சாமி பூச!

“ஏன் மாமா இப்படி மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சிருக்கீங்க?” – கணவன் சாமிக்கண்ணுவிடம் பலமுறை கேட்டுச் சலித்துப் போய்விட்டாள் முத்துச்செல்வி.

சாமிக்கண்ணு கிணறு வெட்டும் தொழில் செய்பவன். அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உடலை வருத்தி உழைத்தாலும் இவர்களை ஏளனமாகப் பார்ப்பவர்களே அதிகம். உழைப்பிற்கேற்ற கூலி தராமல் பலராலும் ஏமாற்றப்பட்டதன் விளைவே, அவனது முகத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும் அந்தச் சிடுமூஞ்சித் தனம்!

ஆந்திராவிலிருந்து ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன் பஞ்சம் பிழைக்க உறவுகளுடன் கூட்டம் கூட்டமாக வந்து தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் இவர்கள். சொந்தக் குலதெய்வம் எதுவென்றே தெரியாது. உறவினர்களில் பெரும்பாலோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, காலம் தங்களுக்கு அளித்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழத் தொடங்கிவிட்டனர். மீதமுள்ள சில உறவுகளுடன் காங்கேயம் பகுதி கிராமம் ஒன்றில் வசித்து வருகிறான் சாமிக்கண்ணு.

வறுமையான சூழலில் வளர்ந்ததால் சாமிக்கண்ணுவுக்குக் கல்வியறிவு குறைவு. கிணறு வெட்டுவது, வீடு கட்டுவது போன்ற வேலைகளோடு, காங்கேயம் பகுதிக்கே புகழ்பெற்ற காளை மாடுகளை வாங்கி, வளர்த்து வியாபாரமும் செய்து வருகிறான்.

முத்துச்செல்வி காலை நான்கு மணிக்கே எழுந்துவிடும் வழக்கமுடையவள். மாடுகளுக்கும் கன்றுகளுக்கும் தீவனம் போட்டு, வாசல் பெருக்கிக் கோலமிட்டு, ஊர்க் கிணற்றில் தண்ணீர் சுமந்துவந்து மாடுகளுக்கு வைப்பாள். மீதித் தண்ணீரை வீட்டுத் தேவைக்கு வைத்துக்கொண்டு, பாத்திரங்களை விளக்கி, சமையல் முடித்து, மகளையும் மகனையும் பள்ளிக்கு அனுப்புவது அவளது தினசரி தலையாய பணி. அதன்பின் ஆடு, மாடுகளை மேய்க்க அழைத்துச் சென்றால், குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்புவதற்குள் வீடு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் வேறு. நாளெல்லாம் கிணறு தோண்டுமிடத்தில் கடுமையாக உழைத்து உறங்கும் கணவனை, தனது வீட்டு வேலைகளுக்கு உதவுமாறு முத்துச்செல்வி ஒருநாளும் கேட்டதே இல்லை.

சாமிக்கண்ணு காலையில் எழுந்ததும் பக்கத்திலுள்ள தாய் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்துவிட்டு வருவான். பிறகு குளித்து உணவருந்தியதும் பணிக்குப் புறப்பட்டுவிடுவான். பல நாட்களுக்கு வேலையிருக்காது; வேலை இருந்தாலும் அது வெகு தொலைவில் இருக்கும். அப்போதெல்லாம் அங்கேயே தங்கி, வேலையை முடித்துக்கொண்டு திரும்புவதுதான் அவனது வழக்கம்.

குழந்தைகள் பிறப்பதற்கு முன், தொலைதூரத்தில் வேலை என்றால் வீட்டு ஆடு, மாடு, கோழிகளைத் தாயின் பொறுப்பில் விட்டுவிட்டு மனைவியையும் கூடவே அழைத்துச் சென்றுவிடுவான். குழந்தைகள் பிறந்த பிறகு அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.

‘நாம்தான் பள்ளியோடு படிப்பை நிறுத்திவிட்டோம், நம் பிள்ளைகளையாவது கல்லூரி வரை நல்ல ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வேண்டும்’ என்பது முத்துச்செல்வியின் ஆசை. இதற்காகக் கணவனிடம் பலமுறை சண்டையிட்டிருக்கிறாள். ஆனால், மாமியாருக்குப் புற்றுநோய் வந்தபிறகு, மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு அவள் கணவனை வற்புறுத்துவதில்லை.

