ஒரு ஜாதகர் திருமண வயதில் மாரக திசையை எதிர்கொள்ளும் சூழலில் மாரகத்தைத் தரும் கிரகங்கள் தாங்கள் நின்ற சார அடிப்படையில் ஜாதகருக்கு திருமணம் போன்ற எந்த நிகழ்வுகளையும் எதிர்கொள்ள வைத்து பிறகே ஜாதகரை கொல்கின்றன. மாரகர்கள் என்பதற்காக தாங்கள் தொடர்புடைய எதையும் ஜாதகருக்கு மறுப்பதில்லை. இது ஒரு ஆச்சரியமான உண்மை. கிரகங்கள் எந்த விதத்திலும் தங்கள் கடமையில் தவறுவதில்லை. முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தது போல வெட்டப்படுபவனால் வளர்க்கப்படும் ஆடு திருவிழா நாள் வரும் வரை சரியாகத் தீனியிட்டு வளர்க்கப்படுவது போன்றது இது.
பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.
ஜாதகிக்கு 03.02.2002 ல் சந்திர திசை சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது.
விருச்சிக லக்னத்திற்கு பாதகாதிபதியான (9 ஆமதிபதி) சந்திரன், 7 ஆம் ஆதிபத்தியம் பெற்ற களத்திர காரகன் சுக்கிரனின் சாரம் பெற்றதால் சந்திர திசையில் திருமணம் நடக்க வேண்டும். சுக்கிரன் தனது பாவம் மற்றும் காரக அடிப்படையிலும் சுகஸ்தானாதிபதியான சனியின் சாரம் பெற்றதனாலும் தனது புக்தியில் திருமணத்தை நடத்தினார்.
9 ஆம் பாவாதிபதி திசையில் சுய புக்தியிலும் 4 & 12 ஆமதிபதிகளின் புக்தியிலும் ஒருவர் வெளிநாடு செல்வார். 9 ஆம் பாவமே ஜல ராசி என்பதாலும் 4 ஆமதிபதி சனியின் சாரத்தில் நின்ற 12 ஆமதிபதி சுக்கிரனின் புக்தியிலேயே ஜாதகி திருமணம் முடிந்தவுடன் கணவருடன் வெளிநாடு சென்றார். 7 ஆமதிபதி 9 ஆம் பாவத்தில் நின்று அது ஜல ராசியுமாகி திசா நாதன் அதே 9 ஆம் பாவாதிபதியானால் ஒரு ஜாதகரின் வாழ்க்கைத்துனைவர் வெளிநாட்டுடன் தொடர்புடையவராக இருந்தே ஆக வேண்டும். (வெளிநாட்டு வரன் பார்க்கும் பெற்றோர்கள் தங்கள் வதுவின் (பெண்ணின்) ஜாதகத்தில் இத்தகைய அமைப்பு உள்ளதா என கவனித்து அதன்படி வரனை தேர்ந்தெடுக்க இது போன்ற குறிப்புகள் உதவியாக இருக்கும். திருமணத்தில் நேரும் தாமதத்தை இதனால் தவிர்க்கலாம்).
வெளிநாடு சென்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே ஜாதகிக்கு மூலையில் புற்றுநோய்கட்டி (Brain Tumor) இருப்பது கண்டறியப்பட்டு மூன்று மாத சிகிச்சைக்குப்பின் இந்திய திரும்பினார். இந்தியாவிலும் தொடர்ந்த சிகிச்சை தொடர்ந்தது. 2௦௦2 டிசம்பர் நான்காம் வாரத்தில் ஜாதகிக்கு செவ்வாய் திசை துவங்கியது. தொடர்ந்த சிகிச்சையில் பலனளிக்காமல் செவ்வாய் திசை சுய புக்தியில் 2௦௦3 ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு பிறந்ததும் காலமானார்.
லக்னத்தை அஸ்டமாதிபதியுடன் சேர்ந்ததால் கெட்டுவிட்ட சுக ஸ்தானாதிபதியான சனி மூன்றாம் பார்வையாகப் பார்க்கிறார். லக்னம் என்பது தலையை குறிக்கும். எனவே தலையில் வியாதி. ஸ்திர லக்னத்திற்கு பாதகஸ்தானமான 9 ஆமிடத்திற்கு உரிய சந்திரன் பாதகத்தை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் வியாதி மூலம் அந்த பாதகம் ஏற்பட்டது. சந்திரன் இரத்தம் மற்றும் உடலில் உள்ள திரவ இயக்கங்களை கட்டுப்படுத்தும் கிரகம் என்பதால் மூலையில் கட்டி. சனி, ராகு & செவ்வாய் இவர்களே புற்று நோய்க்கு காரகத்துவம் வகிப்பவை. ராகு திசா நாதனின் வீட்டில் பாதகஸ்தானத்தில் சந்திரனின் வீட்டில் நிற்கிறது. ராகு-கேதுக்கள் எந்த வீட்டில் நிற்கிறார்களோ அந்த வீட்டோனின் காரணிகளை தாங்கள் எடுத்துச் செய்வார்கள். இந்த அடிப்படையில் சந்திர திசை வியாதியை கொடுத்தாலும் மரணத்தை தரவில்லை. அடுத்துவந்த 6 ஆமதிபதி செவ்வாய் இரத்தத் திசுக்களின் (Bone Marrow) உற்பத்தி மற்றும் இயக்கங்களுக்கு காரகம் வகிப்பது. செவ்வாய் பாதக ஸ்தானத்தில் நின்ற ராகுவின் சாரம் பெற்றதால் தனது சுய புக்தியிலேயே மரணத்தை தந்தது.
