
வாழ்வில் சரியான திட்டமிடுதலோடு வாழும் ஒரு சாமானியன், வாழ்வு கொடுக்கும் வளமையை திட்டமிட்டுப் பயன்படுத்தாத வலிமையான எவனொருவனையும் எளிதாக வென்றுவிடுவான். முடிவெடுப்பது ஒரு கலை. இக்கலையில் தேர்ந்த நுட்பத்தை அடைய பல அனுபவங்கள் தேவை. பலருக்கு சுய அனுபவங்கள். சிலருக்கு ஏனையோரின் அனுபவங்கள். புத்திசாலிகளுக்கு புத்தியே அதிகம். முட்டாள்களுக்குத்தான் அனுபவம் அதிகம் என்றொரு வாசகம் உண்டு. ஆனால் உண்மையில் அனுபவம் தரும் அறிவில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. ஆனால் அடுத்தவரின் அனுபவத்தை எடுத்தாள்பவர்களுக்கு சந்தேகம் தவிர்க்க இயலாதது. இதனால்தான் அனுபவமே மிகச் சிறந்த ஆசான் என்ற வாசகம் மெச்சப்படுகிறது. அப்படி ஒரு துறையில் அறிவும், அனுபவமும், முடிவெடுக்கும் திறனும் பெற்றவர்களாலும் கூட வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் சரியாக முடிவெடுக்க முடியாது. அவர்களது அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயங்களில் முடிவெடுக்க அவ்விஷயத்தில் அறிவும், அனுபவமும் உள்ளவர்களின் ஆலோசனை தேவைப்படுகிறது. ஒருவரால் அவரது வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் சிறப்பான முடிவை எடுக்க முடியாது எனும் சூழலில் எது ஒரு விஷயத்தில் சிறந்த முடிவை எடுக்க வைக்கிறது? மற்றும் எத்தகைய விஷயங்களில் ஒருவர் சரியாக முடிவெடுக்க இயலாமல் தவிப்பார் என்பதை ஜாதக ரீதியாக ஆராய்வதே இன்றைய பதிவு.

பொதுவாக ஒரு ஜாதகத்தில் வலுவாக அமைந்த கிரகம் அதன் காரக விஷயங்களில் பின்வாங்காத வகையில் முடிவெடுக்கும். ஜாதகத்தில் பலவீனமடைந்துள்ள கிரகம் முடிவெடுக்கத் தடுமாறும். லக்னத்தில் வலுவாக அமைந்த கிரகம் சுபரானாலும் பாவியானாலும் தனது முடிவில் தெளிவாக இருக்கும். ஆனால் லக்னாதிபதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் லக்னத்தில் வலுவாக நின்ற கிரகம் கூட தனது முடிவில் உறுதித் தன்மையை இழந்துவிடும். எனவே ஒருவரின் முடிவெடுக்கும் திறனில் லக்னாதிபதியின் நிலையே முதன்மையானது. சந்திரன் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்திருந்தால் ஒருவருக்கு சிறந்த சிந்தனைகள் ஏற்படும். ஆனால் சிந்தனைகளை அவர் எந்த அளவு செயல்படுத்துவார் என்பதை லக்னாதிபதி, லக்னத்தில் நின்ற கிரகம், தசா-புக்தி கிரகங்கள் ஆகியவை நிர்ணயிக்கின்றன. தசா-புக்தி கிரகங்கள் சிறப்பாக அமைந்திருந்தால் முடிவுகளில் தெளிவாகவும், உறுதியாகவும் ஜாதகர் இருப்பார். கோட்சாரத்தில் லக்னாதிபதி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் ஜாதகர் தவறான முடிவுகள் எடுத்திருந்தாலும் அதை நல்ல தசா—புக்தி கிரகங்கள் கோட்சாரம் மாறியதும் சரியாக மாற்றி அமைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஷயங்களின் காரக கிரகங்களும், அது தொடர்புடைய பாவகங்களும் பாதிக்கப்பட்டிருந்து கோட்சாரமும் குறிப்பிட்ட அவ்விஷயத்திற்கு சாதகமற்ற நிலையில் இருந்தால் அவ்விஷயத்தில் ஜாதகர் தவறான முடிவையே எடுப்பார். குறிப்பிட்ட அவ்விஷயம் தொடர்புடைய வர்க்கச் சக்கரங்கள் அதை தெளிவு படுத்திக் கூறும்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

ஜாதகர் எண்பதுகளின் பிற்பகுதியில் பிறந்த ஒரு ஆண். கால புருஷனுக்கு 2 ஆமிடமான ரிஷப லக்னத்தில் சூரியனும் 2 ஆமிட சுக்கிரனுடன் பரிவர்த்தனையாகும் புதனும் நின்று புத-ஆதித்ய யோகத்தை வழங்குகிறார்கள். லக்னத்தில் நிற்கும் சூரியன் தாயாரை குறிக்கும் 4 ஆமதிபதியாகிறார். லக்னத்தை விருட்சிகத்தில் இருந்து தந்தையை குறிக்கும் 9 ஆம் பாவாதிபதி சனியும், தாயை குறிக்கும் நீசம் பெற்ற சந்திரனும் பார்க்கிறார்கள். லக்னத்துடனும் 7 ஆமிடத்துடனும் தொடர்பாகும் கிரகங்கள் ஜாதகரின் தொடர்புகளில் முக்கிய பங்கு வகிக்கும். 7 ஆமிடம் என்பது 10 ன் பாவத் பாவமாகும். இதனால் 7 ஆமிடம் ஜாதகரது களத்திர தொடர்புகளுடன் தொழில் தொடர்புகளையும் தெரிவிக்கும். முதலில் தொழில் தொடர்பையும் பிறகு களத்திர தொடர்பையும் ஆராய்வோம்.
