நித்தம் புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் இன்றைய உலகில் வளமையான வாய்ப்புகளைப் பெற்று வாழ இன்றைய நுட்பங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ஆனால் இன்று மாணவர்களாக இருப்பவர்கள் தற்காலத்திய நுட்பங்களுடன் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை அனுமானித்தறிந்து அதற்கான கல்வியை தேர்ந்தெடுப்பதுதான் அவர்களுக்கு சிறப்பைத் தரும். பண்டைய காலத்தில் விவசாயம் மட்டுமே பிரதானமான தொழிலாக இருந்தது. விவசாயிகள் அறுவடை செய்யும் தானியங்களை அபகரிக்கவே ஆயிரமாயிரம் யுத்தங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் இன்றைய உலகில் விவசாயத்தைத் தவிர ஆயிரமாயிரம் தொழில்கள் வந்துவிட்டன. மேலும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் தேவைக்கேற்ற பயன்தரத்தக்க தொழில்களே எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும். அத்தகைய எதிர்கால தொழில்நுட்பங்கள் பலவற்றில் தனது திறமை, விருப்பங்களின் அடிப்படையில் உரிய வாய்ப்புகளை வழங்கும் கல்வியை தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம். இதை ஜோதிடக் கண்ணோட்டத்துடன் இரு வேறு ஜாதகங்களின் மூலம் ஒப்பிட்டு ஆராய்வோம்.
உரிய கல்வியை தேர்ந்தெடுத்தல்.
ஒரு ஜாதகத்தில் இதர கிரகங்களை விட அதிக வலுப்பெற்ற கிரகமே ஜாதகரை வழிநடத்தும். இப்படி அதிக வலுப்பெற்ற கிரகத்திற்கான கல்வியை தேர்ந்தெடுத்துப் பயில்வது சம்பாத்தியச் சிறப்பை தரும். அதிக வலு என்பதை தீர்மானிக்க ஒவ்வொரு ஜாதகத்திலும் பல்வேறு காரணிகளை ஆராய வேண்டியிருக்கும். இங்கு குறிப்பிடப்படுபவை பொதுக் காரணிகளே. உதாரணமாக ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம், அதிக பாகை பெற்று நிற்கும் கிரகம் ஆகியவற்றை கூறலாம். ஆனால் புதனோடு இணைந்த கிரகங்களின் கல்வியை பயில அது சிறப்பாக ஜாதகருக்கு புரியும் விதத்தில் அமையும். ஆனால் அக்கல்வி சம்பாத்தியத்திற்கு உதவுமா எனக் காண சனியோடு இணைந்த கிரகங்களின் தொடர்புகளை ஆராய வேண்டும். இதைத்தவிர ஒருவரின் மன ஓட்டங்களின் அடிப்படையில் கல்வியை தேர்ந்தெடுக்க சந்திரனை ஜாதகத்தில் பிரதானமாகக்கொண்டு ஆராய்வதும் அவசியம். 5 ஆமிடமும் ஒருவரின் விருப்பமான விஷயங்களை கூறும் என்பதால் உயர் கல்வி பயில்வோர் 5 ஆமிடத்தையும் கவனிக்க வேண்டும். ஆனால் ஒருவருக்கு 9 ஆமிடமே அவரின் உயர்வுக்கான நிலைகளை சுட்டிக்காட்டும். நாமெல்லாம் இந்த உலகில் மதிப்பான நிலை பெறவே விரும்புகிறோம். அந்த சமூக அங்கீகாரம் கிடைக்க 9 ஆமிடம் குறிப்பிடும் கல்வியை தேர்ந்தெடுப்பது ஒருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு அவசியம். ஆனால் எதிர்கால மதிப்பை சுட்டிக்காட்டும் 9 ஆமிடம் தற்காலத்திய சூழலை குறிப்பிடாது. கல்வி பயிலும் அனைவரும் கல்வி முடித்தவுடன் உடனே தொழில் சூழலுக்குள் சென்று பொருள் ஈட்டவே விரும்புவர். இந்த நிலையில் எதிர்காலத்தில் புகழ் தரும் கல்வியை தேர்ந்தெடுக்க பெரும்பாலோர் தயக்கம் காட்டுவர். ஆனால் நாம் அனைவரின் வாழ்வும் எதிர்காலத்தைச் சார்ந்தே உள்ளது. எனவே உயர் கல்வியை தேர்ந்தெடுக்கையில் 9 ஆமிடதிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
ஜாதக அமைப்பும் கல்வியும்.
