ஜனன ஜாதகமும் பிரசன்ன ஜாதகமும்
ஒரு ஜாதகத்தை ஆராயும்போது அந்த நேரத்திற்கு ஒரு பிரசன்ன ஜாதகத்தை குறித்து வைத்துக்கொண்டு ஜோதிடரிடம் கொடுக்கப்பட்ட ஜாதகத்தை ஆராயும்போது இரு ஜாதகத்திற்கும் ஒரு தொடர்பு நிச்சயம் இருக்க வேண்டும். ஜாதகர் ஜோதிடரைக்காண வந்த காரணத்தை அனுமானிக்க ஜோதிடத்தில் பல்வேறு யுக்திகள் கையாளப்படுகின்றன. அப்படிப்பட்ட யுக்திகள் மூலம் காரணத்தை அறிய இயலாவிட்டாலும் அவை தவறாகக் கணிக்கப்பட்ட ஜாதகமாகவோ அல்லது போலி ஜாதகமாகவோ இருக்க வாய்ப்ப்புண்டு. பொதுவாக ஒரு ஜாதகத்தை ஆராயும்போது ஜாதகத்தின் அமைவிற்கேற்ப ஜாதகரின் நிலை உள்ளதா என அறிந்து ஜாதகத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். திசா – புக்திகளுகேற்ப கடந்த காலங்களில் சம்பவங்கள் நடந்துள்ளதா என்று சரிபார்த்துக்கொள்வதும் சிறந்தது. அப்போதுதான் ஜோதிடரால் ஜாதகருக்கு தெளிவாக வழி காட்ட இயலும்.
ஜனன ஜாதகம் சந்தேகத்திற்குரியதாக இருந்தால், (உதாரணமாக திசா-புக்தியும் கோட்சாரமும் ஒரு சிறப்பான நிலையைக்காட்டி ஜாதகர் கடின சூழ்நிலையை சமாளிப்பது எப்படி என ஜோதிடரை நாடி வந்திருந்தால்) அப்படிப்பட்ட நிலையில் ஜோதிடர் ஜனன ஜாதகத்தை தவிர்த்து அந்த நேரத்திற்கு கணிக்கப்பட்ட பிரசன்ன ஜாதகத்தைக்கொண்டு கேள்வியாளருக்கு பதிலுரைப்பதே சிறந்தது. உண்மையில் ஒரு நபர் கொண்டுவரும் ஜாதகம் உண்மையானதா போலியானதா என்று கூட பிரசன்ன ஜாதகம் கொண்டு அறிய முடியும். மேலும் ஒரு நபரின் உண்மையான ஜாதகத்தை தேர்ந்த ஒரு ஜோதிடரால் பிரசன்ன ஜாதகத்தைக்கொண்டே எழுதிவிட இயலும். இக்கருத்துக்களை ஒருங்கிணைந்து ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.
என்னிடம் ஒரு ஜாதகம் ஆய்வுக்கு கொண்டுவரப்படுகிறது. ஜாதகத்தை நான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நேரத்தின் பிரசன்ன ஜாதகம் நீங்கள் கீழே காண்பது.
பிரசன்ன ஜாதக விபரம். ஆண்.25.03.2020 இரவு 8 மணி 3 நிமிடம். பிரசன்ன ஜாதகத்திற்கும் ஜனன ஜாதகத்திற்கும் உள்ள தொடர்பை பிரசன்ன ஜாதகத்தின் லக்னம், லக்னாதிபதியை முக்கியமாகக் கொண்டே அறியமுடியும். மேற்கண்ட பிரசன்ன ஜாதகத்தில் லக்னத்தை லக்னாதிபதி சுக்கிரன் மேஷத்திலிருந்து பார்க்கிறார். இதிலிருந்து ஜனன லக்னத்திற்கும் சுக்கிரனுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என அறியவேண்டும். மேலும் பிரசன்ன ஜாதக ஹோரை சுக்கிர ஹோரையாகும் இதனால் லக்னம் சுக்கிரனோடு தொடர்புடையது என அனுமானிக்கலாம். சுக்கிரன் ரிஷபத்திற்கு விரையத்தில் மேஷத்தில் இருந்து பிரசன்ன லக்னமான துலாத்தை பார்ப்பதால் இங்கு ரிஷபத்தை விட துலாமே ஜனன லக்னமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. லக்னத்தை சுக்கிரனைத் தவிர மகரச்சனி தனது 10 ஆம் பார்வையாகப் பார்க்கிறது. சனி லக்னத்தை தவிர சந்திரனை தன் 3 ஆம் பார்வையாக பார்க்கிறது. இதனால் லக்னதிற்கோ அல்லது ராசிக்கோ சனியின் தொடர்பும் இருக்கும் என அனுமானிக்கலாம். சந்திரன் மீனத்தில் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் நிற்கிறது. சந்திரனின் சார நாதன் புதன் கும்பத்தில் நிற்கிறது. இதனால் ஜனன ராசி மீனமாகி நட்சத்திரம் புதனின் ரேவதி நட்சத்திரமாகவோ அல்லது சந்திரனின் சார நாதன் நிற்கும் கும்ப ராசியாகவோ இருக்க வாய்ப்புண்டு.