தொழில் விஷயங்களை ஆராய்வதற்கான தசாம்சம் கீழே.

தசாம்சத்தில் சூரியன் மேஷ லக்னத்தில் உச்சமாகியுள்ளார். இதனால் ஜாதகருக்கு அரசாங்கக் கொடுப்பினைகள் உண்டு. ஜாதகரது முடிவுகள் உறுதியானதாகவும், ஆளுமையுடனும் இருக்கும். லக்னத்தை குரு பார்க்கிறார். இதனால் இவர் எடுக்கும் முடிவுகள் பொருளாதார வளமையை தருவதாகவும் வளர்ச்சியை நோக்கியதாகவும் இருக்கும். லக்னத்தில் வலுவான சூரியன் ஜாதகரை இயக்குவார் என்பதற்கேற்ப ஜாதகர் தேசத்தின் முதன்மையான வங்கி ஒன்றில் மிக உயரிய பொறுப்பில் இருக்கிறார். லக்னாதிபதி செவ்வாய் 6 ஆமிடமான கன்னியில் 2, 7 ஆமதிபதி சுக்கிரனுடன் இணைந்து அமைந்துள்ளார். 10 ஆமதிபதி சனி 8 ல் மறைந்துவிட்டதால் ஜாதகர் சுய தொழில் செய்ய சிறப்பில்லை. இதனால் ஜாதகர் லக்னத்தில் அமைந்த சூரியன் குறிக்கும் தலைமைப் பொறுப்பில், 6 ஆமிடம் குறிக்கும் பணியாளராக லக்னம் லக்னாதிபதியுடன் குரு, சுக்கிரன் தொடர்பாவதால் பொருளாதாரத்தை கையாளும் வங்கியில் பணிபுரிகிறார். 2 ஆமிடத்தில் அமைந்த புதன் பரிவர்த்தனைக்கு பிறகு கன்னியில் உச்சமாகி லக்னாதிபதி செவ்வாயுடன் இணைகிறார். இதனால் இவருக்கு பொருளாதார அறிவு மிக அதிகம். அந்த அறிவே ஜாதகரை வங்கியில் மிக உயர்ந்த பொறுப்பில் அமர்த்தியுள்ளது. அதே சமயம் பரிவர்த்தனையாகும் சுக்கிரன் 2 ஆமிடத்தில் ராகுவுடன் இணைகிறார். இதனால் 2 ஆமிடமும், சுக்கிரனும் குறிக்கும் பொருளாதாரத்தில் தவறுகள் நேராவண்ணம் குற்றம் கண்டுபிடிக்கும் ராகு பாதுகாக்கிறார். இது இவருக்கு பணியில் சிறப்பான முடிவுகளை துணிந்து எடுக்கும் அமைப்பைத் தரும். வங்கியில் தவறுகள் நேராவண்ணம் பொருளாதரத்தை வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையில் ஜாதகர் எடுக்கும் உறுதியான முடிவுகளே இவரை தனது பணியில் முதன்மையான இடத்தில் வைத்துள்ளது. லக்னத்தில் ஒரு பாவ கிரகம் 5 ஆமதிபதியாகி உச்சம் பெற்று அமர்வது பூர்வ புண்ணியத்தால் கிடைக்கும் ஆளுமை என்பதோடு, ஜாதகரின் முடிவுகளை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாமல் செய்துவிடும். லக்னாதிபதியும் பாவியாகி எதிரி பாவகமான 6 ல் அமர்வதால் தனது முடிவுகளுக்கு எழும் எதிர்ப்புகளை ஜாதகர் எளிதில் முறியடிப்பார்.