பொதுவாக எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னமும் லக்னாதிபதியும் சுபத்துவ அமைப்பில் இருந்துவிட்டால் ஜாதகர் பொதுவாக எந்தத்துறையிலும் கோலோச்சுவார். தெரியாத துறையிலும் விட்டுதராமல் கற்றுக்கொண்டு முன்னேறிவிடுவார். தாய்மொழிக் கல்வியை குறிக்கும் 2 ஆமிடமும் அதன் அதிபதியும் சிறப்புற்றிருந்தால் தாய்மொழிக் கல்வி சிறப்பாக அமையும். பள்ளிக் கல்வியை குறிக்கும் பாவகங்கள் 4 மற்றும் 5 ஆகும். 9 ஆவது பாவகம் ஜாதகரின் கல்விக்கு மட்டுமல்ல அனைத்து விஷயங்களுக்கும் அங்கீகாரத்தை தருவதாகும். 7 ஆமிடம் கெட்டுவிட்டால் கல்வியை சொல்லித்தர சரியான ஆசான்களோ அல்லது நல்ல கல்வி நிறுவனத்தில் இடமோ கிடைப்பதில்லை. 9 ஆமிடமும் 11 ஆமிடமும் கல்லூரிக் கல்வியில் ஒருவர் அடையும் உயர் தகுதியை சொல்லும். 11 ஆமிடம் அதிக பட்ச உயர் கல்வியை குறிப்பிடும். இதில் 8 ஆமிடமும் அதன் எதிர் பாவகமான 2 ஆமிடமும் கல்வியின் எந்த நிலையிலும் ஒருவரின் ஆராய்ச்சி மனோபாவத்தை கூறும். கிரகங்களில் செவ்வாய் ஆராய்ச்சி காரகர் என அழைக்கப்படுகிறார். 2, 8 பாவகங்கள் கெட்டு, செவ்வாய் வலுவிழந்தால் ஒருவரிடம் ஆராய்ச்சி மனோபாவமே இருக்காது. முனைவர் பட்டத்தை (PhD) பயிலும் வாய்ப்பை இவ்விரு பாவகங்களுமே சுட்டிக்காட்டுகின்றன. 12 ஆமிடம் வெளிநாட்டுக் கல்வியை குறிப்பிடும். மதக் கல்வியை நீர் ராசிகளான கடகம் , விருட்சிகம், மீனமும், பாவகங்களில் 4, 8, 12 ம் குறிக்கும். வர்க்கச் சக்கரங்களில் சதுர்விம்சாம்சம் (D-24) மூலம் ஒருவரின் உயர்கல்வி நிலைகளை துல்லியமாக ஆராய்ந்தறிய இயலும். கல்வி சம்பாத்தியத்திற்கு உதவுமா என தசாம்சத்தை (D-10) ஆராய்வதன் மூலம் தெளிவாக அளவிட இயலும். கல்வி வருமானத்திற்குத்தான் எனும் காலத்தில் வாழ்வதால் இது மிக அவசியம்.
கல்வியை வழங்குவதில் கிரகங்களின் நிலை.
