
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும். குறிப்பாக, தான் படித்த படிப்பிற்கு ஏற்ற, அந்தஸ்துள்ள ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதில் பலர் மிக உறுதியாக இருக்கிறார்கள். “தகுதியான வேலை கிடைக்கும் வரை வேறு எந்தப் பணிக்கும் செல்ல மாட்டேன்” என்கிற அந்த வைராக்கியம் பாராட்டுக்குரியது என்றாலும், காலச் சக்கரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
ஜோதிட ரீதியாகப் பார்த்தால், ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடம் (ஜீவன ஸ்தானம்) வலுவாக இருக்கும்போது அவர்கள் தங்கள் லட்சியத்தில் பிடிவாதமாக இருப்பார்கள். ஆனால், அதே சமயம் ஏழாம் இடம் (களத்திர ஸ்தானம்) அல்லது இரண்டாம் இடம் (குடும்ப ஸ்தானம்) தசா புத்திகளால் பாதிக்கப்படும்போது, வேலையை முன்னிறுத்தி எடுக்கப்படும் முடிவுகள் திருமணப் பேச்சுகளைத் தள்ளிப்போட வைக்கின்றன.
ஒருபுறம் ‘சுயமரியாதை’ மற்றும் ‘லட்சியம்’, மறுபுறம் ‘குடும்ப வாழ்க்கை’ மற்றும் ‘சமூகக் கடமை’. இந்த இரண்டிற்கும் இடையே நடக்கும் இந்தப் போராட்டம் வெறும் மன ரீதியானது மட்டுமல்ல, அது கிரகங்களின் சுழற்சியோடும் பிணைக்கப்பட்டது.
- ஏன் சிலருக்குத் தகுதியான வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது?
- வேலைக்காகக் காத்திருப்பது திருமண பாக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
- இதற்குப் பின்னால் இருக்கும் கிரக அமைப்புகள் என்னென்ன?
இவற்றை விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
கீழே நீங்கள் காண்பது ஒரு ஆணின் ஜாதகம்.

அறிவுத் தேடல்வாதிகளுக்கான லக்னம் என்றழைக்கப்படும் மிதுன லக்ன ஜாதகம்.
பொதுவாக ஒருவருக்கு நல்ல உத்தியோகமோ, தொழிலோ அமைந்து அதன் மூலம் நல்ல தனவரவு கிடைக்க வேண்டுமெனில், பொருள் திரிகோணங்கள் எனும் 2, 6, 10 ஆகிய பாவகங்கள் ஜாதகத்தில் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் தன ஸ்தானாதிபதி சந்திரன், லக்னாதிபதி புதனுடன் பரிவர்த்தனையாகியுள்ளார். இதனால் இரண்டாமிடம் வலுவடைகிறது. இப்படிப் பரிவர்த்தனையால் இரண்டாம் இடத்தில் ஆட்சி பெறும் சந்திரன், அங்கு நீசமான ஆறாம் அதிபதி செவ்வாயை நீச பங்கப்படுத்துகிறார். ஆறாம் அதிபதி வலுப்பெறுவது உத்தியோகத்திற்குச் சிறப்பு.
பரிவர்த்தனையும் வேலைவாய்ப்பும்
லக்ன சந்திரன் இரண்டாம் இடத்து புதனுடன் பரிவர்த்தனையாவதால், ஜாதகருக்குத் தன வரவு ஏற்பட வேண்டுமெனில் அவருக்கு புதன் அல்லது சந்திர தசா-புக்தி நடப்பில் இருக்க வேண்டும். பரிவர்த்தனை கிரகங்களுடன் வருட கிரகங்களின் (குரு, சனி) கோட்சாரத் தொடர்பு ஏற்படும்போது அந்தப் பரிவர்த்தனை செயல்படத் தொடங்கிப் பண வரவுக்கு வழிவகுக்கும். குரு வருட கிரகமாக இருந்து, அவரே புக்தி நாதராகவும் வந்து கடக ராசிக்கு வரும்போது ஜாதகருக்கு வேலை மற்றும் சம்பாத்தியம் கிடைக்கும் நிலையைச் சுட்டிக்காட்டுகிறது.
வக்கிர கிரகங்களும் ஜீவனமும்
கோட்சார குருவும் ஜனன சந்திரனும் மிதுனத்தில் இருந்தாலும், பரிவர்த்தனையால் சந்திரன் இடம் மாறி குருவுடன் வக்கிர புதன் இணைவதால், கோட்சாரத்தில் நேர்கதியில் மிதுனத்தில் நிற்கும் குருவுடன் புதன் இணைந்து செயல்பட மாட்டார். பொதுவாக வக்கிர கிரகங்கள் செயல்பட வேண்டுமெனில், ஜனன காலத்தில் அவை பெற்ற வக்கிர நிலையைக் கோட்சாரத்திலும் பெற வேண்டும். இதர காலங்களில் அவை செயலற்ற தன்மையில் இருக்கும்.
ஜனன காலத்தில் வக்கிரம் பெற்ற குருவும், புதனும் கோட்சாரத்திலும் வக்கிரமாகி தசா-புக்தி நாதர்களாகத் தொடர்பு பெறும்போதுதான், தற்போதைய பத்தாம் அதிபதி குரு ஏற்படுத்தித் தரும் வேலைவாய்ப்பை லக்னாதிபதி புதன் ஏற்றுக்கொள்வார்.
