் பயணங்களும் வேறு வேறானவைகளே. பாதைகள் அடைபடும் தருணங்களில் பதட்டப்படாமல், பயணத்தை நிறுத்தாமல், புதிய பாதைகளை சில சமயம் நாம் உருவாக்க வேண்டியிருக்கும். தனிச்சையாக பயணிக்கும் தனி ஒரு மனிதனுக்கு  உண்மையான  சோதனை திருமண உறவு மூலம் வருகிறது. இந்த உலகில் மற்றவரை சாராமல் இயங்க முடியாது எனும் சூழலில் வாழ்க்கை துணையாக வருபவரின் திறமையும் வளமையும் ஒருவரின் பயணத்தை சுகமாக்கும். மாறாக துணைவரின் திறமையும், வளமையும் ஒருவருக்கு புரியவே இல்லை என்றால் அல்லது தமக்கு தேவையில்லை, உதவாது எனும் சூழ்நிலைகளில் அங்கு இருவரும் இணைந்து வாழ்க்கைப் பயணத்தை தொடர்வது சாத்தியமற்றதாகிறது அல்லது கசப்பான பயணமாகிறது. இரு வேறுபட்ட மனிதர்கள் இணைந்து பல புதிய விஷயங்களை உருவாக்குவதற்கான சாத்தியம் அதிகம். தனி ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் வெற்றி என்பது துணைவரைப் பொறுத்தே அமைகிறது. துணையை இழந்தால் வாழ்க்கைப் பயணம் கடினமாகும் என்பதுடன் துணைவரை இழந்த அல்லது கைவிட்ட தனி ஒருவரின் பயணம் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மனித வாழ்வின் வெற்றி என்பது ஒருவரது திருமண உறவின் வெற்றியே ஆகும். எத்தகைய சிக்கலான சூழ்நிலையையும் பொறுமையுடன் கையாண்டு, அந்தச் சூழ்நிலைகளை கடந்து செல்வதில்தான் வாழ்வின் வெற்றி உள்ளது. பொதுவாக மோசமான தசா-புக்திகள் நடப்பில் இருக்கும் சூழ்நிலைகளின் வாழ்வில் பாதிப்புகள் அதிகம் இருக்கும். நல்ல தசா-புக்திகள் வரும் வரை வாழ்வில் பொறுமையாக இருப்பது அவசியம். மோசமான தசா-புக்திகளில் பொறுமையற்று நடந்துகொள்பவர்கள் அதன் பிறகு வரும் நல்ல தசா-புக்திகளின் வெகுமதிகளை பெறத் தகுதியற்றவர்களாகிறார்கள்.

கீழே நடுத்தர வயதுடைய ஒரு பெண்மணியின் ஜாதகம்.

மகர லக்னத்தில்  புதன் ராகுவோடு இணைந்து திக்பலம் பெற்றதால்  இவரது ஒட்டுமொத்த வாழ்வை இயக்குவது லக்ன கிரகச் சேர்க்கையே. புதன் ராகுவோடு இணைந்ததால் இவரது கல்வி தகவல் தொழில் நுட்பம் சார்ந்ததாக இருக்கலாம். 6 ஆமதிபதி புதன் லக்னத்தில் அமைந்ததால் இவருக்கு எளிதில் வேலை கிடைக்கும். அதே சமயம் 6 ஆமதிபதி ஆரோக்கியத்தில் குறையையும் ஏற்படுத்துவார்.  9 ஆமதிபதி புதனோடு ராகு இணைவதால் வாழ்வின் பாக்கியங்களை அடைவதில் தடைகளும் ஏற்படும். லக்ன ராகு-கேதுக்கள் சம்பாத்திய தொடர்புகளுக்கு நன்மை செய்யும். ஆனால் களத்திர வகையில் பாதிப்பை வழங்கும். 7 ஆமதிபதி சந்திரன் சுக ஸ்தானத்தை பார்ப்பது நன்மையே என்றாலும், கடகத்தில் ஒரு பாவி அமைந்து கடகாதிபதி சந்திரன் நீச வீட்டை நெருங்குவது பெண்களுக்கு மார்பு, மாதவிடாய், கற்பப்பை பாதிப்புகளை ஏற்படுத்தும். புத்திர காரகர் குரு லக்னத்திற்கு 6 ல் மறைந்துவிட்ட நிலையில்,   ஜாதகத்தில் அதிக பாகை பெற்று ஆத்ம காரகரான 5 ஆமதிபதி சுக்கிரன், 5 க்கு  8 ல் லக்னத்திற்கு 12 ல் குருவின் மூலத்திரிகோண வீட்டில் மறைந்து பாவிகள் தொடர்பு பெறுவது, ஜாதகிக்கு சுக்கிரன் குறிப்பிடும் சுரப்பிகள் வகை சிரமங்கள் ஏற்படும் என்பதையும் அதன் பாதிப்பு குழந்தைப் பேறில் வெளிப்படும்  என்பதையும் குறிக்கிறது.  7 ஆமதிபதி சந்திரன் தனது நீச வீட்டை நெருங்கும் நிலையில், களத்திர காரகர்  செவ்வாய், லக்னத்திற்கு 12 ல் மறைவது கணவர் வகையில் சிரமங்கள் ஏற்படும் என்பதை குறிப்பிடுகிறது. ஆனால் செவ்வாய் லக்னாதிபதியுடன் இணைவது கசப்புகளை வாழ்வில் சந்தித்தாலும் இணைந்திருப்பதை குறிப்பிடுகிறது.