வித்யா காரகர் எனப்படும் புதனின் நிலை ஒரு ஜாதகத்தில் சிறப்படைந்திருப்பது அவசியம். மனோ காரகர் சந்திரன் சிறப்பாக அமைந்திருந்தால்தான் கிரகிப்புத்தன்மை சிறப்பாக இருக்கும். இவ்விரு கிரகங்களும் பலகீனமானால் ஒருவர் தான் பெற்ற அனுபவங்களைகொண்டுதான் வாழ்வில் முன்னேற முடியுமே தவிர கற்ற கல்வியால் முன்னேற முடியாது. பொதுவாக நெருப்பு ராசி அதிபதிகளான செவ்வாய், சூரியன் மற்றும் முக்கியமாக குரு ஆகிய மூவரும் ஒரு ஜாதகத்தில் சுபத்துவ அமைப்பில் இருந்தால்தான் ஒரு ஜாதகர் தனது கல்வி மூலம் சமூகத்தில் மதிக்கத்தக்க நிலையில் வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வக்கிர கிரகங்கள் அதீத அறிவுத்திறனை தந்தாலும் ஒருவர் கற்ற கல்வி அறிவைவிட சுய ஞானத்தாலேயே அவரை முன்னேற வைக்கின்றன. கல்விக்குரிய பாவகங்களுக்கு ராகு-கேதுக்கள் மற்றும் கடும் பாவிகள் தொடர்போ ஏற்பட்டால் கல்வி தடைபடும்.. அந்தச் சூழலில் கல்வியில் தடைகளை ஏற்படுத்தும் கிரகங்களின் காரகக் கல்வியை பயிலும்போது தடைகள் ஏற்படாது.
மேற்சொன்ன தகவல்களின் அடிப்படையில் கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் உச்ச புதனுடன் சிறப்பாக அமைந்துள்ளார். 9 ஆமதிபதி செவ்வாய் உச்சம் பெற்றாலும் ராகுவோடு இணைந்து பாதிக்கப்பட்ட நிலையில் மறைந்துவிட்டார். ஆனால் அவர்கள் இணைந்த பாவகம் என்பது 6 ஆவது பாவகம் என்பதால் 9 ஆவது பாவகம் தரும் பாதிப்பிலிருந்து ஜாதகர் மீண்டுவிடுவார். 2, 3, 4, 5 , 9 , 11 ஆகிய பாவகங்கள் சுபக்கிரக தொடர்பில் இருக்கின்றன. 9 ஆமிடம் மட்டும் ராகுவோடு இணைந்த செவ்வாயின் பார்வையில் இருக்கிறது. ஆனாலும் செவ்வாய்-ராகு இருவரும் இணைவது ராகு தொடர்புடைய உயர்கல்விக்கு மட்டுமே சிறப்பு. அதில் செவ்வாயின் காரகம் மட்டும் சிறப்பைத் தராது. இருவருக்கும் பொதுவான கல்வி கற்றால் ராகு-செவ்வாய் இருவருமே இணைந்து ஜாதகரை உயர்த்துவர்.
கீழே ஒரு பெண்மணியின் ஜாதகம்.
துலா லக்னாதிபதி லக்னதிலேயே மூலத்திரிகோண வலுப்பெற்று மாளவ்ய யோகத்திலும், 7 ஆமதிபதி செவ்வாயுடன் இணைந்ததால் பிருகு மங்கள யோகத்திலும் அமைந்துள்ளார். ஆனால் 2 ஆமிடமான குடும்ப பாவகத்தில் பாதகாதிபதி சூரியன் நீச சந்திரனுடன் இணைந்துள்ளதால் 2 ஆவது பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 9, 12 அதிபதி புதன் பகை வீட்டில் வக்கிரம் பெற்று நிற்பது இன்னும் பாதகமே. இப்படி கடுமையாக பாதிக்கப்பட்ட 2 ஆமிடத்தை நோக்கி ராகு வருவது குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக ஜாதகியால் நிம்மதியாக கல்வி கற்க இயலாது என்பதை குறிப்பிடுகிறது. வித்யா ஸ்தானாதிபதி சனி 8 ல் மறைந்து 2 ஆமிடத்தை பார்ப்பது மேலும் கடுமையை கூட்டுகிறது. 2 ல் அரசு கிரகம் சூரியன். உடன் தாய் மொழியை குறிக்கும் சந்திரன் நீசம் பெற்று கல்வி காரகர் புதனுடன் நிற்பதால் அரசுப்பள்ளியில் பணிபுரிந்த ஒரு தமிழ் ஆசிரியருக்கு மகளாய் பிறந்தவர் ஜாதகி. ஆனால் பள்ளிக்காலத்தில் தந்தையின் திடீர் மறைவால் நிலை குலைந்தார். தாயார் மன நிலை பாதிப்பிற்குள்ளானார். இதனால் குடும்ப சூழல் காரணமாக பள்ளிக் கல்வியில் தோல்வியுற்றார். ஆனால் லக்னாதிபதி சிறப்பாக அமைந்ததாலும், 7, 9 க்கு குரு பார்வை இருப்பதாலும், 7 ஆமதிபதி லக்னத்தில் வந்து அமர்ந்தாலும் ஜாதகிக்கு கைகொடுக்க நல்ல தொடர்புகளும் ஆசான்களும் அமைவர். இதனால் குடும்ப பாதிப்புகளை மீறி ஜாதகி உதவிகளால் உயர்கல்வி கற்பார்.
