ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈர்ப்பு இருக்கும். அத்தொழில் பற்றி நல்ல விஷய ஞானத்தையும் கொண்டிருப்பர். ஆனால் அந்தத்தொழில் அவருக்கு கைகொடுக்காது அல்லது கைகொடுத்து அவமானப்படுத்தும். இப்படியான நிலையில் சிலகாலம் போராடிப் பார்த்துவிட்டு பெரும்பாலோர் அதிலிருந்து விலகிவிடுவர். ஆனால் வெற்றியாளர்களின் கண்ணோட்டம் வேறு மாதிரி இருக்கும். குறிப்பிட்ட அத்தொழில் எதிர்காலத்திலும் சிறப்பைத் தரும் என்றால், அவர்கள் அதிலிருந்து விலக மாட்டார்கள். அதே சமயம் தொழிலை மாற்றாமல், தங்களது யுக்தியை மாற்றி அதே தொழிலில் வெற்றி பெறுவர். எவ்வளவு முயன்றும், காலத்தை செலவிட்டும் ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஒருவரால் வெற்றி பெற இயலவில்லை எனும் சூழலில் அவர் தொழிலையே மாற்றுவது நன்மை தரும். காரணம் குறிப்பிட்ட தொழிலின் காரக கிரகம் ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும். ஆனால் எவ்வளவு தோல்விகளை எதிர்கொண்டாலும் விடாது அத்தொழிலின் மீது கவனம் செலுத்துபவர்களை அக்கிரகம் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு சாதகமான தசா-புக்திகளில் அவரை ஏற்றுக்கொண்டு அரவணைக்கிறது என்பது எனது கருத்து.
ஜாதகத்தில், நல்ல நிலையில் வருமான பாவங்களோடு தொடர்புகொண்டுள்ள கிரகத்தின் காரக தொழிலை ஒருவர் செய்தால், அக்கிரகம் ஜாதகருக்கு பெரிய சோதனைகளை வைக்காமல் நன்மைகளை வழங்கும். எனவே விடாக்கண்டர்களுக்கு விருப்பத்தொழில் என்றால், அதிக சிரமப்படாமல் வாழ்வில் முன்னேற 2, 6, 1௦ பாவங்களோடு தொடர்புகொண்டு தசை நடத்தும் கிரக காரக தொழில் நன்று. ஆனால் போராடிப்பெறும் வெற்றிக்கு இணை எதுவும் இல்லை. சாமான்யமானவர்களை விட தங்கள் வாழ்வில் போராடி வெல்பவர்களுக்கு வாழ்க்கை மிகச் சிறந்த அனுபவங்களையும், வெகுமதிகளை வழங்குவதோடு புகழையும் தருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை 1௦ ஆயிரம் முறைகளுக்கும் மேலான தோல்விகளை எதிர்கொண்ட பிறகுதான் கண்டுபிடித்தார். அவரை உலகம் எந்த அளவு கொண்டாடுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
தலைப்பை கேள்வியாகச் சுமந்துகொண்டு ஜாதகம் பார்க்க வந்தவருக்காக அவரது ஜாதகத்தை ஆராய்ந்தபோது கிடைத்த விஷயங்களே இன்றைய பதிவாக வருகிறது.
ஜாதகர் 1977 ல் பிறந்த ஒரு ஆண். இவரது குடும்பத்தொழில் உணவகம்தான். அதுவும் சைவ உணவகம். உணவு காரகன், 1௦ ஆமதிபதி சந்திரன் தனது நண்பர்களான சூரியனோடும், குருவோடும் இணைந்திருப்பதால் சைவ உணவகம். சந்திரனுக்கு சனி, செவ்வாய், ராகு/கேதுக்கள் தொடர்பானால் மட்டுமே அது அசைவ உணவை குறிக்கும். சந்திரன், கால புருஷனுக்கு உணவை குறிக்கும் தனது மூலத்திரிகோண உச்ச ராசி ரிஷபத்தில் நின்று வருமான பாவமான 2 ஆமிடத்தை பார்க்கிறார். வைசிய (வியாபார) கிரகம் புதன் நேர் பார்வையாக லக்னத்தை பார்க்கிறது. உணவு காரகர் சந்திரனும் வைசிய கிரகமாகி சுய சாரம் ரோகிணி-4 ல் நின்று குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால், ஜாதகர் உணவு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தில் பிறந்துள்ளார்.
