
“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் கர்மாவோடும் பின்னிப்பிணைந்த ஒரு நுட்பமான ரகசியம். இன்னாருக்கு இன்னார், இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான் வாழ்க்கைத்துணை என்பதை ஒரு ஜனன ஜாதகம் தெள்ளத்தெளிவாக முன்கூட்டியே நமக்கு உணர்த்திவிடும்.
ஆனால், இன்றைய காலகட்டம் முற்றிலும் மாறுபட்டது.
கால மாற்றமும் கட்டுக்கள் அவிழும் நிகழ்வும்: இன்றைய நவீன சம்பாத்தியச் சூழலும், பொருளாதாரச் சுதந்திரமும் இளைய தலைமுறைக்குத் தங்கள் வாழ்க்கைத்துணையைத் தாங்களே துணிவுடன் தேர்ந்தெடுக்கும் உரிமையை அளித்துள்ளன. கடந்த காலங்களில் மனித மனங்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த சமூகக் கட்டுக்கள் இன்று மெல்ல மெல்ல அவிழ்ந்து வருகின்றன.
- பெற்றோரின் தவிப்பு: இந்த மாற்றங்களை, தங்கள் காலத்து மனநிலையிலேயே உறைந்துபோயிருக்கும் பெற்றோர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
- மாறும் முடிவுகள்: பிள்ளைகளின் திருமண முடிவுகளை அங்கீகரிக்க இயலாமல், “ஏன் எங்கள் குடும்பத்தில் இப்படி நடக்க வேண்டும்?” என அவர்கள் தவிப்பதும், புலம்புவதும் இன்று பல வீடுகளில் வாடிக்கையாகிவிட்டது.
விசித்திரமான திருமணமும், கர்மாவின் கேள்வியும்: இப்படிப்பட்ட ஒரு மனப்போராட்டத்தோடும், ஆற்றாமையோடும் சமீபத்தில் தங்கள் குடும்பத்தில் நடந்த சற்றே விசித்திரமான, அவர்கள் சற்றும் எதிர்பாராத ஒரு திருமணத்தை ஜீரணிக்க முடியாத நிலையில் அக்குடும்பம் தொடர்புடைய ஒருவர் தனது சமூக அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்ற நிலையில் பெயரை மாற்றிக்கொண்டு என்னை தொடர்புகொண்டார்.
“இதற்குப் பின்னால் உள்ள காரண கர்மா என்ன? கிரக அமைப்புகளா அல்லது காலத்தின் கட்டாயமா?” என்ற அவரது ஆழமான கேள்விக்கு விடை தேட வேண்டியிருந்தது.
அவரின் குழப்பங்களுக்குத் தீர்வு காணவும், அந்த விசித்திரத் திருமணத்தின் கர்மப் பின்னணியை அறியவும் பார்க்கப்பட்ட ‘ஜாமக்கோள் பிரசன்னமே’ இன்றைய பதிவாக உங்கள் முன் விரிகிறது. வாருங்கள், இந்தத் திருமணத்தின் பின்னணியில் கிரகங்கள் ஆடிய கர்ம விளையாட்டைப் பிரசன்னத்தின் வழியே விரிவாகப் பார்ப்போம்!
ஜாமக்கோள் பிரசன்னத்தின் ஆழமான சுட்டிக்காட்டல்கள்

உதயமும் ஆரூடமும்: கால புருஷனுக்கு சுக ஸ்தானமான கடகத்தில் காதல் காரகர் என்றழைக்கப்படும் புதனின் ஆயில்யத்திலேயே உதயமும் ஆரூடமும் அமைந்துள்ளதால், திருமணம் செய்துகொண்டோர் இருவரும் பிறர் கருத்துகளைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் மன விருப்பங்களுக்கு ஏற்ப காதலித்துத் திருமணம் செய்துள்ளனர் என்பதைக் குறிப்பிடுகிறது.