‘குடும்பத்திற்குத் தேவையான அளவு சம்பாதிக்க முடியவில்லையே…’ என்ற வருத்தம் சாமிக்கண்ணுவை பல இரவுகள் தூங்கவிடாமல் செய்தது. சில நள்ளிரவுகளில், தூங்காமல் கலங்கும் கணவனின் கண்களில் நீர் கசிவதைக் கண்டு, முத்துச்செல்வி அவனை அணைத்துக் கொள்வாள். யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் இருவருமே மௌனமாக அழுத இரவுகள் பல.

வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் இவர்களது குலதெய்வ வழிபாடு விடுபட்டுப் போயிருந்தது. “குலதெய்வத்தைக் கண்டறிந்து வழிபட்டால் நம் இனம் விரைவாக முன்னேறும்” என்று பெரியோர்கள் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, வேலை நேரம் போக மீதி நேரங்களில் தன் குலதெய்வத்தைத் தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கினான் சாமிக்கண்ணு.

அதிர்ஷ்டவசமாக, திருப்பூர் அருகில் ஒரு மருத்துவரின் தோட்டத்தில் கிணறு வெட்டப்போன இடத்தில், அந்த மருத்துவரின் அன்பையும் ஆதரவையும் பெற்றான் சாமிக்கண்ணு. குலதெய்வத்தைத் தேடும் சாமிக்கண்ணுவின் முயற்சியைக் கேள்விப்பட்ட மருத்துவர், தனது குடும்ப ஜோதிடரான திரு. சுப்ரமணிய ஐயரிடம் இதுபற்றிக் கேட்டு உதவ முன்வந்தார்.

அதன்பின், ஊர்ப் பெரியவர்களுடன் ஐயரைச் சந்தித்து வந்தனர். ஒரு நல்ல நாளில் சோழிப் பிரசன்னம் பார்க்கப்பட்டது. பிரசன்னத்தின் முடிவில் ஐயர் கூறியது இதுதான்:

உங்கள் முன்னோர்கள் வெளிமாநிலத்திலிருந்து குடியேறியிருந்தாலும், காவிரி ஓரம் அவர்கள் தங்கிய இடத்தில் தங்களின் குலதெய்வமான பெருமாளுக்குச் சிறிய கோவில் கட்டி வழிபட்டு வந்துள்ளனர். ஆனால், 1900-களின் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்த ஊர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கோவிலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்பின் உங்கள் வம்சத்தினர் வெவ்வேறு ஊர்களுக்குச் சிதறிச் சென்றதால், முறையான கோவில் வழிபாடு இல்லாமல், குடியேறிய ஊர் தேவதையையே வழிபட்டு வந்துள்ளீர்கள். எனவே, நீங்கள் மீண்டும் பெருமாளைப் பிரதிஷ்டை செய்து வழிபடலாம்!”

இதையறிந்து மகிழ்ந்த சாமிக்கண்ணுவும் அவனது இனத்தவர்களும், தங்களால் இயன்ற அளவு நிதி திரட்டி, புதிய பெருமாள் கோவில் கட்டும் பணியைத் தொடங்கினர். ஆனால், கடுமையான பொருளாதார நெருக்கடி கட்டுமானப் பணிகளை முடிக்க விடாமல் தடுத்தது. அவர்களின் இனத்தைத் தாண்டி சில நல்ல உள்ளங்கள் நிதியுதவி செய்தும் பணம் போதவில்லை.

இவர்களது சாதிய நடைமுறைப்படி, சடங்குகளை முன்னின்று நடத்த ஒரு பூசாரியை அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுப்பது வழக்கம். அவர் திருமணம் போன்ற சடங்குகளிலும் வழிபாடுகளிலும் வழிகாட்டியாக இருப்பார். குறிப்பிட்ட சில விசேஷ நாட்களில் ‘குறி’ சொல்வதும் அவரது பணி. சாமிதான் பூசாரி வடிவத்தில் வந்து தங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதாக அந்த எளிய மக்கள் நம்பினர். “மகனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்?”, “கஷ்டம் தீருமா?”, “வேலை எப்போது கிடைக்கும்?”, “கடன் அடையுமா?” போன்றவையே பூசாரியிடம் கேட்கப்படும் முதன்மை கேள்விகள்.

கொரோனா காலத்திற்குப் பின் தொடங்கப்பட்ட குலதெய்வக் கோவில் கட்டுமானப் பணியை முடிக்க இயலாத சோகம், இன்றும் அவர்கள் அனைவரின் மனதையும் வாட்டுகிறது. ஓரளவு படித்த ஒருசிலர் மட்டுமே நல்ல வேலையில் ஓரளவு வசதியுடன் உள்ளனர். அவர்களைத் தவிர பெரும்பாலானோரின் நிலை சாமிக்கண்ணுவின் நிலைமைதான்.

