எனது அறிமுக வட்டத்திலிருந்து ஆசிரியர் ஒருவர் கல்லூரியில் படிக்கும் தனது மகன் மற்றும் மகனின் உறவுக்கார இளைஞனின் மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் சான்றிதழ்களை காணவில்லை எனவும், தற்காலிக சான்றிதழ்களைக்கொண்டே கல்லூரியில் அவர்கள் இருவரும் முதலாம் ஆண்டு சேர்ந்ததாகவும், தற்போது முறையான சான்றிதழ்களை பள்ளியிலிருந்து பெற்றுவிட்ட போதிலும் அவற்றை வைத்த இடம் தெரியாது தவிக்கும் தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். அவரது வீடு, பணிபுரியும் பள்ளி, நகலெடுக்கும் இடம் ஆகிய அனைத்து இடங்களையும் தேடிவிட்டதாக கூறினார். கடினமான ஒரு சூழ்நிலைதான். வீட்டைத்தவிர வெளியிடத்தில் வைத்து மறந்திருந்தால் அது பரிதாபத்திற்குரியது. அதை மீட்பதும் கடினம்தான். இந்நிலையில் அவர் கேட்டுக்கொண்டதற்காக குறிப்பிட்ட சான்றிதழ்கள் எங்கே உள்ளன என பிரசன்னம் பார்ப்பது என முடிவு செய்யப்பட்டு அதற்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.
புதனின் உச்ச வீடான கன்னி உதயமே காணமல் போனவை கல்விச் சான்றிதல்கள் என்பதை குறிக்கிறது. உதயமும் ஆரூடமும் கன்னியிலேயே அமைந்து அவை இரண்டும் சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்திலேயே அமைந்து உதய சந்திரன் 11 ஆமிட கடக ஜாம புதனுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளது கவனிக்கத்தக்கது. உதயாதிபதியும், உதயத்தில் நிற்கும் கிரகமும் 11 ஆமிட தொடர்பு பெற்றால் கேள்வியாளர் நல்ல பயனை அடைவார். இதர கிரகங்களைவிட விரைவாக சுற்றும் சந்திரன் உதய தொடர்பு பெற்றால் பலனும் விரைவிலேயே கிடைக்கும். உதயத்திற்கு 7 ல் மீனத்தில் நிற்கும் வெளிவட்ட சந்திரனும் உதயத்தை பார்ப்பதால் காணாமல் போன சான்றிதழ்கள் உறுதியாக விரைவிலேயே கிடைக்கும் என்பதை குறிக்கிறது. உள்வட்ட புதன் உதயத்திற்கு 12 ல் மறைந்தாலும் சான்றிதழ்களை குறிக்கும் காரகராக அவரே அமைவதாலும் அவர் உதயத்தை அடுத்து தொட உள்ளதாலும் காணாமல் போன சான்றிதழ்கள் நிச்சயம் கிடைக்கும். புதனின் உச்ச வீட்டில் ஜாம குரு (வெளிவட்ட குரு) திக்பலத்தில் அமைந்ததும், சந்திரனுடன் பரிவர்த்தனையாகி புதன் உதயத்தை தொடர்புகொள்வதாலும் காணாமல் போனவை பள்ளிக் கல்வியில் இருந்து உயர் கல்விக்கு செல்லும்போது தேவைப்படும் சான்றிதழ்கள் (புதன்=கல்வி, சான்றிதழ்கள் & குரு=உயர் கல்வி) என்பதையும் குறிப்பிடுகிறது.
