வாழ்வில் எத்தனை வகை சம்பாத்தியங்கள் அமைந்தாலும் அவற்றை செம்மையாக அனுபவிக்க நல்ல குடும்ப உறவுகள் அமைய வேண்டும். குடும்ப சொந்தங்களுக்கிடையே நல்ல உறவோடு வாழ்வில் மகிழ்வான தருணங்களை பகிர்ந்துகொள்ளவும் ஜாதக கொடுப்பினை இருக்க வேண்டும். இன்று வெளி தேசங்களுக்கு, அண்டை மாநிலங்களுக்கு பொருளாதாரத்தை முன்னிட்டு சென்று அங்கேயே நிரந்தரமாக குடியேறி விடுபவர்கள் அதிகம். இதனால் அவர்களுக்கு தனது சொந்தங்களுடனான, பூர்வீகத்துடனான தொடர்புகள் குறைந்து விடுகின்றது. பல குடும்பங்களில் பூர்வீக தொடர்பு முற்றிலுமாக அறுபட்டு விடுகிறது. கால ஓட்டத்தில் இவை தவிர்க்க முடியாதவை. திரை கடலோடியும் திரவியம் தேடு என்பதுதான் நமது முன்னோர் வாக்கு. இப்படி வெளியிடங்களில் குடியேறுபவர்களின் அடுத்த தலைமுறை குடும்ப உறவுகள் சொந்த இனம் சார்ந்ததாக இருப்பது மிகக் குறைவே என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இன்று அமெரிக்காவிலும் கனடாவிலும் குடியேறுபவர்களின் அடுத்த தலைமுறை குடும்ப உறவுகள் வெள்ளையின அல்லது கறுப்பின உறவுகளாக அமையலாம். இந்த சூழ்நிலையில் தனது பூர்வீகத்தையும் விடமுடியாமல் அடுத்த இன கலப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்று தவிக்கும் நமது வெளியிட மக்கள் இன்று அதிகம். தனது பூர்வீகமே தெரியாமல், குல தெய்வமே தெரியாமல் தவிக்கும் குடும்பங்கள் இன்று தமிழ்நாட்டிலேயே அதிகம். பண்டைய காலத்திலும் இத்தகைய நிலை இருந்ததாக குறிப்புகள் உண்டு. போரும், பஞ்சமுமே மக்கள் இப்படி பூர்வீகத்தை விட்டு விலக அன்று முக்கிய காரணமாக இருந்துள்ளன. குறைந்த அளவே கொள்ளை நோய்கள் காரணமாக இருந்துள்ளது. இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.
தனது முன்னோர்கள் பூர்வீகத்தை விட்டு பஞ்சம் பிழைக்க தற்போதைய வசிக்கும் ஊருக்கு வந்துவிட்டனர், குல தெய்வ வழிபாடும் விடுபட்டுவிட்டது. திருமண வயதை கடந்தும் இன்னும் திருமணமாகாமல் தவிக்கும் தனக்கு இது விஷயத்தில் உதவ இயலுமா? என்ற கேள்வியுடன் என்னை அணுகிய நபருக்காக, அன்னாரது குலதெய்வம் எது? என்ற கேள்விக்கு பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.