உயர் கல்விக்கு ஆராய வேண்டிய சதுர்விம்சாம்சத்த்தில் நீச குரு வக்கிரமாகி லக்னத்தில் திக்பலத்தில் அமைந்துள்ளார். ஜாதகி கல்லூரி சென்ற காலத்தைய தசாநாதர் சனி,ரிஷபத்தில் அமைந்து, புக்தி நாதரான சுக்கிரன் புதனுடன் பரிவர்த்தனை பெற்று அமைந்துள்ளார். உயர்கல்வியை குறிக்கும் 9 ன் பாவத் பாவமான 5 ஆமிடத்தில் லக்னாதிபதியுடன் தொடர்பாகும் கிரகங்களின் தசா-புக்தி வருகையில் அவற்றின் காரக  கல்வியை ஜாதகருக்கு வழங்கும். இதனடிப்படையில் ஜாதகி புதன்-சுக்கிரன் குறிக்கும் மின்னணு தகவல் தொடர்பில் பொறியியல் கல்வி BE-Electronics Communication பயின்றார்.

ஜீவனத்திற்கு ஆராய வேண்டிய தசாம்சத்தில் லக்னத்திலேயே நவீன மின்னணுவியலை குறிக்கும் ராகு-கேதுக்கள் அமைந்துள்ளன. 6 ஆமிட சனியும் 10 ஆமிட புதனும் பரிவர்த்தனை ஆகியுள்ளனர். ஜாதகிக்கு சனி தசை, சந்திர புக்தி நடந்தபோது படிப்பை முடித்த உடனேயே புதன் குறிக்கும் தகவல் தொடர்புத்துறையான தபால் இலாக்காவில் அரசுப்பணி கிடைத்தது. புக்திநாதன் சந்திரன், தகவல் தொடர்பு பாவமான 3 ல் லக்னாதிபதியுடன் இணைந்து நிற்பதை கவனிக்க.   பரிவர்தனையாகும் தசா-புக்திநாதர்களான புதன்-சனி இருவரும் அரசைக் குறிக்கும் சூரியனின் நேர் பார்வையை பெறுவதும் ராசிச் சக்கரத்திலேயே வருமானத்தை குறிக்கும் 2 ல் சூரியன்  அமைந்திருப்பதும், தசாநாதர் சனி, சூரியனின் உத்திராடத்திலேயே ராசிச்சக்கரத்தில் அமைந்ததும் ஜாதகிக்கு அரசுப் பணி கிடைக்க காரணமாகியது. 

எப்படி வரன்? எப்போது திருமணம்?

திருமணத்திற்கு ஆராய வேண்டிய நவாம்சத்தில் பல ஆச்சரியமான தகவல்கள் பொதிந்திருக்கின்றன. ஜாதகிக்கு சனி தசை, ராகு புக்தி, புதன் அந்தரத்தில் திருமணம் நடந்தது. சிம்ம லக்னத்திற்கு 7 ஆமதிபதி சனி 7 ஆமிடத்தை 3 ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் ஜாதகிக்கு சனி தசையில் திருமணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கன்னிச் செவ்வாயும், மேஷ புதனும் பரிவர்த்தனை மூலம் தொடர்பாவதால் கணவரும் ஜாதகியின் துறையைச் சார்ந்தவரே. ஜாதகிக்கு 7 ஆமதிபதி சனியின் தசையில் ராசிச் சக்கரத்தில் லக்னத்திற்கு 7 ஆமதிபதி சந்திரனின் திருவோணத்திலும், நவாம்சத்தில் சந்திரனின் ராசியான கடகத்தில் நிற்பவருமான ராகு புக்தியில், நவாம்சத்தில்  செவ்வாயோடு பரிவர்தனையாகும் புதனின் அந்தரத்தில் திருமணம் நடந்தது.

மண வாழ்வு பாதிப்பது எப்போது?

