ஒரு குடும்பத்தில் வாழ்க்கை நிம்மதியாக சென்றுகொண்டிருக்கிறது என்று ஒருவர் எண்ணினால் அந்த குடும்ப உறுப்பினர் அனைவரும் அவ்வாறே எண்ணுவர் என்பது நிச்சயமில்லை. குடும்பம் ஒன்றானாலும் பொறுப்புகள், கடமைகள் வேறு வேறானவை என்ற அடிப்படையில் ஒவ்வொருவரின் உணர்வுகளும் வேறு வேறானவை என்பதே இதற்கு காரணம். பையனுக்கு கிரிக்கெட்டில் வென்றதை கொண்டாட அப்பாவிடம் செலவுக்கு பணம் வேண்டி தேடுகிறான். தந்தையை காணவில்லை. தாய்க்கும் தெரியவில்லை. அவரது கைபேசி அனைத்து வைக்கப்பட்டுள்ளது. இறுதியாக அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பதை உணரும் ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த நிம்மதியும் இப்படிக் காணாமல் போகும் நபர்களால் பறி போகிறது. காணாமல் போகும் நபர்களின் மன எண்ணங்களை ஒருவர் வெளியேறிய பிறகுதான் குடும்பத்தினர் அசை போடுவார்கள். அதுவரை பொதுவாக அனைவரும் கூறுவது புலம்பாதே என்பதாகத்தான் இருக்கும். அப்படி காணாமல் போன ஒருவருக்காக அவரது குடும்பத்தினர் தொடர்புகொண்டதன் அடிப்படையில் (சில மாதங்களுக்கு முன்) பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.
8 ஆமிடம் என்பது தொலைதல், திருட்டு, காணாமல் போவது ஆகியவற்றை கூறுமிடமாகும். உதயம் கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் அமைந்துள்ளது. உதயத்தில் 8 ஆமிடாதிபதி புதன் சாரத்தில் அமைந்த நீச சந்திரனை, உதயத்திற்கு 4 ல் அமைந்த வக்கிர சனி 10 ஆம் பார்வையாக பார்க்கிறார். இது காணாமல் போனவர் கடும் மன உழைச்சலில் வெளியேறியுள்ளார் என்பதைக் குறிப்பிடுகிறது. ஜாமச் செவ்வாய் (வெளிவட்ட செவ்வாய்) மேஷத்தில் ராகு, குருவோடு இணைந்து விருட்சிகத்தை 8 ஆவது பார்வையாக பார்ப்பதாலும், உதயத்தை மீனத்திலமைந்த ஜாம குரு 9 ஆம் பார்வையாக பார்ப்பதாலும் ஜாதகர் உயிராபத்தில் இல்லை. ஆனால் உதயம் அடுத்து 2 ஆமிட சுக்கிரனை தொடுவது நன்மையே என்றாலும், அங்கு மாந்தி இருப்பது காணாமல் போனவர் உயிராபத்தை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதை குறிக்கிறது.
காணாமல் போனதன் காரணம்.
உதயம் கடந்து வந்த ராசி ஒருவர் காணாமல் போனதற்கு முன் இருந்த நிலையைக் காட்டும். 12 ஆமிடத்தில் உயாதிபதி செவ்வாய் இருப்பதால் காணாமல் போனவர் ஒரு சிறைக்கைதி போல சுதந்திரமற்ற நிலையில் தன்னை உணர்ந்திருப்பார். 12 ல் சூரியன், கேது, புதன், சனி போன்ற பல பாவ கிரகங்கள் உதயாதிபதியுடன் செவ்வாயுடன் இணைந்திருப்பதால் காணாமல் போனவர் பல கசப்பான சம்பவங்களின் தாக்கத்தால் வெளியேறியுள்ளார் என எடுத்துக்கொள்ளலாம். 12ல் அரச கிரகமான உதயத்தின் 10 ஆமதிபதி சூரியன் நீசமாகி, அங்கு ஜீவன காரகர் சனி உச்சமாகியுள்ளார். காணாமல் போனவர் ஒரு அரசு அதிகாரி. இதனால் இந்த அரசு அதிகாரி பணியிடத்தில் அதீத வேலைப் பளுவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார். உதயத்தை 4 ஆமிட சனி 10 ஆம் பார்வையாக பார்ப்பதும், உதய புள்ளி சனியின் அனுஷத்திலேயே அமைந்திருப்பதும் இதை உறுதி செய்கிறது. 1௦ ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் அவமான ஸ்தானமான 8 ஆமிடம் மிதுனத்தில் அமைந்துள்ளதால் அரசு வகை கடுமையே காணாமல் போனவர் நிலைக்கு காரணம் என்று அனுமானிக்கலாம். 10 ல் அமைந்த உள்வட்ட சுக்கிரனும் 2ல் அமைந்த வெளிவட்ட சுக்கிரனும் மனைவியை குறிப்பிடும் 7 ஆமதிபதியாவதால் இவர் காணாமல் போவதற்கு மனைவியும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் 2 , 10 ஆமிட சுக்கிரன்கள் மனைவியால் வீட்டில் செல்வ வளமை ஏற்படுவதை குறிப்பிடுகிறது. 12 ஆமிடம் நிம்மதியை குறிப்பிடுவதால் காணமல் போனவர் பணியிடத்தில் அரசு வகை கெடுபிடியான பணி நிலையால் நிம்மதி வேண்டி காணாமல் போயுள்ளார் என எடுத்துக்கொள்ளலாம்.