வக்கிர கிரகங்களின் அதீத அறிவு
வக்கிர கிரகங்கள் நுட்பமான அறிவைத் தரக்கூடியவை. லக்னாதிபதி புதனே வித்யா காரகராகவும் இருப்பதால், புதனின் வக்கிரம் ஜாதகருக்கு நுட்பமான கல்வியறிவைக் கொடுத்துள்ளது. ஜாதகர் M.Sc. Microbiology படித்தவர். சனியின் வக்கிரம் ஜாதகருக்கு நுண்ணிய தொழிலறிவையும், குருவின் வக்கிரம் அதீத பொருளாதார அறிவையும் தரும். ஆனால், இம்மூன்று வக்கிர கிரகங்களின் அறிவும் ஜாதகருக்கு நேரடியாகப் பயன்படாமல் பிறர் பலனடையவே பயன்படும். இதனால் இவ்வறிவைப் பிறருக்குப் பயன்படுத்தி, அதன் மூலம் தனக்கு நல்ல சம்பாத்தியமுள்ள வேலையைப் பெற ஜாதகர் எண்ணுகிறார்.
புத்தி காரகர் புதனின் வக்கிரத்தால், தனது அறிவுப் பசிக்குத் தீனி போடத்தக்க வேலை கிடைத்தாலன்றி ஜாதகர் கிடைக்கும் வேலையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இரண்டாம் அதிபதியும் மனோ காரகருமான சந்திரனுடன் புதன் தொடர்பாவதால், வேலை சரியாக அமையாத காரணத்தால் குடும்பம் அமைவதும் பாதிக்கப்பட்டு மன இறுக்கத்தில் உள்ளார். லாப ஸ்தான சனி வக்கிரமானதால், “கிடைக்கும் வேலைகள் லாபகரமாக இல்லை” என்கிறார். லாபகரமான வேலை அமையும் வரை ஜாதகர் காத்திருப்பார்; கடந்து செல்லும் காலத்தைப் பற்றி அவர் கவலைப்படமாட்டார். பத்தாம் இடத்து குரு வக்கிரமாகி 2, 6 ஆகிய பாவகங்களைப் பார்ப்பதால், “நல்ல சம்பாத்தியமுள்ள வேலை கிடைத்தாலன்றி வேலைக்கே செல்ல மாட்டேன், குடும்பம் அமைவது தாமதமானாலும் பரவாயில்லை” என்கிறார். இது “மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி” என்கிற பிடிவாதமான நிலைதான்.
எப்போது வேலை கிடைக்கும்?
ஜாதகர் தற்போது சனி தசை, குரு புக்தியில் உள்ளார். நடப்பு 11-ஆம் இடத்துச் சனி தசை வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது உறுதி. கோட்சாரத்தில் சனி 10 ஆமிடம் மீனத்திலேயே நிற்பது வேலை கிடைக்கச் சிறந்த அமைப்பாகும். பத்தாம் இடத்தில் நின்று 2, 6 ஆகிய பாவகங்களைப் பார்க்கும் குரு புக்திதான் நடப்பில் உள்ளது. இதுவும் வேலை கிடைக்க வாய்ப்பான காலத்தையே சுட்டிக்காட்டுகிறது.
லக்னத்தில் நிற்கும் கோட்சார குரு இரண்டாம் இடமான கடகத்திற்கு வந்து, அங்கு நீசமான ஆறாம் அதிபதி செவ்வாய்க்கு வலுவூட்டுவது மட்டுமின்றி, அவரது பார்வை 6, 10 ஆகிய பாவகங்களில் பதியவுள்ளதால், வரும் குருப் பெயர்ச்சியில் ஜாதகருக்கு வேலை கிடைக்கும் எனலாம். ஜனன குருவும் சனியும் வக்கிரமாகியுள்ளதால், தசா-புக்திகள் நடப்பில் இருந்தாலும் கோட்சாரத்தில் குருவும் சனியும் வக்கிரமாகும் காலத்தில்தான் ஜாதகருக்கு வேலை உறுதிப்படும்.
முடிவுரை
“பைத்தியங்களுக்குக் கவலை என்பதே கிடையாது, அதனால்தான் அவர்கள் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்று கூறுவர். ஒருவர் தன் வாழ்வில் எந்த அளவு நெகிழ்வுத்தன்மை (Flexibility) கொண்டவராக இருக்கிறாரோ, அந்த அளவு அவரது வாழ்வு நிம்மதியாக இருக்கும். புத்திசாலிகளுக்கு இந்த நெகிழ்வுத்தன்மை குறைவாக இருப்பதே அவர்களின் நிம்மதியின்மைக்குக் காரணம். சராசரியானவர்களின் வாழ்வு பொருளாதாரத்தைத் தவிரப் பல விஷயங்களில் பணக்காரர்களைவிட உயர்வானதே. வாழ்வைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இவ்வுண்மை புரியும்.
“தங்களின் தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள், வேலைவாய்ப்புத் தடைகள் அல்லது திருமணத் தாமதங்கள் குறித்த சந்தேகங்களுக்குத் தெளிவான தீர்வு காண விரும்பினால், தாராளமாக என்னைத் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு ஜாதகமும் ஒரு தனித்துவமான திறவுகோல்; அதை முறைப்படி ஆய்வு செய்து, வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க நான் காத்திருக்கிறேன்.”
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501.