இப்போது பிரசன்ன லக்னாதிபதி சுக்கிரனை கேதுவோடு இணைந்த குரு தனது 5 ஆம் பார்வையாக பார்க்கிறது. ஆனால் குரு தனுசுவின் கடைசி பாகையில் இருந்து தனது நீச்ச வீட்டை நோக்கி செல்வதாலும் பாவத்தில் குரு மகரத்தில் செவ்வாய், சனியோடு இணைவதாலும் சுக்கிரனுக்கு கிடைக்கும் குருவின் 5 ஆவது பார்வை வலுவற்றதாகும். எனவே லக்னத்திற்கு குருவின் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. பாவ குரு சனியோடு சேர்வதாலும் சனிக்கும் ஜனன ராசிக்கும் தொடர்பு இருக்கும் என ஏற்கனவே நாம் அனுமானித்து வைத்துள்ளதாலும் ராசி அல்லது நட்சத்திரத்தில் குருவின் பங்கும் இருக்கும் எனலாம். அடுத்து செவ்வாயும் தனது 4 ஆம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறது. எனவே லக்னத்திற்கு செவ்வாயின் தொடர்பும் இருக்க வேண்டும். செவ்வாய் சனியோடு கிரக யுத்தத்தில் தோற்றிருந்தாலும் கால புருஷ லக்னத்திற்கு 1௦ ஆமதிபதியான சனியோடு உச்ச கதியில் திக்பலத்தில் நின்று தன் வீட்டில் நிற்கும் சுக்கிரனை பார்க்கிறது. எனவே ஜனன லக்னத்தில் செவ்வாயின் பங்கு இருக்க வேண்டும்.
மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையை ஜனன லக்னம் துலாமாகவும் ராசி கும்பமாகவும் இருக்கலாம். இது ஜனன லக்னம் சுக்கிரனுடையதாகவும் ராசி சனியினுடையதாகவும் இருக்கும் என்ற அடிப்படையைக்கொண்டது. மேலும் சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் தொடர்பும் எதோ ஒரு வகையில் இருக்க வேண்டும். சரி, இப்போது ராசிக்கு குருவின் தொடர்பு எப்படி ஏற்படும் என ஆராய்ந்தால் கும்ப ராசி என நாம் ஜனன ராசியை அனுமானித்து வைத்துள்ள ராசியில்தான் குருவின் பூரட்டாதி நட்சத்திரம் உள்ளது. எனவே ஜாதகரின் ஜனன நட்சத்திரம் கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரமாக இருக்க வேண்டும்.
கீழே நீங்கள் காண்பது ஜாதகரின் உண்மையான ஜனன ஜாதகம்.
இதில் லக்னம் துலாமாகவும் ராசி கும்பமாகவும் உள்ளது. நட்சத்திரம் பூரட்டாதி-3 ஆகும். லக்னத்தை சனி 3 ஆம் பார்வையாக பார்ப்பதிலிருந்து பிரசன்ன ஜாதகப்படி லக்னத்திற்கு சனி தொடர்பு உறுதியாகிறது. சிம்மச் செவ்வாய் லக்னாதிபதி சுக்கிரனின் பூரம்-1 ல் நிற்கிறது. எனவே செவ்வாய் சுக்கிர தொடர்பும் உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே இது உண்மையான ஜாதகமே. போலியான ஜாதகத்திற்கும் பிரசன்ன ஜாதகத்திற்கும் இப்படி தொடர்புகள் இருக்க வாய்ப்பில்லை. ஒரு சில ஜாதகங்களில் பிரசன்ன ஜாதகத்தோடு தொடர்பு இருந்தால் அதன் உண்மைத்தன்மையை திருமண நாள், வேலை கிடைத்த நாள், வீடு, உடல்நல பாதிப்புகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வாழ்க்கை சம்பவங்களை திசா புக்திகளோடு தொடர்புபடுத்தி தெளிவடையலாம்.
பொதுவாக தவறான ஜாதகங்கள் எப்படி உருவாகின்றன என்றால் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதோரால்தான். அப்படிப்பட்டோரின் பிள்ளைகள் திருமணத்திற்கு துணையை தேடும்போதுதான் ஜாதகம் எழுதி வைக்காததன் பாதிப்பு தெரியும். அப்படிப்பட்டோர் திருமணதிற்காக உத்தேசமாக ஜனன விபரங்களை கொடுத்து ஜாதகங்களை கணினியில் கணித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஜாதகங்களை வைத்துக்கொண்டு பொருத்தம் பார்க்கும் ஜோதிடரின் நிலைதான் பரிதாபத்திற்குரியது. இத்தகைய நேரங்களில் ஜோதிடர்களுக்கு உதவுவது பிரசன்ன ஜாதகமாகும். சில சமயங்களில் ஜாதகத்தில் இருக்கும் கடுமையான தோஷங்களை மறைத்து சிறப்பான ஜாதகமாக மாற்றி தங்களுக்குப் பிடித்த வாழ்க்கைத்துணையை அடையவதற்கேற்பவும் போலி ஜாதகங்கள் உருவாகின்றன. இத்தகைய ஜாதகதினர் கடுமையாக நோய்வாய்ப்படும்போது அவர்களின் உறவுகள் போலியான ஜாதகத்தை வைத்துக்கொண்டு அதிலுள்ள நட்சத்திர நாதனுக்கு சாந்திப்பரிகாரங்களும் வழிபாடுகளும் செய்து பயனில்லாமலும் காரணம் புரியாமல் ஜோதிடத்தையும் படைத்தவனையும் திட்டுவதும் இந்தக்காலத்தில் நடக்கிறது.
இப்பதிவு எழுத உந்துதலாக இருந்த காஞ்சிபுரம் வாசகர் திரு.இன்பநாதன் அவர்களுக்கு நன்றி.
மீண்டும் ஒரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.கைபேசி: 8300124501