காணாமல் போனவரில் தற்போதைய நிலை.
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று நீர் ராசிகளும் ஆன்மீக ராசிகளாகும். உதயமும், கவிப்பும் விருச்சிகமும், கடகமுமாக அமைந்து உதயத்தில் சந்திரன் அமைந்திருப்பதாலும், ஆரூடதிலும் சந்திரன் அமைந்து, மூன்று நீர் ராசிகளும், ஆரூடமும் குரு தொடர்பு பெறுவதாலும் காணாமல் போனவர் ஏதேனும் ஒரு ஆன்மீக ஸ்தலத்தில் தஞ்சமடைந்திருப்பார்.
காணாமல் போனவரின் இருப்பிடம்.
காணாமல் போனவரின் இருப்பிடம் எதுவாக இருக்கும் என்றொரு கேள்வி இதுபோன்ற பிரசன்னனத்தில் முக்கியத்துவம் பெறும். விலாசத்தை கூற இயலாவிட்டாலும் அதை அனுமானிக்க சில யுக்திகள் உண்டு. அதனடிப்படையில் உதயாதிபதி செவ்வாய் உள்வட்டத்தில் துலாத்தில் சூரியனோடு இணைந்து, வெளிவட்டத்திலும் மேஷத்தில் சூரியனின் பார்வையை ராகு-கேதுக்களுடன் இணைந்து பெறுவதாலும் காணாமல் போனவர் பழனி போன்ற மலை சார்ந்த ஆன்மீக ஸ்தலமொன்றில் இருக்க வாய்ப்புண்டு என்று கூறப்பட்டது.
காணாமல் போனவர் கிடைப்பாரா?
உதயத்துடன் 3, 7,11 ஆமதிபதிகளும், சுபர்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், தனித்த புதன் ஆகியோர் தொடர்புகொள்ளும் நிலையில், இத்தகைய கேள்விகளுக்கு சாதகமான பதிலைக் கூறலாம். இதனடிப்படையில் உதயத்திற்கு 2 ஆமிடமான தனுசிலமைந்த 7 ஆமதிபதியான ஜாமச் சுக்கிரன் உதயத்தை நோக்கி வருவதால் காணாமல் போனவர் விரைவில் கிடைத்துவிடுவார் என்று கூறப்பட்டது.
பிரசன்னம் பார்த்ததற்கு 2 ஆவது நாள் மாலை காணாமல் போனவர் திருவண்ணாமலையில் இருந்து மீட்கப்பட்டதாக தகவல் கூறினர். திருவண்ணாமலையும் பெயரிலேயே மலையை கொண்டுள்ள ஆன்மீக ஸ்தலம் என்பதுடன், சூரியன் உச்சமாகும் மேஷம் திருவண்ணாமலையை குறிக்கும் என்பதை கவனிக்கத் தவறி விட்டேன். பழனியை குறிப்பிடும் ராசி விருட்சிகமாகும். ஆனால் உதயாதிபதி செவ்வாய் சூரியனோடும், மேஷத்தோடும் தொடர்பாவதால் காணாமல் போனவர் திருவண்ணாமலையில் இருந்துள்ளார்.
காணாமல் போனவர் பணியிடத்தின் தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பலன்களை கிடைக்க விடாமல் தடை போட்ட குறிப்பிட்ட ஒரு உயரதிகாரியின் செயலாலே காணாமல் போயுள்ளார். இவரது மனைவியும் அரசுப்பணி புரிபவர். மனைவிக்கு கணவர் பணிபுரியும் ஊருக்கு அருகில் மாற்றல் கிடைக்காததனால் ஏற்பட்ட விரக்தியும் காணாமல் போவதற்கு மற்றுமொரு காரணமாக இருந்துள்ளதாக தகவல் கூறினார்கள்.
மேற்கண்ட விஷயத்தை பிரசன்னம் தெளிவாக காட்டியுள்ளது. இதை எனக்கு அருளிய எனது குருமார்களுக்கு எனது மானசீக நன்றியை மீண்டுமொரு முறை சமர்ப்பிக்கிறேன்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி:8300124501