கவிப்பு 8 ல் அமைந்துள்ளது சான்றிதழ்கள் கேள்வியாளரின் தேவைக்கு தற்போது கிடைக்காமல் மறைந்துள்ளதை காட்டுகிறது. உதயத்திற்கு 7 ஆமதிபதியும் 8 ஆமதிபதியும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் ஒரு பொருள் காணாமல் போகவோ திருடு போகவோ முடியாது. இங்கு 7 ஆமதிபதி குரு உள் வட்டத்தில் 8 ல் மேஷத்தில் மறைந்து, வெளிவட்டத்தில் உதயத்திலேயே நிற்கிறார். 8 ஆமதிபதி செவ்வாயும் உதயத்திலேயே நிற்பதால் காணாமல் போன சான்றிதழ்கள் கேள்வியாளரிடமே உள்ளது. உதயத்திலும், 2 ஆமிடத்திலும் நிற்கும் உள்வட்ட, வெளிவட்ட செவ்வாயின் முறையே 8, 7 ஆமிட பார்வை தேடும் பொருள் கேள்வியாளரிடமே இருந்தாலும் அவர் பார்வையில் இல்லாமல் மறைந்து உள்ளதை காட்டுகிறது. உதயத்திற்கு 8 ல் ராகுவோடு உள்வட்ட குரு நிற்கிறார். 2 ல் கேதுவோடு 8 ஆமதிபதி செவ்வாய் நிற்கிறார். இப்படி உதயத்தின் 7, 8 ஆமதிபதிகள் மூடி மறைக்கும் காரகம் உடைய ராகு-கேதுக்கள் தொடர்பில் இருப்பதால் பொருள் கேள்வியாளரின் பார்வையில் படாமல் மறைந்துள்ளது.
உதயத்தை நோக்கி 8 ஆமதிபதி ஜாமச் செவ்வாய் வருவதும் காணமல் போன பொருள் விரைவில் கிடைக்கும் என்பதையே குறிப்பிடுகிறது. பொருள் உள்ள இடத்தை 4 ஆமிடம் குறிக்கும். 4 ஆமிடம் வீட்டை குறிப்பிடும். 4 ஆமதிபதி குரு உதயத்திலேயே நிற்பதால் காணாமல் போன சான்றிதழ்கள் வீட்டை விட்டு வெளியேறவில்லை. 4 ல் சூரியன் நிற்பதால் சான்றிதழ்களுக்கு உரியவரின் தந்தையே அவற்றை வைத்த இடத்தை மறந்துவிட்டார். காரணம் உள்வட்ட சூரியன் மறைவு ஸ்தானமான 12 ஆமிடாதிபதியாகி, அவர் மறைக்கும் தன்மையுடைய கேதுவின் மக நட்சத்திரத்தில் இருப்பதால் வைத்த இடத்தை மறந்துவிட்டார்.
காணமல் போனவை எப்போது கிடைக்கும்?
உதய சந்திரன் கன்னியில் சூரியனின் சாரத்தில் நிற்கும் 8 ஆமதிபதி செவ்வாயை கடந்து, வெளிவட்டத்தில் சுய சாரத்தில் துலாத்தில் இருந்து உதயத்தை நோக்கி வரும் செவ்வாயை நோக்கிச் செல்கிறார். சந்திரன் 11 ஆமிடத்தோடு தொடர்பாவதாலும், 11 ல் 2 ஆமதிபதி சுக்கிரன் நிற்பதாலும், உதய சந்திரன் 2 ஆமிட ஜாமச் செவ்வாயை கடக்கையில் பள்ளிச் சான்றிதழ்கள் கிடைக்கக் கூடும் என்ற அடிப்படையில் நண்பரிடம் சான்றிதழ்கள் வீட்டில்தான் உள்ளன பொறுமையாக தேடுங்கள். விரைவில் கிடைக்கும் என்று கூறினேன். நான் கணித்தபடி பிரசன்னம் பார்த்த திங்கள் கிழமைக்கு அடுத்த நாள் செவ்வைக் கிழமை கோட்சார சந்திரன் துலாத்தில் சென்ற போது சான்றிதழ்கள் கிடைத்தன. கிடைத்த நேரம் சந்திர ஹோரை சுக்கிர உப ஹோரை என்பது குறிப்பிடத்தக்கது. துலாச் சந்திரன் கடக சுக்கிரனோடு கோட்சாரத்தில் பரிவர்தனையாவதால் குறிப்பிட்ட இரு கிரகங்களின் ஆதிக்க ஹோரையில் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன.
விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501