ஜாதகர் குரு தசையில் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க, உணவகத்தில் அவருடன் இணைந்து பணியாற்றினார். குரு-சந்திரன் இணைவு தரும் குருச்சந்திர யோகமானது, ஒரு ஜாதகர் கல்வியை முடித்தவுடன் செயல்படத் துவங்கி சம்பாத்தியத்தை தரும் சக்திமிக்கது என்பதால் ஜாதகர் கல்வி முடித்ததும் சம்பாதிக்க வந்துவிட்டார் என்றே கூற வேண்டும். கிரகிப்புத்திரனுக்குரிய சந்திரன் உச்சம் பெற்ற ஜாதகர், விரைவில் தொழில் நிபுணத்துவங்களை கற்றுக்கொண்டார் எனினும் தந்தையை குறிக்கும் சூரியன் பாதகாதிபதி என்பதாலும், 8 ஆமிடம் அவமானங்களை குறிக்கும் என்பதாலும், ஜாதகர் பல அவமானங்களை எதிர்கொண்டார். 1௦ ஆமதிபதி சந்திரன், தனது 1௦ ஆம் பாவத்திற்கு பாதகத்தில் நிற்கும் நிலையில், பாதகாதிபதி சூரியனும் தசா நாதன் குருவுடன் அவமான பாவமான 8 ல் இணைந்துள்ளது, ஜாதகர் தொழிலில் எண்ணற்ற அவமானங்களை எதிர்கொள்வார் என்பதை உணர்த்துகிறது.
தசாநாதனே குருவே குடும்ப காரகராகி குடும்ப ஸ்தானமான 2 ஆமிடத்தை பார்ப்பதால் ஜாதகருக்கு குரு தசையில் குடும்பம் அமைந்தது. சூரியன் பாதகாதிபதியாகி தன் வீட்டிற்கு 1௦ ல் திக்பலம் பெறுவதால், தங்களைப் போன்றே உணவகத் துறையில் ஈடுபட்டுள்ள, தங்களை விட வசதிமிக்க, பெரியதொரு குடும்பத்தில் தந்தையின் முயற்சியால் திருமணம் நடந்தது. ஜாதகருக்கு திருமணமானதும் ஜாதகர் மனைவியின் குடும்ப உணவகத்தை நிர்வாகிக்க மாமனாரால் பணிக்கப்பட்டார். அதற்கு தந்தையும் அனுமதித்தார். தசா நாதன் குருவும், 1, 8 க்குரிய களத்திர காரகர் சுக்கிரனும் பரிவர்த்தனையாகி உள்ளனர் என்பதால் மனைவி வந்ததும் ஜாதகருக்கு தொழிலில் இட மாற்றமும் கூடவே வந்தது என்றே கூற வேண்டும்.
ஜோதிடத்தில் தந்தையை குறிக்கும் கிரகமும், மாமனாரை குறிக்கும் கிரகமும் சூரியன்தான். சூரியன் லக்னத்திற்கு பாதகாதிபதி என்பதால், தனது தந்தையால் தங்கள் சொந்த உணவகத்தில் பட்ட அவமானகளுக்கும், மாமனார் உணவகத்தில் அவரால் பட்ட அவமானங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதை ஜாதகர் விரைவில் உணர்ந்துகொண்டார். காரணம் தந்தை, மாமனாரை குறிக்கும் சூரியன் பாதகாதிபதியாகி அவமான ஸ்தானத்தில் நின்றதுதான். குரு அவமான ஸ்தானத்தில் வர்கோத்தமம் பெற்று நின்று தசை நடத்துவதால் ஜாதகருக்கு அவமானங்கள் தாங்கிக்கொள்ள இயலாதவகையில் வந்தன. தசா நாதன் குரு, லக்னாதிபதி, ராசியாதிபதி ஆகிய இருவருக்கும் பகை கிரகமாகி, லக்னத்திற்கு அவமான ஸ்தானமான 8 ல் நிற்கிறார். அவரே ராசிக்கு அவமான ஸ்தானமான தனுசுவிற்கும் அதிபதியாவதுதான் ஜாதகர் தொடர்ந்த அவமானங்களை சந்திக்க காரணம். ஜாதகர் சொந்த உணவகத்தில்லும் , மாமனார் உணவகத்திலும் பாத்திரம் தேய்க்கும் இடத்தில், பல நேரங்களை செலவிட்டார் என்பது பரிதாபத்திற்குரியது.
ராசியில் உச்சம் பெற்ற சந்திரன் நவாம்சத்தில் வருமான, உணவு பாவமான 2 ல் ஆட்சி பெற்றுள்ளதும் அவரோடு லக்னாதிபதி புதன் இணைவு பெற்றதும் ஜாதகரின் வருமான வகை சிந்தனையை தெளிவாக கூறுகிறது. 7 ல் திக்பலம் பெற்ற சனி நிற்பது, தொழிலுக்கு சிறப்பு என்றாலும், அது பாதக ஸ்தானம் என்பதால் தொழிலில் பாதகங்களை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. செவ்வாயும் சுக்கிரனும் 8 ல் இணைந்திருப்பது கணவன்-மனைவி ஒற்றுமையை குறிப்பிட்டாலும் அது லக்னத்திற்கு 8 ஆமிடம் என்பதால், மனைவி வகையிலும் ஜாதகருக்கு அவமானமே ஏற்டும் என்பதை தெளிவாக்குகிறது. ராசிக்கு 8 ல் சூரியன் அமைந்து பாதக ஸ்தானத்தில் அமைந்த, 8 ஆமதிபதி சனி பார்வை பெறுவது, தந்தை, மாமனார் வகையில் தொழிலில் அவமானங்களை ஜாதகர் எதிர்கொள்வதை குறிக்கிறது.