ஊரின் நடுவே அனைவரும் ஒன்று கூடி, ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஊர் தேவதையை வழிபடுவது அவ்வூர் வழக்கம். ஊரில் பெரும்பான்மையினர் சாமிக்கண்ணுவின் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஊர் தேவதை வழிபாட்டை இதர சாதியினர் இவர்களிடமே விட்டுவிட்டனர். இவர்களது குல பூசாரியான மாடசாமிதான் அந்த ஊர் தேவதை கோவிலுக்கும் பூசாரி.

அப்படியொரு பௌர்ணமி பூசையில், மாடசாமி பூசாரி அனைவருக்கும் குறி சொல்லிக் கொண்டிருந்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேசப் போர்களும், ஊழல் அரசியலும்தான் காரணம் என்று தற்கால நிலவரங்களைச் சாமிக்கண்ணுவும் சிலரும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தனர். ‘இவர்கள் மட்டும் நம்மைப் பொருட்படுத்துவதில்லையே’ என்ற எரிச்சல் மாடசாமி பூசாரிக்குக் கோபமூட்டியது. சாமிக்கண்ணுவை தன்னிடம் வந்து குறி கேட்டுக்கொள்ளுமாறு ஓரிரு முறை அழைத்துப்பார்த்தான்.

பிறகு, தான் கிளம்பப்போவதாகவும், அதற்குள் வந்து குறி கேட்டுக்கொள்ளுமாறும் முத்துச்செல்வியைப் பார்த்துக் கூறினான். ஆனால், சாமிக்கண்ணு மனவருத்தத்தில் இருந்ததை உணர்ந்த முத்துச்செல்வி, “நாங்க வரல சாமி… மத்தவங்களுக்குச் சொல்லுங்க” என்று அமைதியாகப் பதிலளித்தாள்.

இதனால் ஆத்திரமடைந்த மாடசாமி பூசாரி, “நீங்கள் என்னிடம் வந்து குறி கேட்காவிட்டால், அடுத்த பௌர்ணமிக்குள் உன் மாங்கல்யம் பறிபோகும்!” என்று கோபம் கண்ணை மறைக்கச் சபித்தான்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் சாமிக்கண்ணுவுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை! அருகே அமர்ந்திருந்த பூபதியின் கையிலிருந்த கம்பைப் பிடுங்கி, மாடசாமியைச் சராமாரியாக விளாசத் தொடங்கினான். ஊர்ப் பெரியவர்கள் அனைவரும் ஓடிவந்து விலக்க முயன்றும் சாமிக்கண்ணுவின் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருவழியாகப் பலரும் சேர்ந்து அவனைக் கட்டுப்படுத்த, காயமடைந்த பூசாரி மாடசாமியைச் சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அடுத்த சில நாட்களில் கூடிய ஊர்ப் பஞ்சாயத்தில், சாமிக்கண்ணுவையும் அவனது குடும்பத்தையும் “கோவிலுக்குள் வரக்கூடாது; மீறி வந்தால் சாமி பயப்படும்” எனக் கூறி, கோவிலுக்கு வெளியே நின்று மட்டுமே சாமி கும்பிட வேண்டும் என ஊர்க் கட்டுப்பாடு விதித்தனர்.

சாமிக்கண்ணுவின் மனைவி முத்துச்செல்வி ஓரளவு படித்தவள். எனது ஜோதிடப் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருபவள். அவள் தன் கணவனுடன் என்னை தொடர்புகொண்டாள்.

“குலதெய்வம் அறிந்து வழிபட்டால் குடும்பக் கஷ்டம் தீரும்னு கோவில் கட்ட முயன்று, இப்போ அந்த கோவிலுக்குள்ளேயே போக முடியாத நிலைமை ஆயிடுச்சு அய்யா… பிற இனத்தவர்கள் கும்பிடும் பெரிய கோவிலுக்குள்ளும் எங்களை விட மாட்டேங்கறாங்க… வாசலிலேயே நின்னு கும்பிடுங்கனு சொல்றாங்க. நாங்க எங்க போயி சாமி கும்பிடுறது?” என்று சாமிக்கண்ணு என்னிடம் மிகவும் பரிதாபமாகக் கேட்டான்.

நீயே உனக்கு தெய்வம்; உன் குடும்பத்திற்கு நீயே தேவதை. உனக்கு வேற எந்தக் கடவுளும் தேவையில்லை!”