கேள்வி நேரடியாக குல தெய்வம் எது? அமைந்துவிட்டதால் உதயமே பதிலை கூறும். குல தெய்வத்தின் பின்னணியையும், குல தெய்வ அனுகிரகத்தையும் உதயத்திற்கு 5, 9 இடங்களைக்கொண்டு ஆராயலாம். பெண் ராசியும், நீர் ராசியுமான கடகத்தில் உதயம் அமைந்துள்ளது. உள்வட்டதிலும் வெளி வட்டத்திலும் உதயாதிபதி சந்திரன் உதயத்திலேயே அமைந்துள்ளார். உதயத்திற்கு 7ல் அமைந்த நீச குரு, தனது உச்ச வீடான கடகத்தை பார்க்கிறார். இதன் பொருள் ஒரு காலத்தில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்ட ஒரு நீர் நிலைக்கு அருகில் இருக்கும் பெண் தெய்வமே ஜாதகரின் குல தெய்வம் என்பதாகும். குரு நீசமாகி உதயத்தை பார்ப்பதால் குல தெய்வம் தற்போது தனது பொலிவை இழந்துவிட்டது. ஆனால் உதயம் வலுவாகவே அமைந்துள்ளது. இதனால் கோவிலும் அம்பாளும் தற்போதும் பாதிக்கப்படாமல்தான் உள்ளன. ஆனால் வழிபாடுகள் சிறப்பில்லா நிலையில் உள்ளது. ஆரூடம் உதயத்திற்கு 7 ல் அமைந்து அங்கு ஜாம குரு நீசமாகியுள்ளதால் குல தெய்வத்தை வழிபட இயலா நிலையால் கேள்வியாளரது திருமண வாழ்வு பாதிக்கப்படுகிறது. குல தெய்வத்தை குறிக்கும் 5 ஆமிடம் விருட்சிகத்தில் கவிப்பு அமைந்துள்ளது ஜாதகர் குல தெய்வத்தை வழிபட இயலா நிலையையும், பிரசன்னத்தின் நோக்கத்தையும் தெளிவாக குறிப்பிடுகிறது. உதயத்தில் நிற்கும் இரு சந்திரன்களும் உதயத்தின் 8 ஆமதிபதி சனியின் சாரத்தில் நிற்பதை கவனியுங்கள். குல தெய்வத்தை குறிக்கும் கிரகம் சனியாவார். உதயமும் சனியும் ஒன்றுக்கொன்று தொடர்பாகி சிறப்பாகவே அமைந்தாலும், உதயத்திற்கு 8 ல் சனி மூலத்திரிகோணம் பெற்று அமைந்துள்ளார் என்பதால் கோவிலும் சிலையும் சிறப்பாக அமைந்திருந்தாலும் வழிபட இயலாத சூழல் நிலவுவதை இவ்வமைப்பு உறுதி செய்கிறது.
8 ஆமிடதிலும் 8 க்கு 8 ஆன மூன்றிலும் அமைந்த இரு சனிகளும் குல தெய்வத்தை குறிக்கும் கவிப்பு அமைந்த 5 ஆமிடத்தையும் பார்க்கின்றனர். இது கேள்வியாளர் குல தெய்வத்தை கண்டுபிடித்து வழிபடும் சூழலில் அவரது உயிருக்கே பாதகம் ஏற்படும் என்பதை குறிப்பிடுகிறது. உதயத்திற்கு 5, 10 அதிபதி உள்வட்ட செவ்வாய் 5 க்கு 8 ல், உதயத்திற்கு 12 மறைந்துவிட்டார். அதே சமயம் செவ்வாய் 10 ஆமிடமான மேஷத்தில் நிற்கும் புதனுடன் பரிவர்த்தனை ஆகிறார். இதனால் செவ்வாய்க்கு 10, 12 தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் பரிவர்த்தனையாகி மேஷத்திற்கு வரும் செவ்வாய் கூட 5 க்கு 8 ல் மறைகிறார். ஜாமச் செவ்வாய் கால புருஷனுக்கு 12 ல் உதயத்திற்கு 9 ல் மீனத்தில் அமைந்துள்ளார். 10 ஆமதிபதி இப்படி 9,10,12 இடங்களுடன் தொடர்பாவதால் கேள்வியாளரின் முன்னோர் எதோ ஒரு வகையில் வருமானம் பாதிக்கப்பட்ட நிலையிலும், குல தெய்வ அனுக்கிரகமில்லா சூழலில், வாழ்வின் வளமை, தொழில், வியாபாரத்திற்காகவும் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர்ந்து தற்போதைய ஊருக்கு வந்துள்ளதை அறிய முடிகிறது..