கவிப்பு: செயலின் விளைவைக் குறிப்பிடும் ‘கவிப்பு’, லாப ஸ்தானமான 11-ஆம் இடத்தில் அமைந்தது காதல் நிறைவேறுவதைக் குறிப்பிடுகிறது.

கணவரின் கிரக நிலை (ஆண்):
உதயத்தை ஆண் (கணவர்) என எடுத்துக்கொண்டு, 7-ஆம் இடத்தை மனைவி என எடுத்துக்கொண்டு இந்தப் பிரசன்னத்தை ஆராய்வோம்.
- உதயாதிபதி சந்திரன் உள்வட்டத்தில் 6-ஆம் இடமான தனுசில் வெளிவட்ட குருவோடும், 12-ஆம் இடமான மிதுனத்தில் உள்வட்ட குருவோடும் இணைந்து அமைந்துள்ளனர். இது 6, 12, சந்திரன், குரு குறிப்பிடும் வகையில் கணவரின் வேலை வெளிநாடு அல்லது இரவுப்பணி போன்றவற்றைக் குறிப்பிடும்.
- 12-ஆம் இடம் அடைபடல், சிறைப்படல் போன்ற அமைப்புகளையும் குறிப்பிடும்.
- இதனால் கால புருஷ 12-ஆம் இடமான மீனத்திலிருந்து செவ்வாயுடன் இணைந்த சனி 10-ஆம் பார்வையாக உதயாதிபதியைப் பார்ப்பதாலும், மிதுனத்தில் நிற்கும் வெளிவட்ட சந்திரனை மீனத்திலிருந்து சனியோடு இணைந்த செவ்வாய் 4-ஆம் பார்வையாகப் பார்ப்பதாலும், கணவர் ஓரிடத்தில் அடைந்து அல்லது சிறைப்பட்டது போன்ற தன்மையுள்ள மருத்துவமனை, சிறைச்சாலை போன்றவற்றில் பணிபுரிபவராக இருக்கலாம்.
கணவனும் மனைவியும் சந்திக்கும் புள்ளி:
- உதயத்தில் 7-ஆம் அதிபதி சனி அமைந்துள்ளதைக் கவனிக்கவும். இது கணவர் எனும் உதயாதிபதியைத் தேடி 7-ஆம் அதிபதி எனும் மனைவி வருவதைக் குறிப்பிடுகிறது. அதாவது, கணவர் பணிபுரியும் இடத்திலேயே மனைவியும் பணிபுரிந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு திருமணம் செய்வதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது.
- கடக உதயத்திற்கு 7-ஆம் இடத்து அதிபதி சனியே 8-ஆம் அதிபதியாகவும் வருவதால், இவர்களது திருமணம் கலப்புத் திருமணமாக, மதம், இனம் கடந்ததாக இருக்கும்.
- 8-ஆம் இடம் குற்றம், குறை, வேற்றினம் ஆகியவற்றுடன் அவமானங்களையும் குறிப்பிடும் என்பதால், இவர்களது திருமணத்தால் அவமானங்களும், மதிப்புக் குறைவும் ஏற்படலாம்.
மனைவியின் கிரக நிலை (பெண்):
இப்போது மனைவியைக் குறிப்பிடும் 7-ஆம் இடத்தை ஆராய்வோம்.
- 7-ஆம் இடத்தில் உச்ச செவ்வாய் அமைந்துள்ளார். இது மனைவி கணவரை விட வலுவானவர், அதிகாரம் பொருந்தியவர் என்பதைக் குறிப்பிடுகிறது.
- உதய சனி 7-ஆம் இட உச்ச செவ்வாயைப் பார்ப்பதால் மனைவியும் சட்டம் ஒழுங்கு, மருத்துவம் தொடர்புடைய துறையில் பணிபுரிய வாய்ப்புள்ளது.
