மனிதன் ஒரு ஓடும் நதிபோல இருக்க வேண்டும். அப்போதுதான் நிறைய வாய்ப்புகளையும் அனுபவங்களையும் பெற இயலும். வாழ்வு செழிப்பாக இருக்க புதுப்புது முயற்சிகளும், அனுபவங்களும் அவசியம் தேவை. கடந்த தலைமுறைகளில் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற தேசங்களுக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்ட எனது வாடிக்கையாளர்களுடன் உரையாடும்போது அவர்களது மனவோட்டத்தையும் நமது மக்களின் மனவோட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகப்பெரிய வித்தியாசங்களை உணர முடிகிறது. தனது மகள் அமெரிக்காவில் ஒரு வெள்ளையரை காதலிப்பதை ஒரு அமெரிக்க வாழ் இந்திய பிராமண பெண்மணி மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார். இந்தியாவில் இந்நிலையை அடைய இன்னும் ஒரு தசாப்தம் செல்ல வேண்டும். கல்வி, சம்பாத்தியம், சுற்றுலா, மணவாழ்வு, மருத்துவம் போன்ற பல்வேறு காரணங்களை முன்னிட்டு பல்வேறு தேசங்களுக்கு செல்கின்றனர். குறிப்பாக திருமண உறவில் வெளிநாட்டில் பணிபுரியும் வரனை தேர்ந்தெடுக்குமுன் மிகுந்த கவனம் தேவைப்படும். இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஒரு தம்பதியின் ஜாதகம்.
கணவருக்கு சூரிய தசை நடக்கிறது. சூரியன் மிதுனத்தில் அமைந்துள்ளார். அவர் கடக செவ்வாயின் மிருக சீரிஷ நட்சத்திரத்தில் நிற்கிறார். இதனால் சூரிய தசையில் ஜாதகருக்கு வெளிநாட்டு யோகம் உண்டு. செவ்வாயும் சந்திரனும் பரிவர்தனையாகியுள்ளதால் அடுத்த சந்திர தசையிலும் ஜாதகருக்கு வெளிநாட்டு யோகம் உண்டு. சூரியன் ராசியில் ரிஷபத்தில் இருந்தாலும் பாவகத்தில் மிதுனத்தில் இருக்கிறார். லக்னாதிபதியும் ஜீவன காரகருமான சனி 12 ல் ராகு சேர்க்கை பெற்றுள்ளதால் ராகு காரக தொழிலை ஜாதகர் வெளிநாட்டில் செய்ய சிறப்பு ஏற்படும். வக்கிர சனியை ராகு பாதிக்க மாட்டார். கடக கேது சுக்கிரன், செவ்வாயை கடந்து சென்றுவிட்டதால் கணவன் மனைவி இணக்கத்தை குறைக்காது. பத்தாம் அதிபதி செவ்வாயுடன் கேது கடகத்தில் இணைந்துள்ளதால் ஜாதகர் வெளிநாட்டில் ராகு-கேதுக்களின் காரக தொழிலை செய்ய சிறப்பு. கேது முதலில் மிதுனத்தில் நிற்கும் தசா நாதர் சூரியனை தொடுகிறார். ஜாதகர் கனடாவில் கணினி வல்லுனராக குடும்பத்துடன் வசிக்கிறார். மிதுனம் கனடாவை குறிக்கும் ராசியாகும்.
மனைவிக்கு லக்னத்தில் மூலத்திரிகோண வலுவுடன் அமைந்த சனி தசை நடக்கிறது. கணவரின் சூரிய தசைக்கு சனி பகை கிரகமாகும். ஆனால் இந்த ஜாதகத்தில் கணவரின் தசாநாதர் சூரியனுக்கு மனைவியின் தசா நாதர் சனி திரிகோணத்தில் அமைந்துள்ளார். திரிகோண கிரகங்கள் குடும்ப உறவுகளைப்போல ஒருங்கிணைப்புடன் செயல்படும். 9 ல் அமைந்த ராகுவின் சதயத்தில் லக்னத்தில் தசா நாதர் சனி அமைந்ததால் ஜாதகிக்கும் வெளிநாட்டு யோகம் உள்ளது. கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் தசா கிரகங்கள் திரிகோணத்தில் அமைந்து இருவர் ஜாதகத்திலும் வெளிநாட்டு யோகமும் உள்ளதால் இருவரும் இணக்கமாக உள்ளனர். மேஷமும், துலாமும் சம சப்தம ராசிகள் என்பதால் இணக்கம் மேலும் சிறப்பாக உள்ளது. ஜாதக அமைப்புகள் வெளிநாட்டு யோகத்துடன் கணவன் மனைவி இடையே இணக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
கீழே இரண்டாவது தம்பதியரின் ஜாதகங்கள்.