குல தெய்வ அனுக்கிரகத்தை குறிக்கும் காரகர் குருவே, இங்கு அதன் காரக பாவகமான 9 ஆமிடம் மீனத்தின் அதிபதியாகி வெளிவட்டத்தில் நீசமாகி 7 ல் அமைந்துள்ளார். உள்வட்ட குரு மேஷத்தில் 10 ல் அமைந்து ராகுவால் பாதிக்கப்படுகிறார். இது கற்றறிந்த பண்பாடான முன்னோர், வேதம் பயின்ற அந்தணர், ஆசிரியர் ஆகிறோர் வகை சாபம் கேள்வியாளர் வம்சத்திற்கு இருப்பதை குறிப்பிடுவதோடு அது கேள்வியாளரது திருமணத்தை தடுக்கிறது என்பதையும் குறிக்கிறது. குல தெய்வத்தை குறிப்பிடும் 5 ஆமதிபதி செவ்வாய், 5 க்கு 8 ல் சாபத்தை குறிப்பிடும் 12 ஆமிடத்தில் மறைந்துவிட்டதால் குல தெய்வமே கேள்வியாளருக்கு சாபமிட்டுள்ளது தெரிகிறது. குல தெய்வத்தை குறிக்கும் 5 ஆமதிபதி செவ்வாய் மேஷ புதனுடனான பரிவர்த்தனைக்கு பிறகு இரு சூரியங்களுடனும், ராகு, குருவுடனும் தொடர்பாகிறார்.. மேஷம் நெருப்பூ வீடு, அங்கு அரசு கிரகம் சூரியன் உச்சம்.. மேஷத்தை உள்ளவட்ட சனி மூன்றாம் பார்வையாக பார்க்கிறார்.. இதனால் இவரது குல தெய்வ கோவிலில் பல காவல் தெய்வங்களும் இருக்கும்.. அவை மேஷத்தை குறிக்கும் நெருப்பு, செவ்வாயை குறிக்கும் வீரன், சூரியனை குறிக்கும் ஈஸ்வரன், மேஷ புதனை குறிக்கும் பத்ரா, ராகுவை குறிக்கும் கருப்பு போன்றவைகளாக அமையும். மேஷத்தில் இரு சூரியன்களும் உச்ச வலுப்பெற்றுள்ளதால் குல தெய்வ ஊரின் பெயரில் சூரியனை குறிக்கும் அரசு, மேஷத்தை குறிக்கும் கோட்டை போன்றவை இருக்கக்கூடும்.
மேற்சொன்ன அமைப்புகளை ஆராய்ந்த பிறகு கேள்வியாளரிடம் நீர் நிலை அருகில் தற்போதும் சிறப்பாக ஆனால் பொலிவிழந்து இருக்கும் கோவிலில் உள்ள ஒரு பெண் தெய்வமே உங்கள் குல தெய்வமாகும். கோவிலில் குல தெய்வமான பெண் தெய்வத்திற்கு சிறப்பான தனிச் சன்னதி உண்டு, கோவிலின் உள்ளேயும் வெளியேயும் முந்தைய பத்தியில் கூறியது போன்ற காவல் தெய்வங்களும் ஊரின் பெயரும் இருக்கும். குல தெய்வமே உங்களுக்கு சாப அமைப்பில் உள்ளதுடன், குரு தோஷமும் கடுமையாக உள்ளது. எனவே குல தெய்வத்தை கண்டுப்பிடித்து வணங்கினால் உங்கள் உயிருக்கே பாதிப்பு வரலாம். குல தெய்வமும் குருவும் கைவிட்டு விட்டதால் குறையுள்ள திருமணத்தை அமைத்துக்கொள்வது நலம் என்று கூறினேன்.
பதிலாக கேள்வியாளர் கூறியவை. பூர்வீகம் என தாங்கள் அனுமானித்த இரு ஊர்களில் ஒன்றின் பெயரில் அரசு, கோட்டை என்ற வார்த்தைகள் உள்ளது. அவ்வூரில் பிரதான கோவிலில் அங்காள பரமேஸ்வரி அமைந்துள்ளார். கோவிலுக்கு அருகில் ஒரு நீர் நிலையம், சற்று தொலைவில் ஒரு பெரிய குளமும் அமைந்துள்ளது. கோவில் பிரகாரத்தில் அக்னி வீர பத்திரர், இருளன்-இருளாயி, ராக்காயி ஆகியோர் உள்ளனர். கோவிலுக்கு வெளியே கருப்பசாமி அமைத்துள்ளார். குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்த பிறகு தனது தாத்தாவும் மறுமுறை சென்று வழிபட்டு வந்தபோது தனது பாட்டியும் மரணமடைந்ததாக கேள்வியாளர் கூறினார்.
பின்குறிப்பு:
குறிப்பிட்ட கோவிலும் அதன் நில புலன்களும் சென்ற நூற்றாண்டின் துவக்கம் வரை பிராமணர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. அவர்கள் அடித்தட்டு மக்களை வைத்து விவசாயம் செய்து வந்துள்ளனர். பஞ்ச காலத்தில் தங்கள் நிலங்களில் பணிபுரிந்த மக்களாலேயே தாக்கப்பட்டதால் அவர்களை சபித்து ஊரை விட்டு வெளியேறியுள்ளனர் என அறிய வருகிறது.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501