இந்த ஜாதகத்தில் சந்திரன் ஜாதகிக்கு மரணத்தை வழங்கும் உரிமையைப் பெற்றிருந்தாலும் மரணம் உறுதி எனும் சூழ்நிலையில் ஜாதகிக்கு தான் நின்ற சாரத்தினடிப்படையில் (சுக்கிரன் சாரம்) திருமணம் மற்றும் பாவ அடிப்படையில் வெளிநாட்டு பயண வாய்ப்பையும் வழங்கி கருணை காட்டிவிட்டு அதே நேரம் மரணத்தை உறுதி செய்யும் வியாதியை தந்ததோடு விலகிவிட்டது கவனிக்கத்தக்கது.
அடுத்து மற்றோர் பெண்ணின் ஜாதகம்.
ஜாதகத்தில் திருமண தொடர்புடைய 2 மற்றும் 7 ஆமிடங்களை விரயாதிபதி குரு சாரத்தில் நின்று செவ்வாய் பார்வை செய்வதால் கெட்டது. செவ்வாய்க்கு வீடுகொடுத்த 7 ஆம் பாவாதிபதி சுக்கிரன் லக்ன பாதகாதிபதி சனியுடன் இணைவு பெற்றதால் கெட்டுவிட்டார். குடும்ப காரகனும் 9 & 12 பாவங்களுக்குரிய குரு மூன்றில் பகை வீட்டில் வக்கிர கதியில் நின்று பாதகாதிபதி சனி பார்வை பெற்றதால் கெட்டுவிட்டார். மேஷ லக்னத்திற்கு குரு சுபனானாலும் சனியுடன் இணைந்தாலோ அல்லது சனி பார்வை பெற்றாலோ பாதகத்தையே செய்வார் என்பது ஒரு முக்கிய ஜோதிட விதி.சுகஸ்தானமான நான்காமிடத்தில் கேது நின்று அதன் பாவாதிபதி சந்திரன் நீசமானதால் சுகஸ்தானமும் கெட்டது. ஆயுள் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான 8 ஆமிடம் இரு பக்கமும் பாவிகளால் சூழப்பட்டு பாவ கர்தாரி தோஷத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் அங்கு நீச சந்திரன், சுபாவ பாவியான சூரியன் மற்றும் 6 ஆமதிபதி புதன் ஆகியோர் அந்த இடத்தை கடுமையாகப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளனர். ஜாதகிக்கு ஆயுள் பலமில்லை என்பதை இது குறிக்கிறது.
குடும்ப வாழ்க்கை தொடர்புடைய 2,4,7,8,12 ஆகிய அனைத்து பாவங்களும் அதன் அதிபதிகளும் ஜாதகத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுக்கிரன் லக்ன பாதகாதிபதி சனியுடன் இணைவு பெற்றதால் ஜாதகிக்கு மரணத்தை வழங்கவேண்டிய பொறுப்புக்கு உள்ளாகியுள்ளார். ஆனால் சனி 7 ஆமதிபதியான தனது (சுக்கிரனின்) சாரம் பெற்றுவிட்டதால் அதற்கு முன்னர் ஜாதகிக்கு தனது காரகம் மற்றும் பாவ அடிப்படையில் இல்லற இன்பத்தை வழங்கிவிட கருணை காட்டினார்.
ஜாதகிக்கு 26.01.2015 அன்று சுக்கிர திசை சனி புக்தியில் திருமணம் நடந்தது. திசா நாதன் சுக்கிரன் எழாமதிபதி என்பதும் தனது சுய சாரத்திலே (பூராட நட்சத்திரத்தில்) நிற்பதாலும் சுக்கிர திசையில் திருமணம் என்பது ஜாதகிக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புத்தி நாதன் சனி சுக்கிரனுடன் இணைவு பெற்று அதே சுக்கிரன் சாரம் பெற்றதாலும் சனி புக்தியில் திருமணம் நடந்தது.
விருச்சிக ராசிக்கு நடக்கும் ஏழரை சனியின் கடுமையான கட்டத்தில் லக்ன பாதகாதிபதி சனி புக்தியில் ஜாதகிக்கு திருமணம். திருமண தேதியும் அதன் கூட்டுத்தொகையும் 8 ஆகவே அமைந்துவிட்டதை கவனியுங்கள். சனியின் கோரப்பிடியில் ஜாதகி இருக்கிறார் என்பதை இது குறிப்பிடுகிறது. எந்த ஒரு விபரமறிந்த ஜோதிடரும் கோடிகளை தட்சினையாகப் பெற்றாலும் இதுபோன்ற சூழலில் திருமணத்தை தவிர்த்துவிட அறிவுரை கூற வேண்டும். ஆனால் ஜோதிடர்களைவிட சனி வலுவானவர். மனித சக்தியால் சம்பவங்களை தவிர்த்துவிட இயலாது என்பதால்தான் படைத்தவனிடமே நமது குறைகளை கூறுகிறோம்.