சதுர்விம்சாம்சமும் உயர் கல்வியும்.
ஒருவரின் உயர் கல்விக்கு ஆராய வேண்டிய சதுர்விம்சாம்சத்தில் ராசிக்கட்டத்தில் உச்சம் பெற்ற புதன் இங்கு லக்னத்தில் நீசம் பெற்றாலும் திக்பலத்தில் உள்ளார். இது முதலில் பார்த்த ஆணின் ஜாதகமாகும். நீசம் என்பது இங்கு ஜாதகர் கல்வி பயில எதிர்கொள்ளும் போராட்டங்களை குறிப்பிடும். ஆனால் உயர் கல்வியில் பொருளாதார சிக்கல்களை ஜாதகர் அதிக சிரமங்களின்றி கையாள்வார். காரணம் சதுர்விம்சாம்ச லக்னாதிபதி குரு இரண்டில் இருப்பதுதான். ஜாதகரின் உயர் கல்விக்கு தற்போது உதவிகள் கிடைக்கும். கிடைத்தன என்பதுதான் உண்மை. ராசிக் கட்டத்தில் 9 ஆமதிபதி செவ்வாய் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்திருந்தது ஞாபகமிருக்கும். உச்ச கிரகம் ஜாரகரை வழி நடத்தும் என்பதற்கேற்ப ராசியில் இணைந்த செவ்வாய்-ராகு இரண்டுமே மருத்துவத்தோடு தொடர்புடைய கிரகஙகள் என்பதால் ஜாதகர் ஆங்கில மருத்துவம் பயின்றார். ராசியில் அனுமதிக்கப்படாத ஒன்று வர்க்கச் சக்கரங்களில் செயல்படாது என்பதை அறிக. சதுர்விம்சாம்ச லக்னமான மீனம் ஒரு இரட்டை ராசியாகும். மீனத்தில் இரட்டை கிரகம் புதன் திக்பலம் பெற்றதால் ஜாதகர் ஆங்கில மருத்துவத்தில இளங்கலை, முதுகலை ஆகிய இரண்டு பட்டங்களையும் பெற்று, கூடுதலாக சிறப்புக் கல்விகளையும் பயின்றார். லக்னம் நீர் ராசியாகி சந்திரனும் சுக்கிரனும் லக்ன கேந்திரத்தில் லக்னாதிபதிக்கு திரிகோணத்தில் அமைந்ததால் ஜாதகர் சர்க்கரை நோய் மருத்துவத்தில் (Diabetologist) சிறப்புக் கல்வியை பயின்றார்.
இப்போது பெண்மணியின் சதுர்விம்சாம்சத்தை ஆராய்வோம்.
சதுர்விம்சாம்சத்தில். குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் நீசமாகியுள்ளார். ஆயுள்காரகர் சனி சிம்மத்தை 7 ஆம் பார்வை பார்க்கிறார். கும்பத்திலிருந்து வக்கிரமாகி மகரத்திற்கு வரும் சனி மகரத்திலிருந்து தனது பாதி ஆற்றலை செயல்படுத்துவார். இதன்படி மகரத்திலிருந்து சனியின் 10 ஆவது பார்வை நீச சூரியன் மேல் விழுவதிலிருந்து தந்தையின் மரணத்தால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகளால் ஜாதகியின் கல்வித் தடுமாற்றத்திற்கு உள்ளாகும் என்பது தெளிவாகிறது. ஜாதகி பள்ளியில் தடுமாற்றங்களை சந்தித்து கல்லூரி செல்லும் காலம் வரை ஜாதகி எதிர்கொண்டது புதன் தசைதான். புதன் இங்கு உச்சம் பெற்று வக்கிரமடைந்துள்ளார். உயர் கல்வியை குறிக்கும் 9 ஆமிடத்தில் அமைந்த மொழியின் காரக கிரகம் சந்திரனை கன்னி புதன் நேர் பார்வை பார்க்கிறார். இந்த அமைப்பால் ஜாதகி தமிழ் இலக்கியம் பயின்றார். உயர் கல்வியை குறிக்கும் 9 ஆமிடமான மீனம் இரட்டை ராசி என்பதும் அங்கு அமைந்த லக்னாதிபதி சந்திரனை பார்ப்பது இரட்டை கிரகமான புதன் என்பதாலும் ஜாதகி இரண்டு பட்டங்கள் அதாவது இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டிலும் தமிழ் இலக்கியம் பயின்றார்.