- 7-ஆம் இட செவ்வாயை அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொண்டால் உதய சனி நோயைக் குறிப்பிடும். செவ்வாயைப் போலீஸ் என்று எடுத்துக்கொண்டால் சனி குற்றவாளி எனுமளவு ஒரு தொடர்பு கணவன் மனைவிக்குள் நிச்சயம் இருக்கும்.
- உள்வட்ட 7-ஆம் அதிபதி சனி வெளிவட்டத்தில் செவ்வாய், சூரியனுடன் கால புருஷனுக்கு 12-ஆம் இடமான மீனத்தில் அமைந்ததால் மனைவியும் கணவரைப் போன்றே ஓரிடத்தில் அடைந்து பணிபுரியும் அமைப்பு உள்ளது. உதயத்திற்கு 9 ஆமிடம் மீனம் என்பதால் அடைப்பட்டு பணிபுரிந்தாலும் அது மதிப்பானதாக நிச்சயம் இருக்கும்.
- 7-ஆம் இடத்தில் செவ்வாய் உச்சம் பெற்று, உள்வட்டத்திலும் 7-ஆம் அதிபதி சனி செவ்வாய், சூரியனுடன் உதயத்திற்கு 9-ல் தொடர்பாவதால் மனைவி அதிகாரப் பணி புரிபவர் என்பதுடன், அது அரசுப் பணியாகவும் இருக்கும் என்பதும் புரிகிறது. அதாவது, மனைவி மருத்துவரானால் அரசு மருத்துவர்; சட்டம் ஒழுங்கு என்றாலும் அதிலும் சூரியன் குறிப்பிடும் தலைமைப் பொறுப்பில்தான் இருப்பார்.
கர்மாவின் வெளிப்பாடும், திகைக்க வைத்த உண்மையும்
மேற்கண்ட பிரசன்ன அமைப்புகளை ஆராய்ந்துவிட்டு, பிரசன்னம் பார்க்கக் கேட்டுக்கொண்டவரிடம் நான் பின்வருமாறு கூறினேன்:
“திருமணம் செய்துகொண்டவர்களில் ஆணின் ஜாதகம் குற்றம், குறை, தண்டனை, வேற்றினம் ஆகிய குறைகளைக் குறிப்பிடுகிறது. ஆனால், பெண்ணின் ஜாதகம் ஆளுமை, அதிகாரம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. அதிகாரம் பொருந்திய ஒருவர், குற்றம் குறைகளுடன் கூடிய ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதை உங்கள் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவர்கள் திருமண உறவில் இணைந்ததற்கு அவர்களது சுய கர்மாவே காரணம் என்பதைப் பிரசன்னம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. பிரசன்ன உதயத்துடன் 8-ஆம் அதிபதியும், கால புருஷ 8-ஆம் அதிபதியும் தொடர்பாவதால் அவர்களைப் பிரிக்க முயல வேண்டாம்.” என்று கூறினேன்.
எனது பதிலால் திகைத்த அவர், “அப்படித்தான் பிரசன்னத்தில் உள்ளதா?” என்று மீண்டும் மீண்டும் ஆச்சரியத்துடன் கேட்டார்.
பிறகு அவர் கூறியதாவது: “பெண் எங்கள் குடும்ப உறவினர் மகள். அவள் சிறைத்துறையில் வார்டனாகப் பணிபுரிகிறாள். இஸ்லாமியராகிய நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், கொலைக் குற்றத் தண்டனைக் கைதியான இந்து நபர் ஒருவரைச் சிறையில் காதலித்து, அவர் விடுதலையானதும் திருமணம் செய்துகொண்டாள்,” என்று கூறி என்னைத் திகைக்க வைத்தார். முன்னதாகத் தனது மத அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தனது பெயரை மாற்றிக் கூறியிருந்ததற்கு மன்னிப்பும் கோரினார்.
இந்தப் பிரசன்னத்தை எனக்கு அருளிய எனது குருநாதருக்கு மானசீகமாக நன்றி கூறிக்கொண்டேன்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துகளுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501.