– என்பதைத் தவிர இந்த எளிய மனிதனுக்கு வேறு என்ன ஆறுதல் சொல்ல முடியும்?

இப்படித் தங்கள் தெய்வங்களின் மீது விரக்தியிலிருக்கும் மக்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தங்கள் வசப்படுத்த பிற மதத்தினர் முயல்வது வழக்கம்தானே?

மேற்கண்ட சம்பவம் நடந்து ஓரிரு மாதங்களில், வெள்ளையும் சொள்ளையுமாக உடை அணிந்த வேற்றுமதச் சாமியார் ஒருவர் சாமிக்கண்ணுவின் ஊருக்குள் நுழைந்தார்.

“பாவிகளே வாருங்கள்! உங்கள் பாவங்களை எங்கள் கடவுள் மன்னிக்கக் காத்திருக்கிறார்…” என்று அவர் கூவிக்கொண்டிருக்கும் போதே, அவரது பிடரியில் ஓங்கி விழுந்தது ஒரு அடி!

அடிவாங்கி கீழே விழுந்தவர் எழக் கைகொடுத்தான் பூபதி. “யார்ரா பாவி?” என்று கேட்டபடியே, அந்த அந்நிய மதச் சாமியாருக்கு பூபதியின் கையால் அங்கு ‘சிறப்புப் பூசை’ ஒன்று சிறப்பாக நடந்து முடிந்தது!

(சம்பவங்கள் சில மாதங்களுக்கு முன்பு நடந்தவை. கதாபாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

மீண்டும் உங்களை மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அன்பான வாழ்த்துகளுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கிரகங்கள்

பிறரை மகிழ்வித்து தாமும் மகிழும் யோகம்!

“வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு ஒரே வழி, செய்யும் வேலையை நேசிப்பதுதான்” என்ற உலகப் புகழ்பெற்ற வாசகத்தை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நிதர்சனத்தில் எத்தனை பேருக்குத் தங்களுக்குப் பிடித்தமான வேலை அமைகிறது? பலருக்கு இது

மேலும் படிக்க »
கடவுளும் மனிதனும்

சாமி பூச!

“ஏன் மாமா இப்படி மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சிருக்கீங்க?” – கணவன் சாமிக்கண்ணுவிடம் பலமுறை கேட்டுச் சலித்துப் போய்விட்டாள் முத்துச்செல்வி. சாமிக்கண்ணு கிணறு வெட்டும் தொழில் செய்பவன். அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உடலை வருத்தி

மேலும் படிக்க »
திக்பலம்

மனைவியின் பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா?

“பாரதம் விரைவில் உலக வல்லரசாக உருவெடுக்க வேண்டும்” என்பது இன்று ஒவ்வொரு இந்தியனின் கனவு மட்டுமல்ல, அது நம் தேசத்தின் தவிர்க்க முடியாத இலக்கும்கூட! ஆனால், வெறும் பாரம்பரியத் தொழில்களையும், உடல் உழைப்பை மட்டுமே

மேலும் படிக்க »
Advanced Atrology

“கிரகங்களின் பார்வையில் அரசுப்பணி:ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியையின் சவால்களும், வெற்றியும்.”

90-களின் இறுதிக்கட்டம் வரை நடுத்தர வர்க்கத்தினரின் எட்டாக்கனவாகவும், வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகவும் இருந்தது ‘அரசு வேலை’ மட்டுமே. ஒரு அரசு உத்தியோகம் கிடைத்துவிட்டால், வாழ்நாள் முழுமைக்குமான பாதுகாப்பு கிடைத்துவிட்டதாகவே சமூகம் கருதியது. ஆனால், காலச்சக்கரம்

மேலும் படிக்க »
கிரகங்கள்

சந்திரனும் தூக்கமும்!

ஒரு காலத்தில் மருத்துவம், காவல் மற்றும் ராணுவம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மட்டுமே இரவிலும் கண்விழித்து இயங்கக்கூடியவையாக இருந்தன. ஆனால், இன்றைய நவீன உலகில் தகவல் தொழில்நுட்பம் (IT), பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

மேலும் படிக்க »
இந்தியா

சொர்க்கத்திலே முடிவானதா?

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் கர்மாவோடும் பின்னிப்பிணைந்த ஒரு நுட்பமான ரகசியம். இன்னாருக்கு இன்னார், இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்தான் வாழ்க்கைத்துணை என்பதை ஒரு ஜனன ஜாதகம்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

English