கணவர் ஜாதகப்படி ராகு தசை நடக்கிறது. ராகு 12 ல் நிற்கும் குரு சாரத்தில் நிற்பதால் ஜாதகர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். ஏழரை சனியை கடந்துகொண்டுள்ளார். 7 ஆமதிபதி செவ்வாய் 8 ல் சனி சந்திரனோடு இணைந்து நிற்கிறார். இது துணைவரை வேலை நிமித்தம் பிரிந்து வெளிநாடு செல்வதை குறிக்கிறது. பாவகத்தில் சனி மாறி விருட்சிகத்திற்கு வருகிறது. இது துணைவரை அணுகுவதில் தடை தாமதத்தை குறிக்கிறது.
மனைவி ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் உள்ளது. கணவருக்கு சர்ப்ப தோஷம் இல்லை. மனைவி ஜாதகத்தில் செவ்வாய் கடகத்தில் அமைந்துள்ளது. உள்ளது. இது கணவர் வெளிநாடு தொடர்புடையவர் என்பதை குறிக்கிறது. சர்ப்ப தோஷம் திருமண உறவுக்கு தடையை ஏற்படுத்துவதோடு செவ்வாய் நீசம் பெற்று அமைந்துள்ளது. இவை கணவரை அணுகுவதில் மனைவிக்கு தடைகள் உள்ளதை குறிக்கிறது. ஜாதகிக்கு சூரிய தசை நடக்கிறது. சூரியன் குடும்ப பாவகமான 2 க்கு விரயமான லக்னத்தில் அமைந்துள்ளது. சூரியன் கணவரை குறிக்கும் செவ்வாய்க்கு பாதகத்தில் அமைந்துள்ளது. மேலும் சூரியன் கேதுவோடு சேர்க்கை பெற்றுள்ளதால் கேதுவின் காரகத்தை ஏற்று செயல்படும். கேது சந்நியாசி கிரகமாகும். இச்சேர்க்கை ஜாதகியை கணவரை பிரிந்து சந்நியாசி போல வாழவைக்கும். நடக்கும் சூரிய தசை கணவரின் ராகு தசைக்கு பகை கிரக தசையாகும். கணவர் மனைவி இருவரின் ஜாதகத்திலும் ராகு-கேதுக்கள் சூரியனை கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். மனைவியின் சுக ஸ்தானத்தில் அமைந்த சந்திரனை கணவரின் கேது கட்டுப்படுத்தி சுகப்படாமல் தடை செய்கிறார். சந்திரனுக்கு வீடு கொடுத்தவர்தான் நடப்பு தசா நாதர் சூரியன் என்பதை கவனியுங்கள். கணவர் வாழ்வு வெளிநாட்டில் அமைகிறது. மனைவிக்கு வெளிநாட்டு யோகம் இல்லை. இருவர் ஜாதகத்திலும் உள்ள இத்தகைய முரண்பட்ட அமைப்புகளாலும் சுகப்படுவதை தடை செய்யும் அமைப்புகளாலும் இருவரும் இணைந்து வாழ்வது பாதிக்கப்படுகிறது. மனைவி குழந்தைகள், குடும்ப பொறுப்புகளின் பொருட்டு கணவரின் தேசத்திற்கு செல்ல இயலவில்லை. கணவர் வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு இங்கு வந்து வேலை தேடுவது பயனற்றதாகிறது. இதனால் கணவர் மீண்டும் வெளிநாட்டிற்கே சென்றுவிட்டார். மனைவி இந்தியாவில் குழந்தைகளுடன் வசிக்கிறார்.
கீழே மூன்றாவது தம்பதியரின் ஜாதகங்கள்.
ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் 12 ஆமதிபதி சூரியனுடனும் கால புருஷ 12 ஆமதிபதி குருவுடனும் இணைந்து 10 ல் நிற்கிறார். சூரியன் திக்பலம். மிதுனம் அமெரிக்காவை குறிக்கும். செவ்வாய் கடகத்தில் சுக்கிரனுடன் இணைந்து அமைந்துள்ளார். கணவர் மனைவி இருவரும் கடல் கடந்து வசிக்கும் அமைப்பு இவரது ஜாதகத்திலேயே உள்ளது. கேது 12 ல் இருந்து சுக்கிரன், செவ்வாயை நோக்கி வருவதால் அதில் தடைகளும் வரும். இந்த மென்பொருள் வல்லுநர் செவ்வாய் தசையில் சூரிய புக்தியில் அமெரிக்கா சென்றார். செவ்வாய் தசை முடிந்ததும் ராகு தசை துவங்குகிறது. ராகு ஜாதகரின் வாழ்க்கைச் சூழலை தன்னிஷ்டப்படி மாற்றியமைக்கிறார். ஜாதகர் இந்தியா திரும்புகிறார். வேலையில் நிறுவன மாற்றத்தை சந்திக்கிறார். வேலை பாவகமான 6 ல் நிற்கும் ராகு அந்நிய தொடர்பை நேரடியாக குறிப்பிடுவதாலும் அவரும் கடக செவ்வாயின் சாரத்திலே நிற்கிறார். இதனால் ஜாதகர் மீண்டும் அமெரிக்காவிற்கு புதிய நிறுவனம் சார்பாக செல்கிறார். ராகு நிற்கும் 6 ஆம் பாவகம் என்பது களத்திர பாவகமான 7 ன் விரையமாகும். இதனால் ஜாதகர் குடும்பத்தைவிட்டு விட்டு தான் மற்றும் தற்போது வெளிநாடு செல்கிறார்.
மனைவியின் ஜாதகப்படி 2006 முதல் ராகு தசை. ராகு இருவர் ஜாதகங்களிலும் 3/11 ஆக அமைந்துள்ளது. இது சிறப்பே. ராகு-கேதுக்கள் நட்சத்திர பரிவர்த்தனை ஆகியுள்ளனர். நட்சத்திர அடிப்படையில் பரிவர்த்தனைக்கு பிறகு ராகு மிதுனத்தில் நின்று செயல்படுவார். அமெரிக்காவை குறிக்கும் ராசி மிதுனம் என்பது தெரியும். இதனால் ராகு தசையில் ராகு சாரத்தில் அமைந்த 5, 12 அதிபதி சுக்கிரனின் புக்தியில் ஜாதகி கடந்த முறை கணவருடன் அமெரிக்கா சென்றார். கணவரின் கடந்த தசையான செவ்வாய் தசைக்கு மனைவியின் புக்திநாதன் சுக்கிரன் திக்பலம் தருகிறார். சுக்கிரன் 12 ஆம் அதிபதி என்பதால் கடல் கடந்து வெளிநாடு செல்ல வைத்துள்ளார். சுக்கிரன் 5 ஆமதிபதியும்கூட என்பதால் குழந்தையையும் வெளிநாட்டிலேயே பெற்றெடுக்க வைத்தார். தற்போது மனைவிக்கு ராகு தசையில் சந்திர புக்தி நடக்கிறது. சந்திரன் கணவரின் ராகுவிற்கு 8 ல் அமைகிறார். மனைவியின் சந்திரனுடன் சூரியன், சந்திரன், குரு ஆகியவை இணைந்து அமைந்துள்ளதை கவனியுங்கள். குடும்ப பொறுப்புகளின் பொருட்டும், குழந்தைகளின் கல்வியின் பொருட்டும் ஜாதகியால் தற்போது கணவருடன் செல்ல இயலவில்லை. மனைவிக்கு அடுத்த புக்தி மிதுனத்தில் ராகுவின் சாரத்தில் இருக்கும் செவ்வாயின் புக்தியாகும். மனைவியின் செவ்வாய் கணவரின் ராகுவிற்கு திரிகோணத்தில் அமைந்துள்ளார். இதனால் செவ்வாய் புக்தியில் மனைவி குழந்தைகளுடன் அமெரிக்கா செல்ல வாய்ப்பு வருகிறது.
வெளிநாட்டு வரனை தேர்ந்தெடுக்கும் முன் வரன்-வது இருவர் ஜாதகத்திலும் வெளிநாட்டில் மதிப்பாக வசிக்கும் அமைப்பு உள்ளதா? என்பதை தெளிவுற அறிந்து பிறகு வரனை தேர்ந்தெடுப்பது நலம். இருவர் தசா புக்திகளும் அனுமதிக்காமல் ஒருவருக்கு மட்டும் வெளிநாட்டு வாழ்வு அமையுமெனில் அது சிறப்பானதல்ல என்பதை அறிந்து முடிவு செய்வது நலம்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501