தசாம்சத்தில் லக்னதில் சந்திரன் ஆட்சி பெற்றதால் ஜாதகரால் சந்திரன் சார்ந்த உணவுத் துறையை தவிர வேறு தொழிலை யோசிக்க வாய்ப்பில்லாமல் போனது. லக்னத்திற்கு 2 ல் பாவிகள் அமைந்துள்ளது, ஜாதகரின் தொழில் எண்ணங்களுக்கு குடும்பம், பொருளாதார வகையில் நன்றி பாராட்டினாலும் உறவு வகையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். 2 ஆமிட சனியும் 8 ஆமிட சூரியனும் தசாம்சத்தில் பரிவர்த்தனை ஆவது ஜாதகர் இடம் மாறினாலும் தொழிலில் அவமானங்களை சந்திப்பார் என்பதை குறிக்கிறது.
குடும்ப தொழிலில் தந்தை மற்றும் மாமனாரால் பட்ட அவமானங்களை பொறுக்க இயலாத ஜாதகர் ஒரு கட்டத்தில் குடும்பத்தை விட்டு வெளியேறி வேறொரு ஊருக்கு சென்று சில காலம் இருந்துள்ளார். அப்போதும் அவரை அரவணைத்தது உணவுத்துறைதான். ஜாதகர் அங்கு தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பணிபுரிந்துள்ளார். இவரின் செயல்களால் ஈர்க்கப்பட்ட முதலாளி ஜாதகரை நலிவடைந்த தனது உணவகத்தை மேம்படுத்தித் தருமாறு கோருகிறார். பதிலாக அவரை தொழில் பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக முதலாளி கூறுகிறார். அதை ஏற்றுக்கொண்ட ஜாதகர், தனது கடும் உழைப்பால் ஓரிரு வருடங்களிலேயே அதை வெற்றிகரமான உணவகமாக்கினார். நிறுவனம் ஜாதகருக்கு உரிய பங்கை வழங்கும் நிலை வந்ததும், ஜாதகர் கழட்டிவிடப்பட்டார். காரணம், ராசிக்கட்டத்தில் உழைப்பின் அதிபதி சனி, புதனின் ஆயில்யத்தில் நின்று 7 ஆமிட புதனை, தனது 1௦ ஆம் பார்வையாக பார்ப்பதுதான். புதன், சனி தொடர்பு பங்குதாரர் வகை ஏமாற்றங்களை அடைய வைக்கும் அமைப்பாகும்.
தற்போது ஜாதகருக்கு அவமானத்தை தந்த குரு தசை முடிந்து கர்ம காரகர் சனி தசை கடந்த ஆண்டு துவங்கியதும், ஜாதகரின் தந்தையும் மாமனாரும் இறந்துவிட்ட நிலையில் மீண்டும் ஊர் திரும்பி தங்களது உணவகத் தொழியையே தொடர்ந்து நடத்தி வருகிறார். ஆனால் கல்லாவில் அமராமல் தனது உணவகத்தில் ஒரு பார்வையாளராக வந்து செல்கிறார். சூரியன் முதலாளியை குறிக்கும் காரக கிரகமாகும். ஆனால் ஜாதகருக்கு தற்போது நடப்பது தொழிலாளியை குறிக்கும் சனியின் தசையாகும். இதனால் ஜாதகர் தனது உணவக கல்லாவிலேயே ஒரு முதலாளிக்குரிய மதிப்போடு அமர மனமின்றி, பணியாளரை அமர வைத்துள்ளார். என்னே கிரகங்களின் லீலைகள்.
தற்போது ஜாதகரை அவமானப்படுத்த குடும்பத்தில் ஆளில்லை. 8 ஆமிட கிரக தசையும் முடிந்த நிலையில் ஜாதகருக்கு அவமானங்கள் தொடராது என தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால் தசாம்சத்தில் 2 ஆமிடத்தில் பாவிகள் அமைத்துள்ளதால், குடும்பத்தில் ஜாதகர் அன்பை எதிர்பார்த்தால், தொழிலில் வருமானம் இருக்காது என்பதை குறிப்பிடுகிறது. இந்நிலையில் ஜாதகருக்கு ஜாதக எதார்த்தங்களை புரிய வைத்து, தற்போதைய தசா நாதன் சனியின் நேர்மறை காரகத்துவமான உண்மையான உழைப்பை வழங்கினால்தான் வாழ்வில் நிம்மதி கிடைக்கும் என்று கூறப்பட்டது. இவரது தொழில் ஆலோசனைகள் இவரைவிட மற்றவருக்கு சிறப்பைத்தரும் என்பதால், மற்றவர்களுக்கு தொழில் ஆலோசனை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501