தாய்மை என்பது ஒரு வரம். குழந்தை பெற்ற பிறகே பெண் என்பவள் தாய் என்ற புனிதமான தகுதியை அடைகிறாள். ஒரு தம்பதியின் ஜாதகங்களை தெளிவாக ஆராய்ந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையின் அம்சங்களை அறியலாம் என்றாலும், குழந்தை பற்றிய பிரசன்னம் துல்லியமான பல தகவல்களை தெரிவிக்கும். பிரசன்னம் மூலம் ஒரு பெண்ணின் குழந்தை பாக்கியம், எப்போது ஒரு பெண் கருத்தரிப்பாள், கர்ப்ப நிச்சயம், கருவில் இருக்கும் குழந்தையின் நிலை, பாலினம், பிறக்கும் குழந்தையின் ராசி லக்னம், நட்சத்திரம் ஆகிய அனைத்தையும் அறியலாம் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இன்றைய பதிவில் நாம் புத்திரப்பேறு பற்றி ஆராய உள்ளோம்.
கீழே நீங்கள் காண்பது பிரசவத்தை எதிர்நோக்கியிருந்த ஒரு பெண்ணிற்காக பார்க்கப்பட்ட பிரசன்னம்.
கன்னி லக்னத்தில் நிற்கும் சந்திரனின் பாகை 02:54 க்கு நெருக்கமாக கும்பத்தில் குரு 01:14 பாகையில் நிற்கிறார். இந்தப்பிரசன்னம் குழந்தை பற்றியது என்பதை இது குறிப்பிடுகிறது. பிரசன்ன ஜாதகப்படி சூரிய தசாவில் தாய்மையை குறிக்கும் சந்திரனின் சாரத்தில் திருவோணம்-3 ல் நின்று 5 ஆமதிபதி சனி புக்தி நடத்துகிறார். சனி 5 அம் அதிபதியாகி புக்தி நடத்தும் காலம் குழந்தையின் காரக கிரகம் குரு 5 ஆமிட சனியை கடந்துள்ளார். இதிலிருந்து ஜாதகி கருவுற்றிருப்பதை அனுமானிக்கலாம்.
இப்போது என்ன குழந்தை பிறக்கும் என்றொரு கேள்வி எழுவதாகக்கொள்வோம். லக்னம் பெண் ராசியில் அமைந்து பெண் கிரகமான சந்திரனும் லக்னத்திலேயே அமைந்துள்ளார். லக்னமும் ஹஸ்தம்-2 ல் அமைந்துள்ளது. புக்தி நாதன் சனி, சந்திரனின் சாரம் திருவோணம்-3 ல் நிற்கிறார்.. இதனால் பெண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது.
ஆனால் லக்னத்தில் நிற்கும் சந்திரன், உச்ச சூரியனின் உத்திரம்-2ல் நிற்கிறார். சந்திரனின் பாகைக்கு நெருங்கிய பாகையில் குரு நிற்கிறார். லக்னத்திற்கு 1௦ ல் இருந்து லக்னத்தை ஆண் கிரகமான திக்பல செவ்வாய் பார்க்கிறார். இதனால் ஆண் குழந்தையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த சிக்கலை தீர்க்க குழந்தைகளுக்குரிய சப்தாம்சத்தை ஆராய்வோம்.
சப்தாம்சத்தில் ஆண் லக்னமான மிதுனத்தில் நிற்கும் சூரியனை மற்றொரு ஆண் கிரகமான குரு பார்க்கிறார். இதனால் கருவில் இருக்கும் குழந்தை ஆண்தான் என்பது உறுதியாகிறது. முக்கிய பெண் கிரகங்களான சுக்கிரன் 3 ல் மறைந்துவிட்டார். மற்றொரு பெண் கிரகம் சந்திரன் ராகுவின் பிடியில் சிக்கியுள்ளதை கவனியுங்கள்.
இப்போது பிறக்கவுள்ள குழந்தையின் லக்னம், ராசி, நட்சத்திரம் என்ன? என்பதை ஆராய்வோம்.
கீழே நீங்கள் காண்பது பிரசன்ன நேரத்திற்கான ஜாமக்கோள் பிரசன்னமாகும்.
கும்ப உதயத்தில் குரு அமைந்து 5 ல் கவிப்பு அமைந்துள்ளது புத்திரப்பேறுக்கான பிரசன்னம் என்பதை கூறுகிறது. உதயம், ஆரூடத்தையும் அங்குள்ள பாம்பையும் கடந்து வந்துள்ளது. பாம்பு கர்ப்ப நிச்சயத்தை குறிப்பிடும் என்பதால் ஜாதகி கர்ப்பமாகியுள்ளதை அது அழுத்தம் திருத்தமாக கூறுகிறது. பிறக்கவுள்ள குழந்தையின் ராசி, லக்னம் மற்றும் நட்சத்திரம் என்ன என்பதை உதயம், ஆரூடம் மற்றும் கவிப்பு ஆகியவற்றைக்கொண்டு அறியலாம். எவ்வாறெனில்,
உதயத்தில் குரு இருப்பதால் பிறக்கும் குழந்தையின் ராசி அல்லது லக்னம் குரு தொடர்புடையதாக அமையும். ஆரூடத்தில் சனி சந்திரனின் சாரத்தில் நிற்பதாலும் அவர் குருவின் மீன ராசியை 3 ஆம் பார்வையாக பார்ப்பதாலும் லக்னம் அல்லது ராசியில் குருவோடு சனியின் தொடர்பும் இருக்கும் என்பது உறுதியாகிறது. குறிப்பாக சனி, சந்திரன் சாரம் பெறுவதால் பிறக்கும் குழந்தையின் நட்சத்திரம் சனி-சந்திரன் தொடர்புடையதாக அமைய வேண்டும். இதன்படி பார்த்தால் குருவின் வீட்டில் சனியின் நட்சத்திரம் அமைவது மீன ராசியில்தான். எனவே குழந்தை மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் தொடர்பாக வாய்ப்புள்ளது புரியும். கவிப்பானது சம்பவத்தின் விளைவை சொல்லும் என்பதாலும் லக்னத்திற்கு 5 ஆமதிபதி சனியின் நட்சத்திரம் மிதுனத்தில் இருப்பதாலும் அது குழந்தையின் லக்னமாக அமைய வாய்ப்பு உண்டு.
இந்த ஜாதகிக்கு புதனின் மிதுன லக்னத்தில், குருவின் மீன ராசியில், சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆரூடம் சூரியனின் உத்திரம்-4 ல் அமைந்து, சூரியன் ஆண் ராசியில் உச்சமானதால் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மீண்டும் அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.