கவனிக்க ஆணின் ஜாதகத்தில் ராசியில் உச்சம் பெற்றாலும் சதுர்விம்சாம்சத்தில் நீசத்துடன் புதன் திக்பலம் பெற்றதால் லக்ன கிரகம் ஜாதகரை வழிநடத்தும் என்பதற்கேற்ப தனது காரகக்கல்வியை வழங்கியுள்ளது. பெண்ணின் ஜாதகத்தில் ராசியில் நீசமான சந்திரன் சதுர்விம்சாம்சத்தில் 9 ல் நின்றதால் தனது காரக உயர் கல்வியை வழங்கியுள்ளது. உச்ச நீசம் என்பது கிரக வலுவை குறிப்பிட்டாலும் வலுக்குறைந்த கிரகங்கள் தங்கள் பலனை வழங்க மறுப்பதில்லை என்பதுடன் தொடர்புடைய வர்க்கச் சக்கரங்களில் கிரகங்களின் நிலையை கவனிக்க வேண்டும்.
ஜீவனமும் தசாம்சமும்.
லக்னாதிபதி செவ்வாய் இரண்டில் சனியுடன் இணைந்துள்ளார். ஆனால் சுக்கிரனுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். 8 ஆமிடம் ஆயுளோடு தொடர்புடையது. செவ்வாய் மருத்துவத்தோடு தொடர்புடையவர். இந்த அமைப்பால் ஜாதகர் உயிர் காக்கும் மருத்துவ தொழில் செய்து பொருள் ஈட்டுகிறார். 2 ஆமிடம் என்பது வருமானம் வரும் வழியை குறிக்கும் பாவகமாகும். 2 ல் ஜீவன காரகர் சனி, செவ்வாயுடன் இணைவு பெறுவது மருத்துவம் செய்து ஜாதகர் பொருள் ஈட்டுவார் என்பதையும் குறிப்பிடுகிறது. பரிவர்த்தனைக்குப் பிறகு சுக்கிரன் சனியோடு இணைவது சம்பாத்திய சிறப்பை குறிப்பிடுகிறது. ஆனால் பாதகாதிபதியான சனி இங்கு வக்கிரமடைவது ஒரு குறையே. 10 ஆமிடத்தில் மருத்துவத்தின் காரக கிரகங்கங்ளுள் ஒன்றான புதன் அமைந்திருப்பது ஜாதகர் மருத்துவம் செய்து பொருள் ஈட்ட வேண்டும் என்பதே அவரது கர்மா என்பதை உறுதி செய்கிறது. சூரியனும் சந்திரனும் 9 ல் இணைவு பெற்ற நிலையில் குரு 7 ல் இருந்து லக்னத்தை பார்ப்பது ஜாதகரின் பூர்வ புண்ணிய சிறப்பாலும் பெற்றோர்களின் ஆசியாலும் நல்ல நிலையில் மருத்துவம் செய்து பொருள் ஈட்டுவதை குறிக்கிறது. ஜாதக அமைப்பு சிறப்பாக இருந்தாலும் அதை அனுபவிக்க அதற்குரிய தசா-புக்திகள் வர வேண்டும். ஜாதகர் தற்போது 10 ஆமிட புதன் தசையில் இருக்கிறார். நல்ல சம்பாத்தியம் புதனின் காரகமான மருத்துவம் மூலம் வருகிறது.
இப்போது பெண்ணின் தசாம்சத்தை ஆராய்வோம்.