ஜாதகிக்கு மரணம் குடும்ப வாழ்க்கை வடிவில் வந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 7 ஆமிடாதிபதி சனியுடன் சேர்க்கை என்பதாலும் 7 ஆமிடத்தில் செவ்வாய் என்பதாலும் குடும்ப பாவங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டதாலும் கணவன் வடிவில் மரணத்தை சனி வழங்கியிருக்க வேண்டும். சனியும் செவ்வாயும் மாரக பாவங்களுடன் தொடர்புகொண்டால் மரணம் குரூரமாக இருக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. ஜாதகியின் இறுதி நேரம் முதலையின் வாயில் சிக்கிய ஜீவனைப் போன்றதாக இருந்திருக்க வேண்டும். நினைத்துப் பார்க்க நெஞ்சம் நடுங்குகிறது.
மாங்கல்ய காரகன் செவ்வாய் 7 ஆமிடத்தோடு தொடர்புகொண்டுள்ளதால் கணவனால் ஜாதகி கொல்லப்பட்டிருக்க வேண்டும் என அனுமானிக்க வாய்ப்புள்ளது. மரணம் எப்படி நிகழ்ந்தது என அறியப்படவில்லை. ஜாதகி கொல்லப்பட்டிருக்கவேண்டும் என்ற கோணத்தில் காவல்துறையின் விசாரணை வலையத்தில் கணவன் உள்ளார்.
மேற்கண்ட இரு ஜாதகங்களிலும் மாரகத்தை தரும் கிரகங்களாக இருந்தாலும் தங்களது காரக, பாவ தொடர்புகள் அடிப்படையில் ஜாதகருக்கு நடக்கும் நிகழ்வுகளை குறைவின்றி நடத்தி விடுகின்றன. தங்கள் பணியை செவ்வனே செய்கின்றன. மனிதர்களுக்குத்தான் சாக்குப் போக்கு.
மரணம் தொடர்புடைய நுட்பமான சில விபரங்களை இங்கு நான் அவசியம் கருதி குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறேன். அதனை சாதாரண மனிதர்கள் தெரிந்துகொள்வது பல வேதனைகளுக்கு வழிவகுக்கும் என்பதே காரணம். நடிகர் ரஜினிகாந்த் ஒரு முறை குறிப்பிட்டதுபோல “சாகர நாள் தெரிஞ்சுட்டா வாழற நாட்கள் நரகமாயிடும்” என்பதுபோல்தான்.
ஒரு முக்கிய அறிவிப்பு:
ஜோதிடத்தில் நிகழ்வுகளின் காரணங்களை துல்லியமான அளவிட பல்வேறு அறிஞர்கள் பலவிதங்களில் ஆராய்ந்துகொண்டிருக்கிரார்கள். அடியேன் K.P அயனாம்சத்தை பயன்படுத்தினாலும் அதன் அனைத்து முறைகளையும் அப்படியே பயன்படுத்துவதில்லை. பாரம்பரிய முறையை (TRADITIONAL VEDIC METHOD) சார்ந்தே எனது ஜோதிட பயணம் இதுவரை வந்துள்ளது. உதாரணமாக K.P முறையில் யோகங்கள் மற்றும் அஷ்ட வர்க்கங்களுக்கு இடமே இல்லை. ஆனால் இவற்றின் பயன்கள் நிராகரிக்க முடியாதவை.
தற்போது நான் ஆய்வு நோக்கில் நமது பாரம்பரிய அயனாம்சமான சூரிய சித்தாந்த அயனாம்சத்தின் திருத்தப்பட்ட நவீன அயனாம்சத்தை இந்தப் பதிவிலிருந்து பயன்படுத்த துவங்கியுள்ளேன். பழைய சூரிய சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட அயனாம்சமே வாக்கிய அயனாம்சம் எனப்படுகிறது. திருத்தப்பட்ட சூரிய சித்தாந்த அயனாம்சமானது அயனாம்சத்தில் மட்டுமல்லாது தற்கால கிரக சஞ்சார விதிகளுக்கேற்ப கிரகங்களின் திசா புக்தி காலங்களிலும் சிறிய மாறுதல்களைக்கொண்டிருக்கும். வாக்கிய மற்றும் திருக்கணித முறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி இது. கணினியை கொண்டு ஜோதிட ஆய்வு செய்துவரும் ஆய்வாளர்கள் இதை பயன்படுத்திப்பாருங்கள் பல ஆச்சரியங்களை அடைவீர்கள். ஜெகன்நாத ஹோரா மென்பொருளில் இந்த திருத்தப்பட்ட சூரிய சித்தாம்ச அயனாம்சம் கிடைக்கிறது.
விரைவில் மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.