ராசிச் சக்கரத்தில் ஜாதகத்தில் 2 ஆமதிபதி புதன் அஸ்தங்கமாகியுள்ளார். பரிவர்த்தனைக்குப் பிறகு மிதுனத்திலிருந்து ரிஷபத்திற்கு வரும் சுக்கிரன் அஸ்தங்கமாவார். புதன் அஸ்தங்கத்திலிருந்து விடுபடுவார். எனவே இங்கு அஸ்தங்கம் சுக்கிரனையே பாதிக்கும், புதனை அல்ல. 7 ஆமதிபதி செவ்வாய் 8 ல் மறைந்தது களத்திர வகையில் சிறப்பை தராது. பரிவர்த்தனையில் லக்னாதிபதி சுக்கிரன் அஸ்தங்கமாகிவிடுவதால் தனித்து முடிவெடுக்கும் திறனை ஜாதகர் இழந்துவிடுவார். ஒரு ஜாதகத்தில் எந்த ஒரு கிரகம் வக்கிரமாகிறதோ அதன் காரக விஷயங்களில் ஜாதகர் பிறரின் தலையீட்டை ஏற்காமல் தானே முடிவெடுப்பார். 1-7 ல் பெற்றோர்களை குறிக்கும் 4, 9 பாவாதிபதிகளும் சூரியனும் சந்திரனும் தொடர்பாவதால் தனது முடிவுகளில் பெற்றோரை ஜாதகர் சார்ந்து இருப்பார். இந்த ஜாதகத்தில் ஜீவன காரகர் சனி வக்கிரமாகி சூரிய, சந்திரர்களோடு தொடர்பாவதால் ஜாதகரின் ஜீவன விஷயங்களில் பெற்றோர்களின் தலையீட்டை எதிர்பார்க்க மாட்டார். மாறாக தனது களத்திர விஷயத்தில் எதிர்பார்ப்பார். இதை தெளிவாக களத்திர விஷயங்களை கூறும் நவாம்சம் மூலம் ஆராய்வோம் வாருங்கள்.

நவாம்சத்தில் மேஷ லக்னத்திற்கு 2 ஆம் பாவகமும் குடும்ப காரகர் குருவும் பாதிக்கப்படுகின்றனர். 7 ல் அமைந்த வக்கிர சனி 10 ஆமிட சுக்கிரனுடன் பரிவர்த்தனை ஆகிறார். பரிவர்த்தனையில் துலாத்திற்கு வரும் சுக்கிரன் ராகு-கேதுக்களின் அச்சை விட்டு விலகி தனித்து நிற்கிறார். லக்னத்தில் லக்ன பாவியும் 6 ஆமதியுமான புதன் திக்பலம் பெற்று நிற்கிறார். இதனால் ஜாதகரின் முடிவுகள் திருமண விஷயத்தில் சாதுர்யமாக இருக்குமா? என்றால் லக்ன புதன் சூரியன் மற்றும் ராகுவால் பாவ கர்த்தாரி யோகத்தில் அமைந்துவிட்டதால் இருக்காது என்றே முடிவு செய்ய வேண்டியுள்ளது. ஜாதகருக்கு திருமண, களத்திர விஷயங்களில் முடிவெடுக்க தயக்கமும், பயமும் இருக்கும். தனுசில் அமைந்த லக்னாதிபதி செவ்வாய்க்கும் பரிவர்த்தனை சனியாலும் கேதுவாலும் பாவ கர்த்தாரி யோகம் அமைகிறது. இதனால் ஜாதகர் தனது திருமண, களத்திர விஷயங்களில் முடிவு செய்ய இயலாத கோழையாக இருப்பார். ராசிச் சக்கரத்தில் லக்னத்துடன் தொடர்பான பெற்றோர்களை குறிக்கும் சூரியனும் சந்திரனும் இங்கு பாதகத்திலும் விரையத்திலும் தங்கள் சொந்த ராசிகளான முறையே சிம்மத்திற்கும், கடகத்திற்கும் 8 ல் மறைந்துள்ளார்கள். இதனால் திருமண விஷயங்களில் ஜாதகர் பெற்றோர்களை நாடினால் அவர்களால் பலனடைய மாட்டார். உண்மையில் ஜாதகர் தனது திருமண வாழ்வை பெற்றோர்களின் முடிவிற்கு விட்டிருந்தார். அதனால் தற்போது 37 வயதில் நல்ல கல்வியும், வேலையும் இருந்தும் பெற்றோர்களால் இது விஷயத்தில் தான் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாக இன்னும் திருமணமாகாத ஜாதகர் கூறுகிறார்.
ஜாதகரின் இந்நிலைக்கு இவரது கர்ம வினையே காரணம் என்று கூறினாலும், கர்ம வினைகளை கிரகங்கள் அதன் வழி தொடர்புகள் மூலமே செயல்படுத்துகிறது. அப்படி செயல்படுவதை தசா-புக்திகள் தெளிவாக சுட்டிக்காட்டும். ஜாதகர் திருமண காலத்தில் பரிவர்த்தனையால் அஸ்தங்கமான நீண்ட சுக்கிர தசையை கடந்து, தற்போது சூரிய தசையின் இறுதியில் உள்ளார்.
வாசகர்களுக்கு எனது மனப்பூர்வமான தீபாவளி வாழ்த்துக்கள்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501