ஜீவனத்திற்கு ஆராய வேண்டிய தசாம்சத்தில் லக்னத்தில் விரயாதிபதி புதன் வக்கிரம் பெற்று அமைந்துள்ளார். வருமான பாவகமான 2 ஆமிடத்தில் கொடிய பாவி ராகு அமைந்துள்ளார். 2 ஆமிடத்தி நோக்கி வக்கிர சனி வருகிறார். இவை ஜாதகப்படி பொருளாதார நன்மைகளை வழங்கும் அமைப்புகள் அல்ல. 7 ல் சூரியன், சனி வீட்டில் அமைந்து 10 ஆமிடத்தில் திக் பலம் பெற்ற செவ்வாய்க்கு சிறப்பு சேர்க்கிறார். இவை கணவர் வகையில் ஜாதகிக்கு பொருளாதார சிறப்பை தருமே தவிர, ஜாதகிக்கு அல்ல என்பதை தெரிவிக்கிறது. சந்திரன் 4 ல் திக்பலம் பெற்று 10 ஆமிட செவ்வாய், சுக்கிரன் பார்வையை பெறுகிறார். 10 ஆமிடத்தை திக்பல சந்திரன் பார்ப்பதால் ஜாதகியின் மொழி அறிவு பொருள் ஈட்ட உதவும். கணவரை குறிக்கும் செவ்வாய் லக்னாதிபதி சந்திரனை நேர் பார்வை பார்ப்பதால் கணவர் பொருளீட்ட ஜாதகிக்கு உத்தரவிடுவார். ஆனால் இங்கு லக்னாதிபதி சந்திரனும் கணவரை குறிக்கும் செவ்வாயும் சம வலுவில் திக் பலத்தில் உள்ளனர். எனவே இங்கு மனைவி கணவரின் உத்தரவை தனக்கு விருப்பமில்லாவிட்டால் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஜாதகி சுக்கிர தசையில் உள்ளார். சுக்கிரன் பாதகாதிபதியும் கூட என்பதால் இங்கு பொருளாதாரத்தை முன்னிட்டு சங்கடங்கள் வரும். ஆனால் ஜாதகி தன்னை வருத்திக்கொண்டு பொருளீட்ட மாட்டார். 10 க்கு 10 ஆமிடமான 7 ஆமிட சூரியன் வசதியாக கௌரவமாக வாழ்வதை ஊக்குவிப்பாரே தவிர கடுமையாக உழைத்து சம்பாதிப்பதை ஏற்க முடியாதபடி ஜாதகிக்கு எண்ணத்தை ஏற்படுத்துவார். கால புருஷ 1-7 ஆமதிபதிகள செவ்வாயும் சுக்கிரனும் இணைவு பெறுவதால் கணவர் பணிந்து வேண்டினால் ஜாதகி உழைக்க முற்படுவார். இந்தப் பெண்மணி வேலைக்கு செல்ல விருப்பமில்லை என கூறிவிட்டார். ஆனால் தான் கற்ற தமிழ் மொழியை மாணவர்களுக்கு தனி வகுப்புகள் (Tuition) எடுப்பதன் மூலம் வசதியாக வீட்டிலிருந்தே சம்பாதித்து கணவருக்கு உதவுகிறார்.
கல்வியின்றி சிறப்பான வாழ்க்கை அமைவது சிரமம் எனும் சூழ்நிலையிலும் பள்ளிக் கல்வியைக்கூட தாண்டாத பலர் தொழிலில் கொடிகட்டிப் பறப்பதை காணமுடிகிறது. பள்ளிக்கல்வி அனுபவ அறிவுக்கு முன் மண்டியிடுவதை பல இடங்களில் காண முடிகிறது. ஏட்டறிவும் பட்டறிவும் கலந்தால் அது மிகச் சிறப்பு. கல்வி அறிவு எந்த அளவு பொருள் ஈட்ட உதவும் என்பதையும் ஒருவரின் விருப்பக்கல்வி அதற்கு எந்த அளவு கைகொடுக்கும் என்பதையும் துல்லியமாக ஜோதிடத்தால் அளவிட்டுவிட இயலும். எனவே உயர்கல்வியை தேர்ந்தெடுக்கும் முன்னர் தகுந்த ஆலோசனைகளை பெறுவது சிறப்பு.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்..
கைபேசி: 8300124501