தசாநாதர் சனி நவாம்சத்தில் லக்னத்திற்கும், ராசிக்கும் 8 ஆமதிபதி குருவோடு இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இப்படி ராசி-லக்னம் இரண்டின்படியும் சாதகமற்ற நிலை பெறும் கிரகம், அதன் தசா-புக்தியில் சாதகமற்ற கெடு பலன்களை வலுவாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதன்-செவ்வாய் இருவரும் பகைவர்களே ஆனாலும் இருவரும் பரிவர்த்தனை ஆவதால் இருவருக்குமிடையே ஒரு உடன்பாடு ஏற்படுகிறது. இதனால் புதன் தனது புக்தியில் கணவருடனான குடும்ப உறவை தாங்கிப்பிடித்தார். ஆனால் குரு இங்கு சுபரே ஆனாலும் 8 ஆமிட தொடர்பு பெற்று  தசாநாதர் சனியோடு இணைந்ததால் குடும்பம் அமைந்த பிறகு தனது ஆதிக்க காலம் வரும் வரை, தனது காரக, பாவக வகைகளில் கெடு பலன்களை வழங்க காத்துக்கொண்டிருப்பார். இதன்படி 8 ஆமதிபதி தொடர்பு பெற்ற சனியின் தசையில் குருவின் அம்சமான குடும்பம் அமைந்தது முதல், கணவர்-மனைவி இருவருக்கும் கருத்து மோதல்கள் எழுந்தன. சனி தசையில் புதன் புக்தி முடிந்து குரு புக்தியில் இருவரும் பிரிந்தனர். கடமையை செய்வதில் சுபர்களுக்கும் பாவர்களுக்கும் வித்தியாசமில்லை. செயல்படும் விதத்தில்தான் வித்தியாசம் ஏற்படும். விவாகரத்து கேட்டு கணவர் வழக்குத் தொடர்ந்தார். புதனுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு லக்னாதிபதி சூரியனை 8 ஆம் பார்வையாக கணவரை குறிக்கும் செவ்வாய் பார்ப்பதால் விவாகரத்து வழங்க ஜாதகி மறுத்துவிட்டார். செவ்வாய்க்கு லக்னத்திற்கோ அல்லது லக்னாதிபதிக்கோ தொடர்பு இல்லை எனில் ஜாதகி விவாகரத்துக்கு ஒப்புதல் வழங்கியிருப்பார்.

தீய தசைக்குப் பிறகு வரும் நல்ல தசை என்ன செய்யும்?

ஏறக்குறைய 6 வருடங்களாக இருவரும் பிரிந்திருந்த நிலையில் ஜாதகிக்கு புதன் தசை துவங்கியது. சுபாவ பாவரான சனி,  8 ஆமதியானதால் லக்ன பாவரான குருவின் தொடர்பு பெற்று தசை நடத்திய காலத்தில் அடைந்த மனக்காயங்களுக்கு, செவ்வாயுனான பரிவர்த்தனைக்குப் பிறகு தனது மூலத்திரிகோண வீட்டில் உச்சமடையும் புதன் மருந்திட வேண்டியவராகிறார். தனக்கு ஜாதகி விவாகரத்து ஒப்புதல் தர மாட்டார் என்பதாலும், அங்கீகாரமற்ற மற்றொரு திருமணம் புரிந்தால் தனது அரசுப் பணியையும் இழக்க வேண்டியிருக்கும் என்பதாலும் ஜாதகியை முன்னிட்ட கணவரின் மனோபாவம் மாறுகிறது. இதனால் கணவர் புதன் தசையில் சுய புக்தியில் குருவின் அந்தரத்தில் சனியின் அந்தராந்தத்தில் மனைவியுடன் இணைந்தார். ராசிச் சக்கரத்தில், 7 ஆமதிபதி சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் திக்பலம் பெற்று நிற்கும் புதன், நவாம்சத்திலும் பரிவர்த்தனையால் உச்சத்திற்கு வருகிறார். இப்படி வலுபெற்ற தசாநாதர் புதனின் கட்டளைகளுக்கு தற்போது குரு அடிபணிய வேண்டியவராகிறார். இதனால் கணவன்-மனைவி இருவரும் மீண்டும் இணைந்தனர். புதன் ஒரு செயலை இருமுறை செய்ய வைக்கும் கிரகமாகும். இதனடிப்படையில் கருத்து வேறுபாடுகளைக் கலைந்து மீண்டும் இணைந்த காலத்தில் அதை உலகிற்கு தெரிவிக்கும் விதமாக மீண்டும் 2 ஆவது முறையாக தாலிகட்டி இணைந்தனர்.

பார்த்த சாரதிகள்.

நமது வாழ்க்கைப் பயணத்தில் ஜாதகத்தில் வலுப்பெற்று லக்னத்தோடு இணைந்த கிரகங்களே நமக்கு சாரதியாக வருகிறார்கள். இதன்படி மேற்படி  ஜாதகத்தில் ராசிச் சக்கரத்தில் திக்பலம் பெற்ற புதன் ஜாதகியின் கல்வி, வேலை, திருமணம் ஆகிய அனைத்து விதத்திலும் ஜாதக்கு சாரதியாக துணை நிற்கிறார் என்றால் அது மிகையல்ல.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English